Thursday 26 July 2012

Catholic News in Tamil - 23/07/12

1. திருத்தந்தை தீயவன் இறைவனின் அமைதியை எப்போதும் சீர்குலைக்கிறான்

2. டென்வர் நகர் திரையரங்கு வன்முறை, அறிவற்ற கொடுஞ்செயல் : திருத்தந்தை

3. ஆயனுக்குத் தேவையான அடிப்படை குணம், கருணை - வத்திக்கான் அதிகாரி

4. 'வடக்கில் குடியரசு இல்லை' : அமெரிக்கத் தூதரிடம் யாழ்ப்பாண ஆயர்

5. இந்தோனேசியாவின் Aceh பகுதியில் நான்கு கத்தோலிக்கக் கோவில்களில் தாக்குதல்கள்

6. பெரு நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு

7. Congo  ஆயர்கள் தலைமையில் 'நம்பிக்கையின் ஊர்வலம்'

8. தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், நவீன அடிமைத்தனம் போல் உள்ளன

9. எயிட்ஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் வெற்றிபெற்று வருகின்றன‌

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை தீயவன் இறைவனின் அமைதியை எப்போதும் சீர்குலைக்கிறான்

ஜூலை,23,2012. மனித இதயங்களிலும், உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையேயும், மனிதருக்கும் இறைவனுக்கும் இடையேயும், மனிதர்களுக்கிடையேயான உறவுகளிலும், சமூக மற்றும் அனைத்துலக உறவுகளுக்கு இடையேயும், மனிதருக்கும் படைப்புக்கும் இடையேயும்கூட  தீயவன் பிரிவினைகளை விதைத்து இறைவனின் வேலையை எப்போதும் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கிறான் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
காஸ்தெல் கந்தோல்ஃபோ பாப்பிறை கோடை விடுமுறை வளாகத்தின் முன்னர் கூடியிருந்த மூவாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இயேசு மரிய மகதலாவிடமிருந்து ஏழு பேய்களை விரட்டிய நற்செய்திப் பகுதியைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, தீயவன் சண்டையை விதைக்கிறான், இறைவன் அமைதியை உருவாக்குகிறார் என்று கூறினார்.
மேலும், இஞ்ஞாயிறு இறைவார்த்தை, அடிப்படையான மற்றும் எப்போதும் கவர்கின்ற விவிலியக் கருப்பொருள் குறித்து நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இறைவன் மனித சமுதாயத்தின் ஆயர்; அதாவது இறைவன் நமக்கு வாழ்வளிக்கவும், நாம் உண்டு ஓய்வெடுக்க உதவும் நல்ல மேய்ச்சல் நிலத்துக்கு அழைத்துச் செல்லவும் விரும்புகிறார், நாம் தவறி விடவும் இறக்கவும் அவர் விரும்பவில்லை, நம்வாழ்வின் நிறைவான நமது பயணத்தின் இலக்கை நாம் அடைய அவர் விரும்புகிறார், இதுவே ஒவ்வொரு தந்தையும் தாயும் தங்களது பிள்ளைகளுக்கு விரும்புவார்கள், நன்மைத்தனம், மகிழ்ச்சி மற்றும் நிறைவையே விரும்புவார்கள் என்றும் கூறினார்.
இயேசு வழியாக இறைவன் நடத்தும் ஆழமானக் குணப்படுத்தல், உண்மை, முழு அமைதி, ஒருவர் தன்னோடும் பிறரோடும், இறைவனோடும், உலகோடும் கொள்ளும் ஒப்புரவின் கனி ஆகியவற்றில் இருக்கின்றது என்பதை மரிய மகதலா குறித்த நிகழ்வு விளக்குகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இது தீயவன் செய்ய முயற்சிப்பதற்கு எதிரானது என்றுரைத்த திருத்தந்தை, இந்த ஒப்புரவை அடைவதற்கு நல்ல ஆயராம் இயேசு உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாக மாறினார் என்று கூறினார்.
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன் என்று திருப்பாடல் 23,6ல் சொல்லப்பட்டுள்ள வியத்தகு வாக்குறுதியை இவ்வாறு அவர் நிறைவேற்றினார் என்றும் திருத்தந்தை மூவேளை செப உரையில் கூறினார்.


2. டென்வர் நகர் திரையரங்கு வன்முறை, அறிவற்ற கொடுஞ்செயல் : திருத்தந்தை

ஜூலை,23,2012. இலண்டனில் வருகிற வெள்ளிக்கிழமையன்று தொடங்கும்  ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை,  “ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உலகினர் மத்தியில் சகோதரத்துவத்தின் உண்மையான அனுபவத்தைக் கொணரட்டும்; உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒப்புரவை  ஊக்குவித்து அவற்றின் கனிகளைத் தரட்டும்; பல நாடுகளின் பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக இது இருக்கின்றது; எனவே இது ஓர் உறுதியான அடையாள விழுமியத்தைக் கொண்டுள்ளது; இதனாலே கத்தோலிக்கத் திருஅவை இதனை அன்போடும் கவனத்தோடும் நோக்கி வருகின்றதுஎன்று கூறினார்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு டென்வர் நகர் அவ்ரோரா திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூட்டு வன்முறை அறிவற்ற கொடுஞ்செயல் எனவும், இச்செயதி கேட்டுத் தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறிய திருத்தந்தை, டான்சானிய நாட்டு ஜான்சிபாருக்கு அருகில் படகு கவிழ்ந்து பலர் உயிரிழந்த நிகழ்வு குறித்தும் கவலை தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அவ்ரோரா திரையரங்கு வன்முறையில் 12 பேர் இறந்தனர் மற்றும் 58 பேர் காயமுற்றனர். ஜான்சிபார் படகு விபத்தில் 68 பேர் இறந்துள்ளனர். பலர் காணாமற்போயுள்ளனர். இவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.


3. ஆயனுக்குத் தேவையான அடிப்படை குணம், கருணை - வத்திக்கான் அதிகாரி

ஜூலை,23,2012. ஆயனுக்குத் தேவையான அடிப்படை குணம் கருணை என்பதை இயேசுவின் வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளலாம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் ஒருவார மேய்ப்புப் பணி பயணத்தைக் திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவரான கர்தினால் Fernando Filoni, கடந்த புதனன்று துவக்கினார்.
இப்பயணத்தின் ஓர் உச்சகட்டமாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் மேமாதம் நியமனம் பெற்ற நான்கு ஆயர்களை கர்தினால் Filoni இஞ்ஞாயிறன்று திருநிலைப்படுத்தினார்.
ஐந்து மணி நேரம் நிகழ்ந்த இந்தத் திருநிலைபடுத்தும் நிகழ்வில் மறையுரையாற்றிய கர்தினால் Filoni, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, ஆப்ரிக்க நாடுகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்துலகக் கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஒளிவிளக்காகத் திகழும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டு நம் அனைவருக்குமே புத்துணர்வும், புதிய விசுவாச வாழ்வும் வழங்கும் ஒரு தருணமாக அமைய வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார் கர்தினால் Filoni.
இத்திருநிலைப்பாட்டு நிகழ்வில் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அரசுத் தலைவர், பிரதமர், நகர மேயர் உட்பட பல உயர் நிலை அரசு அதிகாரிகளும், மத்திய ஆப்ரிக்கத் திருஅவையின் அனைத்து ஆயர்களும், இன்னும் France, Cameroon, Chad, Ghana, ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த ஆயர்களும் கலந்து கொண்டனர்.


4. 'வடக்கில் குடியரசு இல்லை' : அமெரிக்கத் தூதரிடம் யாழ்ப்பாண ஆயர்

ஜூலை,23,2012. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டுவருவதாக யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அமெரிக்கத் தூதர் பற்றீஸியா பூட்டனிஸிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிமை மீறல், ஆட்கடத்தல், தாக்குதல்கொலை, போர், மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்படாமை, குடியரசு ரீதியாக அவர்கள் தமது மாற்று நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு முட்டுக்கட்டைகள் போன்ற குடியரசு விரோதச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த அமெரிக்க தூதரிடம் எடுத்துக்கூறியதாக யாழ்ப்பாண ஆயர் சவுந்தரநாயகம் தெரிவித்தார்.
இலங்கையில் தமது பணியை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் பற்றீஸியா பூட்டனிஸ் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது இவ்விருவரிடையேயான சந்திப்பு இடம்பெற்றது.
இனப்பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ச்சியாக இலங்கை அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றபோதிலும், அரசியல் தீர்வு காண்பதற்கு அரசு முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, போருக்குப் பிந்திய அபிவிருத்திச் செயற்பாடுகளில் மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்ற மாயையில் அரசு நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது என்றும் அமெரிக்க தூதர் தம்மிடம் தெரிவித்ததாக யாழ்ப்பாண ஆயர் கூறினார்.


5. இந்தோனேசியாவின் Aceh பகுதியில் நான்கு கத்தோலிக்கக் கோவில்களில் தாக்குதல்கள்

ஜூலை,23,2012. இந்தோனேசியாவில் சிறுபான்மை மதங்களுக்கு உரிய மதிப்பு வழங்கப்படவில்லை என்றும், இதனால், அம்மதங்களைச் சார்ந்தவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்றும் அந்நாட்டின் கிறிஸ்தவத் தலைவர்கள் கூறினர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்தோனேசியாவின் Aceh பகுதியில் உள்ள நான்கு கத்தோலிக்கக் கோவில்கள் உட்பட 20 கிறிஸ்தவக் கோவில்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளன.
இத்தாக்குதல்கள் குறித்து காவல்துறைக்குப் புகார்கள் அளிக்கப்பட்டபோதும், காவல்துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறதென்று வட சுமத்ரா கூட்டமைப்பு என்ற அணியினர் இத்திங்களன்று அறிக்கை ஒன்றை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களால் தொடர்ந்து நிகழ்ந்துவரும் இந்த வன்முறைகளால், அப்பகுதியில் உள்ள பல கிறிஸ்தவ ஆலயங்கள் தங்கள் வழிபாடுகளை நிறுத்திவிட்டு, ஆலயங்களை மூடி வைத்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


6. பெரு நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு

ஜூலை,23,2012. பெரு நாடு சுதந்திரமடைந்ததன் 191ம் ஆண்டு இவ்வார இறுதியில் சிறப்பிக்கப்பட உள்ளதையொட்டி, நாட்டின் அமைதி கலந்துரையாடலுக்கு சிறப்பு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்.
இம்மாதம் 28ம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள பெரு நாட்டு சுதந்திர தினத்தையொட்டி இத்திங்களன்று பத்திரியாளர்களைச் சந்தித்த பேராயர் Salvador Piñeiro, நாட்டில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற, பெரு நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் சங்கிலித்தொடர் செபங்கள் இடம்பெறும் என்றார்.
Cajamarca  உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சமுதாய முரண்பாடுகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் தன் கவலையை வெளியிட்டார் பேராயர் Piñeiro.


7. Congo  ஆயர்கள் தலைமையில் 'நம்பிக்கையின் ஊர்வலம்'

ஜூலை,23,2012. நாட்டைப் பிரிவினையிலிருந்து காப்பாற்றும் நோக்கிலான  'நம்பிக்கைகையின் ஊர்வலம்' ஒன்றிற்கு ஏற்பாடுச் செய்துள்ளனர் Congo நாட்டு ஆயர்கள்.
Congo நாடு பிரிவினைகளை நோக்கிச் செல்லாமல் ஒன்றிப்பில் நிலைத்திருக்க அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வந்து, ஆகஸ்ட் மாதம் முதல் தேதி இடம்பெற உள்ள இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள்.
இம்மாதம் முப்பதாம் தேதி, நாட்டின் ஒவ்வொரு கோவிலிலும் துவங்க உள்ள அமைதி மற்றும் ஒன்றிப்பிற்கான செபத்தில் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ள ஆயர்கள், உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் இந்நாட்களில் சிறப்பு நிதி திரட்டல் இடம்பெறும் எனவும் தெரிவித்தனர்.
Congo ஜனநாயக குடியரசின் இன்றைய உண்மையான நிலைகள் குறித்து சர்வதேச சமூகம் அறிந்துகொள்ள உதவும் நோக்கில், ஐக்கிய நாட்டு சபை, ஐரோப்பிய ஐக்கிய அவை மற்றும் ஆப்ரிக்க அவை ஆகியவைகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தங்கள் திட்டங்களை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அதேவேளை, Congo நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரும், இன்றைய துன்பகரமான சூழல்களிலும் நம்பிக்கையை இழக்காமல் அமைதிக்காக உழைக்க வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார் Congo ஆயர் பேரவை தலைவர் ஆயர் Nicolas Djomo.
இதற்கிடையே, Congoவைச் சுற்றியுள்ளப் பகுதியின் அமைதி வாய்ப்புகள் குறித்து Congo, Rwanda, Burundi  மற்றும் Uganda  நாடுகளின் ஆயர்களும் அந்நாடுகளின் கிறிஸ்தவ மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளும் இத்திங்களன்று கென்யாவின் நைரோபியில் கூடி விவாதித்தனர்.


8. தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், நவீன அடிமைத்தனம் போல் உள்ளன

ஜூலை,23,2012. இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான சில சமூகங்களின் அடக்குமுறைகளை நோக்கும்போது, நவீன அடிமைத்தனம் இன்னும் நடைமுறையில் உள்ளது போல் தோன்றுவதாக கவலையை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஐக்கியநாட்டு கிறிஸ்தவ மறைபோதகர் ஒருவர்.
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியாக இருக்கும் தலித் இனத்தவர் அடக்குமுறைகளுக்கும் சித்ரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, அடிமைகளுக்கு இணையாக எவ்வித உரிமைகளும் வாய்ப்புகளும் இன்றி, விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுவதாகத் தெரிவித்தார் கிறிஸ்தவ போதகர் Mathew Cork.
இந்தியாவில் 1கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளர்கள் உட்பட 2கோடி பேர் மிகக் குறைந்த ஊதியத்துடன் கொத்தடிமைகள்போல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார் அவர்.
தலித் மக்களுக்குக் கல்வியை வழங்குவதன் மூலம், அம்மக்களின் விடுதலையையும் மாண்பையும் பெற்றுத்தர முடியும் என்பதை மனதிற்கொண்டு இந்தியாவில் பல கல்விக்கூடங்களை தலித் இன மக்களுக்கென கட்டித்தர திட்டமிட்டுச் செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார் Mathew Cork.


9. எயிட்ஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் வெற்றிபெற்று வருகின்றன‌ 

ஜூலை,23,2012. எயிட்ஸ் நோய்க்கெதிரான நடவடிக்கைகள் ஓரளவு வெற்றிப்பாதையை நோக்கி நடைபோட்டுவரும் இவ்வேளையில் எக்காரணம் கொண்டும் உலக நாடுகள் தங்கள் முயற்சியிலிருந்து பின்வாங்கக்கூடாது என அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் எயிட்ஸ் குறித்த கருத்தரங்கில் பங்குபெறும் வல்லுனர்கள்.
எய்ட்ஸ் நோயாளிகளைக் காப்பாற்ற வல்ல மருந்துகள் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லையெனினும், இந்நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் வெற்றிபெற்று வருவதாக உரைத்த அறிவியலாளர்கள், இந்நோய்க்கு எதிரானப் போராட்டங்கள் எப்படியும் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படவேண்டும் எனவும் உரைத்தனர்.
புள்ளிவிவரக் கணக்குகளின்படி, இன்று உலகில் 3கோடியே 42 இலட்சம் பேர் HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 25 இலட்சம்பேர் HIV நோய்க் கிருமிகளை புதிதாகப் பெறுகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் ஏழை நாடுகளில் எயிட்ஸ் நோய்க்கெதிரான நடவடிக்கைகளுக்கென 1680 கோடி டாலர் செலவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...