Thursday, 26 July 2012

Catholic News in Tamil - 18/07/12


1. ஆப்ரிக்க, அமெரிக்க, கரிபியன் தீவுகளின் 12வது மேய்ப்புப் பணி கருத்தரங்கிற்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி

2. MONEYVAL அறிக்கை குறித்த வத்திக்கான் நிலைப்பாடு

3. லெபனான் நாட்டிற்குத் திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம், சிரியா நாட்டில் அமைதி நிலவ ஒரு முக்கிய வழியாக அமையும் - முதுபெரும் தலைவர்

4. தமாஸ்கு நகர் மிகக் கடினமான காலத்தைச் சந்தித்து வருகிறது - திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari

5. ஆயர் Ma Daqin மீது சீன அரசு விதித்துள்ள தடையை உடனடியாக விலக்க வேண்டுமென்று கத்தோலிக்கர்கள் செபம்

6. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இங்கிலாந்து வேல்ஸ் ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

7. நெல்சன் மண்டேலாவின் 94வது பிறந்த நாள் விழாவில் அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன்

8. செயற்கைக்கோள் மூலம் தெரியும் பாலை நிலங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் பழமைவாய்ந்த நகரங்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. ஆப்ரிக்க, அமெரிக்க, கரிபியன் தீவுகளின் 12வது மேய்ப்புப் பணி கருத்தரங்கிற்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி

ஜூலை,18,2012. மனிதர்களின் ஆழ்மனங்களில் எழும் கேள்விகளுக்கு இயேசு பதிலாக அமைகிறார் என்பதைத் திருஅவை எடுத்துரைக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஜூலை 13 முதல் 20 முடிய Ecuador நாட்டின் Guayaquil நகரில் நடைபெற்று வரும் ஆப்ரிக்க, அமெரிக்க, கரிபியன் தீவுகளின் 12வது மேய்ப்புப் பணி கருத்தரங்கிற்குத் தன் வாழ்த்துக்களை அனுப்பியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், ஆப்ரிக்க அமெரிக்க நாடுகளின் பழமை வாய்ந்த வரலாறும், கலாச்சாரங்களும் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன என்று கூறியத் திருத்தந்தை, இக்கலாச்சாரங்களின் மத்தியில் திருஅவையைத் தகுந்த வகையில் பிரசன்னமாக்குவது நமது கடமை என்று கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள பொதுநிலையினர் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டம் வருகிற வெள்ளியன்று நிறைவு பெறும்.


2. MONEYVAL அறிக்கை குறித்த வத்திக்கான் நிலைப்பாடு

ஜூலை18,2012. பணப்பரிமாற்றம் குறித்து MONEYVAL என்ற ஐரோப்பிய வல்லுனர்கள் குழு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு இயைந்த வகையில் திருப்பீடமும் திட்டங்களை வகுத்து, செயல்பட்டு வருவதாக இப்புதனன்று நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகள் துறையின் நேரடிச்செயலர் பேரருட்திரு Ettore Balestrero.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பணப் பரிமாற்றம் செய்யப்படுவது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி செய்வது போன்றவை குறித்து தனது உறுப்பு நாடுகளில் ஆய்வு செய்யும் MONEYVAL என்ற மதிப்பீட்டு வல்லுனர் குழு, ஐரோப்பிய அவையின் ஓர் அங்கமாகும். 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த குழுவின் மதிப்பீட்டின்கீழ் 28 நாடுகள் உள்ளன. இந்த மதிப்பீட்டுக் குழுவில் இஸ்ரேலும் இணைவதாகக் கேட்டுக் கொண்டதன்பேரில் 2006ம் ஆண்டில் இஸ்ரேலும் இணைக்கப்பட்டது.
இந்த MONEYVAL குழு, திருப்பீடம் மற்றும் வத்திக்கானின் பணப்பரிமாற்றம் குறித்து மதிப்பீடு செய்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பேரருட்திரு Balestrero, இவ்வாறு மதிப்பீடு செய்யுமாறு 2011ம் ஆண்டு பிப்ரவரியிலே MONEYVAL வல்லுனர்களிடம் திருப்பீடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
திருப்பீடம் தன்னை இவ்வாறு மதிப்பீடு செய்வதற்கு முதலில் அதற்கு அறநெறி சார்ந்த கடமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
பணப்பரிமாற்றங்களுக்கு எதிரான தற்காலிகத் தீர்வுகளை விட்டு விலகி நீண்டகாலத் தீர்வுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் திருப்பீடம், ஐ.நா.பாதுகாப்பு அவை எதிர்நோக்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், நிதித்துறை உளவு அமைப்புகளோடு தகவல் பரிமாற்றங்களைக் கொள்ளவும், நிதிப் பரிமாற்றக் கண்காணிப்பு விதிகளைக் கைக்கொள்ளவும், அனைத்துலக விதிமுறைகளுக்கு இயைந்த வகையில் குற்றவியல் சட்டங்களைத் திருத்தியமைக்கவும், குற்றங்களை எதிர்த்துப் போரிடும் இலாப நோக்கமில்லாத குழுக்களின் விதிமுறைகளையும் சட்டங்களையும் ஏற்கவும் தன்னைத் தயாரித்து செயல்படுத்த முனைந்து வருவதாக பேரருட்திரு Balestrero நிருபர்களிடம் மேலும் கூறினார்.


3. லெபனான் நாட்டிற்குத் திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம், சிரியா நாட்டில் அமைதி நிலவ ஒரு முக்கிய வழியாக அமையும் - முதுபெரும் தலைவர்

ஜூலை,18,2012. செப்டம்பர் மாதம் லெபனான் நாட்டிற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொள்ளும் திருப்பயணம், சிரியா நாட்டில் அமைதி நிலவ ஒரு முக்கிய வழியாக அமைவதற்கு அனைத்து கிறிஸ்தவர்களும் செபிக்கவேண்டும் என்று கிரேக்க, மெல்கத்திய முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகோரி இலகாம் கூறினார்.
சிரியாவின் தலைநகர் தமாஸ்குவில் இஞ்ஞாயிறு முதல் தொடர்ந்துவரும் தாக்குதல்களைக் குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகோரி இலகாம் இவ்வாறு கூறினார்.
ஒப்புரவு, சமாதானம் ஆகிய சொற்கள் இன்றைய உலகில் மிக அரிதாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு என்று முதுபெரும் தலைவர் கூறினார்.
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் மதத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய முதுபெரும் தலைவர், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராய் இருப்பதால், எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடிய ஒரு சமுதாயமாகவும் உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.
பல நாடுகளிலிருந்தும் ஆயுதங்கள் அனுப்பப்படுவதே, சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை இந்த அளவு வளர்த்துவிட்டது என்று கிரேக்க, மெல்கத்திய முதுபெரும் தலைவர் வருத்தம் தெரிவித்தார்.


4. தமாஸ்கு நகர் மிகக் கடினமான காலத்தைச் சந்தித்து வருகிறது - திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari

ஜூலை,18,2012. சிரியாவின் தமாஸ்கு நகர் மிகக் கடினமான காலத்தைச் சந்தித்து வருகிறது. பகல் நேரங்களிலும் மக்கள் அச்சமின்றி நடமாட முடியவில்லை என்று தமாஸ்குவின் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
சிரியாவில் ஆரம்பித்த போராட்டங்கள் இஞ்ஞாயிறு முதல் தலைநகர் தமாஸ்கு நகரை அடைந்துள்ளதால், அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே மிக உக்கிரமான சண்டைகள் நிகழ்வதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
இதுவரை இந்த சண்டைகள் மதத்திற்கு எதிராக நிகழவில்லை என்று தெளிவுபடுத்திய பேராயர் Zenari, கிறிஸ்தவத் துறவியரின் துயர் துடைப்புப் பணிகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துவருகிறது என்று கூறினார்.
இதற்கிடையே, சிரிய அரசுத் தலைவருக்குக் கண்டனம் தெரிவிக்க ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு கொண்டுவந்த தீர்மானங்களுக்கு இரஷ்ய அரசும், சீன அரசும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது மும்முறை தோல்வியைக் கண்டது என்று ஊடகங்கள் கூறுகின்றன.


5. ஆயர் Ma Daqin மீது சீன அரசு விதித்துள்ள தடையை உடனடியாக விலக்க வேண்டுமென்று கத்தோலிக்கர்கள் செபம்

ஜூலை,18,2012. மதநம்பிக்கையற்ற சீன அரசு கத்தோலிக்கத் திருஅவையின் விடயங்களில் தலையிடுவது தவறு என்று ஹாங் காங் முன்னாள் பேராயர் கர்தினால் Joseph Zen கூறினார்.
திருப்பீடத்தின் அங்கீகாரத்துடன் Shanghai உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைபடுத்தப்பட்ட ஆயர் Thaddeus Ma Daqin, தன் ஆயர் பணிகளை ஆற்றக்கூடாது  என்று சீன அரசு விதித்துள்ள தடையை உடனடியாக விலக்க வேண்டுமென்ற வேண்டுதலை எழுப்ப இத்திங்களன்று கத்தோலிக்கர்கள் ஹாங்காங்கில் உள்ள புனித மார்கரெட் கோவிலில் கூடிவந்தனர்.
ஏறத்தாழ ஆயிரம் பேர் கூடிவந்திருந்த அத்திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால்  Zen, அரசின் தலையீடு குறித்தும், அரசின் போக்கிற்கு இணங்கிச்செல்லும் மதத் தலைவர்கள் சிலரின் தவறைக் குறித்தும் பேசினார்.
இத்திருப்பலிக்கு முன்னர், நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் சீனா ஹாங்காங் நல்லுறவு அலுவலகத்திற்கு முன்னர் செபமாலை செபித்தனர்.
சீன அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயர் Ma Daqin, மற்றும் ஏனைய குருக்கள், துறவியர் அனைவரும் சுதந்திரமாகப் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டுமென்றும், கத்தோலிக்கத் திருஅவைக்கும், சீன அரசுக்கும் இடையே நல்லுறவு வளர வேண்டுமென்றும் செபமாலை நேரத்திலும், திருப்பலியிலும் சிறப்பான செபங்கள் எழுப்பப்பட்டன.


6. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இங்கிலாந்து வேல்ஸ் ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

ஜூலை,18,2012. இம்மாதம் 27 முதல் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முடிய இலண்டன் நகரில் நடைபெறவிருக்கும் 30வது ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இங்கிலாந்து வேல்ஸ் ஆயர் பேரவை இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
"இணைந்து கொள்ள இன்னும் நேரம் உள்ளது" என்ற கருத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ஒலிம்பிக் போட்டிகள் எவ்வித வன்முறையும், ஆபத்தும் இன்றி முடிவடைய கத்தோலிக்கர்கள் தங்கள் செபங்கள் வழியே இணையவேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர்களும், ஏனைய கிறிஸ்தவர்களும் இணைந்து இப்போட்டிகளின்போது எந்தெந்த வழிகளில் உதவ முடியும் என்பதை இவ்வறிக்கை விளக்கிக் கூறியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவுக்கு அடுத்த நாள், ஜூலை 28, சனிக்கிழமையன்று Westminster பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிகழும் என்றும், ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக் போட்டியையொட்டி, செப்டம்பர் மாதம் 8ம் தேதி மற்றொரு சிறப்புத் திருப்பலி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதன் முக்கிய குறிக்கோள்களான ஒற்றுமை, கூட்டுறவு ஆகிய எண்ணங்களை தொடர்ந்து வலியுறுத்த, ஆயர் பேரவையுடன் இணைந்து அருளாளர் இரண்டாம் ஜான்பால் விளையாட்டு அறக்கட்டளை ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


7. நெல்சன் மண்டேலாவின் 94வது பிறந்த நாள் விழாவில் அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன்

ஜூலை,18,2012. இப்புதன் காலை எட்டு மணியளவில் தென் ஆப்ரிக்காவில் உள்ள 1 கோடியே 20 இலட்சம் குழந்தைகள் ஒரே நேரத்தில் 'Happy Birthday' என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை இணைந்து பாடினர். அதே நேரம், தென்  ஆப்ரிக்காவின் பல்வேறு நகரங்களில் உள்ள பல இலட்சம் மக்களும் குழந்தைகளுடன் இவ்வாழ்த்துப் பாடலில் இணைந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா, இப்புதனன்று தனது 94வது பிறந்த நாளைக் கொண்டாடினார். தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காகப் போராடி சுமார் 27 ஆண்டுகள் சிறைவாழ்வை மேற்கொண்டவர் நெல்சன் மண்டேலா. விடுதலைக்குப் பின்பு தேர்தலில் போட்டியிட்டு தென் ஆப்ரிக்காவின் அரசுத்தலைவராகவும் பதவி வகித்தார்.
அவர் தனது 94வது பிறந்த நாளை குயன்னூ என்ற தனது கிராமத்தில் உள்ள வீட்டில் இப்புதனன்று கொண்டாடினார். அப்போது இவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 தலைமுறையினர் விழாவில் கலந்துகொண்டனர்.
மேலும், இவ்விழாவில் அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன் எந்த முன் அறிவிப்புமின்றி திடீரென கலந்துகொண்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விழாவில் பங்கேற்ற மண்டேலா, நீண்ட இடைவெளிக்குப்பின் பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார்.


8. செயற்கைக்கோள் மூலம் தெரியும் பாலை நிலங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் பழமைவாய்ந்த நகரங்கள்

ஜூலை,18,2012. மத்திய கிழக்குப் பகுதியிலும் ஐரோப்பாவிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புதைந்துபோன நகரங்களைக் காண நாம் விண்வெளிக்குச் செல்லவேண்டும் என்று அகழாய்வு அறிஞர் Sarah Parcak கூறினார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள பாலை நிலங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் பழமைவாய்ந்த நகரங்களைச் செயற்கைக்கோள் மூலம் முழுமையாக, துல்லியமாகக் காணமுடிகிறதென்று அமெரிக்காவின் அலபாமா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆயவாளர் Sarah Parcak இச்செவ்வாயன்று அறிவித்தார்.
செயற்கைக்கோள் படங்கள் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன் மண்ணுக்கடியில் புதைந்துபோன பிரமிடுகள், கோவில்கள், முழுமையாகக் கட்டப்பட்ட நகரங்கள் ஆகியவற்றைக் காணமுடியும் என்று கூறிய ஆயவாளர் Sarah Parcak, நமது பழமைக் காலாச்சாரங்களை அறிந்து கொள்வது நமது எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் என்று எடுத்துரைத்தார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...