Thursday, 26 July 2012

Catholic News in Tamil - 13/07/12


1. 'Vatileaks' குழு தனது விசாரணையின் முடிவுகளை வரும் வாரத்தில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கும் : திருப்பீடப் பேச்சாளர்

2. அருளாளர் Peter To Rotன் இறப்புக்கு பாப்புவா நியு கினியிடம் ஜப்பான் திருஅவை மன்னிப்பு

3. ஆசியாவில் போர்களும் ஆயுத வியாபாரமும் நிறுத்தப்படுவதற்கு ஆசிய ஆயர்கள் வேண்டுகோள்

4. அர்ஜென்டினா நாடு வலுவற்றோருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் பேராயர் Arancibia

5. மதமாற்றக் குற்றச்சாட்டுக்களுக்குத் தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் சவால் விடுக்க கோரிக்கை

6. நைஜீரியாவில் ஒரு பெரிய வகுப்புவாத மோதல் உருவாகக் கூடும் - கிறிஸ்தவ-முஸ்லீம் பிரதிநிதிகள் குழு எச்சரிக்கை

7. மாற்றுத்திறனாளிச் சிறார்கள் அதிகமாக வன்முறைகளை எதிர்நோக்குகின்றனர் ஐ.நா.

8. மலேசியாவில் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டம் இரத்து

------------------------------------------------------------------------------------------------------

1. 'Vatileaks' குழு தனது விசாரணையின் முடிவுகளை வரும் வாரத்தில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கும் : திருப்பீடப் பேச்சாளர்

ஜூலை13,2012. 'Vatileaks' எனப்படும் நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்கள் பொதுவில் வெளியாகியது குறித்த விசாரணைகளின் முடிவு விரைவில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்படும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்காகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்த கர்தினால் Julian Herranz தலைமையிலான மூன்று கர்தினால்கள் கொண்ட குழு தங்களது விசாரணைகளின் இறுதி அறிக்கையை வரும் வாரத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிருபர்களிடம் இவ்வியாழன் மாலை அறிவித்தார் அருள்தந்தை லொம்பார்தி .
அதேசமயம், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அறையிலிருந்து நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 23ம் தேதி கைது செய்யப்பட்ட திருத்தந்தையின் பணியாள் Paolo Gabriele, வத்திக்கான் காவல்நிலையத்தில் தொடர்ந்து வைக்கப்படுவார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார்.
46 வயதாகும் Gabrieleவை விசாரணை நடத்தி வரும் நீதிபதி அவ்விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் முடிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் நிருபர்களிடம் கூறினார்.
திருப்பீட சட்டங்கள் அவையின் முன்னாள் தலைவரான 82 வயதாகும் இஸ்பானிய கர்தினால் Julian Herranz தலைமையில் விசாரணை நடத்தும் மூன்று பேர் கொண்ட இக்குழுவில், இக்கர்தினாலுக்கு உதவியாக விசுவாசப்பரப்புப் பேராயத்தின் முன்னாள் தலைவரான 88 வயதாகும் சுலோவாக்கிய கர்தினால் Jozef Tomko மற்றும் சிசிலியின் பலேர்மோவின் முன்னாள் பேராயரான 81 வயதாகும் கர்தினால் Salvatore De Giorgi உள்ளனர்.
மேலும், நாசரேத்தூர் இயேசு என்ற தனது நூலின் மூன்றாவது தொகுப்பை முடிப்பதற்குத் திருத்தந்தை இந்தக் கோடை விடுமுறையைப் பயன்படுத்தி வருகிறார் என்றும் அறிவித்த அருள்தந்தை லொம்பார்தி, வருகிற செப்டம்பரில் லெபனனுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவும், வருகிற அக்டோபரில் தொடங்கும் விசுவாச ஆண்டுக்கும் திருத்தந்தை தயாரித்து வருகிறார் என்றும் கூறினார்.


2. அருளாளர் Peter To Rotன் இறப்புக்கு பாப்புவா நியு கினியிடம் ஜப்பான் திருஅவை மன்னிப்பு

ஜூலை13,2012. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மேற்கொண்ட பயங்கரமான செயல்களுக்கு, குறிப்பாக, அருளாளர்   Peter To Rotன் விலைமதிப்பில்லாத வாழ்வு பறிக்கப்பட்டதற்கு ஜப்பான் திருஅவை மன்னிப்புக் கேட்பதாக அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Leo Ikenaga கூறியுள்ளார்.
அருளாளர் Peter To Rot பிறந்ததன் நூறாவது ஆண்டைச் சிறப்பித்த Papua New Guinea கத்தோலிக்கருக்குக் கடிதம் எழுதிய பேராயர் Ikenaga, ஜப்பான் ஆக்ரமிப்பாளர்கள் செய்த இந்தச் செயலுக்கு எவ்விதத்திலும் நியாயம் சொல்லமுடியாது என்பதால் ஜப்பான் திருஅவை மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஓசியானியாவில் திருமணத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காகப் போராடிய அருளாளர் Peter To Rot, ஜப்பான் ஆக்ரமிப்பாளர்களால் மிகக்  கொடூரமாய்க் கொல்லப்பட்டார்.
ஓசியானியாவில் மறைபோதகர்கள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் Peter To Rot  இளம் வேதியராக, எடுத்துக்காட்டான திருமண வாழ்வை வாழ்ந்து வந்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் படைகள் பாப்புவா நியு கினியை ஆக்ரமித்து குருக்களையும் துறவிகளையும் கைது செய்தன. வதைப்போர் முகாம்களிலும் வைத்தன. குருக்கள் இல்லாத நிலையில், குழந்தைகளுக்குத் திருமுழுக்குக் கொடுப்பதிலும் இறந்தோரை அடக்கம் செய்வதிலும் திருமணத்திற்கு உதவி செய்வதிலும் Peter To Rot, வேதியராகத் தன்னை அர்ப்பணித்தார். ஜப்பானியப் படைகள் திருஅவையின் நடவடிக்கைகளைத் தடைசெய்து திருஅவை கட்டிடங்களையும் தகர்த்தன. பலதாரத் திருமணங்களைச் செய்யவும் மக்களைக் கட்டாயப்படுத்தினர். ஆனால் Peter To Rot தனது திருமணவாழ்வை மாற்றிக்கொள்ள மறுக்கவே, அவர் கைது செய்யப்பட்டு, சித்ரவதைப்படுத்தப்பட்டுக் கொடூரமாய்க் கொல்லப்பட்டார்.


3. ஆசியாவில் போர்களும் ஆயுத வியாபாரமும் நிறுத்தப்படுவதற்கு ஆசிய ஆயர்கள் வேண்டுகோள்

ஜூலை13,2012. ஆசியக் கண்டத்தில் பல்வேறு சூழல்களில் இடம்பெற்று வரும் போர்களும், போர்களோடு தொடர்புடைய நடவடிக்கைகளும் நிறுத்தப்படுமாறு ஆசிய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆசியக் கண்டத்தை இரத்தத்தில் நனைக்க உதவும் ஆயுத வியாபாரங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு உலகளாவிய அமைதிக்கு ஆசியக் கண்டம் தன்னை அர்ப்பணிக்குமாறும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் அவர்களின் அவனியில் அமைதி என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டையொட்டி, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மனித முன்னேற்ற ஆணையம் எடுத்த முயற்சி குறித்து Fides செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, அவ்வாணையச் செயலர் அருள்தந்தை நித்ய சகாயம் ஆசிய ஆயர்களின் இவ்வேண்டுகோள் குறித்துக் குறிப்பிட்டார்.
உலகில் போர்களும் ஆயுத வியாபாரமும் நிறுத்தப்படுவதற்கு இவ்வாணையம் எடுத்த முயற்சியில், ஆசியத் திருஅவைத் தலைவர்கள், பிற சமயத் தலைவர்கள் மற்றும் சுமார் 5,000 பல்சமயப் பிரதநிதிகள் இணைந்துள்ளனர் என்று அருள்தந்தை நித்யா கூறினார்.
உலக ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குப் பல நாடுகள் தங்களைத் தயாரித்து வரும்வேளை, இந்த உலக ஒப்பந்தத்திற்கு ஆதரவாக ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மனித முன்னேற்ற ஆணையமும் தனது விண்ணப்பத்தை ஐ.நா.பொதுச்செயலருக்குச் சமர்ப்பித்துள்ளது.
உலகில் பெருமளவில் கடும் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகும் ஆயுத வியாபாரம், உலக அளவில் ஆண்டுதோறும் ஆயிரம் பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டித் தருகின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன.


