Thursday 12 June 2014

செய்திகள் - 12.06.14

செய்திகள் - 12.06.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மறையுரை - அயலவருடன் ஒப்புரவு ஆகாமல், இறைவனை நாடிச் செல்வது இயலாது

2. இந்தியர்கள் இருவர் உட்பட, ஆறுபேருக்கு நவம்பர் 23ல் புனிதர் பட்டம்

3. உலகக் கால்பந்து போட்டிகளின் துவக்க நாளையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள ஒளி-ஒலிச் செய்தி

4. மனிதர்கள் அன்பு செய்வதற்கே படைக்கப்பட்டவர்கள் என்ற செய்தியை நாம் அதிகம் பரப்பவேண்டும் - பேராயர் Vincenzo Paglia

5. பணியிடங்களில் மனித உரிமைகள் மீறப்படுவது, எல்லா நாடுகளிலும் தொடர்கதையாக நீடிக்கிறது - பேராயர் சில்வானோ தொமாசி

6. ஈராக் மக்கள் அனைவருக்கும் மன உறுதியை வழங்க தான் சிறப்பாக செபிப்பதாக, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை

7. சக்தி மிகுந்த கருவியாக விளங்கும் மதத்தை, நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்த முடியும் - நைஜீரிய ஆயர்கள்

8. அருள் பணியாளர் பிரேம் குமார் அவர்களை விடுவிப்பதற்கு இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது - இந்தியப் பிரதமர்

9. உலகக் கால்பந்து போட்டியையொட்டி, Who should I cheer for? என்ற பெயரில் சமுதாய வலைத்தளம் துவக்கம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மறையுரை - அயலவருடன் ஒப்புரவு ஆகாமல், இறைவனை நாடிச் செல்வது இயலாது

ஜூன்,12,2014. உடன்பிறந்த உணர்வை, தன் சீடர்களுக்கு இயேசு கற்பித்தார் என்பதை தன் மையக்கருத்தாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் தன் மறையுரையை வழங்கினார்.
நம்மிடையே காணப்படும் சண்டை, சச்சரவுகளை மேற்கொள்ள மூன்று வழிகள் அவசியம் என்று கூறியத் திருத்தந்தை, நடைமுறைக் கண்ணோட்டம், நிலையான மனநிலை, உடன்பிறந்த உணர்வு என்பவை அவசியமான இவ்வழிகள் என்று விளக்கினார்.
அயலவர் அன்பு என்பதற்கு, பரிசேயர்களும், மத அறிஞர்களும் பல்வேறு அர்த்தங்களைத் தந்தபோது, இயேசு நடைமுறை வாழ்வுக்கு ஏற்ற எளிதான அர்த்தத்துடன் அயலவர் அன்பை விளக்கினார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
அயலவர் அன்பு என்ற உன்னத இலக்கை அடைவது எளிதல்ல, இருப்பினும், அவ்வழியில் நடைபயில்வதற்கு, நடைமுறை வாழ்வுக்கேற்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வது பெரும் பயனளிக்கும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
ஆயுதங்களைப் பயன்படுத்தி, அடுத்தவரை உடலால் கொல்வதும், வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவரை உள்ளத்தில் கொல்வதும், வெறுப்பு என்ற ஒரே ஊற்றிலிருந்து வெளிவரும் விளைவுகள் என்பதை, திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
அயலவருடன் ஒப்புரவு ஆகாமல், இறைவனை நாடிச் செல்வது இயலாது என்பதால், முதலில் நம் உடன்பிறந்தவருடன் பேச முயல்வோம், பின்னர், இறைவனுடன் நம்மால் பேசமுடியும் என்று தன் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இந்தியர்கள் இருவர் உட்பட, ஆறுபேருக்கு நவம்பர் 23ல் புனிதர் பட்டம்

ஜூன்,12,2014. கேரளாவின் அருள்பணி Kuriakose Elias Chavara, அருள்சகோதரி Eufrasia Eluvathingal உட்பட ஆறு முத்திப்பேறுபெற்றவர்கள், கிறிஸ்து அரசர் பெருவிழாவாகிய வருகிற நவம்பர் 23ம் தேதியன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் நடந்த கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் ஆறு முத்திப்பேறுபெற்றவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நாள் குறிக்கப்பட்டது.
முத்திப்பேறுபெற்ற அருள்பணி Kuriakose Elias Chavara அவர்கள், CMI என்ற கார்மேல் அமல அன்னை சபையை நிறுவியவர். முத்திப்பேறுபெற்ற அருள்சகோதரி Eufrasia Eluvathingal அவர்கள், முத்திப்பேறுபெற்ற அருள்பணி Chavara அவர்கள் பெண்களுக்கென தொடங்கிய கார்மேல் அன்னை அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்தவர்.
மேலும், திருஇதயங்களின் புனித Dorotea பிள்ளைகள் சபையை நிறுவிய Vicenza ஆயர் Giovanni Antonio Farina; “Bigie” எனப்படும் சகோதரிகள் சபையை தோற்றுவித்த பிரான்சிஸ்கன் சபை அருள்பணி Ludovico da Casori;  Minims சபையின் Nicola da Longobardi, இன்னும், பொதுநிலையினர் Amato Ronconi ஆகிய நான்கு முத்திப்பேறுபெற்றவர்களும் வருகிற நவம்பர் 23ம் தேதியன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ளனர்.
புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்த முத்திப்பேறுபெற்ற Amato Ronconi அவர்கள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது இன்று "Blessed Amato Ronconi Nursing Home”என அழைக்கப்படுகிறது.
கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ள ஆறு முத்திப்பேறுபெற்றவர்களில் இருவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற நால்வரும் இத்தாலியர்கள். இவர்களில் ஒருவர் பொதுநிலை விசுவாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. உலகக் கால்பந்து போட்டிகளின் துவக்க நாளையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள ஒளி-ஒலிச் செய்தி

ஜூன்,12,2014. மொழி, கலாச்சாரம், நாடு என்ற எல்லைகளையெல்லாம் கடந்து, கால்பந்தாட்டத்தால் இணைக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களையும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் அனைத்து இரசிகர்களையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூன் 12, இவ்வியாழன் துவங்கி, ஒரு மாதம் பிரேசில் நாட்டில் நடைபெறும் உலகக் கால்பந்து போட்டிகளின் துவக்க நாளையொட்டி, பிரேசில் நாட்டில் உள்ள "Rete Globo" என்ற தொலைக்காட்சிக்கு தான் அனுப்பியுள்ள ஒளி-ஒலிச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
கால்பந்தாட்டம் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது, உரையாடல், புரிந்துகொள்ளுதல் ஆகிய உயர்ந்த வழிகளை மனித குடும்பத்திற்குச் சொல்லித்தரும் ஓர் அரிய வாய்ப்பு என்று திருத்தந்தை தன் செய்தியின் துவக்கத்தில் கூறியுள்ளார்.
பொதுவாகவே, எந்த ஒரு விளையாட்டும், விளையாட்டுத் திடலில் நடைபெறுவது மட்டுமல்ல, அதற்கு வெளியிலும் விளையாட்டின் தாக்கங்களை நாம் உணர்கிறோம் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து விளையாட்டுக்களும் 'பயிற்சிகள் மேற்கொள்ளுதல்', 'நேரிய வழிகளில் விளையாடுதல்', 'எதிர் தரப்பினரையும் மதித்தல்' என்ற மூன்று பாடங்களைக் கற்றுத்தருகின்றன என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மூன்று பாடங்களையும் குறித்து சிறு விளக்கங்களையும் அளித்துள்ளார்.
எக்காரணம் கொண்டும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று விளையாடுவது தன்னலத்தை மட்டுமே வளர்க்கிறது; மாறாக, உண்மையான வெற்றியடைய, எதிர்த்தரப்பினரையும் மதிப்புடன் நடத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
தனக்கு இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும், குறிப்பாக, பிரேசில் அரசு அதிகாரிகளுக்கும் தன் நன்றியைக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
மேலும், உண்மையான உடன்பிறந்தோர் உணர்வுடன், அனைவரும் இந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தை அனுபவிக்க நான் வாழ்த்துகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter பக்கத்தில் இவ்வியாழன் எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மனிதர்கள் அன்பு செய்வதற்கே படைக்கப்பட்டவர்கள் என்ற செய்தியை நாம் அதிகம் பரப்பவேண்டும் - பேராயர் Vincenzo Paglia

ஜூன்,12,2014. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Piladelphia நகரில் நடைபெறவுள்ள அகில உலக குடும்ப மாநாட்டை ஒரு தருணமாகப் பயன்படுத்தி, மனிதர்கள் அன்பு செய்வதற்கே படைக்கப்பட்டவர்கள் என்ற செய்தியை நாம் அதிகம் பரப்பவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்காவின் New Orleans நகரில் தற்போது நடைபெற்றுவரும் அமெரிக்க ஆயர் பேரவை ஆண்டுக் கூட்டத்தில், இப்புதனன்று உரையாற்றிய குடும்பப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Vincenzo Paglia அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருஅவையின் உயிர்நாடி குடும்பம் என்பதை, குடும்பங்களை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றமும், அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அகில உலக குடும்ப மாநாடும் நமக்கு மீண்டும் நினைவுறுத்துகின்றன என்று பேராயர் Paglia அவர்கள் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு கலாச்சாரமும், ஒவ்வொரு நாடும் குடும்பம் என்ற சொல்லுக்கு பல்வேறு இலக்கணங்கள் கூறினாலும், ஆண் பெண் என்ற இருவரிடையே உருவாகும் நிரந்தர உறவின் அடிப்படையில் எழுவதே குடும்பம் என்பதை, கத்தோலிக்கத் திருஅவை என்றும் கூறி வருகிறது என்று தன் உரையில் வலியுறுத்தினார், பேராயர் Paglia.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இந்த அகில உலகக் கத்தோலிக்கக் குடும்ப மாநாட்டிற்கு வரும்படி மீண்டும் ஒருமுறை அழைக்கிறோம் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Joseph Kurtz அவர்கள் கூறியதை, அனைத்து ஆயர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர் என்று CNA செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN

5. பணியிடங்களில் மனித உரிமைகள் மீறப்படுவது, எல்லா நாடுகளிலும் தொடர்கதையாக நீடிக்கிறது - பேராயர் சில்வானோ தொமாசி

ஜூன்,12,2014. சென்ற ஆண்டு, பங்களாதேஷ் நாட்டில் ஆடைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இடிந்து விழுந்ததில், 1100க்கும் அதிகமானோர் இறந்தது, வர்த்தக உலகில் காணப்படும் அநீதிகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதிதான் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் செயலாற்றும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும், பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், மனித உரிமை அவையின் 26வது பொது அமர்வில், இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
"காப்பாற்றுதல், மதித்தல், குணமாக்குதல் - வர்த்தகத்தையும், மனித உரிமைகளையும் வழிநடத்தும் கோட்பாடுகள்" என்ற தலைப்பில், ஐ.நா.அவை உருவாக்கியுள்ள அறிக்கையை, திருப்பீடம் பெரிதும் வரவேற்கிறது என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
பணியிடங்களில் மனித உரிமைகள் மீறப்படுவது, எல்லா நாடுகளிலும் தொடர்கதையாக நீடிக்கிறது என்று குறிப்பிட்டப் பேராயர் தொமாசி அவர்கள், தொழிற்சாலைகளில் மனித உயிர்கள், பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படும் அவலம் தீரவேண்டும் என்று விண்ணப்பித்தார்.
மனிதர்கள் என்ற அடிப்படை மதிப்பின்மீது காட்டப்படும் நன்னெறி விழுமியங்களே மனித உரிமைகளைக் காக்கமுடியும் என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. ஈராக் மக்கள் அனைவருக்கும் மன உறுதியை வழங்க தான் சிறப்பாக செபிப்பதாக, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை

ஜூன்,12,2014. ஈராக் நாட்டை பிளவுபடுத்தாமல், ஒருங்கிணைக்கும் எண்ணம் கொண்டோர் இணைந்து, அரசை உருவாக்கினால், இந்த நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்றலாம் என்று பாபிலோன் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் Luis Raphael Sako அவர்கள் கூறினார்.
ஈராக் நாட்டில் Mosul நகரைக் கைப்பற்றியுள்ள புரட்சிக் குழுவினர், தற்போது, Kirkuk நகரையும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சூழலில், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் முதுபெரும் தந்தை, நாட்டைக் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார்.
Mosul நகரை புரட்சிக் குழுவினர் கைப்பற்றியுள்ளதைக் குறித்து, கவலை வெளியிட்ட முதுபெரும் தந்தை Sako அவர்கள், பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நினிவே என்ற பழைமைச் சிறப்பு மிக்க நகர் அருகில் இருப்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
அனைத்து அமைதிக்கும் ஊற்றான இறைவன், இந்த நெருக்கடி நேரத்தில், ஈராக் மக்கள் அனைவருக்கும் மன உறுதியை வழங்க தான் சிறப்பாக செபிப்பதாகக் கூறியுள்ளார் பாபிலோன் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் Sako அவர்கள்.

ஆதாரம் : Fides

7. சக்தி மிகுந்த கருவியாக விளங்கும் மதத்தை, நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்த முடியும் - நைஜீரிய ஆயர்கள்

ஜூன்,12,2014. சமுதாயத்தில் சக்தி மிகுந்த கருவியாக விளங்கும் மதத்தை, நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்த முடியும் என்று நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
"நைஜீரியாவில் மதமும், அரசும்" என்ற தலைப்பில், ஆயர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், நாட்டின் அரசு, மதத்திற்கு அளிக்கும் இடத்தைப்பொருத்து, மதம் ஆக்கப்பூர்வமாகவோ, அழிவுக்கோ பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.
ஒரு கடவுள் என்ற கோட்பாடு கொண்ட நாடு, நைஜீரியா என்றும், நாட்டின் எந்த ஒரு மாநிலமும், எந்த ஒரு மதத்தையும் அதிகாரப் பூர்வமாகக் கடைபிடிக்கக் கூடாது என்றும் நைஜீரிய அரசின் சட்டம் 10ல் கூறப்பட்டுள்ளதை ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டங்களின் வழியாக இந்த உறுதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வட நைஜீரியாவில், இஸ்லாம் மதத்தை அதிகாரப் பூர்வமான மதமாக நிலைநிறுத்தும் முயற்சிகள் வேதனையை உருவாக்குகின்றன என்றும், இந்தப் போக்கிற்கு அரசு இயந்திரங்கள் துணை போவது கவலையைத் தருகிறது என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides

8. அருள் பணியாளர் பிரேம் குமார் அவர்களை விடுவிப்பதற்கு இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது - இந்தியப் பிரதமர்

ஜூன்,12,2014. அருள் பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்களை விடுவிப்பதற்கு இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அருள் பணியாளருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதே தங்கள் தலையாய நோக்கம் என்றும், இந்திய அரசின் உயர் அதிகாரிகள், காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் எந்நேரமும் தொடர்பில் உள்ளனர் என்றும் பிரதமரின் கடிதம் கூறியுள்ளது.
ஜூன் 2ம் தேதி கடத்தப்பட்ட 47 வயதான இயேசு சபை அருள் பணியாளர் பிரேம் குமாரைக் கடத்திச் சென்றவர்கள் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என்றும், இந்தக் கடத்தல் தொடர்பாக மூன்று தலிபான்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் NDTV என்ற இந்திய ஊடகச் செய்தியொன்று கூறுகிறது.

ஆதாரம் : NDTV

9. உலகக் கால்பந்து போட்டியையொட்டி, Who should I cheer for? என்ற பெயரில் சமுதாய வலைத்தளம் துவக்கம்

ஜூன்,12,2014. ஜூன் 12, இவ்வியாழனன்று பிரேசில் நாட்டில் ஆரம்பமாகியுள்ள உலகக் கால்பந்து போட்டியையொட்டி, Who should I cheer for? அதாவது, யாருக்கு நான் அதரவு அளிப்பது என்ற பெயரில் சமுதாய வலைத்தளம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த உலக முன்னேற்ற இயக்கம் (World Development Movement) என்ற அமைப்பினர் துவக்கியுள்ள இந்த வலைத்தளத்தில், உலகக் கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் 32 நாடுகளின் சமுதாய நிலையை விளக்கும் தரவுகள் தரப்பட்டுள்ளன.
போட்டியில் கலந்துகொள்ளும் 32 நாடுகளில், இராணுவத்திற்கும், இராணுவ ஆயுதங்களுக்கும் அரசு செலவிடும் தொகை, அந்நாட்டின் அரசில் பெண்களின் பங்களிப்பு, அந்நாட்டில் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்ற அளவு ஆகிய புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டு, எந்த நாட்டிற்கு உங்கள் ஆதரவு உண்டு என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
உலகக் கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் 32 நாடுகளில், Costa Rica நாட்டில், இராணுவத்திற்கு செலவாகும் தொகை பூஜ்யம் விழுக்காடு என்றும், அந்நாட்டு அரசில் 39 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் குறிப்புக்கள் உள்ளன.
இந்நாடுகளின் பட்டியலில், அரசில் 3 விழுக்காடு மட்டுமே கொண்டுள்ள ஈராக் கடைசி இடத்தில் உள்ளது; அதேபோல், இராணுவச் செலவு, கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்ற அளவு ஆகிய தரவுகளைக் கொண்டு, 32 நாடுகள் வரிசையில் அமெரிக்க ஐக்கிய நாடு 29 வது இடத்தில் உள்ளது.
உலகக் கால்பந்து போட்டி வெறும் கேளிக்கை மட்டுமல்ல, அடுத்த ஒரு மாதம் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இந்த விளையாட்டு வழியே, சமுதாய ஆய்வையும் மக்கள் மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் "யாருக்கு நான் அதரவு அளிப்பது" என்ற இந்த முயற்சியைத் துவக்கியுள்ளோம் என்று இயக்கத்தின் தலைவர் Ralph Allen அவர்கள் கூறினார்.

ஆதாரம் : ICN

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...