புனித இரனேயு
ஆயரும், மறைசாட்சியுமான புனித இரனேயு, கி.பி. 130ம் ஆண்டு துருக்கியில் பிறந்தார். இரனேயு அல்லது இரனேயுஸ் அல்லது லியோன் நகர புனித இரனேயுசு என்று அழைக்கப்படும் இவர், உரோமைப்
பேரரசின் ஒரு பகுதியாய் விளங்கிய காவுல் எனும் நகரின் ஆயராக இருந்தார்.
இவர் துவக்ககால திருஅவைத் தந்தையர்களுள் ஒருவர். இவரின் எழுத்துகள்
துவக்ககால கிறித்தவ இறையியலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவர் திருத்தூதர் யோவானின் சீடரான புனித பொலிகார்ப்புவின் சீடராவார்.
தொடக்க காலத்தில் "மறைநூல்" (Scriptures) எனும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்த விவிலிய நூல்களை கடவுள் மனிதரோடு செய்துகொண்ட "உடன்படிக்கையை" (Covenant) குறிக்கும் விதமாக ஏற்பாடு (Testament) என்று முதன்முதலில் அழைத்தவர் இவரே. கி.பி. 185ம் ஆண்டளவில், இவர் ஞானக்கொள்கை எனும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தி வாலண்டைன் (Valentinus) என்பவரின் படிப்பினையை, தப்பறை என அடையாளம் காட்டினார். அக்கொள்கையினைச் சாடி இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.
மரியாளியலினைப்
பற்றி விரிவாக எழுதிய முதல் திருஅவைத் தந்தை இவரே. கத்தோலிக்க திருஅவை
மற்றும் கிழக்கு மரபுவழி திருஅவையில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார்.
கத்தோலிக்க திருஅவையில் இவரின் விழா நாள் ஜூன் 28 ஆகும்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment