Thursday, 26 July 2012

Catholic News in Tamil - 25/07/12

1. 1.கியூபா நாட்டு கிறிஸ்தவத் தலைவரின் மரணத்திற்குத் திருத்தந்தை அனுதாபத் தந்தி

2. தொமினிக்கன் குடியரசு நாட்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் ஆபத்தான அளவு பரவியுள்ளது - கர்தினால் López Rodríguez

3. அஸ்ஸாம் பகுதியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் முற்றிலும் மதியற்ற செயல் - ஆயர் Thomas Pulloppillil

4. வத்திக்கானில் Populorum Progressio அறக்கட்டளையின் ஆண்டுக் கூட்டம்

5. ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் உகாண்டா நாட்டு குழந்தைகளுக்கு நிதி திரட்டல்

6. ஒலிம்பிக் சுடரின் தொடர் ஓட்டத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்

7. உடலில் தீய உயிரணுக்களை அழிக்கும் மகரந்த துகள்கள்

8. சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் விமானம்


------------------------------------------------------------------------------------------------------

1. கியூபா நாட்டு கிறிஸ்தவத் தலைவரின் மரணத்திற்குத் திருத்தந்தை அனுதாபத் தந்தி

ஜூலை,25,2012. கியூபா நாட்டில் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் தலைவராகப் பணிபுரிந்த Osvaldo Paya ஜூலை 22, கடந்த ஞாயிறன்று விபத்தில் உயிரிழந்ததையடுத்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Osvaldo Paya கிறிஸ்தவ விழுமியங்களைத் தன் வாழ்வாலும், செயல்களாலும் பறைசாற்றிய நல்லதொரு தலைவர் என்று கூறியத் திருத்தந்தை, அவர் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் தன் செபங்களையும், அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் வழங்குவதாக Havana பேராயர் கர்தினால் Jaime Lucas Ortega அவர்களுக்கு அனுப்பிய இத்தந்தியில் கூறினார்.
Osvaldo Payaவின் மரணம் கியூபா நாட்டுக்கு ஈடுசெய்யமுடியாத ஓர் இழப்பு என்று Santiago பேராயர் Dionisio Garcia செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விபத்தைக் குறித்து அரசு  விடுத்துள்ள அறிக்கையில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை என்று Osvaldo Paya தலைமையேற்று நடத்திய கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

2. தொமினிக்கன் குடியரசு நாட்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் ஆபத்தான அளவு பரவியுள்ளது - கர்தினால் López Rodríguez

ஜூலை,25,2012. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொமினிக்கன் குடியரசு நாட்டில் பெரும் ஆபத்தான அளவு பரவியுள்ளது என்று அந்நாட்டு கர்தினால் ஒருவரும், பேராயர் ஒருவரும் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளைத் தடுக்க தொமினிக்கன் குடியரசு, சட்டத் தீர்திருத்தங்களைத் தாமதிக்காமல் கொண்டுவர வேண்டுமென்று Santo Domingo பேராயரான கர்தினால் Nicolás de Jesús López Rodríguez, மற்றும் Santiago de los Caballeros பேராயர் Ramon de la Rosa y Carpio அவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாட்டின் பெரும் அவமானம் என்று அந்நாட்டின் அரசுத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெறும் Leonel Fernandez அவர்களும் அண்மையில் கூறியுள்ளார்.
தொமினிக்கன் குடியரசில் கடந்த சில மாதங்களில் 100க்கும் அதிகமான பெண்கள் கொடுமையான முறைகளில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. அஸ்ஸாம் பகுதியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் முற்றிலும் மதியற்ற செயல் - ஆயர் Thomas Pulloppillil

