Friday, 27 June 2014

செய்திகள் - 26.06.14

செய்திகள் - 26.06.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடு திருஅவை நெருக்கமாக இருக்கின்றது

2. திருத்தந்தை பிரான்சிஸ் : உலகின் எல்லாப் பகுதியினருக்கும் அறிவியல் ஆய்வுகள் நடத்துவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நல்ல ஆயர் என்பதை மக்கள் ஏற்பதால் அவரைப் பின்செல்கின்றனர்

4. அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறாருடன் திருத்தந்தை ஒருமைப்பாடு

5. செப்.28, குடும்பம் பற்றிய வருகிற அக்டோபர் ஆயர் மாமன்றத்துக்காகச் செபிக்கும் நாள்

6. இலங்கை மீதான ஐ. நா. புலன் விசாரணைக்கு வல்லுனர்கள் பெயர்கள் அறிவிப்பு, இந்திய ஆம்னெஷ்டி பாராட்டு

7. சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு ஐ.நா. அழைப்பு

8. பான் கி மூன்: உலகில் சித்ரவதைகள் நிறுத்தப்படுவதற்கு முயற்சிப்போம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடு திருஅவை நெருக்கமாக இருக்கின்றது

ஜூன்,26,2014. கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளோடு தான் மிகுந்த நெருக்கமாய் இருப்பதாகவும், தனது அண்மை புனிதபூமி திருப்பயணம் தனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்ததாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு உதவும் பிறரன்பு நிறுவனங்கள் அமைப்பு (ROACO) நடத்திய 87வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 80 பிரதிநிதிகளை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் மத்தியில் முழு ஒன்றிப்பு ஏற்படவும், பல்வேறு மதங்களிடையே தொடர்ந்து உரையாடல் நடைபெறவும் புதுப்பிக்கப்பட்ட பொறுப்புணர்வோடு செயல்படுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இம்முயற்சிகளை தான் ஊக்குவிப்பதாகவும் கூறினார்.
ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள கிறிஸ்தவ சமூகங்களைச் சிறப்பாக இச்சந்திப்பில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இம்மக்களோடும், புனிதபூமி மற்றும் மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள நம் சகோதர சகோதரிகளோடும், தற்போது கடும் துன்பநிலைகளை அனுபவிக்கும் உக்ரேய்ன், இன்னும், உரோமேனிய மக்களோடும் கத்தோலிக்கத் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை, பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் தலைவர்களோடு அண்மையில் வத்திக்கானில் ஒலிவக் கன்றை நட்டதைக் குறிப்பிட்டு, இது பல கரங்களால் வளர்க்கப்ப்டுவதால் இது அமைதியின் அடையாளமாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ROACO அமைப்பு இம்மாதம் 23 முதல் 26 வரை தனது 87வது ஆண்டுக் கூட்டத்தை நடத்தியது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

2. திருத்தந்தை பிரான்சிஸ் : உலகின் எல்லாப் பகுதியினருக்கும் அறிவியல் ஆய்வுகள் நடத்துவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்

ஜூன்,26,2014. வத்திக்கான் வானியல் ஆய்வு மையம் நடத்திய கோடைகால பயிற்சிப் பாசறையில் கலந்துகொண்ட  பேராசிரியர்கள் மாணவர்கள் என  35 பேரை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் ஆய்வுகள் நடத்துவதற்கும், அறிவியல் துறையில் பயிற்சிகள் பெறுவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற தனது ஆவலை வெளியிட்டார்.
பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு மதங்களின் பின்னணிகளைக் கொண்டிருக்கும் இம்மாணவர்கள், உரையாடலுக்கும், பலனுள்ள ஒத்துழைப்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் உள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
திருஅவை அறிவியலுடன் உரையாடல் நடத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளதற்கான காரணத்தை விளக்கிய திருத்தந்தை, அறிவின் எல்லைகளை விரிவாக்கவும், வளப்படுத்தவும் விசுவாசத்தால் இயலும் என்ற கருத்தில் திருஅவை உறுதியாய் இருப்பதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
நமது தொடக்கங்கள் பற்றிய உலகளாவிய கேள்விகளுக்கான தேடல், அன்புத் தந்தையாம் படைத்தவரோடு சந்திப்பை ஏற்படுத்துவதற்கு நம்மை இட்டுச்செல்ல வேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  
வானிலுள்ள பால்மண்டலம் : அருகிலும் தூரத்திலும், இளையோரும் முதியோரும் என்ற தலைப்பில் வத்திக்கான் வானியல் ஆய்வு மையம் கோடைகால பயிற்சிப் பாசறையை நடத்தியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

3. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நல்ல ஆயர் என்பதை மக்கள் ஏற்பதால் அவரைப் பின்செல்கின்றனர்

