Thursday, 26 July 2012

Catholic News in Tamil - 19/07/12

1. குருத்துவப் பயிற்சி என்பது ஏட்டளவு கல்வி இல்லை - வத்திக்கான் அதிகாரி

2. சிரியாவில், அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு இடமே இல்லாத அளவு ஆயுதங்களின் ஒலி பெருகிவிட்டது பேராயர் Nassar

3. சிரியாவில் உள்ள மதத் தலைவர்கள் உண்மைகளை எடுத்துரைக்க தயங்கக்கூடாது

4. செல்லிட வசதிகளின் மூலம் இந்தி மொழியில் விவிலியம்

5. நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் உருவாகியுள்ள வன்முறைகள் கவலையைத் தருகின்றன - பிலிப்பின்ஸ் ஆயர்

6. இரமதான் மாதம் நம் அனைவரையும் சிந்திக்க அழைக்கும் ஒரு மாதம் - கிறிஸ்தவ இஸ்லாம் மத நல்லிணக்க அமைப்பின் அழைப்பு

7. எந்த வயதிலும் எவரெஸ்ட் ஏறலாம்: ஜப்பான் பெண்மணி தமாய் வடானாபே

8. உடற்பயிற்சியின்மையால் ஒவ்வோர் ஆண்டும் 50 இலட்சம் மரணங்கள்

------------------------------------------------------------------------------------------------------
1. குருத்துவப் பயிற்சி என்பது ஏட்டளவு கல்வி இல்லை - வத்திக்கான் அதிகாரி

ஜூலை,19,2012. குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளையோருக்குக் கல்வி கற்பிப்பது வெறும் தகவல் பரிமாற்றமாய் மட்டும் இருக்கக்கூடாது, மாறாக, பயிற்றுவிப்போரின் வாழ்வும் குரு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டுமென்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவரான கர்தினால் Fernando Filoni, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் ஒருவார மெய்ப்புப் பணி பயணத்தை இப்புதனன்று துவக்கினார். இவ்வியாழன் காலை புனித மார்க் குருத்துவக் கல்லூரியில் உரையாற்றிய கர்தினால் Filoni, குருத்துவப் பயிற்சி என்பது ஏட்டளவு கல்வி இல்லை என்பதை வலியுறுத்திப் பேசினார்.
45 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் கர்தினால் Filoni மேற்கொண்டுள்ள இப்பயணத்தின்போது, அவர் அந்நாட்டு அரசுத் தலைவரையும் ஏனைய அரசு அதிகாரிகளையும் ஜூலை 20, இவ்வெள்ளியன்று சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன்பின்னர், அந்நாட்டில் உள்ள பங்குத்தளங்களையும், கத்தோலிக்கத் திருஅவை நடத்தும் பல்வேறு குழந்தைகள் காப்பங்கங்களையும் கர்தினால் பார்வையிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இப்பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜூலை 22, வருகிற ஞாயிறன்று கர்தினால் Filoni அவர்களால் அந்நாட்டின் புதிய நான்கு ஆயர்கள் திருநிலைப்படுத்தப்படுவர். இந்த நான்கு ஆயர்களும் இவ்வாண்டு மேமாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமனம் பெற்றவர்கள்.


2. சிரியாவில், அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு இடமே இல்லாத அளவு ஆயுதங்களின் ஒலி பெருகிவிட்டது பேராயர் Nassar

ஜூலை,19,2012. மதியற்ற வன்முறைகளில் மூழ்கிப்போயிருக்கும் சிரியாவில், அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு இடமே இல்லாத அளவு ஆயுதங்களின் ஒலி பெருகிவிட்டது என்று தமாஸ்கு நகர் Maronite ரீதிப் பேராயர் Samir Nassar, கூறினார்.
கடந்த ஞாயிறு முதல் சிரியாவின் தலைநகரில் ஆயுதம் தாங்கியப் போர் அளவுக்குமீறி நிகழ்வதால், அப்பாவி பொதுமக்கள் புகலிடம் ஏதுமின்றி தவிக்கின்றனர் என்று பேராயர் Nassar, Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் வருத்தத்துடன் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் அதிக அளவு ஆள்கடத்தல் விடயங்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு குடும்பமும் வெளியில் செல்லஇயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும், கடத்தப்பட்ட தங்கள் உறவுகளை மீட்க, மக்கள் உறவினர்களிடம் இருந்து நிதிகள் பெற்று குடும்பத்தவரை மீட்கவேண்டியக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.
1860ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக, துருக்கியர்கள் மேற்கொண்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட மறைசாட்சிகளான Francesco, Abdel-Mooti, Raffaele Massabki, என்ற மூன்று சகோதரர்களின் திருநாளை ஜூலை 10ம் தேதி கொண்டாடியதைப் பற்றி எடுத்துரைத்த பேராயர் Nassar, தற்போதைய வன்முறைகளிலும் இம்மறைசாட்சிகளின் பரிந்துரையை நாடி மக்கள் வேண்டி வருகின்றனர் என்று கூறினார்.
பேராயரின் இந்த பேட்டிக்குப் பின் தமாஸ்கு நகரில் நடைபெற்ற ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலில் சிரிய அரசுத் தலைவர் Bashar Assadன் உறவினரும், உளவுத்துறை அமைச்சருமான Assef Shawkat, பாதுகாப்புத் துறை அமைச்சர் Dawoud Rajha, உட்பட சில முக்கிய அரசுத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் Dawoud Rajha, சிரியாவின் அமைச்சரவையில் உயர்ந்ததோர் இடம் வகித்த ஒரே கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


3. சிரியாவில் உள்ள மதத் தலைவர்கள் உண்மைகளை எடுத்துரைக்க தயங்கக்கூடாது

ஜூலை,19,2012. சிரியாவில் சிந்தப்படும் இரத்தம் மதிக்கப்பட வேண்டும் என்றும், அந்நாட்டின் தற்போதைய நிலை குறித்து மதத்தலைவர்கள் ஒளிவு மறைவின்றி பேசவேண்டும் என்றும் இயேசு சபை அருள்தந்தை Paolo Dall'Oglio கூறினார்.
இத்தாலியரான அருள்தந்தை Paolo, 1982ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக சிரியாவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய உரையாடல்கள் பணியில் ஈடுபட்டவர். சிரியாவில் நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக இவர் ஐ.நா.தூதர் Kofi Annan அவர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதியதால், கடந்த மாதம் சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது, உரோம் நகரில் தங்கியிருக்கும் அருள்தந்தை Paolo, CNS என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு இப்புதனன்று அளித்த பேட்டியொன்றில் சிரியாவில் உள்ள மதத் தலைவர்கள் உண்மைகளை எடுத்துரைக்க தயங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
செப்டம்பர் மாதம் திருத்தந்தை லெபனான் நாட்டுக்கு மேற்கொள்ளும் திருப்பயணம், சிரியாவின் வன்முறைகளுக்குத் தகுந்த ஒரு தீர்வு காண சிறந்ததொரு தருணமாக அமையும் என்ற தன் நம்பிக்கையையும் அருள்தந்தை Paolo தன் பேட்டியில் வெளியிட்டார்.


4. செல்லிட வசதிகளின் மூலம் இந்தி மொழியில் விவிலியம்

ஜூலை,19,2012. புதியத் தொடர்புச்சாதனங்கள் வழியே இளையோர் கடவுளின் அருகே வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று டில்லிப் பேராயர் Vincent Concessao கூறினார்.
டில்லி உயர் மறைமாவட்டமும், Jesus Youth International என்ற இளையோர் அமைப்பும் இணைந்து செல்லிட வசதிகளின் மூலம் இந்தி மொழியில் விவிலியத்தைத் தரவிறக்கம் செய்யும் வசதி ஒன்றை அமைத்துள்ளனர்.
இந்தத் தொடர்புசாதன வசதியை இப்புதன் மாலை வெளியிட்ட டில்லிப் பேராயர் Concessao, இம்முயற்சியைப் பாராட்டியதுடன், மக்களின் ஒவ்வொரு நாள் வாழ்விலும் விவிலியம் பெறவேண்டிய இடத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
‘Divya Vachan’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த தொடர்புச்சாதன வசதியை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டவர்கள் இக்கூட்டத்தில் பாராட்டப்பட்டனர். இவ்விழாவின் ஒரு பகுதியாக, இப்புதனன்று மறைந்த திரைப்பட நடிகர் Rajesh Khannaவுக்கு மௌன அஞ்சலியுடன், செபங்கள் எழுப்பப்பட்டன.


5. நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் உருவாகியுள்ள வன்முறைகள் கவலையைத் தருகின்றன - பிலிப்பின்ஸ் ஆயர்

ஜூலை,19,2012. பிலிப்பின்ஸ் நாட்டின் Mindanao தீவில் நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் அண்மைய நாட்களில் உருவாகியுள்ள வன்முறைகள் கவலையைத் தருகின்றன என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
Mindanao தீவுப்பகுதியில் இஞ்ஞாயிறன்று புனித கிளாரட் துறவுச்சபையைச் சேர்ந்த இரு குருக்கள் தாக்கப்பட்டனர், மற்றும் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகள் குறித்து ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த Isabela மறைமாவட்ட ஆயர் Martin Jumoad, அண்மைய நிகழ்வுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகள் என்று கூறினார்.
கடந்த 61 ஆண்டுகளாக இப்பகுதியில் பணிகள் புரிந்து வரும் புனித கிளாரட் சபைத் துறவியர் இப்பிரச்சனையில் மக்களுக்கு தகுந்த நீதி கிடைக்கவேண்டும் என்று உழைத்து வருவதால், அவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளானர் என்று ஆசிய செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


6. இரமதான் மாதம் நம் அனைவரையும் சிந்திக்க அழைக்கும் ஒரு மாதம் - கிறிஸ்தவ இஸ்லாம் மத நல்லிணக்க அமைப்பின் அழைப்பு

ஜூலை,19,2012. இஸ்லாமியர்கள் ஆரம்பிக்கும் இரமதான் மாதம் நம் அனைவரையும் சிந்திக்க அழைக்கும் ஒரு மாதம் என்று பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள 'Silsilah' என்ற கிறிஸ்தவ இஸ்லாம் மத நல்லிணக்க அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
ஜூலை 20 இவ்வெள்ளி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி முடிய இஸ்லாமியர் கடைபிடிக்கும் இரமதான் மாதத்தைக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இவ்வமைப்பினர், தியாகம், பாவங்களுக்குக் கழுவாய், இறைவனுடன் தொடர்பு ஆகிய அம்சங்களை இம்மாதம் அனைவருக்கும் கூறுகிறது என்று தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள Mindanao தீவில் PIME என்ற பாப்பிறைக் கழகத்தின் மறைபணியாளர்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய கிறிஸ்தவ இஸ்லாம் நல்லிணக்க அமைப்பு 'Silsilah' என்பது குறிப்பிடத் தக்கது.


7. எந்த வயதிலும் எவரெஸ்ட் ஏறலாம்: ஜப்பான் பெண்மணி தமாய் வடானாபே

ஜூலை,19,2012. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களிலேயே மிகவும் வயதான பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜப்பானைச் சேர்ந்த தமேய் வடானாபே (Tamae Watanabe). இவர் சிகரத்தின் உச்சியை தொட்ட போது இவரது வயது 73 ஆண்டுகளும், 180 நாட்களுமாகும்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவரான தமேய், சிறு வயது முதலே கடுமையான உழைப்பாளியாவார். அதிகாலை எழுந்து அப்பாவுடன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் ஆண்களுக்கு நிகரான வேலைகளை அசராமல் பார்த்துவிட்டு, பிறகு ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு நடந்தே போய் படித்துவிட்டு திரும்புவார்.
பள்ளியொன்றில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது முதன் முதலாக ஒரு சிறு மலைமீது ஏறும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவருக்கு வயது 27. வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற பியூஜி மலையேறும் குழுவினருக்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் செயல்பட்டார். இந்த நிலையில்தான் தமேய்க்கு எவரெஸ்ட் சிகரம் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது அவருக்கு வயது 62.
சாதனை புரிய நினைப்பவர்களின் உச்சகட்ட சாதனையாகக்  கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட வயதானவர் என்ற சாதனையை தனது 62 வயதில் ஏற்படுத்திய தமேய், தன் சாதனையைத் தானே முறியடிக்கும் வகையில் 11 ஆண்டுகள் கழித்து அண்மையில் தனது 73வது வயதில் மீண்டும் எவரெஸ்ட் சிகரம் தொட்டுத் திரும்பியுள்ளார்.
இச்சாதனை தனக்கு மகிழ்வைத் தந்தாலும் கடந்த பதினொரு ஆண்டுகளில் எவரெஸ்ட் மலை மிகவும் மாறிவிட்டதாக வேதனையும் படுகிறார் தமேய்.
முன்பு பனி படர்ந்து இருந்த இடங்கள் எல்லாம், இப்போது நீர் நிலையாக நீண்டு காணப்படுகிறது. இது உலகம் வேகமாக வெப்பமயமாகி வருவதன் அறிகுறியே, இதனை தடுத்து நிறுத்திட நிறைய விழிப்புணர்வு தேவை அது இளைஞர்களிடம் இன்னும் தேவை, ஏனெனில் இனி உலகம் அவர்களின் கையில், அவர்களது உலகத்தை காப்பாற்ற அவர்கள்தான் முன்வரவேண்டும் என்கிறார் தமேய் வடானாபே.


8. உடற்பயிற்சியின்மையால் ஒவ்வோர் ஆண்டும் 50 இலட்சம் மரணங்கள்

ஜூலை,19,2012. புகை பிடித்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக ஏற்படும் மரணங்களுக்கு இணையாக, உடற்பயிற்சிக் குறைவும் உலகெங்கும் மக்களைக் கொல்கிறது என்று புதிய மருத்துவ ஆய்வொன்று கூறுகிறது.
மக்கள் வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 இலட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று மருத்துவ இதழான "The Lancet"ல் வெளியான இந்த ஆய்வு கூறுகிறது.
இதய நோய், நீரழிவு நோய், சில வகை புற்றுநோய்கள் ஏற்படுவது ஆறு முதல் பத்து வுழுக்காடு வரை குறையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
உடற்பயிற்சியின்மை என்ற இப்பிரச்சினை, குறிப்பாக பிரிட்டனில் மிகவும் மோசமாகக் காணப்படுவதாகக் கூறும் ஆய்வாளர்கள், வயது வந்தோர் பிரிவில், பிரிட்டனில், மூன்றில் இருவர் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சியை மேற்கொள்ளத் தவறுகிறார்கள் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...