Wednesday, 25 June 2014

செய்திகள் - 25.06.14

செய்திகள் - 25.06.14
------------------------------------------------------------------------------------------------------

1. நெருக்கடிகளுக்கு மத்தியில் குடும்பங்கள் தங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன, வத்திக்கான் அதிகாரி

2. சிரியா அகதிகளால் லெபனன் எதிர்நோக்கும் சவால்கள், விளக்குகிறார் லெபனன் திருப்பீடத் தூதர்

3. சிங்கப்பூர் தலத்திருஅவை பாலியல் பாகுபாட்டைக் கண்டிக்கிறது, பேராயர் Seng Chye

4. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறும் சிறாரும் இளையோரும் மோதல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வருகின்றனர், அமெரிக்க ஆயர்

5. போரிடுவதை நிறுத்தி பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள், தென் சூடான் பல்சமயத் தலைவர்கள் வேண்டுகோள்

6. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்

7. சூடானில் விடுதலை செய்யப்பட்ட கத்தோலிக்கப் பெண் மீண்டும் கைது
8. சட்டத்துக்குப் புறம்பேயான சுற்றுச்சூழல் குற்றங்கள், ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவி செய்கின்றன, ஐ.நா.

9. கங்கையில் ஒருமுறை நீராடினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
------------------------------------------------------------------------------------------------------

1. நெருக்கடிகளுக்கு மத்தியில் குடும்பங்கள் தங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன, வத்திக்கான் அதிகாரி

ஜூன்,25,2014. கடந்த கால மற்றும் தற்போதைய நெருக்கடிகள் குடும்பங்களுக்கு முன்வைக்கும் சவால்களுக்கு மத்தியில், உலகெங்கும் பல குடும்பங்கள் தங்களின் பாரம்பரியப் பண்புகளில் தொடர்ந்து உறுதியாக இருப்பது மனித சமுதாயத்தின் அடிப்படை ஒற்றுமையை வெளிப்படுத்துவதாய் உள்ளது என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் அவையில், குடும்பம் குறித்து இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார்.
தனிநபரின் வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சியின் முயற்சிகளுக்கும், பாரம்பரியக் குடும்பங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை வலியுறுத்திப் பேசிய பேராயர் தொமாசி, சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான சமுதாயத்துக்கும், தனிநபரின் விடுதலை வாழ்வுக்கும் குடும்பம் தடையாக இருப்பதாகச் சொல்லி அதனைக் கலைக்க பல சக்திகள் முயற்சிப்பதையும் குறிப்பிட்டார்.
ஓரினச் சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பதற்கு பல நாடுகள் முயற்சித்துவரும் இக்காலத்தில், நல்லதொரு குடும்பச் சூழலில் குழந்தை நன்றாக வளரும் என்பதற்கு,  பாரம்பரியக் குடும்பங்கள் சான்றாக உள்ளன என்றும், குடும்பமும் திருமணமும் நாடுகளில் மட்டுமல்லாமல், உலகனைத்திலும் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

2. சிரியா அகதிகளால் லெபனன் எதிர்நோக்கும் சவால்கள், விளக்குகிறார் லெபனன் திருப்பீடத் தூதர்

ஜூன்,25,2014. வேறு எந்த நாட்டையும்விட அதிகமான சிரியா அகதிகளைக் கொண்டிருக்கும் லெபனன் நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வகையில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என, லெபனன் நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர் Jain Mendez வத்திக்கான் வானொலியில் தெரிவித்தார்.
சிரியாவின் அண்டை நாடான லெபனனில் தற்போது 10 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா அகதிகள் உள்ளனர் எனவும், ஈராக்கில் அண்மையில் ISIS இஸ்லாமிய புரட்சியாளர்களின் வன்முறை அதிகரித்து வருவது லெபனன் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் பேராயர் Mendez மேலும் கூறினார்.
ஈராக்கில் நடந்துவரும் வன்முறைகள் மத்திய கிழக்கின் உறுதியான தன்மைக்கு மேலும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த பேராயர் Mendez அவர்கள், ஏறக்குறைய 45 இலட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடாகிய லெபனனுக்கு மேலும் மேலும் அகதிகள் வந்துகொண்டிருப்பது, லெபனனின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஈராக்கில் சரியான ஆவணங்கள் இன்றி சிக்கியிருக்கும் ஏறக்குறைய அறுபதாயிரம் நேபாள மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற உதவுமாறு நேபாள அரசு பல்சமயத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/AsiaNews

3. சிங்கப்பூர் தலத்திருஅவை பாலியல் பாகுபாட்டைக் கண்டிக்கிறது, பேராயர் Seng Chye

ஜூன்,25,2014. தந்தை, தாய், குழந்தைகள் ஆகியோரை உள்ளடக்கிய குடும்பமே, ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக அமைகின்றது என்பதை கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் காத்து வருகின்றது என, சிங்கப்பூர் பேராயர் William Goh Seng Chye கூறினார்.
ஒரே பாலின கவர்ச்சியுள்ள தனிநபர்கள் இருப்பதை சிங்கப்பூர் தலத்திருஅவை ஏற்கின்ற அதேவேளை, எந்தவிதமான பாலியல் பாகுபாடுகளையும் புறக்கணிக்கின்றது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த பேராயர் Seng Chye, ஒரே பாலின உறவுகள் இறைத்திட்டத்தோடு ஒத்திணங்கிச் செல்லாதவை என்பதையும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இவ்வாரத்தில் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளவேளை, முஸ்லிம் தலைவர் ஒருவர் இதற்கு எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டு வருகிறார். முஸ்லிம்களுடன் கிறிஸ்தவர்களும் இம்முயற்சியில் சேர்ந்துள்ளனர்.
சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கடந்த ஆண்டில் நடத்திய பேரணியில் 21 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.     
சிங்கப்பூர் மக்கள் தொகையில் ஏறக்குறைய 5 விழுக்காட்டினர், அதாவது 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கத்தோலிக்கர். மேலும், 33 விழுக்காட்டினர் புத்த மதத்தினர். 18 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 15 விழுக்காட்டினர் இஸ்லாமியர். 5  விழுக்காட்டினர் இந்துக்கள் மற்றும் 11 விழுக்காட்டினர் தாவோயிசத்தினர்.

ஆதாரம் : AsiaNews

4. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறும் சிறாரும் இளையோரும் மோதல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வருகின்றனர், அமெரிக்க ஆயர்

ஜூன்,25,2014.  அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறும் சிறாரும் இளையோரும் ஏதோ ஆர்வக்கோளாறால் அந்நாட்டுக்கு வருவதில்லை, மாறாக, மோதல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வருகின்றனர் என, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் தெரிவித்தார்.
வாஷிங்டனிலுள்ள பிரதிநிதித்துவ அவையின் நீதித்துறை குழுவிடம் இச்சிறார் குறித்த விபரங்களை ஒலி-ஒளி படக் காட்சி மூலம் இப்புதனன்று விவரித்த El Paso(Texas) ஆயர் Mark Joseph Seitz அவர்கள் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க ஆயர்கள் சார்பில் இம்முயற்சியில் இறங்கிய ஆயர் Seitz அவர்கள், இப்படக் காட்சியைப் பார்த்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையான மனித முகங்களைக் கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
மெக்சிகோ, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் பகுதியில் குடியேறும் சிறார் மற்றும் இளையோர் குறித்த விபரங்களைச் சேகரித்துள்ளார் ஆயர் Seitz.

ஆதாரம் : Fides

5. போரிடுவதை நிறுத்தி பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள், தென் சூடான் பல்சமயத் தலைவர்கள் வேண்டுகோள்

ஜூன்,25,2014. போரிடுவதை நிறுத்தி பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என்ற அவசர வேண்டுகோளை விடுத்துள்ளனர் தென் சூடான் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள்.
கடந்த டிசம்பரில் தென் சூடானில் தொடங்கிய உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் இம்மாதம் 11ம் தேதி அடிஸ் அபாபாவில் கையெழுத்திடப்பட்டதை முன்னிட்டு அவ்வொப்பந்தம் அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, தென் சூடான் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதைத் தாமதப்படுத்துவது, மேலும் உள்நாட்டுப்போருக்கும் இரத்தம் சிந்தலுக்கும் தயார் செய்வதுபோல் தெரிகின்றது எனவும் அவ்வறிக்கை எச்சரிக்கின்றது.
தென் சூடான் அரசுத்தலைவர் Salva Kiir அவர்களுக்கும், அந்நாட்டின் முன்னாள் உதவி அரசுத்தலைவர் Riek Machar அவர்களுக்கு ஆதரவான புரட்சியாளர்களுக்கும் இடையே கடந்த டிசம்பரில் மோதல்கள் தொடங்கின. 

ஆதாரம் : Fides                          

6. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்

ஜூன்,25,2014. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம், அந்நாட்டின் சிறுபான்மையினர்க்கு நம்பிக்கையளிப்பதாய் உள்ளது என பீதெஸ் கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியது.
சிறுபான்மையினர் உரிமைகளுக்காக தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு விடுத்துள்ள ஆணையின்படி, தனித்து இயங்கும் இந்த அவை, சிறுபான்மையினர்க்கு எதிரான வன்முறைகள், பாகுபாடுகள் சிறுபான்மையினரின் இன, சமய நிலைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும்.
2013ம் ஆண்டு செப்டம்பரில் பேஷ்வாரில் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டதில் 81 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இவ்வழக்கு குறித்து    விசாரணை நடத்தியதன் பயனாக, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், சிறுபான்மையினர் உரிமைகளுக்காக தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு ஆணையிட்டுள்ளது. 

ஆதாரம் : Fides

7. சூடானில் விடுதலை செய்யப்பட்ட கத்தோலிக்கப் பெண் மீண்டும் கைது

ஜூன்,25,2014.  சூடானில், மதம் மாறிய குற்றத்துக்காக மரணதண்டனை தீர்ப்பிடப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 26 வயது நிரம்பிய கத்தோலிக்கப் பெண் ஒருவர், இரகசிய காவல்துறையினரால் மீண்டும் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
விடுதலை செய்யப்பட்ட மிரியம் இப்ராஹிம் என்ற பெண்ணை, அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஏறக்குறைய நாற்பது பேர் கொண்ட காவல்துறையினர்  விமான நிலையத்தில் கைது செய்தனர் என செய்திகள் மேலும் கூறுகின்றன.
இந்தக் கைதுக்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனவும், தற்போது  மிரியமும் அவரது குடும்பமும் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு குடிமகன் Daniel Bicensio Wani என்பவரை கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்வதற்கு முன்னர் கத்தோலிக்கராக மாறினார் இப்ராஹிம். இவர்களின் ஒரு வயது ஆண் குழந்தையும் தாயோடு சிறையில் இருந்தது. இப்ராஹிம் கடந்த மே மாதத்தில் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
சூடான் குற்றவியல் சட்டப்படி, முஸ்லிம்கள் பிற மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதன்படி இப்ராஹிம்  தூக்கிலிடப்பட வேண்டுமென கடந்த மே மாதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையொட்டி சூடான் கார்ட்டூம் உயர்மறை மாவட்ட முதன்மை குரு உட்பட அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்கள் இத்தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு சூடான் அரசைக் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

8. சட்டத்துக்குப் புறம்பேயான சுற்றுச்சூழல் குற்றங்கள், ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவி செய்கின்றன, ஐ.நா.

ஜூன்,25,2014. உலக அளவில் இடம்பெறும் சுற்றுச்சூழல் தொடர்புடைய குற்றங்கள், நிதி ஊழல் குற்றக்கும்பல்கள், புரட்சிக்குழுக்கள், பயங்கரவாதக் குழுக்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு இருபதாயிரம் கோடி டாலருக்கு மேலான நிதியுதவி செய்கின்றன என்று, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பும், INTERPOL அமைப்பும் இணைந்து வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
நைரோபியில் இவ்வாரத்தில் தொடங்கியுள்ள முதல் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சுற்றுச்சூழல் தொடர்புடைய குற்றங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
காடுகளில் மரங்கள் வெட்டப்படுதல் உட்பட்ட இக்குற்றங்கள் சுற்றுச்சூழலில் உடனடி தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, சட்டத்துக்குப் புறம்பே நடத்தப்படும் இயற்கை வள வணிகம், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் கோடிக்கணக்கான டாலர் இழப்பையும் உண்டுபண்ணுகின்றன எனவும் குறைகூறியுள்ளது அவ்வறிக்கை.
சட்டத்துக்குப் புறம்பே மரங்கள் வெட்டப்படுதல் உட்பட இயற்கை வளங்களைச் சுரண்டுதல் தொடர்புடைய குற்றங்களால் ஆண்டுக்கு 3,000 கோடி டாலர் முதல் 10,000 கோடி டாலர் வரை வருவாய் கிடைக்கின்றன. இது, உலகளாவிய மொத்த மர வணிகத்தில் 10 முதல் 30 விழுக்காடாகும் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது. 

ஆதாரம் : UN

9. கங்கையில் ஒருமுறை நீராடினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு

ஜூன்,25,2014. இந்தியாவின் புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதியில், நீராடினால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கங்கை நதி நீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின்கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, கங்கை நதி நீரில், புற்றுநோய்களை உருவாக்கும் கார்சினோஜன்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கங்கை நதி இந்தளவிற்கு மாசு அடைந்திருப்பதற்கு, தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் கங்கையில் நேரடியாக கலப்பதே முக்கிய காரணம் என்றும், இக்கழிவுகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் அதிகளவில் உள்ளன என்றும் அவ்வாய்வு கூறுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியின்போது இக்குழு நடத்திய ஆய்வில், தண்ணீரில், குரோமியம் 6 இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வீரியமுள்ள நச்சுப்பொருள் ஆகும். 1 மி.லி. தண்ணீரில், 1 என்.ஜி. அளவிற்கு குரோமியம் 6 இருப்பது கண்டறியப்பட்டது, இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 50 மடங்கு அதிகமாகும்.

ஆதாரம் : தினமலர்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...