Tuesday, 10 July 2012

Catholic News in Tamil - 05/07/12

1. 2011ம் ஆண்டில் திருப்பீட நிதி நிலை

2. "பொருளாதார பிரச்சனையில் நன்னெறி அடித்தளங்கள்" - பார்சலோனா கருத்தரங்கில் வத்திக்கான் அதிகாரி

3. 'சுதந்திரத்தின் 15 நாட்கள்' இறுதித் திருப்பலியில் பிலடெல்பியா பேராயரின் மறையுரை

4. மெக்சிகோ தேர்தல்கள் கண்ணியமான முறையில் நடைபெற்றது குறித்து அந்நாட்டு ஆயர்கள் மகிழ்ச்சி

5. பேராயர் Desmond Tutuவுக்கு பெத்லகேம் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது

6. தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பாகிஸ்தான் அரசின் முக்கியமான, அவசரமான தேவை - பாகிஸ்தான் ஆயர்

7. அணுவை விட சிறிய 'கடவுள் துகள்' கண்டுபிடிப்பில் இந்தியர்களின் பங்களிப்பு

8. குறைவாக சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. 2011ம் ஆண்டில் திருப்பீட நிதி நிலை

ஜூலை,05,2012. திருப்பீடத்தின் 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கோடியே 48  இலட்சத்து 90 ஆயிரத்து 34 யூரோக்கள் நிதிப்பற்றாக்குறை இருந்ததாக இப்புதனன்று திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
திருப்பீடத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கான கர்தினால்கள் அவை இத்திங்கள் மற்றும் இச்செவ்வாய் தினங்களில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே தலைமையில் நடத்திய கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியோடு திருப்பீடத்தில் 2832 பேர் ஊதியம் பெறுபவர்களாய் இருந்ததும், இன்னும், திருப்பீடத்தின் ஊடகத்துறைகளின் செலவினங்களும் இந்தப் பற்றாக்குறைக்குக் காரணங்களாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மேலும், நிர்வாகத்தில் தனித்தியங்கும் வத்திக்கான் நகரத்தில் 2011ம் ஆண்டின் வரவு செலவுப் பட்டியலில் 21 கோடியே 84 இலட்சத்து 3,851 யூரோக்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்புதனன்று வெளியான திருப்பீட அறிக்கை தெரிவிக்கிறது.
2011ம் ஆண்டு டிசம்பரில் வத்திக்கான் நகரத்தில் 1887 பேர் பணியில் இருந்ததாகவும், வத்திக்கான் அருங்காட்சியகம், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கென வழங்கப்படும் இராயப்பர் காசு என்ற நன்கொடை, IOR என்ற சமயப்பணிகள் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து கிடைத்த நிதி ஆகியவற்றாலும் வத்திக்கான் நகர வரவு செலவுக் கணக்கில் வரவைவிட செலவு குறைவாக இருந்ததாக்க் காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வத்திக்கான் அருங்காட்சியகத்தை 50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பார்வையிட்டனர் எனவும், அதனால் கிடைத்த வருமானம் 9 கோடியே 13 இலட்சம் யூரோக்கள் எனவும், இத்தொகை, அதற்கு முந்தைய ஆண்டைவிட 89 இலட்சம் அதிகம் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கென 2010ம் ஆண்டில் 6,77,04,41,641.41 கிடைத்த நிதி 2011ம் ஆண்டில் 6,97,11,72,276 டாலராக அதிகரித்திருந்த்து என்றும், IOR என்ற சமயப்பணிகள் நிறுவனம் 2011ம் நிதி ஆண்டில் 4 கோடியே 90 இலட்சம் யூரோக்களை திருத்தந்தைக்கு வழங்கியது என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் திருப்பீடத்துக்கு உதவும் விசுவாசிகள் மற்றும் திருஅவை நிறுவனங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளது இக்கர்தினால்கள் அவை.


2. "பொருளாதார பிரச்சனையில் நன்னெறி அடித்தளங்கள்" - பார்சலோனா கருத்தரங்கில் வத்திக்கான் அதிகாரி

ஜூலை,05,2012. மனித குலத்தின் பொது நலன் மற்றும் சமுதாய நீதி ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் பொருளாதார விதிகள் செயல்பட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
"பொருளாதார பிரச்சனையில் நன்னெறி அடித்தளங்கள்" என்ற மையப்பொருளில் ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட நீதி, அமைதி அவையின் செயலர் ஆயர் Mario Toso, வர்த்தகத் துறை கடைபிடிக்க வேண்டிய நன்னெறி விழுமியங்களைக் குறித்துப் பேசினார்.
முன்னேற்றம் குறித்து பல கருத்துக்களைப் பேசிவரும் நாம், இந்த முன்னேற்றம் நீதியின் அடிப்படையில் எழுப்பப்பட்டால் மட்டுமே நிலைத்து நிற்கும் என்பதை ஆயர் Toso சுட்டிக் காட்டினார்.
நாம் துவங்கியுள்ள இந்தப் புதிய நூற்றாண்டில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வழிகளில், செல்வம் சேர்ப்பது, மற்றும் செல்வத்தைப் பகிர்வது ஆகிய இரு முக்கிய சமுதாயக் கூறுகளைச் சிந்திக்கவேண்டும் என்ற வேண்டுகோளை இக்கருத்தரங்கில் முன் வைத்தார் ஆயர் Mario Toso.


3. 'சுதந்திரத்தின் 15 நாட்கள்' இறுதித் திருப்பலியில் பிலடெல்பியா பேராயரின் மறையுரை

ஜூலை,05,2012. இறைவனுக்குக் கீழ்ப்படிவது என்ற அடிப்படைச் சுதந்திரத்தை எந்த ஓர் அரசும் தரவோ, பெறவோ முடியாது என்று அமெரிக்கப் பேராயர் ஒருவர் கூறினார்.
ஜூன் 21ம் தேதி முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இரு வாரங்களாய் நடைபெற்ற 'சுதந்திரத்தின் 15 நாட்கள்' என்ற போராட்டத்தின் இறுதி நாள் ஜூலை 4, இப்புதனன்று கொண்டாடப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் சுதந்திர நாளன்று முடிவடைந்தது.
இந்தப் போராட்டத்தின் இறுதித் திருப்பலி வாஷிங்க்டன் நகரில் உள்ள அமல அன்னை தேசியத் திருத்தலத்தில் நடைபெற்றது. இத்திருப்பலியில் மறையுரையாற்றிய பிலடெல்பியா பேராயர் Charles Chaput, உண்மையானச் சுதந்திரத்தை அடைய செல்வம், புகழ், இன்பம் என்ற பல வாழ்க்கைக் கூறுகளையும் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறினார்.
சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்என்ற விவிலிய வார்த்தைகளின் அடிப்படையில் தன் மறையுரையை வழங்கிய பேராயர் Chaput, மனிதர்களால் படைக்கப்பட்ட உலக அரசுகள் மனசாட்சிக்கும், இறைவனின் விருப்பத்திற்கும் எதிராகச் செயல்படுவதை நாம் சகித்துக்கொள்ளத் தேவையில்லை என்று கூறினார்.
மனசாட்சிக்கு எதிராக இயற்றப்படும் அரசு ஆணைகளுக்கு பணியாமல், இறைவனுக்கு உகந்ததை இறைவனுக்கே வழங்க வேண்டும் என்று பேராயர் Chaput அழைப்பு விடுத்தார்.


4. மெக்சிகோ தேர்தல்கள் கண்ணியமான முறையில் நடைபெற்றது குறித்து அந்நாட்டு ஆயர்கள் மகிழ்ச்சி

ஜூலை,05,2012. மெக்சிகோவில் அண்மையில் முடிவடைந்த தேர்தல்கள் கண்ணியமான முறையில் நடைபெற்றது குறித்து தங்கள் மகிழ்வை வெளியிட்டு, அந்நாட்டு ஆயர்கள் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த ஞாயிறன்று முடிவடைந்த அரசுத் தலைவர் தேர்தலில் Enrique Peña Nieto அதிக வாக்குகள் பெற்று அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தல் நேரத்தில் மக்களும் தேர்தல் அதிகாரிகளும் கண்ணியமான முறையில் நடந்து கொண்டது, மெக்சிகோ நாட்டில் நல்லதொரு எதிர்காலம் உருவாவதற்கு ஓர் அடையாளமாய் இருந்தது என்று மெக்சிகோ ஆயர்கள் பேரவை கூறியது.
அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத மற்ற அரசியல் தலைவர்களும் மக்களின் தீர்ப்பை கண்ணியமாகப் பெற்றுக்கொண்டது தங்களுக்கு நிறைவைத் தருகிறது என்று கூறிய ஆயர்கள், புதிய அரசுத் தலைவர் மக்களின் நம்பிக்கைக்கு உகந்தவராய் செயல்படவும் அழைப்பு விடுத்தனர்.


5. பேராயர் Desmond Tutuவுக்கு பெத்லகேம் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது

ஜூலை,05,2012. என் மீட்பரும் ஆண்டவருமான இயேசு பிறந்த இடத்தைக் காண எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நான் ஒரு பெரும் வரமாகக் கருதுகிறேன், இதே வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் காலம் விரைவில் வரவேண்டும் என்று  Anglican பேராயர் Desmond Tutu கூறினார்.
பெத்லேகேம் வரவேற்கிறது என்ற பொருள்படும் Open Bethlehem என்ற ஓர் முயற்சியின் விளைவாக, உலகில் அமைதிக்காகப் போராடும் பல உலகத் தலைவர்களுக்கு பெத்லகேம் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. பெத்லகேமின் முதல் கடவுச்சீட்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு பாலஸ்தீனியத் தலைவர் Mahmoud Abbas அவர்களால் 2005ம் ஆண்டு வழங்கப்பட்டது.
அமைதிக்கான நொபெல் பரிசு பெற்ற Anglican பேராயர் Desmond Tutu அவர்களுக்கு இந்தக் கடவுச்சீட்டு இப்புதனன்று வழங்கப்பட்டது.
தீரவே தீராது என்று எண்ணப்பட்ட தென் ஆப்ரிக்காவின் இனவெறி தீர்ந்தது, இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகள் தீராது என்று எண்ணியபோது, அதுவும் தீர்ந்தது என்று எடுத்துரைத்த பேராயர் Tutu, இதேபோல், தற்போது தீராததாய் தெரியும் இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சனையும் ஒரு நாள் கட்டாயம் தீரும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.


6. தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பாகிஸ்தான் அரசின் முக்கியமான, அவசரமான தேவை - பாகிஸ்தான் ஆயர்

ஜூலை,05,2012. தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பாகிஸ்தான் அரசின் முக்கியமான, அவசரமான தேவை என்று பாகிஸ்தான் ஆயர் Rufin Anthony கூறினார்.
புனித குரானின் ஒரு பிரதியை வெளிப்படையாக எரித்தார் என்ற தேவநிந்தனை குற்றச்சாட்டின் பேரில், பஞ்சாப் மாநிலம் பஹாவல்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை, ஆத்திரமடைந்த கூட்டம் ஒன்று இச்செவ்வாயன்று பிடித்துச் சென்று எரித்து கொலை செய்துள்ளது.
இவ்வன்முறையைக் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த Islamabad-Rawalpindi ஆயர் Rufin Anthony, இந்தச் சட்டத்தினால் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாக வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார்.
மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படும் அந்த நபரைத் தாங்கள் அடையாளம் காண முயன்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த வன்முறை தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன.


7. அணுவை விட சிறிய 'கடவுள் துகள்' கண்டுபிடிப்பில் இந்தியர்களின் பங்களிப்பு

ஜூலை,05,2012. ஸ்விட்சர்லாந்தில் உள்ள CERN எனப்படும் அணு ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் அறிவியலாளர்கள், அணுவை விட சிறிய புதிய துகள் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்தப் புதியத் துகளுக்கு 'கடவுள் துகள்' "God particle" என்ற பெயரும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அணுவைவிட மிகச் சிறியதான இந்தப் புதியத் துகள், இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை அறிந்துகொள்ள உதவும் என்று சொல்லப்படுகிறது.
இத்துகள் பற்றிய கண்டுபிடிப்பில் இந்தியர்களுக்கும் தொடர்புகள் உண்டு என்று ஊடகங்கள் கூறுகின்றன. இந்த ஆய்வுக்கு இந்தியா ஒரு தந்தையைப் போல இருந்துள்ளது என்று CERN சார்பில் பேசிய Paolo Giubellino கூறினார்.
இந்தப் புதியத் துகள், தாங்கள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கும் Higgs Boson என்ற துகளின் தன்மையை ஒத்திருப்பதாக CERN ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த Higgs Boson துகளின் பெயர் Peter Higgs என்ற பிரித்தானிய ஆய்வாளரின் பெயரையும், Satyendranath Bose என்ற இந்திய ஆய்வாளரின் பெயரையும் இணைத்து தரப்பட்ட பெயர்.
தற்போதைய இந்த ஆய்வில் கொல்கத்தா, மும்பை, அலகாபாத், புபனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள ஆய்வகங்களின் பங்களிப்பு இருந்ததென்று கூறப்படுகிறது.


8. குறைவாக சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

ஜூலை,05,2012. தினசரி உணவு உண்ணும் போது 40 விழுக்காடு குறைவாக சாப்பிட்டால் 20 ஆண்டு காலம் ஆயுள்காலம் நீடிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இலண்டனில் உள்ள பல்கலைகழகம் ஒன்றும், அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்றும் உடல்நலம், முதுமை குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது.
மனிதவாழ்வில் முதுமை என்பது தவிர்க்க முடியாது. வயது முதிர்ந்த நிலையில் நோய்களும் ஏற்படும். மரபணுக்களின் காரணமாகவும் நோய்களும் ஏற்படுகின்றன. இதய நோய், புற்றுநோய், நரம்பியல் நோய்களும் மூப்பின் காரணமாக ஏற்பட்டு மரணங்களும் சம்பவிக்கின்றன.
சரியான உணவுப்பழக்கத்தின் மூலம் 30 விழுக்காடு வயதாவதையும், நோய் ஏற்படுவதையும் தடுக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தினமும் வயிறு நிறைய உண்டு உடலில் கொழுப்புச்சத்தை அதிகரித்துக் கொள்வதைவிட 40 விழுக்காடு குறைவாக உணவு உண்டு 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
குறைவான அளவில் உணவு உட்கொள்வதன் மூலம், வயதான பின்னர் வரும் அல்சைமர் நோய், இதயநோய், உள்ளிட்ட நோய்கள் குறைவாகவே ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...