Thursday, 26 July 2012

Catholic News in Tamil - 26/07/12

1.Super Rato வத்திக்கான் அலுவலகத்தின் தலைவர் பேரருட்திரு Paul Pallath

2. Castel Gandolfoவுக்கு திருத்தந்தை வருகை தருவது மறைமாவட்டத்திற்கு மகிழ்ச்சி மிகுந்த நாட்கள்

3. ஏழைகளை மதிப்புடன் வாழவைப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை - அமெரிக்க ஆயர்

4. செக் குடியரசில் திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் திருப்பித் தரவேண்டுமென்ற சூழல்

5. பன்னிரு வகை மரங்களிலிருந்து உருவாகப்பட்டுள்ள ஒலிம்பிக் சிலுவை

6. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி விற்கப்படும் பொருட்களை உருவாக்கிய சீனத் தொழிலாளிகள் பெருமளவு அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்

7. ஜூலை 28, கடைபிடிக்கப்படும் கல்லீரல் நோய் ஒழிப்பு உலக நாளையொட்டி, WHO வெளியிட்டுள்ள செய்தி

8. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது


------------------------------------------------------------------------------------------------------

1.Super Rato வத்திக்கான் அலுவலகத்தின் தலைவர் பேரருட்திரு Paul Pallath

ஜூலை,26,2012. Super Rato என்ற வத்திக்கான் அலுவலகத்தின் தலைவராக பேரருட்திரு Paul Pallath அவர்களை இவ்வியாழனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Super Rato என்ற வத்திக்கான் அலுவலகம், மணமுறிவு மற்றும் குருத்துவத்திருநிலைப்பாட்டிலிருந்து விலகுதல் குறித்த விவகாரங்கள் தொடர்புடையது. இது, திருஅவையின் Roman Rota உச்சநீதிமன்றத்தில் நிர்வாக அலுவலகமாக 2011ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த வத்திக்கான் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்திரு Paul Pallath, 1959ம் ஆண்டு கேரளாவின் Palai மறைமாவட்டத்தில் Ezhacherry என்ற ஊரில் பிறந்தவர். திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், 1995ம் ஆண்டு மே 15ம் தேதியன்று திருவழிபாட்டுப் பேராயத்தில் பணியில் சேர்ந்தார்.

2. Castel Gandolfoவுக்கு திருத்தந்தை வருகை தருவது மறைமாவட்டத்திற்கு மகிழ்ச்சி மிகுந்த நாட்கள்

ஜூலை,26,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் கோடை விடுமுறை இல்லத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் வருகை தரும்போது, Castel Gandolfo மறைமாவட்டத்திற்கு அது மகிழ்ச்சி மிகுந்த நாட்களாக அமைகின்றன என்று அம்மறைமாவட்ட ஆயர் Marcello Semeraro கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் Castel Gandolfoவுக்கு திருத்தந்தை வருகை தருவது குடும்பத்தின் ஒரு முக்கியக் உறவினர் திரும்பி வருவதைப் போல் மக்கள் உணர்கின்றனர் என்றும், இந்த நாட்களில் திருத்தந்தைக்காக எழுப்பப்படும் செபங்கள் உச்சநிலையை அடைகின்றன என்றும் ஆயர் Semeraro கூறினார்.
இந்நாட்களில் திருத்தந்தை வழங்கும் மூவேளை செப உரைகளில் உடலுக்குத் தரப்படும் ஒய்வு எவ்விதம் நமது உடலுக்கு மட்டுமல்லாமல், ஆன்மாவுக்கும் புத்துணர்ச்சி தருகிறது என்பதைத் திருத்தந்தை வலியுறுத்துகிறார் என்று சுட்டிக்காட்டினார் ஆயர் Semeraro.
நமது குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், இறைவனுடன் நமது உறவை ஆழப்படுத்த நேரம் ஒதுக்கவும் நமது விடுமுறைகள் நம்மை அழைக்கின்றன என்று ஆயர் Semeraro எடுத்துரைத்தார்.

3. ஏழைகளை மதிப்புடன் வாழவைப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை - அமெரிக்க ஆயர்

ஜூலை,26,2012. அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் மத்தியில் தங்கள் சக்தியைப் பயன்படுத்த முடியாத நிலையில் வாழும் ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
செல்வம் மிகுந்தவர்கள் செலுத்தவேண்டிய வரித் தொகையைக் குறைக்கும் முயற்சிகள் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியால், வறியோருக்குக் கிடைக்கவேண்டிய பல உதவிகள் நிறுத்தப்படலாம் என்ற கவலையில், அமெரிக்க ஆயர் பேரவையின் மனித முன்னேற்றம், உள்நாட்டு நீதி என்ற பணிக்குழுவின் தலைவரான ஆயர் Stephen Blaire தன் கவலையை வெளியிட்டு பிரதிநிதிகளுக்கு இப்புதனன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் வறியோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிவருகிறது என்றும், தற்போதைய நிலையில் அமெரிக்காவில் 4 கோடியே, 60 இலட்சம் வறியோர் உள்ளனர், இவர்களில் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் உள்ளனர் என்று ஆயர் Blaire சுட்டிக் காட்டினார்.
செல்வந்தர்களின் வரித்தொகையைக் குறைக்கும்போது, அரசின் நிதி பற்றாக்குறை அதிகமாகும், இதனால் வறியோர் மதிப்புடன் வாழும் பல திட்டங்கள் நீக்கப்படும் என்று ஆயர் Blaire தன் கவலையை வெளியிட்டார்.
4. செக் குடியரசில் திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் திருப்பித் தரவேண்டுமென்ற சூழல்

ஜூலை,26,2012. 1948ம் ஆண்டு செக் குடியரசில் கம்யுனிச ஆட்சி நிறுவப்பட்டபோது, அந்நாட்டில் திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் திருஅவைக்குத் திருப்பித் தர வேண்டுமென்ற ஒரு தீர்மானம் அண்மையில் அந்நாட்டின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் தற்போது செக் குடியரசின் மேலவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இத்தீர்மானம் சட்டமாக்கப்பட்டால், அரசின் அதிகாரத்திற்குக் கீழ் உள்ள திருஅவையின் நிலங்களும் மற்ற நிறுவனங்களும் மீண்டும் திருஅவைக்குத் திருப்பித்தரப்பட வேண்டும். நிறுவனங்கள் திருப்பித் தரப்படும் நிலையில் இல்லையெனில், அதற்குத் தகுந்த ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும்.
1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி கம்யுனிச ஆட்சி அதிகாரத்தைக் கைபற்றியபோது திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு தற்போது 680 கோடி டாலர் மதிப்புடையது என்று  சொல்லப்படுகிறது.

5. பன்னிரு வகை மரங்களிலிருந்து உருவாகப்பட்டுள்ள ஒலிம்பிக் சிலுவை

ஜூலை,26,2012. சிலுவையின்றி கிறிஸ்தவ வாழ்வு இல்லை என்பதால், துவங்கவிருக்கும்  ஒலிம்பிக் போட்டிகளுக்குக் கிறிஸ்தவர்களின் பங்களிப்பாக ஒலிம்பிக் சிலுவையை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்று இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவையின் சார்பாக, 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் James Parker கூறினார்.
ஒலிம்பிக் சிலுவையை பல இளையோர் முன்னிலையில் அருள்தந்தை Simon Penhalagan இப்புதனன்று அர்ச்சித்தார்.
இந்தச் சிலுவை, ஒலிம்பிக் போட்டிகளின்போது கிழக்கு இலண்டன் பகுதியில் உள்ள Joshua முகாம் என்ற இடத்தில் நிறுவப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை அங்கு பல ஆன்மீகச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு நீடித்த நினைவாக மக்கள் எடுத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலுவை, Jon Cornwall என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பன்னிருத் திருத்தூதர்களை நினைவுறுத்தும் வண்ணம் இந்தச் சிலுவை பன்னிரு வகை மரங்களிலிருந்து உருவாகப்பட்டுள்ளது என்று இதனை வடிவமைத்த கலைஞர் Cornwall கூறினார்.
இந்த ஒலிம்பிக் சிலுவை இலண்டன் நகர போட்டிகள் முடிந்தபின், 2013ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெறும் உலக இளையோர் நாள், 2014ம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் உலகக் கால்பந்து போட்டிகள், மற்றும் 2014ம் ஆண்டு இரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


6. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி விற்கப்படும் பொருட்களை உருவாக்கிய சீனத் தொழிலாளிகள் பெருமளவு அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்

ஜூலை,26,2012. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி விற்கப்படவிருக்கும் பல பொருட்களை உருவாக்கிய சீனத் தொழிலாளிகள் பெருமளவு அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஹாங்காங் நகரில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு ஒன்று பல கவலை தரும் விவரங்களை இப்புதனன்று வெளியிட்டது.
(SACOM) பெரும் தோழில் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்கள், அறிஞர்கள் என்ற இவ்வமைப்பினர் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், சட்டப்பூர்வமான வேலை நேரத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக ஒவ்வொரு தொழிலாளியும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.
குறைவான கூலி, ஆபத்தான பணிச்சூழல் ஆகிய குற்றங்களைத் தொடர்ந்து செய்துவரும் பெரும் நிறுவனங்களை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உயர்மட்டக் குழுவினர் ஆதரிப்பது, மனித குலத்திற்கு எதிரான அநீதி என்று இவ்வமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் நினைவுப்பொருட்களின் விற்பனை இவ்வெள்ளியன்று ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில், சீனாவில் உருவாக்கப்பட்டப் பொருட்களை ஆதரிப்பதால் அங்கு அநீதமான முறையில் தொழிலாளிகள் பயன்படுத்தப்படுவதை உலகம் ஆதரிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இவ்வறிக்கை வெளியிடப்படுவதாக இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.
அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளின்போதாகிலும் இத்தகைய அநீதிகள் தொடராதவண்ணம் காக்க வேண்டியது ஒலிம்பிக் உயர்மட்டக் குழுவினர் கடமை என்பதையும் இவ்வமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


7. ஜூலை 28, கடைபிடிக்கப்படும் கல்லீரல் நோய் ஒழிப்பு உலக நாளையொட்டி, WHO வெளியிட்டுள்ள செய்தி

ஜூலை,26,2012. கல்லீரல் தொடர்புடைய Hepatitis எனப்படும் நோயைத் தடுப்பதற்கும், அதனை முற்றிலும் ஒழிப்பதற்கும் உலக நாடுகள் இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.
ஜூலை 28, இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் கல்லீரல் நோய் ஒழிப்பு உலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள WHO எனப்படும் உலக நலவாழ்வு அமைப்பின் உயர் அதிகாரி Sylvie Briand, இந்நோயைப் பற்றிய சரியானப் புரிதலே இந்நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த வழி என்று கூறினார்.
2010ம் ஆண்டு கணக்கின்படி, உலக மக்கள் தொகையில் 12 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இந்நோய் காணப்படுவதாகத் தெரிந்தது. எனவே, இந்த ஆபத்தான போக்கைத் தடுக்க, அவ்வாண்டு முதல் ஜூலை 28ஐ கல்லீரல் நோய் ஒழிப்பு உலக நாளாக அறிவித்து, இந்நோயைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்க WHO முயற்சித்து வருகிறது.
'நீங்கள் நினைப்பதை விட, அது அருகில் உள்ளது' என்ற மையக் கருத்துடன் இவ்வாண்டு இந்த நாள் கடைபிடிக்கப்படும் என்று WHO அறிவித்துள்ளது.
கல்லீரல் நோய் A,B,C,D,E ஆகிய ஐந்து வகை வகைப்படும். இவற்றில், B,C என்ற இருவகையே மிக அதிக அளவில் மக்களிடம் காணப்படுகிறது. இவை இரண்டும் கல்லீரலைச் செயலிழக்கச் செய்யும் ஆபத்தை உருவாக்குகின்றன.

8. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது

ஜூலை,26,2012. இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் 1,25,000 கி.மீ. அளவு சாலை வசதிகள் கூடியுள்ளன என்று மத்திய அரசின் பெருஞ்சாலைத் துறை அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2004ம் ஆண்டு 37 இலட்சம் கி.மீ. அளவு அமைக்கப்பட்டிருந்த சாலைகளின் நீளம், 2012ம் ஆண்டில் 47 இலட்சம் கி.மீ. அளவு வளர்ந்துள்ளது என்றும், இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி கிராமங்களில் செய்யப்பட்டுள்ளன என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
சாலைகள் அமைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், சாலை பாதுகாப்பில் இந்தியா இன்னும் பெரும் முன்னேற்றம் காணவேண்டும் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது என்றும், சாலை விபத்துக்களில் ஒவ்வொரு 3.7 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற வேகத்தில் மரணங்கள் நிகழ்கின்றன என்றும் கூறப்படுகிறது.
சாலை விபத்துக்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...