ஜூலை,25,2012. இந்தியாவின் அஸ்ஸாம் பகுதியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் முற்றிலும் மதியற்ற செயல் என்றும், வன்முறைகளுக்கு இலக்காகி வரும் மக்களுக்கு உதவிகள் செய்வதே நமது முக்கிய கடமை என்றும் அஸ்ஸாம் ஆயர் ஒருவர் கூறினார்.
அஸ்ஸாம் பகுதியில் வாழும் Bodo என்ற பழங்குடியினருக்கும், அப்பகுதியில் குடியேறியுள்ள இஸ்லாமியருக்கும் இடையே கடந்த வெள்ளியன்று ஆரம்பமான இந்த வன்முறை குறித்து பேசிய Bongaigaon ஆயர் Thomas Pulloppillil, வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தலத்திருஅவையின் அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
Bodo இனத்தவர் மத்தியில் ஏற்பட்டுள்ள அழிவுகள் பெருமளவில் இருந்தாலும், இஸ்லாமியர் மத்தியில் நிகழ்ந்துள்ள பாதிப்புக்களை மட்டும் ஊடகங்கள் காட்டி வருகின்றன என்று பெயர் கூற விரும்பாத ஒரு கத்தோலிக்க குரு கூறியுள்ளார்.
கடந்த வெள்ளியன்று ஆரம்பமான வன்முறைகள் பல இடங்களுக்கும் பரவியுள்ளதென்றும், இதுவரை 32 பேர் இறந்துள்ளனர், மற்றும் 1,70,000 பேர் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வேறிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

4. வத்திக்கானில் Populorum Progressio அறக்கட்டளையின் ஆண்டுக் கூட்டம்

ஜூலை,25,2012. கர்தினால் Robert Sarah, அவர்களைத் தலைவராகக் கொண்டு செயலாற்றும் Cor Unum என்ற திருப்பீட அவையின் ஓர் அங்கமான, Populorum Progressio அறக்கட்டளை இச்செவ்வாயன்று வத்திக்கானில் தன் ஆண்டுக் கூட்டத்தைத் துவக்கியது.
மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் இவ்வறக்கட்டளை, இலத்தீன் அமெரிக்கா, கரிபியன் பகுதிகளில் வாழும் பழங்குடியினர், ஆப்ரிக்க, அமெரிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு உதவும் பல திட்டங்கள் குறித்து விவாதங்களை மேற்கொண்டு வருகின்றது.
ஜூலை 27, இவ்வெள்ளி முடிய நடைபெறும் இவ்வாண்டுக்கூட்டத்தில், பிரேசில், கொலம்பியா, பெரு, எல் சால்வதோர் உட்பட 19 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள 203 செயல் திட்டங்கள் விவாதிக்கப்படும். இத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு 29 இலட்சத்து 8 ஆயிரம் கோடி டாலர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய ஆயர் பேரவை, இன்னும் பிற தனிப்பட்டவர்களின் நிதி உதவியுடன் பணியாற்றிவரும் Populorum Progressio அறக்கட்டளை, பல்வேறு மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் முன்னேற்றச் செயல் திட்டங்களுக்கு நிதி உதவிகள் அளித்து வருகின்றது.

5. ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் உகாண்டா நாட்டு குழந்தைகளுக்கு நிதி திரட்டல்

ஜூலை,25,2012. இங்கிலாந்தில் பணியாற்றும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு ஒன்றும், பிரித்தானிய Rotary சங்கமும் இணைந்து இலண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது, உகாண்டா நாட்டு குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஒரு புதுமுறை திட்டத்தை வகுத்துள்ளன.
இவ்வமைப்புக்களைச் சேர்ந்த 129 தன்னார்வத் தொண்டர்கள் ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் குடியிருப்புக்களில் பணி செய்வதற்கு இசைந்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் முழுவதும் உகாண்டா குழந்தைகள் நிதிக்கு அளிக்கப்படும்.
தன்னார்வத் தொண்டர்கள் 129 பெரும் இணைந்து 5500க்கும் அதிகமான மணி நேரங்கள் பணிகள் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். இவர்களின் பணி நேரங்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் ஏறத்தாழ 46,000 பவுண்டுகள், அதாவது 32 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது எத்தனையோ பிற வழிகளில் தங்கள் நேரத்தைச் செலவிட இளையோருக்கு வசதிகள் இருந்தும், இவர்கள் தங்கள் நேரத்தை உகாண்டாவின் குழந்தைகளுக்கு அளிக்க முன் வந்திருப்பது போற்றுதற்குரியது என்று இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் Kate Batterbury கூறினார்.

6. ஒலிம்பிக் சுடரின் தொடர் ஓட்டத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்

ஜூலை,25,2012. இலண்டன் மாநகரை தற்போது வலம்வரும் ஒலிம்பிக் சுடரின் தொடர் ஓட்டத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களும் இவ்வியாழனன்று கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வியாழனன்று இச்சுடரை ஏந்திச்செல்லும் பான் கி மூன், வெள்ளியன்று நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் துவக்கவிழாவிலும் கலந்துகொள்வார் என்று ஐ.நா. அதிகாரி Eduardo del Buey இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
விளையாட்டுப் போட்டிகளும், உடல் பயிற்சியும் உலக அமைதியை வளர்க்கும் கருவிகளாக அமைய முடியும் என்ற கருத்தை வலியுறுத்தவே பான் கி மூன் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது.
கோடை ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழா நடைபெறும் ஜூலை 27 முதல் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் செப்டம்பர் 9ம் தேதி வரை உலகெங்கும் போர்கள் நிறுத்தப்படவேண்டும் என்று ஐ.நா.வின் உறுப்பினர்களாக இருக்கும் 197 நாடுகள், 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி மொழி எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

7. உடலில் தீய உயிரணுக்களை அழிக்கும் மகரந்த துகள்கள்

ஜூலை,25,2012. மலர்களில் தேன் திரட்டும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்தத் துகள்களை உணவில் சேர்த்துக்கொள்வது நலமளிக்கும் என இங்கிலாந்து மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மலர் விட்டு மலர் செல்லும்போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்தத் துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளால் நமது உயிரணுக்கள் பாதிக்கப்படுகின்றன, நல்ல உயிரணுக்கள் அழிந்து தீய உயிரணுக்கள் அதிகரிப்பதுதான் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாகின்றன என்று கூறிய மருத்துவர் சாரா ஷங்கர், உயிரணுக்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவும் Anti-oxidantகள் மலர்களின் மகரந்தத் துகள்களில் அதிகம் உள்ளன என்றும் கூறினார்.
மகரந்தத் துகள்களை உணவின் மீது தூவியோ, மருந்தாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்தத் துகள்கள் சுத்தம் செய்யப்பட்டு இலண்டனில் உள்ள கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது.

8. சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் விமானம்

ஜூலை,25,2012. சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானம், தென்மேற்கு பிரான்சில் உள்ள Toulouse விமான நிலையத்தில் தனது பயணத்தைத் தொடங்கியது.
இந்த விமானம் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் வழியாக சென்று, வடக்கு ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டின் தலைநகரை அடைந்து, மீண்டும் இச்செவ்வாயன்று  சுவிட்சர்லாந்தில் தரையிறங்கியது.
உருவத்தில் பெரியதாகவும், எடையில் குறைவாகவும் காணப்படும் இந்த விமானம் 12,000 சூரியஒளி செல்களுடன், நான்கு மின்சார இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
விமானி Bertrand Piccard இந்த விமானத்தை ஓட்டிச்சென்றார். இவர் ஏற்கெனவே வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனின் உதவியுடன் உலகைச் சுற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் மற்றொரு விமானியான André Borschberg  சென்றார்.
மாற்று சக்திகள் கொண்டு வாழ்வைப் பாதுகாப்பாக நடத்தலாம் என்பதை உலகறியச் செய்வதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று Bertrand Piccard கூறினார்.
தற்போது சூரிய சக்தியால் இந்த விமானம் சென்றது ஓர் ஒத்திகை போல அமைகிறது. 2014ஆம் ஆண்டில் இந்த விமானத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கி, சூரிய சக்தியால் உலகம் முழுவதும் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...