1. திருத்தந்தையின் மூவேளை செப உரை
2. குடும்பங்களுக்கானத் திருப்பீட அவையின் இவ்வாண்டு திட்டங்கள்
3. எரிசக்தி தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம், கிறிஸ்தவ சபைகள் வேண்டுகோள்
4. இந்தியாவிலுள்ள புற்றுநோயாளிகளில் பாதிபேர் மேற்குவங்கத்தில்
5. இந்தியாவில் காணமற்போகும் குழந்தைகள் ஆண்டிற்கு 60,000
6. இலங்கையின் 30 விழுக்காட்டு சிறார்கள் போதிய சத்துணவின்மையால் பாதிப்பு
7. 'இலங்கையில் உரிமை மீறல் பொறுப்பேற்புக்கு எந்த முயற்சியும் கிடையாது'
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் மூவேளை செப உரை
பிப்.04,2013. வாழ்வுக்கும், குடும்பத்திற்கும்
நமது நேரத்தையும் சக்தியையும் அளிப்பதே இன்றைய நெருக்கடிகளை
எதிர்கொள்வதற்கான மிகச்சிறந்த பதிலுரையாக இருக்கமுடியும் என்றார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியில் இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட வாழ்வுக்கான நாள் குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரும் மாண்புடன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை உறுதிசெய்யும் இடமாக ஐரோப்பா விளங்கவேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார்.
வாழ்வு
கலாச்சரத்திற்காக உழைக்குமாறு நல ஆதரவுப் பணியாளர்களுக்குத் தான்
ஊக்கமளிப்பதக்கவும் திருத்தந்தை எடுத்துரைத்தார். இஞ்ஞாயிறு மூவேளை செப
உரையின் துவக்கத்தில், 'இயேசுவே அன்பின் இறைவாக்கினர் அவர் உண்மைக்கு சான்று பகர வந்தார்' என்பதை மையக்கருத்தாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவே அன்பின் இறைவாக்கினர், ஆனால் அன்பிற்கென்று தனி உண்மைகள் உள்ளன என்றார்.
ஒரே உண்மைத்தன்மையின் இரு பெயர்களே அன்பும் உண்மையும், அவையே இறைவனின் இரு பெயர்கள் என மேலும் கூறினார் திருத்தந்தை.
அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும், பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது, இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது, மாறாக உண்மையில் அது மகிழும், என்ற தூய பவுலின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டி இவ்வார ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை.
2. குடும்பங்களுக்கானத் திருப்பீட அவையின் இவ்வாண்டு திட்டங்கள்
பிப்.04,2013. குடும்பங்கள் குறித்த பல கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களுக்கு, இவ்வாண்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக, குடும்பத்திற்கானத் திருப்பீட அவை அறிவித்து, அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 15ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க்கில் 'குடும்பம் சமூகத்தின் ஆதாரம்' என்ற தலைப்பிலும், மார்ச் மாதத்தில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 'பாரம்பரிய குடும்பங்களுக்குச் சட்ட ரீதியான, சமூக ரீதியான பாதுகாப்பு வழங்குவதன் மூலம் மனித உரிமைகளையும் விடுதலையையும் ஊக்குவித்தல்' என்ற தலைப்பிலும் கருத்தரங்குகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பம் குறித்த கலந்துரையாடல்கள் ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இடம்பெறும் எனவும், குடும்பங்களின் உரிமைகள் குறித்த உயர்மட்ட கருத்தரங்கு செப்டம்பரில் Strasburgல் இடம்பெறும் எனவும் அறிவிக்கிறது திருப்பீடத்தின் குடும்பங்களுக்கான அவை.
உரோம் நகரின் தூய பேதுரு கல்லறையைத் தரிசிக்க, குடும்பங்கள் மேற்கொள்ளும் திருப்பயணம், 'குடும்பங்கள் விசுவாச மகிழ்வை வாழ்தல்' என்ற மையக் கருத்துடன் அக்டோபர் 26, 27 தேதிகளில் இடம்பெறும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.
3. எரிசக்தி தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம், கிறிஸ்தவ சபைகள் வேண்டுகோள்
பிப்.04,2013. எரிசக்தி தயாரிப்பு வழிமுறைகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இங்கிலாந்தில் இத்திருநீற்றுப்புதனன்று விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக கிறிஸ்தவ சபைகள் அறிவித்துள்ளன.
எரிசக்தி தயாரிப்பில் கார்பன் வெளிப்பாடு அதிகமாகி, காற்றில் கலப்பது குறித்து கவலையின்றி செயல்படும் இங்கிலாந்து அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்புடைய சட்ட வரைவை முன்வைக்க வேண்டும் எனக்கூறும் அந்நாட்டின் கிறிஸ்தவ அவைகளின் பிறரன்பு அமைப்பான Operation Noah, தங்கள் கடந்த கால தவறுகளுக்குக் கழுவாய் தேட அரசுக்கு திருநீற்றுப்புதன் சிறந்த நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இயற்கையைக் காக்கவேண்டிய சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், குறுகியக் கண்ணோட்டத்துடன் இங்கிலாந்து அரசு செயல்படுவது குறித்தும் இப்பிறரன்பு அமைப்பு குறைகூறியுள்ளது.
4. இந்தியாவிலுள்ள புற்றுநோயாளிகளில் பாதிபேர் மேற்குவங்கத்தில்
பிப்.04,2013. புற்றுநோயால் உலகில் ஆண்டுதோறும் 76 இலட்சம் பேர் இறப்பதாகவும், இது உலகில், ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்பில் 13 விழுக்காடு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் இறப்பவர்களில் 70 விழுக்காட்டினர், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கும் உலக நலவாழ்வு நிறுவனம், துவக்கத்திலேயே முறையான சிகிச்சை மேற்கொண்டால், 40 விழுக்காடு வரை இறப்புகளைத் தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கிறது.
இந்தியாவில், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால், புற்றுநோய் பாதிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேற்கு
வங்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் எனக்கூறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
புற்றுநோய் ஆய்வுக் கழக மருத்துவ இயக்குனர் ஆஷிஷ் முகோபாத்யாயா, மேற்கு வங்கத்தில் மட்டும் 5 இலட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு 70,000 புற்றுநோய் பாதிப்புக்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், ஆண்டுதோறும் 35,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்து வருவதாகவும் தெரிவித்தார்.
5. இந்தியாவில் காணமற்போகும் குழந்தைகள் ஆண்டிற்கு 60,000
பிப்.04,2013. இந்தியாவில் ஆண்டிற்கு 60,000க்கு மேற்பட்ட குழந்தைகள் காணாமற்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டு வேலைக்காக, அண்மையில் ஜார்க்கண்டிலிருந்து டில்லிக்கு கடத்தி வரப்பட்ட 11 வயது சிறுமி, தன்னார்வத் தொண்டு அமைப்பினரால் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் நடத்திய ஆய்வில், நாட்டில் ஆண்டிற்கு 60,000க்கு மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து காணாமற் போகின்றனர் என்பது தெரிய வந்துள்து.
டில்லியில் கல்லூரி மாணவி, பாலியல் வன்கொமைக்கு உடபடுத்தப்பட்டு பலியான விவகாரத்தையடுத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புதுச்சட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா குழு, குழந்தைகள் காணாமற் போவது குறித்து கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
6. இலங்கையின் 30 விழுக்காட்டு சிறார்கள் போதிய சத்துணவின்மையால் பாதிப்பு
பிப்.04,2013.
இலங்கையின் 30 விழுக்காட்டு சிறார்கள் போதிய சத்துணவின்மையால்
பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சத்துணவு நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்னையரில்
மூன்றில் ஒரு பகுதியினர் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை
சத்துணவு நிபுணர் சங்கத்தின் தலைவர் கலாநிதி ரேனுக டி சில்வா
தெரிவித்துள்ளார்.
மக்களின் சத்துணவு நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், குறிப்பாக சிறுவர் சிறுமியரின் சத்துணவு நிலைமை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
7. 'இலங்கையில் உரிமை மீறல் பொறுப்பேற்புக்கு எந்த முயற்சியும் கிடையாது'
பிப்.04,2013. சமூகத்தின் மீது தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்ற இலங்கை அரசு, 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பை ஏற்கவோ,
ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவோ தவறிவிட்டது என்று 2013ம்
ஆண்டுக்கான தனது அறிக்கையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள்
கண்காணிப்பகம் கூறியுள்ளது.
அரபு வசந்தத்துக்குப் பின்னரான நிலைமைகள் உட்பட, 90க்கும் அதிகமான நாடுகளில் கடந்த வருட மனித உரிமைகள் நிலவரம் குறித்து தனது 665 பக்க ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ள இந்த அமைப்பு, இலங்கையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் அங்கு மனித உரிமைகள் நிலவரங்களில் எவ்விதமான அடிப்படை முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.
சிறுபான்மைத் தமிழர்கள் மீது பாதுகாப்புப் படைகள் பெரிய அளவில் கைதுகள் மற்றும் சித்ரவதைகளை மேற்கொள்வதாகவும், பாலியல் வல்லுறவுகள் கூட மேற்கொள்ளப்படுவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு மார்ச் மாதத்தில் வரவிருக்கும் நிலையில், இலங்கை, அங்குள்ள மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்த நிறைய ஆற்றவேண்டியுள்ளது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment