செய்திகள் - 03.06.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1.
திருத்தந்தை பிரான்சிஸ் - குழந்தைகள் தேவையில்லை என்று கூறும் திருமணத்
தம்பதியர் செல்ல மிருகங்களை வளர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்மானம்
2. திருத்தந்தை பிரான்சிஸ், சிம்பாப்வே ஆயர்களுக்கு வழங்கிய 'அத் லிமினா' உரை
3. திருத்தந்தையின் திங்கள், செவ்வாய் Twitter செய்திகள்
4. இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களுக்கு ஜூன் 5 வத்திக்கானில் இறுதித் திருப்பலி
5. ஜூன் 5, ஆர்மீனிய அப்போஸ்தலிக்கச் சபையின் உயர் தலைவர், கத்தோலிக்கோஸ் முதலாம் ஆராம் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கிறார்
6. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடத்தப்பட்ட இயேசுசபை அருட்பணியாளர் அலெக்ஸிஸ் பிரேம்குமார்
7. இளையோர் அமைப்புக்களிலிருந்து 1000 பிரதிநிதிகள் ஐ.நா. தலைமையகத்தில் சந்திப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1.
திருத்தந்தை பிரான்சிஸ் - குழந்தைகள் தேவையில்லை என்று கூறும் திருமணத்
தம்பதியர் செல்ல மிருகங்களை வளர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்மானம்
ஜூன்,03,2014. திருமண வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும், குழந்தைகள் தேவையில்லை என்று தீர்மானிக்கும் சிலர், சில வேளைகளில், குழந்தைகளுக்குப்
பதில் செல்ல மிருகங்களை வளர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்மானம்
என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியத் திருப்பலியில், திருமண வாழ்வில் 25 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகள் இணைந்திருக்கும் பல திருமணத் தம்பதியர் கலந்துகொண்டனர்.
பல ஆண்டுகள் திருமண உறவில் இணைந்திருக்கும் தம்பதியருக்காக இறைவனுக்கு நன்றி கூறியத் திருத்தந்தை, பிரமாணிக்கமாக இருப்பது, தொடர் முயற்சிகள் மேற்கொள்வது, பலன்கள் தருவது ஆகியவை, திருமண வாழ்வுக்கு இன்றியமையாத பண்புகள் என்று எடுத்துரைத்தார்.
திருமணத்தின்
பலன்களில் ஒன்றான குழந்தைப்பேறு இன்றி தவிப்போரை எண்ணி அவர்களுக்காகச்
செபிக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் வசதிக்காக, தாங்கள்
பல நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக குழந்தைகள்
தேவையில்லை என்று முடிவெடுக்கும் தம்பதியரின் எண்ணங்களைக்
கேள்விக்குள்ளாக்கினார்.
குழந்தைகள் தேவையில்லை என்ற முடிவுடன் வாழ்வோர், வயது முதிர்ந்த காலத்தில், தனிமையிலும், கசப்பிலும் தங்கள் வாழ்வைக் கழிக்கும் நிலையில் துன்பப்படுகின்றனர் என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ், சிம்பாப்வே ஆயர்களுக்கு வழங்கிய 'அத் லிமினா' உரை
ஜூன்,03,2014. சிம்பாப்வே (Zimbabwe) நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும், தலத்திருஅவை மக்களுடன் இணைந்து, அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பல்வேறு நாடுகளின் ஆயர்கள், திருத்தந்தையைச் சந்திக்கும் 'அத் லிமினா' (Ad Limina) சந்திப்பையொட்டி, உரோம் வந்திருந்த சிம்பாப்வே ஆயர்களுக்கு, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் வழங்கிய உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
"ஒடுக்கப்பட்டோரின் குரலை இறைவன் கேட்கிறார்" என்ற கருத்தில், 2007ம் ஆண்டு, சிம்பாப்வே ஆயர்கள் வெளியிட்ட மடலை, தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் ஆயர்கள் இறைவாக்கினர்களைப் போல் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பி வருவதைப் பாராட்டினார்.
சிம்பாப்வே நாட்டின் சமுதாயத்தில் காணப்படும் பாவங்கள் ஒவ்வொரு தனி மனிதரிடம் காணப்படும் பாவங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்பதால், தனி மனித அளவில் பாவங்களைக் களையும் பணியில் ஆயர்கள் ஈடுபடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"ஒவ்வொரு நாளும் இவ்வுலகில் அழகு பிறப்பெடுக்கிறது; மனித வரலாற்றில் வீசும் புயல்கள் மத்தியிலும் அது மீண்டும், மீண்டும் புத்துயிர் பெறுகிறது" என்று தன் திருத்தூது அறிவுரையான 'நற்செய்தியில் மகிழ்வி'ல் எழுதிய வார்த்தைகளுடன் சிம்பாப்வே ஆயர்களுக்கு தான் வழங்கிய உரையை திருத்தந்தை நிறைவு செய்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையின் திங்கள், செவ்வாய் Twitter செய்திகள்
ஜூன்,03,2014. "அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி: நன்மை, அழகு, உண்மை ஆகிய உயரிய விழுமியங்களுக்கு இளையோரை அழைத்துச் செல்லும் கல்விப்பணி மிக முக்கியமானது" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
மேலும், "சில வேளைகளில் நாங்கள் எங்களுக்குள் புதைந்துபோகிறோம். அவ்வேளைகளில், எங்கள் இதயங்களை மற்றவர் நோக்கித் திறந்து, வலுவற்றோருக்கு பணிபுரிய எங்களைத் தூண்டிவிடும் இறைவா" என்ற செபத்தை தன் திங்கள் Twitter செய்தியாக திருத்தந்தை வெளியிட்டார்.
