Thursday 26 July 2012

Catholic News in Tamil - 21/07/12

1. டென்வர் திரையரங்குத் துப்பாக்கிச்சூடு நிகழ்வில் வருந்தும் சமூகத்தினருடன் ஆயர்கள் ஒருமைப்பாட்டுணர்வு

2. ஐரோப்பிய ஆயர்கள் : சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தாமதிக்க வேண்டாம்

3. பணமும் அதன் ஒளிவுமறைவின்மையும் குறித்த அருள்தந்தை லொம்பார்தியின் கருத்து

4. கொலம்பிய மக்கள் Chiquinquira அன்னைமரியின் நினைவோடு சுதந்திர தினத்தைச் சிறப்பிக்க வத்திக்கான் அதிகாரி அழைப்பு

5. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் புதிய சட்ட எண் அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டும் : Al-Azhar பல்கலைக்கழகம் பரிந்துரை

6. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு உலகத் தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் : இத்தாலிய வெளியுறவு அமைச்சர்

7. வாஷிங்டனில் 19வது அனைத்துலக எய்ட்ஸ் கருத்தரங்கு

8. ஆப்ரிக்காவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீர்வளம் நூற்றாண்டுகளுக்கு உதவும்

------------------------------------------------------------------------------------------------------

1. டென்வர் திரையரங்குத் துப்பாக்கிச்சூடு நிகழ்வில் வருந்தும் சமூகத்தினருடன் ஆயர்கள் ஒருமைப்பாட்டுணர்வு

ஜூலை,21,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டு கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகர் திரையரங்கு ஒன்றில் இவ்வெள்ளி நள்ளிரவுக் காட்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் செபங்களையும் செய்திகளையும் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
டென்வர் நகரின் Aurora புறநகர்ப் பகுதியிலுள்ள நூற்றாண்டுத் திரையரங்கில் “The Dark Knight Rises” என்ற திரைப்படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தநேரத்தில், நள்ளிரவு 12.30 மணிக்கு 24 வயதுடைய James Holmes என்ற மனிதர் முகமூடியுடன் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்வன்முறை நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்ட டென்வர் பேராயர்  Samuel J. Aquila மற்றும் துணை ஆயர் James D. Conley, இந்நிகழ்ச்சி தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகவும், அழுவாரோடு தாங்கள் அழுவதாகவும்,  இதைச் செய்த குற்றவாளியின் மனமாற்றத்திற்காகத் தாங்கள் செபிப்பதாகவும் கூறியுள்ளனர். 
இந்தக் குற்றவாளியின் இதயத்தைக் கடந்த இரவில் தீமை ஆட்சி செய்தது, இத்தகைய தீமையின் இருளை இயேசு கிறிஸ்துவால் மட்டுமே வெல்ல முடியும் என்றும் ஆயர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அதிபர் ஒபாமா ஆணையிட்டுள்ளார்.
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி James Holmes, கடந்த அறுபது நாள்களில் நான்குத் துப்பாக்கிகளையும் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகளையும் வாங்கியிருக்கிறார் என்று Aurora காவல்துறை கூறியுள்ளது.
இந்தத் திரையரங்கு துப்பாக்கிச்சூடு நிகழ்வு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் நடைபெற்றுள்ள மிகக் கொடூரமான நிகழ்வு என்று சொல்லப்படுகின்றது.


2. ஐரோப்பிய ஆயர்கள் : சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தாமதிக்க வேண்டாம் 

ஜூலை,21,2012. உரையாடல் இடம்பெற வேண்டிய இடத்தை ஆயுதங்கள் ஆக்ரமித்துள்ள சிரியாவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக ஐரோப்பிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
சிரியாவின் நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் நிர்வாகக் குழு, வன்முறையில் ஈடுபட்டுள்ள அனைவரும், தங்களுக்கிடையேயான பகையுணர்வுகளையும் ஆயுதங்களையும் கைவிட்டு உரையாடல், ஒப்புரவு மற்றும் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு இறைவன் வழிசெய்வார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளது.
சண்டை எப்பொழுதும் தவிர்க்க முடியாத வேதனைகளையும் அழிவையும் கடும் பின்விளைவுகளையுமே நாட்டிற்குக் கொண்டுவரும் எனக் கூறும் அவ்வறிக்கை, வருகிற சில நாள்கள் சிரியா குறித்து ஓர் அறுதியான தீர்மானம் எடுப்பதற்கு முக்கியமான நாள்கள் என்பதால் ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் அந்நாட்டுக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு கேட்டுள்ளது.
இவ்வறிக்கையில் ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் Péter ErdőArchbishop, உதவித் தலைவர் ஜெனோவா பேராயர் கர்தினால் Angelo Bagnasco, Przemyśl பேராயர் Józef Michalik ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


3. பணமும் அதன் ஒளிவுமறைவின்மையும் குறித்த அருள்தந்தை லொம்பார்தியின் கருத்து

ஜூலை,21,2012. பொருளாதார மற்றும் நிதித்துறைகளில் உருவாகியுள்ள புதியவகைக் குற்றங்களைக் கட்டுப்படுத்தி அதற்கு எதிராய் நடவடிக்கை எடுக்கும் உலகளாவிய அமைப்பில் வத்திக்கான் இணைந்துள்ளது ஒரு நல்ல முயற்சி எனவும் இது உலகளாவியத் திருஅவைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாய் இருக்கும் எனத் தான் நம்புவதாகவும் வத்திக்கான் தொலைக்காட்சி இயக்குனர் கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு உரைத்த அதன் இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, ஐரோப்பிய அவையின் ஓர் அங்கமான Moneyval என்ற அமைப்பு, வத்திக்கானின் பணப்பரிமாற்ற நிலவரம் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை  குறித்துப் பேசினார்.
வத்திக்கான் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கின்றன என்ற அவ்வமைப்பின் அறிக்கை குறித்துப் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, திருஅவை நிறுவனங்களும் இந்த ஆய்வுப்பாதையில் தங்களைத் தாழ்மையுடன் உட்படுத்துவது சரியானதும், தகுந்ததுமாகவும் இருக்கும் என்றும் பரிந்துரைத்தார்.
பொருளாதார மற்றும் நிதித்துறைகளில் உருவாகியுள்ள புதியவகைக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களைவிட தாங்கள் மிகவும் திறமைசாலிகள் என்று நினைக்க முடியாது, ஏனெனில் மக்கள்மீது நல்ல எண்ணங்களுடன் வைக்கப்படும் நம்பிக்கை, சிலவேளைகளில் அவர்கள் அந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும் விதத்தில் நடந்து கொள்வதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.


4. கொலம்பிய மக்கள் Chiquinquira அன்னைமரியின் நினைவோடு சுதந்திர தினத்தைச் சிறப்பிக்க வத்திக்கான் அதிகாரி அழைப்பு

ஜூலை21,2012. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் கொலம்பிய  நாடு தனது பாதுகாவலியான Chiquinquira அன்னைமரியை மறக்கக் கூடாது என்று, அந்நாட்டின் சுதந்திர தின விழாவுக்குச் சென்றிருந்த வத்திக்கான் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
அன்னைமரியா மீது கொலம்பிய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையே அவர்கள் தங்களது துன்பங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள உதவியது என்று, வத்திக்கான் நகர நிர்வாகத்தின் தலைவர் கர்தினால் Giuseppe Bertello கூறினார்.
ஜூலை 20, இவ்வெள்ளியன்று கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் சிறப்பிக்கப்பட்ட திருப்பலியில் திருப்பீடத்துக்கான 25 அரசியல் தூதர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியா, 1810ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது. இது உலகில் பரப்பளவில் 26வது பெரிய நாடாகவும், மக்கள்தொகையில் 27வது பெரிய நாடாகவும், தென் அமெரிக்காவில் நான்காவது பெரிய நாடாகவும் அமைந்துள்ளது.


5. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் புதிய சட்ட எண் அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டும் : Al-Azhar பல்கலைக்கழகம் பரிந்துரை

ஜூலை,21,2012. எகிப்தில் ஷாரியா என்ற இசுலாமியச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு புதிய சட்ட எண் அந்நாட்டின் அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டுமென Al-Azhar பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது.
எகிப்தின் புதிய அரசியல் அமைப்பு குறித்து அந்நாட்டின் அடிப்படைவாத இசுலாமியருக்கும், மிதவாத இசுலாமியருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றதையடுத்து இவ்வாறு பரிந்துரைத்துள்ளது அந்நாட்டின் Al-Azhar பல்கலைக்கழகம்.
நாட்டின் மதம் இசுலாம், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி அராபியம். ஷாரியா என்ற இசுலாமிய சட்டத்தின் கொள்கைகள் நாட்டின் சட்ட அமைப்புக்கு முக்கிய ஆதாரமாக இருக்க வேண்டும் என்ற ஒரு சட்ட எண்ணை இம்மாதத் தொடக்கத்தில் எகிப்தின் சட்டசபைக் குழு பரிந்துரை செய்திருந்தது. எனினும், கிறிஸ்தவர்களும் யூதர்களும் அவரவர் மதங்களின் வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்ற புதிய பகுதியை எகிப்திய சட்டசபை இணைத்துள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.


6. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு உலகத் தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் : இத்தாலிய வெளியுறவு அமைச்சர்

ஜூலை,21,2012. உலகில் இடம்பெறும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு உலகத் தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சர் Giulio Terzi  கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இவ்வாண்டின் ஆரம்பம் முதல் சுமார் 800 கிறிஸ்தவர்கள் அந்நாட்டின் Boko Haram இசுலாமியத் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய Terzi, உலகில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை, குறிப்பாக ஆப்ரிக்காவில் பொதுவான நிகழ்வாக இருந்து வருகிறது என்று கூறினார்.
உரோம் நிர்வாகம் மற்றும் இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்தின் கூட்டு முயற்சியினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சமய சுதந்திரக் கண்காணிப்பு என்ற அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் இவ்வாரத்தில் பேசியபோது இவ்வாறு பேசினார் Terzi.
உலகில் சமய சுதந்திரத்தை ஊக்குவித்து, சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது இத்தாலிய அரசின் வெளியுறவுக் கொள்கையில் முன்னுரிமை பெற்றுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.


7. வாஷிங்டனில் 19வது அனைத்துலக எய்ட்ஸ் கருத்தரங்கு

ஜூலை,21,2012. கடந்த ஆண்டில் உலகில் 3 கோடியே 42 இலட்சம் பேர், எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாகும் HIV நோய்க்கிருமிகளுடன் வாழ்ந்தனர், இவ்வெண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட சற்று அதிகம் என்று UNAIDS என்ற ஐ.நா.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
வாஷிங்டனில் இத்திங்களன்று ஆரம்பமாகும் எய்ட்ஸ் நோய்க் குறித்த 19வது அனைத்துலக கருத்தரங்கையொட்டி புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள  UNAIDS அமைப்பு, இந்த நோயாளிகளில் 31 இலட்சம் சிறார் உட்பட 2 கோடியே 35 இலட்சம் பேர் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் வாழ்கின்றனர் என்று அறிவித்தது.
"நாம் எல்லாரும் சேர்ந்து எய்ட்ஸ் நோய்க்கு முடிவு கட்டலாம்" என்ற தலைப்பில் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது இந்த ஐ.நா. அமைப்பு.
இதற்கிடையே, இந்தியாவிலுள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 20 விழுக்காட்டினர் ஆந்திராவில் உள்ளனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும் எச்.ஐ.வி. கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 இலட்சம். இவர்களில் 5 இலட்சம் பேர் ஆந்திராவில் உள்ளனர். 2வது இடத்தில் மகாராஷ்டிராவும் (4.19இலட்சம்), 3வது இடத்தில் கர்நாடகாவும் (2.45இலட்சம்) உள்ளன என்று அப்புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கல்வியறிவின்மை, மோசமான நலவாழ்வு, வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர்தல், முறையற்ற பாலியல் பழக்கங்கள் போன்றவை எச்.ஐ.வி பரவியதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.


8. ஆப்ரிக்காவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீர்வளம் நூற்றாண்டுகளுக்கு உதவும்

ஜூலை21,2012. ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த வறண்ட நாடாகிய நமிபியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீர்வளத்தை, அந்நாட்டில் தற்போது தண்ணீர் பயன்படுத்தப்படும் விகிதத்தில் பயன்படுத்தினால் அடுத்த 400 ஆண்டுகளுக்கு அந்நாட்டுக்குப் போதுமான தண்ணீர் அங்கிருந்து கிடைக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நீர்வளம் சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது, ஆயினும், தற்போதைய பல நவீன நீர்வளங்களைவிட இது குடிப்பதற்குச் சுத்தமான நீரைக் கொண்டுள்ளது என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
எனினும், அதிகாரப்பூர்வ அனுமதியின்றி அங்கிருந்து தண்ணீர் எடுப்பது புதிய தண்ணீர் விநியோகத்தைப் பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அங்கோலா எல்லைப் பகுதியில் இந்த நீர்வளப் பகுதியில் வாழும் சுமார் 8 இலட்சம் மக்கள் 40 ஆண்டு பழமையுடைய கால்வாய்த் தண்ணீரையே சார்ந்து வாழ்கின்றனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...