Thursday, 26 July 2012

Catholic News in Tamil - 16/07/12


1. புதிய உடுப்பி மறைமாவட்டத்தின் முதல் ஆயர் Gerald Isaac Lobo

2. திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை

3. திருஅவையின் பல்வேறு பணிகளைச் செய்வதற்கு இறைவன் நம் அனைவரையுமே அழைத்துள்ளார் - திருத்தந்தை

4. பாலஸ்தீனியப்பகுதியில் இஸ்ராயேல் குடியுயிருப்புகளுக்கு எதிராக அமெரிக்கா குரலெழுப்ப ஆயர் அழைப்பு

5. கருத்தடைச்சாதனங்கள் எயிட்ஸ் நோய்க்கான தீர்வாக முடியாது. - தென்னாப்ரிக்க ஆயர்

6. இலங்கையில் 43 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா ஒப்பந்தம்

------------------------------------------------------------------------------------------------------

1. புதிய உடுப்பி மறைமாவட்டத்தின் முதல் ஆயர் Gerald Isaac Lobo

ஜூலை16,2012. இந்தியாவில் மங்களூர் மறைமாவட்டத்திலிருந்து உடுப்பி என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி, அதன் முதல் ஆயராக, Shimoga ஆயர் Gerald Isaac Lobo அவர்களை இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Udupi, Kunapura, Karkala ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய உடுப்பி மறைமாவட்டத்தின் 14 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் ஒரு இலட்சத்து ஆறாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கத்தோலிக்கர். இங்குள்ள 46 பங்குகளில், 58 மறைமாவட்ட குருக்களும், 28 துறவறக் குருக்களும், 225 அருள்சகோதரிகளும் மறைப்பணியாற்றி வருகின்றனர். புதுமைகள் அன்னைமரி திருத்தலம் இப்புதிய மறைமாவட்டத்தின் பேராயலமாக மாற்றப்பட்டுள்ளது.  
உடுப்பி மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள Shimoga ஆயர் Gerald Isaac Lobo, மங்களூர் மறைமாவட்டத்திலுள்ள Agrarல் 1949ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி பிறந்தவர். 1977ம் ஆண்டு மே 05ம் தேதி குருவான இவர், 2000மாம் ஆண்டு மே 20ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.


2. திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை

ஜூலை,16,2012. திருஅவையின் வழியாக கிறிஸ்து ஆற்றிவரும் செயல்கள் எப்போதும் முன்னேறிச் செல்லுமே தவிர, பின்னோக்கிச் செல்லாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறன்று Frascati பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தியபின், திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்ஃபோ வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
தான் மூவேளை செப உரைக்குத் தாமதமாக வந்ததால் மக்களைக் காக்க வைத்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டபின் திருத்தந்தை தன் மூவேளை செப உரையை வழங்கினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிகழ்ந்ததன் 50 ம் ஆண்டைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், இந்தப் பொதுச் சங்கத்தின் ஏடுகளில் பொதிந்திருக்கும் எண்ணங்களை மக்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை படித்து, திருஅவை பற்றிய தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தன் செப உரையின் இறுதியில், விடுமுறை நாட்களை மக்கள் நல்ல முறையில் செலவிட அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, விடுமுறை நாட்களில் நாம் மகிழ்வாக இருக்கும் வேளையில், தனிமையிலும், நோயாலும் மகிழ்வின்றித் தவிப்போருக்கும் மகிழ்வைக் கொணர முயலவேண்டும் என்று கூடியிருந்த அனைவரையும் கேட்டுக் கொண்டார்.


3. திருஅவையின் பல்வேறு பணிகளைச் செய்வதற்கு இறைவன் நம் அனைவரையுமே அழைத்துள்ளார் - திருத்தந்தை

ஜூலை,16,2012. இறைவனின் வார்த்தையை அறிவிக்கும் பணியாளர்கள் பணத்தின் மீதும், சொந்த வசதிகள் மீதும் பற்று கொண்டிருக்கக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலியின் மிகவும் புகழ்பெற்ற நகராட்சிகளில் ஒன்றான Frascatiயின் பசிலிக்காவுக்கு முன்பக்கம் அமைந்துள்ள வளாகத்தில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
திருஅவையின் பல்வேறு பணிகளைச் செய்வதற்கு இறைவன் நம் அனைவரையுமே அழைத்துள்ளார் என்று கூறியத் திருத்தந்தை, துறவறம், குருத்துவம், இல்லறம் என்ற எவ்வகை வாழ்வானாலும் அதை இறைவனின் அழைப்பாக இளையோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
இறைவனின் வார்த்தைகளைப் பரப்பும் வேளையில் நாம் எப்போதும் வரவேற்பு பெறப்போவதில்லை என்பதைத் தன் மறையுரையில் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை, வரவேற்பும், கரவொலிகளும் பெறவில்லை என்றாலும், நன்மையே உருவான இறைவனின் அன்பை வெளிப்படுத்த நாம் அனைவருக்கும் கடமையுண்டு என்று கூறினார்.
நமது பணிகளை ஏற்க மறுக்கும் தீய சக்திகளோடு நமக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த, நமது காலடியில் பதிந்துள்ள தூசியையும் அப்புறப்படுத்திவிட்டு அவ்விடத்திலிருந்து அகலவேண்டும் என்று இயேசு கூறும் அறிவுரைக்கு செவிமடுப்பது இன்றைய அவசியமாகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
Frascatiயில் 1980ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் திருப்பலி நிகழ்த்தியதற்கு 32 ஆண்டுகள் கழித்து, இஞ்ஞாயிறன்று அங்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பலி நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


4. பாலஸ்தீனியப்பகுதியில் இஸ்ராயேல் குடியுயிருப்புகளுக்கு எதிராக அமெரிக்கா குரலெழுப்ப ஆயர் அழைப்பு

ஜூலை,16,2012. West Bank பகுதியில் உள்ள இஸ்ரேல் குடியமர்வுகளைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் பரிந்துரைகளை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு எதிர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் Richard Pates.
இத்திங்களும், செவ்வாயும் அமெரிக்க அரசுச்செயலர் ஹில்லரி கிளிண்டன் இஸ்ரேல் நாட்டில் பயணம் மேற்கொண்டு வருவதையொட்டி, இக்கருத்துக்களை வெளியிட்டார் அமெரிக்க ஆயர்களின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் ஆயர் Pates.  
West Bank பகுதி குடியிருப்புகளைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முயல்வது, இஸ்ரயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான அமைதித் தீர்வுக்குப் பெருந்தடையாக இருக்கும் என்ற கவலையை வெளியிட்டார் ஆயர் Pates.
மக்களின் உரிமைகளை உறுதிச்செய்யும் நீடித்த அமைதிக்கு இட்டுச் செல்லும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பையும் ஆயர் Pates மீண்டுமொருமுறை நினைவூட்டினார்.


கருத்தடைச்சாதனங்கள் எயிட்ஸ் நோய்க்கான தீர்வாக முடியாது. - தென்னாப்ரிக்க ஆயர்

ஜீலை 17.07.2012.   எயிட்ஸ் நோய் பரவலைத் தடுப்பதற்கானத் தீர்வாகக் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு இருக்கமுடியாது என மீண்டுமொருமுறை தென்னாப்ரிக்க மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
ஏறத்தாழ 22 விழுக்காட்டு HIV நோய் பாதிப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும் தென்னாப்ரிக்காவில் சர்வதேச சமுதாயம் கடுமையானத் தீர்வுகளைப் புகுத்த முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய Eshowe ஆயர் Xolelo Thaddaeus Kumalo, ஆப்ரிக்க மக்களுக்கு எது தேவை என்பதை சர்வதேச சமுதாயம் ஆப்ரிக்க மக்களுடன் எவ்வித ஆலோசனையுமின்றியே முடிவு செய்கிறது என்றார்.
கருத்தடைச்சாதனப் பயன்பாட்டின் மூலம் எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுக்கமுடியும் என பள்ளிகளில் அரசால் கற்பிக்கப்படுவதால், கருத்தடைச்சாதனப் பயன்பாடு அதிகரித்து, நோய் பரவலுக்கும் காரணமாக அமைகின்றது என்ற கவலையை வெளியிட்டார் ஆயர் Kumalo.
தென்னாப்ரிக்காவின் இன்றைய உண்மையான தேவைகள் பற்றியும் குறிப்பிட்ட ஆயர், இன்றையத் திருஅவையின் மிக முக்கியத் தேவை, நற்செய்தி அறிவித்தலே, ஏனெனில் இயேசுவுடன் மக்கள் இணைந்திருந்தால் இலஞ்சம், ஊழல், வன்முறை என்பவையெல்லாம் தானாகவே மறைந்துவிடும் என மேலும் தெரிவித்தார்.


இலங்கையில் 43 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா ஒப்பந்தம்

ஜூலை16,2012. இலங்கையில் போரின்போது வீடுகளை இழந்த 43 ஆயிரம் தமிழர்களுக்கு வீடுகளைக் கட்டித்தர, இந்தியா இசைவு தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை நடந்தபோது, 2 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், வீடுகளை இழந்து, அகதிகள் முகாமுக்குச் சென்றனர். விடுதலை புலிகளுடனான சண்டை, முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர இந்தியா உறுதியளித்தது. இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மூன்று மாவட்டங்களில் ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு மாவட்டங்களில், 43 ஆயிரம் வீடுகளை 1,500 கோடி ரூபாய்ச் செலவில், கட்டித் தருவதற்குரிய ஒப்பந்தம், கடந்த வாரத்தில் கொழும்புவில் கையெழுத்தாகியுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...