அரேபியம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியம், இலத்தீன், இஸ்பானியம், போர்த்துக்கல், போலந்து என்ற ஒன்பது மொழிகளில் திருத்தந்தை, Twitter செய்தியை வெளியிட்டு வருகிறார்.
திருத்தந்தையின் Twitter செய்திகள் இஸ்பானிய மொழியில் மிக அதிகம் பேரால் பின்பற்றப்படுகின்றன என்றும், அதற்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில் அதிகம் பேர் இச்செய்திகளைப் பின்பற்றுகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களுக்கு ஜூன் 5 வத்திக்கானில் இறுதித் திருப்பலி
ஜூன்,03,2014. ஜூன் 2, இத்திங்கள் காலை உரோம் நகரில் இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களின் மறைவையொட்டி, புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் அன்டனி ஆனந்தராயர் அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், கர்தினால் லூர்துசாமி அவர்கள், முதலில் இந்தியாவிலும், பின்னர் அகில உலகத் திருஅவையிலும் நற்செய்தி பரப்பும் பணியில் தன்னையே அர்ப்பணித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இத்திங்களன்று இறைவனடி சேர்ந்த கர்தினால் லூர்துசாமி அவர்களுக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராயலத்தில், ஜூன் 5ம் தேதி வியாழனன்று இறுதித் திருப்பலியும், வழிபாடும் நடைபெறும்.
கர்தினால்கள் குழுவின் தலைவர், கர்தினால் Angelo Sodano அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெறும் என்றும், திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டு, இந்த வழிபாட்டின் இறுதிச் செபங்களைச் சொல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி 5ம் தேதி தன் 90வது வயதை நிறைவு செய்த கர்தினால் லூர்துசாமி அவர்களின் உடல் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஜூன் 8 அல்லது 9ம் தேதி, புதுச்சேரியில் அடக்கம் செய்யப்படும் என்று புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
ஆதாரம் : VIS / UCAN
5. ஜூன் 5, ஆர்மீனிய அப்போஸ்தலிக்கச் சபையின் உயர் தலைவர், கத்தோலிக்கோஸ் முதலாம் ஆராம் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கிறார்
ஜூன்,03,2014. ஜூன் 5, வருகிற வியாழனன்று, ஆர்மீனிய அப்போஸ்தலிக்கச் சபையின் உயர் தலைவரான கத்தோலிக்கோஸ் முதலாம் ஆராம் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க வத்திக்கான் வருகிறார்.
1995ம் ஆண்டு உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஆராம் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து செபிப்பார் என்றும், இருவரும் புனித பேதுருவின் கல்லறைக்குச் செல்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1997ம் ஆண்டு முதலாம் ஆராம் அவர்கள் வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களைச் சந்தித்தார். பின்னர், மீண்டும் 2008ம் ஆண்டு, அவர் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, வத்திக்கானில் சந்தித்தபோது, இருவரும் இணைந்து கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருவழிபாட்டில் கலந்துகொண்டனர்.
உலகெங்கும் 60 இலட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஆர்மீனிய அப்போஸ்தலிக்கச் சபையின் உயர் தலைவர், கத்தோலிக்கோஸ் முதலாம் ஆராம் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் உறுப்பினர்களையும், ஏனைய வத்திக்கான் உயர் அதிகாரிகளையும் சந்திப்பார்.
ஆதாரம் : Zenit
6. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடத்தப்பட்ட இயேசுசபை அருட்பணியாளர் அலெக்ஸிஸ் பிரேம்குமார்
புலம் பெயர்ந்தோருக்கெனப் பணியாற்றும் இயேசுசபை பணியின் ஒருங்கிணைப்பாளராக ஆப்கானிஸ்தான் நாட்டில் பணியாற்றிய இயேசுசபை அருட்பணியாளர் அலெக்ஸிஸ் பிரேம்குமார் அவர்கள், இத்திங்கள் காலையில் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டார்.
தமிழக இயேசு சபையைச் சார்ந்த, 47 வயதான அருட்பணியாளர் பிரேம்குமார் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக அங்குள்ள சிறுவர், சிறுமியருக்கு கல்விப் பணியாற்றுவதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். திங்கள் காலை Zinda Jan எனப்படும் பகுதியில் உள்ள பள்ளிக்கு அவர் சென்றுகொண்டிருந்த வேளையில், அடையாளம் தெரியாத சிலர் அவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
அருட்பணியாளர் பிரேம்குமார் அவர்களை விடுவிக்கும் முயற்சியில் இந்திய இயேசு சபையினரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஈடுபட்டுள்ளன.
ஆதாரம் : AsiaNews
7. இளையோர் அமைப்புக்களிலிருந்து 1000 பிரதிநிதிகள் ஐ.நா. தலைமையகத்தில் சந்திப்பு
ஜூன்,03,2014. உலகின் பல நாடுகளில் செயலாற்றும் இளையோர் அமைப்புக்களிலிருந்து 1000 பிரதிநிதிகள், ஜூன், 2, இத்திங்களன்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இவ்வுலகின் தேவைகள் ஆயிரம், அதேபோல், உலகில் ஏற்பட்டுள்ள வாய்ப்புக்களும் ஆயிரம் என்று கூறினார்.
மில்லென்னிய இலக்குகளை அடையும் இறுதி ஆண்டு 2015 என்று குறிக்கப்பட்டிருப்பதால், இந்த இலக்குகளை அடைவதில் இளையோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ஐ.நா. தலைமையகம் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
180 கோடிக்கும் அதிகமாக உலகெங்கும் பரவியுள்ள இளையோரிடையே, தரமான கல்வி, அடிப்படை நலவாழ்வு வசதிகள், குறைந்த அளவு மதிப்பு தரும் தொழில்கள் ஆகியவை முக்கியத் தேவைகள் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment