Tuesday 10 July 2012

Catholic News in Tamil - 02/07/12

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை : இயேசு மனிதரின் இதயங்களைக் குணப்படுத்த வந்தார்

2. ஜூலை 3ம் தேதி மாலை Castel Gandolfoவுக்குச் செல்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

3. திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்துக்குப் புதிய தலைவர்

4. கிறிஸ்துவின் உடலை ஒவ்வொரு நாளும் திருப்பலியில் தொடும் அரிய வாய்ப்பு பெற்றவர்கள் திருப்பணியாளர்கள் - கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே

5. கிறிஸ்துவத் திருமறை பிறந்து, வளர்ந்த இடங்கள் வெறும் கண்காட்சித் தலங்களாக மாறிவிடும் ஆபத்து

6. திருப்பீடப் பேச்சாளர்: வழிபாட்டுக்காகக் கூடியிருக்கும் மக்களை வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காக்குவது சொல்லுதற்கரிய தீமை

7. இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் ஆர்வம்

8. இரஷ்ய விண்கலம் 193 நாட்களுக்கு பின்பு 3 வீரர்களுடன் தரையிறங்கியது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை : இயேசு மனிதரின் இதயங்களைக் குணப்படுத்த வந்தார்

ஜூலை,02,2012. நாம் நமது அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து குணப்படுத்தப்படுமாறு இறைவனிடம் செபிக்கின்றோம், அது சரியானதே, ஆயினும் நாம் விசுவாசத்தில் உறுதியாய் இருக்குமாறு இறைவனிடம் விரும்பிக் கேட்கவேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நாம் விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதற்காகச் செபிக்கும்போது நமதாண்டவர் நமது வாழ்வைப் புதுப்பிக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்பதிலும், அவரது அன்பிலும் பராமரிப்பிலும் உறுதியான நம்பிக்கை வைக்கவும் இது உதவுகின்றது என்று கூறினார்.
யாயிர் என்பவரது மகள், இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஆகிய இரண்டு பெண்களையும் இயேசு குணமாக்கிய நிகழ்ச்சி குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மனிதத்துன்பங்களையும் உடல்நோய்களையும் இயேசு குணமாக்கியதோடு, மனித இதயங்களையும் குணமாக்கி அவற்றுக்கு மீட்பளிக்க வந்தார் என்பதையும் இவ்விரு புதுமைகளும் விவரிக்கின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.
நலவாழ்வுப் பணியாளர்கள் மனிதரின் ஒருங்கிணைந்த நலவாழ்வில் அக்கறை காட்டுவதற்கு இவ்விரு புதுமைகளும் தூண்டுகின்றன என்றும் உரைத்த திருத்தந்தை, இந்த விலைமதிப்பில்லா நலப்பணியில் தொழில்ரீதியாகத் தேர்ச்சி பெற்றிருப்பதும் மட்டும் போதாது, அத்துடன் நல்ல இதயம் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
நமது விசுவாசப் பயணத்திலும், அன்பை நடைமுறைப்படுத்துவதற்கான நமது அர்ப்பணத்திலும் அன்னைமரியாவின் உதவியை நாடுவோம் என்று அழைப்பு விடுத்து இம்மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. ஜூலை 3ம் தேதி மாலை Castel Gandolfoவுக்குச் செல்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

ஜூலை,02,2012. பாப்பிறைகளின் கோடைவிடுமுறை இல்லம் அமைந்திருக்கும் Castel Gandolfoவுக்கு ஜூலை 3, இச்செவ்வாய் மாலை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கோடை விடுமுறைக்காகச் செல்வார் என்று வத்திக்கானிலுள்ள பாப்பிறை இல்லம் அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை நாள்களில் அனைத்துத் தனிப்பட்ட சந்திப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும், புதன் பொது மறைபோதகம் இந்த ஜூலை மாதத்தில் நடைபெறாது எனவும் இது மீண்டும் ஆகஸ்ட் ஒன்றாந்தேதி புதன்கிழமையிலிருந்து Castel Gandolfo வில் இடம்பெறும் எனவும் அவ்வில்லம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
மேலும், இந்தக் கோடைவிடுமுறையில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் முக்கிய விழா நாள்களில் நண்பகல் மூவேளை செப உரை Castel Gandolfoவில் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.


3. திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்துக்குப் புதிய தலைவர்

ஜூலை,02,2012. திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் William Joseph Levada அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அப்பேராயத்தின் புதிய தலைவராக Regensburg ஆயர் Gerhard Ludwig Müller அவர்களை நியமித்துள்ளார்.
பேராயர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டு இப்பொறுப்பை ஏற்கவுள்ளார் ஆயர் Gerhard Ludwig Müller.
“Ecclesia Dei” என்ற பாப்பிறை ஆணையம், அனைத்துலக விவிலிய ஆணையம், அனைத்துலக இறையியல் ஆணையம் ஆகியவற்றுக்கும் பொறுப்பாக இருந்தவர் பணி ஓய்வுபெறும் கர்தினால் லெவாடா. 
1947ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஜெர்மனியின் Mainzல் பிறந்த ஆயர் Müller, 1978ம் ஆண்டு குருவாகவும், 2002ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.


4. கிறிஸ்துவின் உடலை ஒவ்வொரு நாளும் திருப்பலியில் தொடும் அரிய வாய்ப்பு பெற்றவர்கள் திருப்பணியாளர்கள் - கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே

ஜூலை,02,2012. வாழ்வின் ஊற்றாக திருநற்கருணையில் இருக்கும் இயேசுவைப் புகழ்ந்து புனித தாமஸ் அக்வினாஸ் பாடிய பாடல் இன்றும் நமக்குப் பொருளுள்ளதாய் விளங்குகிறது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே கூறினார்.
புனித தாமஸ் அக்வினாஸ் பாப்பிறை கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தின் நிறைவுத் திருப்பலியை இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் நிறைவேற்றிய கர்தினால் பெர்தோனே, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இயேசு வாழ்வின் மொத்த வடிவமாக விளங்கியதால், அவரது ஆடைகளின் ஓரங்களைத் தொட்டாலும் நாம் வாழ்வடையலாம் என்பதை இஞ்ஞாயிறு நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது என்று கூறிய கர்தினால் பெர்தோனே, கிறிஸ்துவின் உடலை ஒவ்வொரு நாளும் திருப்பலியில் தொடும் அரிய வாய்ப்பு பெற்றவர்கள் திருப்பணியாளர்கள் என்று எடுத்துரைத்தார்.
அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்என்று தொழுகைகூடத் தலைவன் யாயிருக்கு இயேசு கூறிய வார்த்தைகளை, அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2000மாம் ஆண்டு மில்லேன்னியச் செய்தியாக வழங்கினார் என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால் பெர்தோனே, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ள விசுவாச ஆண்டு நமது விசுவாசத்தைத் தளராமல் காக்கும் ஒரு நல்ல தருணம்  என்று கூறினார்.


5. கிறிஸ்துவத் திருமறை பிறந்து, வளர்ந்த இடங்கள் வெறும் கண்காட்சித் தலங்களாக மாறிவிடும் ஆபத்து

ஜூலை,02,2012. கிறிஸ்துவத் திருமறை பிறந்து, வளர்ந்த இடங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் விரட்டப்பட்டால், அது நமது திருமறை என்ற உடலில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும் என்று வியென்னா கர்தினால் Christoph Schönborn கூறினார்.
"மத்திய கிழக்குப் பகுதியில் துன்புறும் கிறிஸ்தவர்கள்: பிரச்சனைக்குத் தகுந்த தீர்வு" என்ற தலைப்பில் அமெரிக்காவின் வாஷிங்கடனில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசிய கர்தினால் Schönborn, கிறிஸ்துவத்தின் பிறப்பிடமான புனித பூமியிலிருந்தும், அதன் சுற்றுப்புறங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் வெளியேற்றப்பட்டால், இப்பகுதிகள் பயணிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் வெறும் கண்காட்சித் தலங்களாக மாறிவிடும் என்றும் எச்சரித்தார்.
2003ம் ஆண்டு முதல் ஈராக் நாட்டிலிருந்து 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வெளியேறியுள்ளனர் என்றும், அண்மைய அரேபியப் புரட்சிகளின் பின்னர் சிரியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் இதே நிலை உருவாகி வருகிறது என்றும் அரசியல் கண்காணிப்பாளர்கள் கூறிவருவதாக CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சவூதி அரேபியாவில் பல்வேறு பணிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமாய் உள்ளனர் என்று கூறிய கர்தினால் Schönborn, இவர்கள் அனைவரும் மத உரிமைகள் ஏதுமின்றி வாழ்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.
சவூதி அரேபியாவுடன் பல வழிகளில் நல்லுறவு கொண்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு, கிறிஸ்தவர்களுக்கும் பிற சிறுபான்மை மதத்தினருக்கும் உரிய மத உரிமைகளை வழங்க அந்நாட்டை வற்புறுத்த வேண்டும் என்று வியென்னா கர்தினால் கேட்டுக்கொண்டார்.


6. திருப்பீடப் பேச்சாளர்: வழிபாட்டுக்காகக் கூடியிருக்கும் மக்களை வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காக்குவது சொல்லுதற்கரிய தீமை

ஜூலை,02,2012. வழிபாட்டுக்காக அமைதியுடன் கூடியிருக்கும் மக்களை வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காக்குவது சொல்லுதற்கரிய தீமை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
இஞ்ஞாயிறன்று கென்யாவின் வடபகுதியில் உள்ள Garissa எனுமிடத்தில் ஒரு கத்தோலிக்கக் கோவிலும், மற்றொரு கிறிஸ்தவக் கோவிலும் தாக்குதல்களுக்கு உள்ளானதில் 17 பேர் இறந்துள்ளனர், 60க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
இது குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் அருள்தந்தை லொம்பார்தி, இவ்வகை தாக்குதல்கள் கொடுமையானவை என்றும், ஆழ்ந்த கவலையை உருவாக்குகின்றன என்றும் கூறினார்.
தாக்குதல்களுக்கு உள்ளான மக்களுடன் உள்ளத்தாலும், செபத்தாலும் நாம் ஒன்றித்திருப்பதோடு, இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு உரிய மத உரிமைகளைக் காப்பதும் அவசியம் என்று எடுத்துரைத்தார்.
சோமாலியா, கென்யா நாடுகளில் நிரந்தர அமைதி உருவாக, தேவையான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திய அருள்தந்தை லொம்பார்தி, மதங்களுக்கிடையே வன்முறைகளைத் தூண்டும் அனைத்து சக்திகளையும் தடுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


7. இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் ஆர்வம்

ஜூலை,02,2012. இலங்கையில், இறுதிகட்ட போருக்குப் பின், தமிழகத்தின் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள, இலங்கைத் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழக புலம்பெயர்ந்தோர் முகாமிலிருந்து 1,557 குடும்பங்களைச் சேர்ந்த 5,058 பேர், சொந்த நாடு திரும்பியுள்ளனர். இலங்கையிலிருந்து, தமிழர்கள் புலம்பெயர்ந்தோராக வருவது முற்றிலுமாக நின்றுபோயுள்ளது.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரினால், இலட்சக்கணக்கான தமிழர்கள், புலம்பெயர்ந்தோராக தமிழகத்துக்குத் திரும்பினர். கடந்த 1983ம் ஆண்டில், போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, 3 லட்சத்து 4,080 தமிழர்கள், புலம்பெயர்ந்தோராக மண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில், 26 மாவட்டங்களில், 112 புலம்பெயர்ந்தோர் முகாம்கள் மற்றும் இரண்டு சிறப்பு முகாம்களில், தற்போது, 67 ஆயிரத்து 930 இலங்கை தமிழர்கள், புலம்பெயர்ந்தோராக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த, 2002ம் ஆண்டில் இருந்து, இந்தாண்டு மே மாதம் வரை 3,138 குடும்பங்களைச் சேர்ந்த, 10 ஆயிரத்து 594 பேர், இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் வாழும், புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளுக்கான படிப்புகள் அனைத்தும், இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பை பொறுத்தவரை, நீதிமன்ற உத்தரவுப்படி, பொறியியல் கலந்தாய்வு மூலம், பொது ஒதுக்கீட்டில், இலங்கை மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்தாண்டு 14 பேர், கலந்தாய்வு மூலம் தேர்வாகியுள்ளனர். தனியார் கல்லூரியில், ஒன்பது பேர் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு, 38 பேர் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.


8. இரஷ்ய விண்கலம் 193 நாட்களுக்கு பின்பு 3 வீரர்களுடன் தரையிறங்கியது

ஜூலை,02,2012. இரஷ்யாவின் Soyuz விண்கலம் 193 நாட்களுக்கு பின்பு 3 வீரர்களுடன் பாதுகாப்பாக கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் தரையிறங்கியது.
அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து அனைத்துலக விண்வெளி ஆய்வு கூடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இரஷ்யாவின் Soyuz விண்கலத்தின் மூலம் இரஷ்யாவைச் சேர்ந்த Oleg Kononenko, NASA வில் பணிபுரியும் Donald Pettit, நெதர்லாந்தைச் சேர்ந்த Andre Kuipers ஆகிய 3 வீரர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டு சென்றனர்.
அங்கு இவர்கள் ஆய்வுக்கூடம் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். 193 நாட்களுக்கு பின்பு அங்கிருந்து புறப்பட்ட இவர்களது Soyuz விண்கலம், இஞ்ஞாயிறன்று கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் தரையிறங்கியது.
சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் Joseph Acaba, Gennady Padalka, Sergei Revin ஆகிய 3 பேர் தங்கியுள்ளனர். அவர்கள் மூவரும் மூன்று மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து பணியாற்ற, நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இரஷ்ய வீரர் Yury Malenchenko, ஜப்பானிய வீரர் Aki Hoshide ஆகிய 3 பேரும் Soyuz விண்கலம் மூலம் விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...