ஜூன்,26,2014. இயேசு நல்ல ஆயர் என்பதை மக்கள் ஏற்பதால் அவரைப் பின்செல்கின்றனர் என்று கூறிய அதேவேளை, ஒழுக்க முறைமைக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களோடு பேரம்பேசும் தேடலுக்குமென விசுவாசத்தை வைத்துக்கொள்வதை எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் இயேசுவை, பலர் பின்செல்வதற்கான காரணத்தை விளக்கினார்.
மக்கள் இயேசுவின் போதனைகளைக் கண்டு வியப்படைந்து, தங்கள் இதயங்களில் ஏதோ நன்மைகளை, பெரிய செயல்களை அப்போதனைகள் கொண்டுவருவதை உணர்ந்து பெருங்கூட்டமாக மக்கள் அவரைப் பின்சென்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவின் போதனைகள் சென்றடையாத நான்கு குழுக்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
பரிசேயர்கள், சதுசேயர்கள், தீவிரப்பற்றாளர்கள், எஸ்ஸினியர்கள் என்ற இறைவனுக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த துறவிகள் ஆகிய நான்கு குழுக்கள் பற்றி விவரித்த திருத்தந்தை, இந்தத் துறவிகள் மக்களைவிட்டு வெகுதொலைவில் இருந்தார்கள், அதனால் மக்களால் அவர்களைப் பின்செல்ல முடியவில்லை என்றும் கூறினார்.
இந்த நான்கு குழுக்களின் குரல்களும் மக்களைச் சென்றடைந்தாலும், மக்களின் இதயங்களை இதமாக்க இவற்றில் எந்தக் குரலாலும் இயலவில்லை, ஆனால் இயேசுவின் குரல் கூட்டத்தினரின் இதயங்களை இதமாக்கியது, இயேசுவின் செய்தி மக்கள் கூட்டத்தின் இதயத்தைத் தொட்டது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இயேசு இந்த நான்கு குழுவினர் போல் இல்லை, ஆனால் அவர் மேய்ப்பராக, ஆயராக இருந்தார், கடவுள் பற்றிய உண்மைகளைப் பேசினார், கடவுள் பற்றிய காரியங்களை மக்கள் விரும்பும் வழியில் பேசினார், எனவே மக்கள் அவரைப் பின்சென்றனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தனது மறையுரையில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

4. அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறாருடன் திருத்தந்தை ஒருமைப்பாடு

ஜூன்,26,2014. ஆப்ரிக்காவில் அல்பினிசம் (PWA) நோயால் பாதிக்கப்பட்ட சிறார், மந்திரவாதி மருத்துவர்களாலும் மற்றவர்களாலும் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கிவரும்வேளை, இச்சிறாரின் நலவாழ்வுக்கு உதவும் அனைத்துலக நடவடிக்கை ஒன்றுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"ஆப்ரிக்க அல்பினோஸ் சிறாருக்கு உதவி" என்ற தலைப்பில் இப்புதனன்று தொடங்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைக்கு ஆதரவாக, “Ombra Bianco” என்ற நூலிலிருந்து பல பகுதிகளை ஒலி வடிவில் பதிவுசெய்து தனது ஆதரவை வழங்கியுள்ளார் திருத்தந்தை.
Cristiano Gentile என்ற இத்தாலிய எழுத்தாளர் எழுதிய “Ombra Bianco” என்ற நூல் அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறார் பற்றி விளக்குகின்றது.
பல்வேறு காரணங்களால் உடம்பு வெண்மை நிறமாக மாறும் அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சில உறுப்புகள் மந்திர சக்தி கொண்டவை என்ற மூட நம்பிக்கையில், ஆப்ரிக்காவின் பெரிய ஏரிப் பகுதி நாடுகளில் இந்நோயால் பாதிக்கப்பட்ட சிறார் மந்திரவாதி மருத்துவர்களால் வன்முறையாய்த் தாக்கப்பட்டு உறுப்புக்கள் முடமாக்கப்படுகின்றனர் மற்றும் கொலை செய்யப்படுகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. 
Albinism என்ற இந்த அரிய நோயால், உலக அளவில் இருபதாயிரத்துக்கு ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கத்திய நாடுகளில் இந்நோய்ப் பாதிப்பு அவ்வளவாக இல்லையெனினும், ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளில் இது அதிகமாகக் காணப்படுகின்றது.
மேலும், எவ்வித மனித மற்றும் சமூக முன்னேற்றத்தை உருக்குலையாது தாங்கிப் பிடிப்பதற்கு குடும்பம் இன்றியமையாதது என, இவ்வியாழனன்று தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

5. செப்.28, குடும்பம் பற்றிய வருகிற அக்டோபர் ஆயர் மாமன்றத்துக்காகச் செபிக்கும் நாள்

ஜூன்,26,2014. வருகிற அக்டோபர் 5 முதல் 19 வரை குடும்பம் பற்றிய 3வது சிறப்பு ஆயர் மாமன்றம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும்வேளை, இம்மாமன்றம் சிறப்புற அமைவதற்கென, வருகிற செப்டம்பர் 28ம் தேதியன்று சிறப்பாக செபிக்குமாறு உலகக்   கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளது வத்திக்கான்.
குடும்பம் பற்றிய சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கான முன்வரைவுத் தொகுப்பை  இவ்வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்ட வத்திக்கான் அதிகாரிகள் இச்செப நாளை அறிவித்தனர்.
இந்தத் தொகுப்பை, உலக ஆயர் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்கள் தலைமையிலான குழு ஆறு ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டது.
குடும்பங்களுக்கு நற்செய்தி அறிவிப்பதிலுள்ள மேய்ப்புப்பணி சவால்கள் என்ற தலைப்பில் 3வது சிறப்பு ஆயர் மாமன்றம் நடைபெறும்.
மேலும், “இயேசு கிறிஸ்து குடும்பத்தின் அழைப்பையும் அதன் பொருளையும் வெளிப்படுத்துகிறார் என்ற தலைப்பில், 2015ம் ஆண்டில் குடும்பம் பற்றிய உலக ஆயர் மாமன்றம் நடக்கும் எனவும் கர்தினால் பால்திச்சேரி அறிவித்தார்.
குடும்பம் மற்றும் திருமணம் குறித்து உலகின் தலத்திருஅவைகளுக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு வந்த பதில்களின் அடிப்படையில் இந்த முன்வரைவுத் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
சமூகத்தின் அடிப்படை அமைப்பாக இருக்கின்ற குடும்பம் இக்காலத்தில் நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொள்கின்றது என்றும், இவற்றுக்குத் திருஅவை உதவும் வழிகள் குறித்து ஆராயப்படும் என்றும் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

6. இலங்கை மீதான ஐ. நா. புலன் விசாரணைக்கு வல்லுனர்கள் பெயர்கள் அறிவிப்பு, இந்திய ஆம்னெஷ்டி பாராட்டு

ஜூன்,26,2014. இலங்கையில் 2009ம் ஆண்டின் ஆயுதம் ஏந்திய கடும் தாக்குதல்களில்  இடம்பெற்றதாகக் கூறப்படும் கடும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான புலன் விசாரணைகளை நடத்துவதற்கு மூன்று வல்லுனர்களின் பெயர்களை ஐ.நா. அறிவித்திருப்பதை வரவேற்றுள்ளது, அனைத்துலக ஆம்னெஷ்டி மனித உரிமைகள் கழகத்தின் இந்திய அமைப்பு.
நொபெல் அமைதி பெற்றவரும், ஃபின்லாந்து அரசின் முன்னாள் அரசுத்தலைவருமான Martti Ahtisaari, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரலும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான Silvia Cartwright, பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலரும், அந்நாட்டின் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான Asma Jahangir ஆகிய மூன்று வல்லுனர்கள் பெயரை இப்புதனன்று அறிவித்தார் ஐ.நா. மனித உரிமைகள் அவை ஆணையர் நவி பிள்ளை
இந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து நவி பிள்ளை அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இம்மூவரும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில ஆண்டுகளில் இடம் பெற்றதாக கூறப்படும் கடும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள ஐ. நா. மனித உரிமை குழுவுக்கு, ஆலோசனை வழங்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும் இசைவளித்துள்ளனர் என்று ஐ நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : PTI

7. சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு ஐ.நா. அழைப்பு

ஜூன்,26,2014. உலகில் எல்லாருக்கும் மிகுந்த வளமான வாழ்வையும் சமத்துவத்தையும் அளிப்பதற்கு ஐ.நா. எடுக்கும் முயற்சிகளுக்கு, போதைப்பொருள் பயன்பாடும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலும் கடும் இடையூறுகளாக இருக்கின்றன என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூன் 26, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாளை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் பான் கி மூன்.
அளவுக்கு மீறி போதைப்பொருள்களை எடுப்பதால் ஆண்டுதோறும் இடம்பெறும்  இறப்புகளில் இரண்டு இலட்சம் இறப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் அச்செய்தி கூறுகிறது.
உலக வர்த்தகத்தில் பெட்ரோல், இராணுவத் தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது.

ஆதாரம் : UN

8. பான் கி மூன்: உலகில் சித்ரவதைகள் நிறுத்தப்படுவதற்கு முயற்சிப்போம்

ஜூன்,26,2014. ஜூன் 26, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக சித்ரவதைக்குப் பலியானோர்க்கு ஆதரவு நாளையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், உலகில் சித்ரவதைகள் நிறுத்தப்படுவதற்கு நமது முயற்சிகளை வலுப்படுத்துவோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகின் எல்லாப் பாகங்களிலும், பெண்கள், ஆண்கள் மற்றும் சிறார்மீது, உடலளவிலும் மனத்தளவிலும் திட்டமிட்டு சித்ரவதைகள் நடத்தப்படுகின்றன, அவர்கள் தவறாகவும்  நடத்தப்படுகின்றனர் எனக் கூறும் பான் கி மூன் அவர்கள், இவற்றைச் செய்யத் தூண்டும் அரசு அதிகாரிகள் சட்டத்தை அமல்படுத்தி, மனித உரிமைகளையும் மக்களையும் பாதுகாக்க வேண்டியவர்கள் என்றும் கூறினார்.
சித்ரவதைக்கு எதிரான உலக ஒப்பந்தத்தில் 155 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

ஆதாரம் : UN                             

No comments:

Post a Comment