இரட்டைப் புனிதர்கள் : Mark and Marcellian
மாற்கு, மார்செல்லியன் என்ற இருவரும், உரோம்
நகரில் உயர்குடியில் பிறந்த இரட்டையர்கள். அவர்கள் இருவரும் இளவயதில்
தியாக்கோன்களாகத் திருப்பொழிவு செய்யப்பட்டனர். திருமணமான இவ்விருவரும்
தங்கள் குடும்பத்துடன் எடுத்துக்காட்டான வாழ்க்கை நடத்தி வந்தனர்.
Diocletian மன்னனாக இருந்தபோது, கிறிஸ்தவர்களுக்கு
எதிராக எழுந்த கொடுமைகளுக்கு இவ்விருவரும் உட்பட்டனர். இவ்விருவரையும்
உரோமையக் கடவுள்களுக்குப் பலி ஒப்புக்கொடுக்க உரோமைய அதிகாரிகள் பணித்தபோது, இருவரும் அதை மறுத்ததால், சிறையில் அடைக்கப்பட்டனர். உரோமையக் கடவுள்களை வணங்கிவந்த இவர்களுடைய பெற்றோர், சிறையில் இவர்களைச் சந்தித்து, தங்கள் முடிவை மாற்றி, உரோமையக் கடவுள்களுக்கு பலி செய்ய இவ்விருவரையும் கெஞ்சினர். அதேநேரம், உரோம் சிறையில் தன் மரணத்தை எதிர்கொண்டிருந்த புனித செபாஸ்டின், இவ்விருவரையும் சந்தித்து, அவர்கள் முடிவில் உறுதியுடன் இருக்க உதவினார். அத்துடன், இவ்விருவரின் பெற்றோரையும் அவர் மனம் மாறச் செய்தார்.
மேலும், சிறை அதிகாரியாக இருந்த Chromatius என்பவரையும் புனித செபாஸ்டின் மனம் மாற்றவே, அவ்வதிகாரி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து கிறிஸ்தவர்களையும் விடுதலை செய்தார். இரட்டையரான மாற்கு, மார்செல்லியன் இருவரும் வேறொரு ஊருக்குத் தப்பிச் செல்ல உதவினார். ஆனால், கிறிஸ்தவ மறையைத் தழுவி, பின்னர் உயிருக்குப் பயந்து, கிறிஸ்துவை மறுத்த ஒருவரால், இவ்விருவரும் மீண்டும் உரோமைய அதிகாரிகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்டனர்.
இரட்டையரான மாற்கு, மார்செல்லியன் இருவரையும் இரு தூண்களில் தலைகீழாகக் கட்டி, அவர்களின்
கால்களில் ஆணி அறையுமாறு மன்னன் ஆணையிட்டான். இவ்விருவரும் இந்நிலையில்
ஒரு நாள் முழுவதும் தொங்கிக் கொண்டிருந்தனர். இறுதியில், இருவரும் ஈட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இரட்டையரான மாற்கு, மார்செல்லியன் இருவரின் திருநாள் ஜூன் 18ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment