Tuesday, 10 June 2014

ஸ்காட்லாந்தின் மறைசாட்சி : ஜான் ஒகில்வி (John Ogilvie)

ஸ்காட்லாந்தின் மறைசாட்சி : ஜான் ஒகில்வி (John Ogilvie)

35 வயதான அந்த இளைஞரைக் கைது செய்தவர்கள், பல சித்திரவதைகளுக்கு அவரை உள்ளாக்கினர். அவற்றில் ஒன்று, அந்த இளைஞரை 9 நாட்கள் இரவும், பகலும் உறங்கவிடாமல், தொடர்ந்து கொடுமைப்படுத்தியது. இக்கொடுமைகளுக்கு உள்ளானவர், இயேசு சபை அருள் பணியாளரான ஜான் ஒகில்வி (John Ogilvie) அவர்கள். 9 நாட்கள் அவரை உறங்கவிடாமல் கொடுமைப்படுத்தி, அவரிடமிருந்து விவரங்களைத் திரட்ட முயன்றனர், ஸ்காட்லாந்து அரசு அதிகாரிகள். அருள் பணியாளர் ஜான் ஒகில்வி அவர்களிடம் திருமுழுக்கு பெற்ற கத்தோலிக்கர்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டவே இக்கொடுமைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தனைக் கொடுமைகள் மத்தியிலும், அவர் அந்த விவரங்களை வெளியிடவில்லை.
ஸ்காட்லாந்தில் Calvanist எனப்படும் கிறிஸ்தவச் சபையைச் சேர்ந்த ஓர் உயர்குடியில், 1579ம் ஆண்டு பிறந்தவர், ஜான் ஒகில்வி. கத்தோலிக்க மறைக்கு எதிராக, இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் எழுந்த மதக் கலவரங்கள், இளையவரான ஜானை பெரிதும் பாதித்தன. அத்தருணத்தில், தன் 17வது வயதில், ஜான் ஒகில்வி அவர்கள், கத்தோலிக்க மறையைத் தழுவினார். தன் 29வது வயதில் இயேசு சபையில் சேர்ந்த இவர், பாரிஸ் நகரில் அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
22 ஆண்டுகள் ஸ்காட்லாந்தை விட்டு வெளியேறி வாழ்ந்த ஜான் ஒகில்வி அவர்கள், மீண்டும், 1613ம் ஆண்டு நவம்பர் மாதம் தன் தாயகம் திரும்பினார். அங்கு தன்னை ஒரு குதிரை வர்த்தகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, மறைந்து வாழ்ந்த கத்தோலிக்கர்களுக்குப் பணியாற்றினார். இவரது வரவுக்குப் பின், மீண்டும் பலர் கத்தோலிக்க மறையைத் தழுவினர்.
11 மாதங்கள் இவர் ஆற்றிய அருள் பணிகளுக்குப் பின், அவரிடம் திருமுழுக்கு பெறவிழைவதாகச் சொன்ன ஒருவரால் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டு, 1614ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரான திருத்தந்தையின் தலைமைத்துவத்தை மறுத்து, ஆங்கிலேய கிறிஸ்தவச் சபையின் தலைவராக விளங்கிய இங்கிலாந்து அரசரின் தலைமைத்துவத்தை அருள் பணியாளர் ஜான் ஒகில்வி அவர்கள் ஏற்கவேண்டும் என்று அவரைச் சித்ரவதைகள் செய்தனர்.
ஆறுமாதங்கள் நீடித்த இந்தச் சித்ரவதைகளின் பின்னரும் அவரிடம் எள்ளளவும் மாற்றம் ஏற்படாததால், 1615ம் ஆண்டு, மார்ச் 10ம் தேதி ஜான் ஒகில்வி அவர்கள், தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 36.
1976ம் ஆண்டு, திருத்தந்தை 6ம் பால் அவர்கள், இவரைப் புனிதராக உயர்த்தினார். இயேசு சபையைச் சேர்ந்த புனித ஜான் ஒகில்வி அவர்கள், மறைசாட்சியாகக் கொல்லப்பட்டதன் 400வது ஆண்டு, 2015ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment