1.கர்தினால்கள் குழுவுடன் திருத்தந்தை சந்திப்பு
2. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம், மனித வாழ்வும் மனித மாண்பும் அதிகமாக மதிக்கப்படுவதற்கு உதவும் : பேராயர் சுள்ளிக்காட்
3. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்திற்கு விரைவில் இசைவு உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்
4. அசாம்
இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதற்கு
அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது கத்தோலிக்கத் திருஅவை
5. தமிழர் ஒருவருக்கு ரமோன் மகசேசே விருது
6. காங்கோவின் "balkanization" திட்டத்தில் கத்தோலிக்கரும் கலந்து கொள்ளுமாறு ஆயர்கள் அழைப்பு
7. சிரியாவின் புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு ஓர் அருள்சகோதரி வலியுறுத்தல்
8. சிரியாவில் இரத்தம்சிந்தல்கள் நிறுத்தப்படுமாறு பான் கி மூன் அழைப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1.கர்தினால்கள் குழுவுடன் திருத்தந்தை சந்திப்பு
ஜூலை,27,2012.
வத்திக்கானிலிருந்து நம்பகத்தன்மைமிக்க ஆவணங்கள் பொதுவில் வெளியாகிய
விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மூன்று
கர்தினால்கள் அடங்கிய குழுவை இவ்வியாழனன்று திருத்தந்தை சந்தித்தார் என்று
திருப்பீடம் கூறியது.
இக்குழுவின் கர்தினால்கள் Julian Herranz, Joseph Tomko, Salvatore de Giorgi, இன்னும், இக்குழுவின் செயலர் கப்புச்சின் சபை அருள்தந்தை Louis Martignani, இவ்விவகாரத்தை விசாரிக்கும் குற்றவியல் நடுவர் பேராசிரியர் Piero Antonio Bonnet, வத்திக்கான் நகர நீதிமன்றத்தின் நீதிஊக்குனர் பேராசிரியர் Nicola Picardi ஆகியோரும் சேர்ந்து திருத்தந்தையைச் சந்தித்தனர்.
இவ்விவகாரம் குறித்த இக்கர்தினால்கள் குழுவின் விசாரணைகளின் முடிவுகளையும், இன்னும் முடிக்கப்பட வேண்டிய குற்ற விசாரணைகள் குறித்தும் அறிந்து அக்குழுவுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இந்தக் குழு இந்தத் தனது வேலையை தளரா ஊக்கத்துடன் தொடர்ந்து செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரங்களுக்கான பதிலாளர் பேராயர் Angelo Becciu, திருத்தந்தையின் செயலர் பேரருட்திரு Georg Gänswein, வத்திக்கான் காவல்துறை அதிகாரி முனைவர் Domenico Giani, திருப்பீடச் செயலகத்திற்குத் தொடர்பு ஆலோசகர் முனைவர் Greg Burke ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
2. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம், மனித வாழ்வும் மனித மாண்பும் அதிகமாக மதிக்கப்படுவதற்கு உதவும் : பேராயர் சுள்ளிக்காட்
ஜூலை,27,2012. ஆயுதங்கள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள், முறையற்றும், பொறுப்பற்றும், சட்டத்துக்குப்
புறம்பேயும் கைமாற்றப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில்
ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற தன்மையும் பயமும் ஆயுத வியாபாரத் தடை
ஒப்பந்தத்தால் அகலும் என்று கூறினார் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்.
ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் குறித்து நியுயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், இவ்வுலகில், மனித வாழ்வும் மனித மாண்பும் அதிகமாக மதிக்கப்படுவதை ஊக்குவிப்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் கூறினார்.
இந்த ஒப்பந்தம் மிகவும் உறுதியானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருப்பதற்குத் திருப்பீடம் சில வழிமுறைகளை வலியுறுத்த விரும்புகிறது என்றும் கூறிய பேராயர் சுள்ளிக்காட், இவ்விவகாரத்தில் அனைத்துலக அளவில் ஒத்துழைப்பையும், நாடுகளுக்கிடையே உதவிகளையும் ஊக்குவித்து அவற்றை வலியுறுத்த வேண்டுமென்று கூறினார்.
நாடுகளுக்கிடையே இடம்பெறும் நெருங்கிய ஒத்துழைப்பு மூலம், உலகில் ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதை இவ்வொப்பந்தம் தடை செய்யும், இது
உலகில் ஓர் உண்மையான அமைதிக் கலாச்சாரம் ஏற்பட இன்றியமையாதது என்றும்
திருப்பீட அதிகாரி பேராயர் சுள்ளிக்காட் ஐ.நா. கூட்டத்தில் கூறினார்.
3. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்திற்கு விரைவில் இசைவு உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்
ஜூலை,27,2012. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் குறித்த ஐ.நா. கூட்டம் விரைவில் முடியவுள்ளவேளை, ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் விரைவில் ஒரு தீர்மானத்துக்கு வருமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
சண்டைகளின் காரணமாக, 2010ம் ஆண்டின் இறுதியில் சுமார் 2 கோடியே 75 இலட்சம் மக்கள் நாடுகளுக்குள்ளேயே புலம் பெயர்ந்தனர், அதேநேரம், இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடினர், இவற்றுக்குப் பெரும்பாலும் ஆயுதம் தாங்கிய வன்முறைகளும், ஆயுதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமே காரணங்கள் எனவும் அவர் கூறினார்.
ஆறாயிரம் கோடி டாலர் முதல் ஏழாயிரம் கோடி டாலர் வரையிலான மதிப்புடைய ஆயுத வியாபாரம் ஆண்டுதோறும் உலகில் இடம்பெறுகின்றது.
ஆயுதங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வதில் உலகில் அமெரிக்க ஐக்கிய நாடும், இரஷ்யாவும் அதற்கடுத்தபடியாக சீனாவும் உள்ளன என ஊடகங்கள் கூறுகின்றன.
சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுதங்களால் ஆண்டுதோறும் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்படுகின்றனர் என்று Stockholm அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
நியுயார்க்கில் நடைபெறும் இந்த நான்கு நாள் கூட்டத்தில் ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
4. அசாம்
இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதற்கு
அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது கத்தோலிக்கத் திருஅவை
ஜூலை,27,2012.
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெறும் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட
சமூகங்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதற்கு அரசின் அனுமதிக்காகக்
காத்திருக்கிறது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
வடகிழக்கு
இந்திய மாநிலமான அசாமின் பல மாவட்டங்கள் மதியற்ற வன்முறையாலும் மனிதாபிமான
நெருக்கடியாலும் நிறைந்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள ஆயர்கள், இந்தக் கலவரங்களில் சம்பந்தப்பட்டுள்ள குழுக்கள் அன்பிலும் சகோதரத்துவ உணர்விலும் வாழும் முறைகளைக் கண்டுணருமாறு கேட்டுள்ளனர்.
இம்மாதம்
20ம் தேதி நான்கு போடோ இன இளைஞர்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதைத்
தொடர்ந்து இவ்விரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்கள், குடியிருப்புக்களுக்குத்
தீ வைத்து வீடுகளையும் சூறையாடியுள்ளன. இதில் 40க்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்
மற்றும் பெருமளவான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
5. தமிழர் ஒருவருக்கு ரமோன் மகசேசே விருது
ஜூலை,27,2012. இந்தியாவின் தமிழர் ஒருவர் உட்பட ஆறு ஆசியர்களுக்கு, ஆசியாவின்
நொபெல் விருது என அழைக்கப்படும் இவ்வாண்டுக்கான ரமோன் மகசேசே விருது
அளிக்கப்படுவதாக மனிலாவின் மகசேசே விருதுக்குழு இப்புதனன்று
அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழைக் கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கையை
மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாகப் பணி செய்து வரும் குழந்தை
பிரான்சிஸ் என்பவர் ரமோன் மகசேசே விருதுக்கெனத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
65 வயதாகும் பிரான்சிஸ், IVDP என்ற ஒருங்கிணைந்த கிராம முன்னேற்ற வளர்ச்சித் திட்டத்தை 1979ம் ஆண்டு ஆரம்பித்தார். தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட சுயஉதவிக் குழுக்கள் இந்த IVDP திட்டத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பங்களாதேஷ் வழக்கறிஞர் Syeda Rizwana Hasan, கம்போடிய வேளாண் நிபுணர் Yang Saing Koma, இந்தோனேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் Ambrosius Ruwindrijarto, பிலிப்பீன்ஸ் வேளாண் அறிவியலாளர் Romulo Davide, தாய்வான் காய்கறி விற்பனையாளர் Chen Shu-Chu ஆகியோரும்
இவ்வாண்டுக்கான ரமோன் மகசேசே விருதுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் ஆறுபேரும் இவ்விருதை வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி மனிலாவில்
பெறுவார்கள்.
முன்னாள்
பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரமோன் மகசேசேயின் பெயரால் 1958ம் ஆண்டில்
உருவாக்கப்பட்ட இவ்விருதை இதுவரை 49 இந்தியர்கள் உட்பட 290 பேர்
பெற்றுள்ளனர். இவர்களில் MS சுவாமிநாதன், MS சுப்புலட்சுமி, TN சேஷன், P.Sainath உட்பட 6 பேர் தமிழர்கள்.
6. காங்கோவின் "balkanization" திட்டத்தில் கத்தோலிக்கரும் கலந்து கொள்ளுமாறு ஆயர்கள் அழைப்பு
ஜூலை,27,2012. ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசை இன மற்றும் புவியியல் கோடுகளின்படி பிரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள "balkanization" என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில், வருகிற
ஆகஸ்ட் முதல் தேதி நாடு முழுவதும் இடம்பெறும் போராட்டத்தில்
கத்தோலிக்கரும் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டு ஆயர்கள் கேட்டுள்ளனர்.
காங்கோவின்
கிழக்குப் பகுதியில் புரட்சியாளர்கள் புகுந்து தாக்குதலை நடத்தி வருவதாகக்
கூறிய காங்கோ ஆயர் பேரவையின் பொதுச் செயலர் அருட்பணி Leonard Santedi,
இம்மாதம் 31ம் தேதியிலிருந்து நாட்டின் அமைதிக்காகச் செபிப்பதற்கு அனைத்து
விசுவாசிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காங்கோவைப் பிரிப்பதற்கானத் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அருட்பணி Santedi கூறினார்.
ஆகஸ்ட் முதல் நாள், காங்கோ
மூதாதையர் மற்றும் பெற்றோரின் விழாவாகச் சிறப்பிக்கப்படுகிறது. அந்நாள்
காங்கோவில் தேசிய விடுமுறை தினமாகும். எனவே காங்கோ என்ற ஒரே நாட்டைப்
பாதுகாப்பதற்கு இந்நளில் போராட வேண்டுமென்றும் அக்குரு கேட்டுக் கொண்டார்.
Tutsi இனத்தவரைச் சேர்ந்த M23 என்ற புரட்சிக்குழு, காங்கோ இராணுவத்துடன் சண்டையிட்டதில் 2 இலட்சத்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு கூறியுள்ளது.
7. சிரியாவின் புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு ஓர் அருள்சகோதரி வலியுறுத்தல்
ஜூலை,27,2012. சிரியாவின் புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு அந்நாட்டின் ஹோம்ஸ் நகருக்கு அருகிலுள்ள Deir Mar Youcoub துறவு இல்லத்தலைவர் அருள்சகோதரி Agnes-Mariam de la Croix கேட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் சிரியாவின் புரட்சியாளர்கள், சிரியா சமுதாயத்தில் குழப்பத்தை விதைத்து நாட்டின் சமநிலையை அழித்து வருகின்றனர் என்றும், பயங்கரவாதம், அச்சுறுத்தல்கள், இரத்தம்சிந்தல்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டைப் பிணையலில் வைத்துள்ளனர் என்றும் அருள்சகோதரி de la Croix குற்றம் சுமத்தினார்.
புரட்சியாளர்களின் நோக்கங்கள் குறித்து மேற்கத்திய ஆதரவாளர்களுக்குத் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றுரைத்த அச்சகோதரி, இந்தப் புரட்சியாளர்களில் சிலர், அல்-கெய்தா அல்லது முஸ்லீம் சகோதரத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டமைப்புக் கொண்டவர்கள் என்றும் விளக்கினார்.
கட்டாயத்தின்பேரில்
சிரியாவிலிருந்து லெபனன் நாட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்த அச்சகோதரி
அரசியல்வாதிகளையும் ஊடகத்துறையினரையும் சந்திப்பதற்காகத் தற்போது உரோமை
வந்துள்ளார்.
வெளிநாட்டுச் சக்திகள் சிரியாவின் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதையும், கனரக ஆயுதங்களால் சிரியா ஆக்ரமிக்கப்படுவதற்கு உதவுவதையும் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ள அருள்சகோதரி de la Croix, சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் ஐ.நா.தீர்மானத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
8. சிரியாவில் இரத்தம்சிந்தல்கள் நிறுத்தப்படுமாறு பான் கி மூன் அழைப்பு
ஜூலை,27,2012. Bosnia-Herzegovina குடியரசின் Srebrenica நகரில் 1995ம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற படுகொலை நாளை நினைவுகூர்ந்த ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இந்தப் படுகொலை நிகழ்விலிருந்து உலகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சிரியாவில் இடம்பெறும் இரத்தம்சிந்தல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
Srebrenica நகரில் எட்டாயிரத்துக்கு அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை இவ்வியாழனன்று நினைவுகூர்ந்த பான் கி மூன், அச்சமயத்தில் அம்மக்களுக்குத் தேவைப்பட்ட ஆதரவை பன்னாட்டுச் சமுதாயம் வழங்கத் தவறியது என்றும் கூறினார்.
இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், இனஒழிப்பு
மற்றும் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடையவை ஏற்படும்போது
தங்களது நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசுகளின் பொறுப்பு என்பதை, 2005ம் ஆண்டில் உலகத் தலைவர்கள் ஒரு கொள்கையாகவே கொண்டு வந்தார்கள் என்றும் ஐ.நா.பொதுச்செயலர் கூறினார்.
லிபியா, ஐவரி கோஸ்ட் போன்ற சில இடங்களில் இந்தக் கொள்கையைப் பயன்படுத்த முடிந்தது, ஆனால், சிரியா போன்ற பல இடங்களில் பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர் கவலையுடன் கூறினார்.
சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assadக்கு
எதிராக கடந்த சுமார் 16 மாதங்களாக இடம்பெற்று வரும் கிளர்ச்சியில்
பத்தாயிரத்துக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும்
பல்லாயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் என்பதையும் பான் கி மூன்
சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment