Tuesday, 10 July 2012

Catholic news in Tamil - 10/07/12

1. பிரேசில் கர்தினால் Eugênio Sales de Araújo இறையடி சேர்ந்தார், திருத்தந்தை இரங்கல்

2. வத்திக்கான் உச்ச நீதிமன்றத் தலைவர் : நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்கள் வெளியாகியிருப்பது "மிகக் கடுமையான குற்றங்கள்"

3. மெக்சிகோ கர்தினால் அமைதிக்காகச் செபம்

4. தென் சூடான் அதிகாரிகள் ஊழலை ஒழித்து வாழுமாறு சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்

5. Dibrugarh ஆயர் : அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தேவை

6. வருங்காலத் தலைவர்களைத் தயார் செய்யும் இந்திய இளம் துறவியர் கூட்டம்

7. சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களைவிட அதிக அளவு  நீரைப் பயன்படுத்துகிறார்கள் : பன்னாட்டுப் பிறரன்பு நிறுவனம் எச்சரிக்கை

8. அரசுசாரா நிறுவனங்களுக்கான உரிமத்தை இரத்து செய்வதற்கு தமிழ்நாடு காவல்துறை வேண்டுகோள்

------------------------------------------------------------------------------------------------------
1. பிரேசில் கர்தினால் Eugênio Sales de Araújo இறையடி சேர்ந்தார், திருத்தந்தை இரங்கல்

ஜூலை10,2012. இச்செவ்வாயன்று மரணமடைந்த பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவின் முன்னாள் பேராயர் கர்தினால் Eugênio Sales de Araújoவின் இழப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ரியோ டி ஜெனிரோவின் பேராயர் Dom Orani Joao Tempestaவுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இறந்த கர்தினாலின் ஆன்மா நிறைசாந்தியடைய செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதோடு, அவர் தலத்திருஅவைக்கும் அகில உலகத் திருஅவைக்கும் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளார்.
91 வயதாகும் கர்தினால் Eugênio Sales de Araújo வின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 208 ஆகவும், இதில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 121ஆகவும் குறைந்தன. உலகில் பெரிய கத்தோலிக்க நாடான பிரேசிலில் தற்போது 9 கர்தினால்கள் உள்ளனர்.
கர்தினால் Eugênio Sales de Araújo, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் 1969ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 1920ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிறந்த இவர், 1943ம் ஆண்டில் குருவாகவும், 1954ம் ஆண்டில் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் 1971ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோ பேராயராக நியமிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு மறைப்பணியாற்றியிருக்கிறார்.


2. வத்திக்கான் உச்ச நீதிமன்றத் தலைவர் : நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்கள் வெளியாகியிருப்பது "மிகக் கடுமையான குற்றங்கள்"

ஜூலை10,2012. நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்கள் வெளியாகியிருப்பது "மிகக் கடுமையான குற்றங்கள்" என்று விவரித்துள்ள அதேவேளை, இதற்குப் பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு "தகுந்த தடுப்பு நடவடிக்கைகள்" எடுக்கப்பட வேண்டுமென்று வத்திக்கான் உச்ச நீதிமன்றத் தலைவர் வலியுறுத்தினார்.
Apostolic Signatura எனப்படும் வத்திக்கான் உச்ச நீதிமன்றத் தலைவர் கர்தினால் Raymond L.Burke, அயர்லாந்தில் நடைபெற்ற 5வது அனைத்துலக திருவழிபாடு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் நிருபர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருஅவையின் பணியைச் செய்யும் பொருட்டு அவர் மேற்கொள்ளும் நம்பகத்தன்மைமிக்கத் தகவல் பரிமாற்றங்கள் மதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கர்தினால் Burke.
இங்கு எதையும் மறைப்பதுபற்றிய கேள்வி இல்லை, ஆனால் மனச்சான்றை மதிப்பது மிகவும் முக்கியம் என்றுரைத்த கர்தினால், நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்களை வெளியிட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள்மீது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இத்தாலிய ஊடகம் "VatiLeaks"  என்ற பெயரில் வெளியிட்ட செய்திகள் கண்டு தான் திகைப்படைந்ததாகவும் வத்திக்கான் உச்ச நீதிமன்றத் தலைவர் கர்தினால் Raymond L. Burke கூறினார்.


3. மெக்சிகோ கர்தினால் அமைதிக்காகச் செபம்

ஜூலை10,2012. மெக்சிகோவில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வன்முறைகள் அதிகரித்து வரும்வேளை, அந்நாட்டின் அமைதிக்காகச் செபித்தார் மெக்சிகோ நகர் பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera.
மெக்சிகோவில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் ஓட்டுகள் விலைக்கு வாங்கப்பட்டன மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டன என்று ஒரு வேட்பாளர் குற்றம் சாட்டி வரும்வேளை, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுக்கிடையே நிலவும் கருத்து முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார் கர்தினால் Carrera.
மெக்சிகோவில் குருக்களுக்கு எதிரானப் போக்கைக் கொண்டிருந்து, நீண்டகாலம் ஆட்சியிலிருந்த நிறுவனப் புரட்சிக் கட்சி, 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இத்தேர்தல் முடிவுகள் தந்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.


4. தென் சூடான் அதிகாரிகள் ஊழலை ஒழித்து வாழுமாறு சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்

ஜூலை10,2012. தென் சூடான் அரசியல் அதிகாரிகளின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவரும் மனமாற்றத்திற்கு உறுதியளிக்குமாறு அந்நாட்டு கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென் சூடான் தனி நாடாகி ஜூலை 9ம் தேதியோடு ஓராண்டு ஆகியிருப்பதையொட்டி, தென் சூடான் தலைநகர் Juba பேராயர் Paulino Lukudu Loro வும் Episcopal கிறிஸ்தவ சபை பேராயர் Daniel Deng Bulவும் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில், ஊழல் மற்றும் இன வெறுப்பால் தென் சூடான் மிகுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சில சமூகங்களில் காணப்படும் ஊழல் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருக்கின்றது என்றும் கூறும் அவ்வறிக்கை, இனங்களுக்கிடையே பதட்டநிலைகள் காணப்படுவதும் கவலை தருகின்றது எனவும் கூறுகிறது.
தென் சூடான் தனி நாடாக உருவாகியிருப்பதில் தாங்கள் பெருமைப்படுவதாகக் கூறும் ஆயர்களின் அறிக்கை, நாட்டில் அமைதி காக்கப்படவும் கோரியுள்ளது.


5. Dibrugarh ஆயர் : அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தேவை 

ஜூலை10,2012. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கும் சிறாருக்கும் அனைத்துவிதமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று Dibrugarh ஆயர் Joseph Aind  கூறினார்.
ஏறக்குறைய 5 இலட்சம் மக்கள் அகதிகள் முகாம்கள், கூடாரங்கள், மற்றும் திருஅவை நிறுவனங்களில் தங்கியிருக்கின்றனர் என்றுரைக்கும் ஆயர் Aind, இம்மக்கள்  மாண்புடன் வாழவேண்டிய தேவை உள்ளது என்று கூறினார்.
வீடுகள், விளைச்சல்கள், மரங்கள், விலங்குகள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவர்களுக்குத் தேவையான கொசுவலைகள், உணவுப் பொருள்கள், கூடாரங்கள், மருந்துகள் போன்றவற்றை மறைமாவட்டமும் அரசுசாரா அமைப்புகளும் கொடுத்து வருகின்றன.


6. வருங்காலத் தலைவர்களைத் தயார் செய்யும் இந்திய இளம் துறவியர் கூட்டம்

ஜூலை10,2012. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கான தலைமைத்துவம் 2012என்ற தலைப்பில் இந்திய துறவுசபை அதிபர்கள் அவையின் இளம் துறவியர் இத்திங்களன்று 4 நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இளம் துறவியருக்கென தேசிய அளவில் முதன்முறையாக நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட சபைகளிலிருந்து 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 200க்கும் அதிகமான இளம் துறவியர் கலந்து கொள்கின்றனர்.
துறவு வாழ்வின் எதிர்காலம் குறித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு இக்கூட்டத்தில் ஒரு திட்டம் வகுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


7. சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களைவிட அதிக அளவு  நீரைப் பயன்படுத்துகிறார்கள் : பன்னாட்டுப் பிறரன்பு நிறுவனம் எச்சரிக்கை

ஜூலை10,2012. இந்தியா உட்பட வளரும் நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் சுத்த நீரின் அளவுக்கும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு இருப்பதாக பிரிட்டனை மையமாகக் கொண்ட ஒரு பன்னாட்டுப் பிறரன்பு நிறுவனம் எச்சரித்தது.
இந்தியாவின் கோவா மற்றும் கேரளா உட்பட சுற்றுலாப் பயணிகள் தங்கும் உலகின் புகழ்பெற்ற 5 கடற்கரை விடுதிகளில் அண்மையில் ஆய்வு நடத்திய இவ்வமைப்பு, சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களைவிட அதிக அளவு நீரைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துள்ளது.
உள்ளூர் மோதல்களும் வறுமையும் அதிகரிக்கவும் நோய்கள் பரவவும் இந்த நிலை காரணமாக அமைகின்றது என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. 
Tanzania நாட்டு Zanzibarன் இரண்டு தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளில் பயன்படுத்தும் சுத்த நீரின் அளவு, உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவைவிட 16 மடங்குக்கும் அதிகம் என்று இவ்வமைப்பு கண்டுபிடித்துள்ளது.
இந்தச் சமத்துவமற்றநிலை களையப்படுவதற்கு அனைத்துலக சுற்றுலா நிறுவனமும், அரசுகளும், சுற்றுலா அமைப்பும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் இந்தப் பிரிட்டன் பிறரன்பு அமைப்பு கேட்டுள்ளது.


8. அரசுசாரா நிறுவனங்களுக்கான உரிமத்தை இரத்து செய்வதற்கு தமிழ்நாடு காவல்துறை வேண்டுகோள்

ஜூலை10,2012. தமிழகத்திலுள்ள 90 அரசுசாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் இரத்து செய்யப்படுமாறு தமிழ்நாடு காவல்துறை நடுவண் அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இந்த விண்ணப்பக் கடிதம், தமிழக உள்துறை அமைச்சகம் வழியாக அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உரிமங்களைப் புதுப்பிக்கக் கோரி கடந்த மார்ச் வரை விண்ணப்பித்துள்ள 200க்கும் மேற்பட்ட அரசுசாரா அமைப்புக்களில் ஏறக்குறைய 90, அவை நிதிகளைச் செலவழிக்கும் முறையை வைத்து தகுதியற்றவைகளாக உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.
FCRA என்ற "வெளிநாட்டு உதவி விதிமுறையின்கீழ்" இந்தியாவில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ள அரசுசாரா நிறுவனங்கள் உள்ளன.
 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...