4.  அர்ஜென்டினா நாடு வலுவற்றோருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் பேராயர் Arancibia

ஜூலை13,2012. மாபெரும் அர்ஜென்டினா நாடு வலுவற்றோருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பேராயர் José María Arancibia கேட்டுக் கொண்டார்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா சுதந்திரம் அடைந்ததன் 196வது ஆண்டு நிறைவை இம்மாதம் 9ம் தேதி சிறப்பித்த போது இவ்வாறு கேட்டுக் கொண்டார் பேராயர் María Arancibia.
மனிதன் பற்றிய அறநெறி உண்மைகளை ஏற்பது, சுதந்திரத்தை அடைவதற்கு அவசியமானது என்றுரைத்த பேராயர், ஒரு பெரிய நாடு போலியான கருத்துக்கோட்பாடுகளைச் சார்ந்திருக்க முடியாது, மாறாக, நலிந்தோருக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அக்கறை காட்ட வேண்டுமென்று வலியுறுத்தினார்.


5. மதமாற்றக் குற்றச்சாட்டுக்களுக்குத் தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் சவால் விடுக்க கோரிக்கை

ஜூலை13,2012.  கிறிஸ்தவர்கள் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தும் இந்து தீவிரவாதக் கும்பல்களுக்குச் சவால் விடுப்பதற்குத் தகவல் உரிமை பெறும் சட்டம் சிறந்த கருவி என்று ஒரு கத்தோலிக்கப் பொதுநிலைத் தலைவர் கருத்து தெரிவித்தார்.
மனித உரிமைகள் மற்றும் சமய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த சுமார் 50 தலைவர்களும் பொதுநிலையினர் அமைப்புகளும் மங்களூரில் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார் அனைத்திந்திய கிறிஸ்தவ அவைத் தலைவர் ஜோசப் டி சூசா. 
இந்து தீவிரவாதக் கும்பல்களால் பதட்டநிலைகள் அதிகமாக ஏற்படும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் RTI என்ற தகவல் உரிமை பெறும் சட்டத்தைப் பயன்படுத்தி அக்கும்பல்களுக்குச் சவால் விடுக்குமாறு கேட்டுக் கொண்டார் டி சூசா.
இந்து அடிப்படைவாதிகள் திடீரென முளைக்கவில்லை, மாறாக, கடந்த 75 ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து திட்டம் வகுத்து வருகின்றனர் என்றும் டி சூசா குறை கூறினார்.


6. நைஜீரியாவில் ஒரு பெரிய வகுப்புவாத மோதல் உருவாகக் கூடும் - கிறிஸ்தவ-முஸ்லீம் பிரதிநிதிகள் குழு எச்சரிக்கை

ஜூலை13,2012. நைஜீரியாவில் Boko Haram பிரிவினைவாதக் குழு தற்போது நடத்தி வரும் வன்முறைச் செயல்கள், அந்நாட்டில் ஒரு பெரிய வகுப்புவாத மோதல் உருவாகக் காரணமாக அமையக்கூடும் என்று, அந்நாட்டை அண்மையில் பார்வையிட்டுத் திரும்பியுள்ள கிறிஸ்தவ-முஸ்லீம்  பிரதிநிதிகள் குழு எச்சரித்துள்ளது.
WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றப் பொதுச் செயலர் Olav Fyske Tveit மற்றும் Royal Aal al-Bayt என்ற இசுலாமிய நிறுவனத் தலைவர் ஜோர்டன் இளவரசர் Ghazi bin Muhammad தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு அண்மையில் நைஜீரியாவைப் பார்வையிட்ட பின்னர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு  எச்சரித்துள்ளது.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே தற்போது இடம்பெற்று வரும் சண்டை, 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டுவரை போஸ்னியாவில் இடம்பெற்ற வன்முறைக்குப் பின்னர் கொடூரமானதாக இருக்கின்றது என்று கூறும் அக்குழு, தற்போதைய நைஜீரியச் சண்டைக்கு மூலகாரணம் மதத்தையும் கடந்ததாக இருக்கின்றது என்றும் கூறியது.
ஊழல், முறைகேடான நிர்வாகம், நிலத்தகராறுகள், மோதல்களில் பலியானவர்களுக்கு உதவிகள் கிடைக்காமை, பதட்டநிலைகளைத் தூண்டிவிடுவோர் தண்டிக்கப்படாமல் இருப்பது போன்றவை இம்மோதல்களுக்குக் காரணங்கள் என்றும் இக்குழு குறை கூறியது.


7. மாற்றுத்திறனாளிச் சிறார்கள் அதிகமாக வன்முறைகளை எதிர்நோக்குகின்றனர் ஐ.நா.

ஜூலை13,2012. உலகில் மாற்றுத்திறனாளிச் சிறார்கள், மற்ற சிறார்களைவிட ஏறக்குறைய நான்கு மடங்கு வன்முறைகளை அதிகம் எதிர்நோக்குகின்றனர் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
The Lancet என்ற மருத்துவ இதழில் வெளியான தகவலை வைத்து இவ்வாறு கூறிய WHO நிறுவனம், மாற்றுத்திறனாளிச் சிறாரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிச் சிறார்கள் மற்ற சிறாரைவிட எல்லாவிதமான வன்முறைகளாலும் 3.7 மடங்கும்,  உடல்ரீதியாக 3.6 மடங்கும், பாலியல் ரீதியாக 2.9 மடங்கும் அதிகமாக பாதிக்கப்படுவதாக The Lancet மருத்துவ இதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
ஃபின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், இஸ்பெயின், சுவீடன், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற வருவாய் அதிகமுள்ள நாடுகளில் உள்ள 18,374 மாற்றுத்திறனாளிச் சிறார்கள் உட்பட, பல நாடுகளில் எடுத்த 17 ஆய்வுகளில் இவ்வாறு தெரிய வந்துள்ளதாக அவ்விதழ் கூறியுள்ளது.


8. மலேசியாவில் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டம் இரத்து

ஜூலை13,2012. மலேசியாவில் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அரசு நடவடிக்கை எடுத்து வந்துள்ளது என்று நீண்ட காலமாகவே சமூக ஆர்வலர்கள் அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.
நாட்டில் புதிய குடியரசை உருவாக்கும் நடவடிக்கையில் இது முதல்படி என்று கூறி, இந்தச் சட்டத்தை இரத்து செய்வதாக பிரதமர் Najib Razak இப்புதனன்று அறிவித்தார்.
மலேசியாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தனது ஆளுங்கட்சியில் சீரமைப்புகள் இடம்பெற்று வருகின்றன என்பதை வெளிக்காட்ட பிரதமர் Najib எடுத்திருக்கும் நடவடிக்கை இது என்றும் சொல்லப்படுகின்றது.
மலேசியா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பிரதமர் Najib சார்ந்திருக்கும் கட்சியே அங்கு ஆட்சி செய்து வருகிறது.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு, கொடுங்கோல் சட்டங்கள் என்று கருதப்பட்ட பலவற்றை பிரதமர் நஜீப் ஏற்கனவே இரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...