Thursday, 26 July 2012

Catholic News in Tamil - 14/07/12

1.திருத்தந்தை : இஞ்ஞாயிறன்று Frascatiயில் திருப்பலி

2. திருப்பீடத் தூதர் : சிரியாவில் இரத்தம் சிந்தப்படுவதை நிறுத்துவதற்குப் பன்னாட்டுச் சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

3. சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உரையாடல் இடம்பெறுவது உடனடித் தேவை : ஹாங்காங் கர்தினால்

4. பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் : ஆயர்கள் அறிவிப்பு

5. அருள்தந்தை லொம்பார்தி : இசையும் அமைதியும்

6. ஆப்ரிக்காவில் பொதுநிலையினர் மாநாடு

7. ஐரோப்பாவில் 2 கோடியே 20 இலட்சம் பேர் வேலைகளை இழக்கக்கூடும் : ILO நிறுவனம் எச்சரிக்கை

8. சூரிய ஆற்றலின் தொடர் கவனிப்பு அவசியம்:நாசா அறிவியலாளர்

-------------------------------------------------------------------------------------------

1.திருத்தந்தை : இஞ்ஞாயிறன்று Frascatiயில் திருப்பலி

ஜூலை14,2012. இத்தாலியின் Castelli Romaniயின் நகராட்சிகளில் மிகவும் புகழ்பெற்ற நகராட்சிகளில் ஒன்றான Frascatiயின் முக்கிய வளாகத்தில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Frascatiயில் 1980ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் திருப்பலி நிகழ்த்தியதற்குப் பின்னர் 32 ஆண்டுகள் கழித்து இஞ்ஞாயிறன்று அங்கு திருப்பலி நிகழ்த்துகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Frascati பசிலிக்காவுக்கு முன்பக்கம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பலி நிகழ்த்திய பின்னர் காஸ்தெல் கந்தோல்ஃபோ சென்று நண்பகல் மூவேளை செப உரை ஆற்றுவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தை Frascatiக்குச் செல்வது குறித்து பேட்டியளித்த Frascati மறைமாவட்ட ஆயர் Raffaello Martinelli, தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டை முழுமையாக வாழ்வதற்கும் கொண்டாடுவதற்கும் இது நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று கூறினார்.
வருகிற அக்டோபர் 11ம் தேதியன்று தொடங்கும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி நிறைவடையும்.

2. திருப்பீடத் தூதர் : சிரியாவில் இரத்தம் சிந்தப்படுவதை நிறுத்துவதற்குப் பன்னாட்டுச் சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

ஜூலை14,2012. சிரியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறையை நிறுத்துவதற்குப் பன்னாட்டுச் சமுதாயம் நடவடிக்கை எடுக்குமாறு வருந்திக் கேட்டுள்ளார் சிரியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari.
அரசுக்கும் புரட்சிப்படைகளுக்கும் இடையே இடம்பெறும் மோதல்கள் நாடு முழுவதும் பரவியுள்ளன என்றும், அப்பாவி குடிமக்களுக்குரிய பாதுகாப்பு மோசமடைந்து வருகின்றது என்றும் பேராயர் Zenari கவலை தெரிவித்தார்.
இவ்வெள்ளியன்று Hama மாநிலத்தின் Tremseh கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளவேளை, சிரியா விவகாரத்தில் பன்னாட்டுச் சமுதாயம் பிளவுபட்டு இருந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்று எச்சரித்துள்ளார் பேராயர் Zenari.
ஐ.நா.பாதுகாப்பு அவை உறுப்பினர்கள், குறிப்பாக, சீனாவும் இரஷ்யாவும், இன்னும், அரபு கூட்டமைப்பும் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு சிரியாவில் வன்முறைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுள்ளார் பேராயர் Zenari.
சிரியாவில் கடந்த 16 மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் சுமார் 14 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 

3. சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உரையாடல் இடம்பெறுவது உடனடித் தேவை : ஹாங்காங் கர்தினால்

ஜூலை14,2012. சீனாவில் வத்திக்கான் அங்கீகாரத்துடன் கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஆயர் Thaddeus Ma Daqinன் திருநிலைப்பாடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்குச் சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உரையாடல் இடம்பெறுவது மிகவும் அவசரத் தேவையாக இருக்கின்றது என்று ஹாங்காங் கர்தினால் John Tong Hon கூறினார்.
ஆயர் திருநிலைப்பாடுகளில் சீன அரசின் தலையீட்டைக் குறை கூறியுள்ள கர்தினால் Tong, உரையாடல் வழியாக மட்டுமே இப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என்று கூறினார்
கடந்த வாரத்தில் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் Thaddeus Ma Daqin, சீன அரசின் அங்கீகாரம் பெற்ற கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். ஆயினும், சீன அதிகாரிகள் அவரைத் தொடர்ந்து பணியில் வைத்துள்ளனர்.
அதேசமயம், திருத்தந்தையின் ஒப்புதலின்றி அருட்பணி Joseph Yue Fusheng கடந்த வாரத்தில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டிருக்கிறார்.


4. பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் : ஆயர்கள் அறிவிப்பு
ஜூலை14,2012. பிலிப்பீன்சில் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவை 2021ம் ஆண்டில் கொண்டாடுவதற்கு கத்தோலிக்கரைத் தயாரிக்கும் நோக்கத்தில் மேய்ப்புப்பணி அறிக்கையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
புதிய நற்செய்திப்பணி என்ற தலைப்பில் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் இவ்விழாவுக்குத் தயாரிப்பாக 9 ஆண்டுத் திட்டமும் குறிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த விசுவாசப் பயிற்சி, பொதுநிலையினர், ஏழைகள், நற்கருணையும் குடும்பமும், பங்குத்தளம், குருக்களும் துறவியரும், இளையோர், கிறிஸ்தவ ஒன்றிப்பும் பல்சமய உரையாடலும், மறைஅறிவிப்புப்பணி ஆகிய தலைப்புக்களில் 2013ம் ஆண்டிலிருந்து தயாரிப்புகள் தொடங்கும் என ஆயர்கள் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
2021ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் இந்த ஜூபிலி ஆண்டானது பிலிப்பீன்ஸ் திருஅவைக்கு அருளும் ஆசீர்வாதங்களும் நிறைந்த காலமாக இருக்கும் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.
ஜூபிலி ஆண்டுக்கானத் தயாரிப்புக்களை வருகிற அக்டோபர் 21ம் தேதியன்று துவங்குகின்றது பிலிப்பீன்ஸ் திருஅவை.  

5. அருள்தந்தை லொம்பார்தி : இசையும் அமைதியும்

ஜூலை14,2012. கலைநயத்தோடு விவரிக்க முயற்சிக்கும் எந்தவொரு செயலும் மனித சமுதாயத்தின் உள்ளார்ந்த விழுமியத்தை எடுத்துச் சொல்லும் சக்திமிக்க செய்தியாக இருக்கின்றது என்று இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
புனித பெனடிக்ட் விழாவான இப்புதனன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் திருத்தந்தை மற்றும் இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ முன்னிலையில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரி குறித்து வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் பேசிய அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவைச் சேர்ந்த இளையோர், அரபு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஆகியோரைக் கொண்டிருந்த இந்தப் புகழ்பெற்ற இசைக்குழு Beethoven அவர்களின் இரண்டு இசைத் தொகுப்புக்களை மிக நேர்த்தியாக முழங்கியது.
இந்த இசைக் குழுவில் இசைக்கருவிகளை முழக்கிய யூதர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், நல்லிணக்க ஒலியை மட்டும் உருவாக்கவில்லை, மாறாக, ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதால் ஏற்படும் நல்லிணக்கத்தை தங்களது ஆன்மாக்களில் மீட்டினார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த இசைக்கச்சேரி நம்பிக்கையின் அடையாளமாகவும், ஆழமான ஆன்மீகச் சக்தியைக் கொண்டதாகவும் இருந்தது என்ற அருள்தந்தை லொம்பார்தி, வருகிற செப்டம்பரில் லெபனனுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தைக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.  

6. ஆப்ரிக்காவில் பொதுநிலையினர் மாநாடு

ஜூலை14,2012. நீங்கள் உலகின் உப்பு.... நீங்கள் உலகின் ஒளி என்ற தலைப்பில் Cameroon நாட்டு Yaoundeல் திருப்பீட பொதுநிலையினர் அவை வருகிற செப்டம்பர் 4 முதல் 9 வரை மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் பொதுநிலை விசுவாசிகளுக்கென மாநாடுகளை நடத்திவரும் இந்தத் திருப்பீட அவை, ஆப்ரிக்கக் கண்டத்தில் இவ்வாண்டில் நடத்தவுள்ளது.
2009ம் ஆண்டில் காமரூன் நாட்டுக்கும், 2011ம் ஆண்டில் பெனின் நாட்டுக்கும் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொண்டதையொட்டி இந்த மாநாடு ஆப்ரிக்காவில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7. ஐரோப்பாவில் 2 கோடியே 20 இலட்சம் பேர் வேலைகளை இழக்கக்கூடும் : ILO நிறுவனம் எச்சரிக்கை

ஜூலை14,2012. யூரோ பணம் புழக்கத்திலுள்ள 17 ஐரோப்பிய நாடுகளில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய 2 கோடியே 20 இலட்சம் பேர் வேலைகளை இழக்கக்கூடும் என்று ILO என்ற உலக தொழில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்நாடுகளில் எடுக்கப்பட்டுவரும் சிக்கன நடவடிக்கைகள் எல்லா மட்டங்களிலும் சரியாகப் பலனளிக்கவில்லை என்று ILO நிறுவனத்தில் பேசிய மூத்த பொருளாதார நிபுணர் Steven Tobin, இந்நடவடிக்கைகள் வளர்ச்சியை ஊக்குவிக்கவில்லை, அத்துடன் வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கவில்லை என்று குறை கூறினார்.
இந்தச் சிக்கன நடவடிக்கைகளால் அடுத்த நான்கு ஆண்டுகளில் மேலும் 45 வேலைகள் இல்லாமல் போகும், இதனால் ஏறக்குறைய 2 கோடியே 20 இலட்சம் பேர் வேலைகளை இழக்கக்கூடும் என்று ILO நிறுவனம் கூறியுள்ளது.

8. சூரிய ஆற்றலின் தொடர் கவனிப்பு அவசியம்:நாசா அறிவியலாளர்

ஜூலை14,2012. "சூரிய ஆற்றல், இயக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து, தொடர்ந்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்வதால், மனிதர்களுக்கு தீமை ஏற்படும் சூழல் உருவாகிறது'' என, நாசா அறிவியலாளர் Madhulika Guhathakurta பேசினார்.
கோயம்புத்தூர் கதிர் பொறியியல் கல்லூரியில், "Living with Stars” எனும் தலைப்பில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற கருத்தரங்கில், சூரியக் கோள் பற்றி ஒலி-ஒளிப் படங்கள் மூலம் விளக்கி உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் Madhulika.
விண்வெளியில் சூரியக் கோள், ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. சூரியனின் வெளிப்புறம், 5,000 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பநிலை உடையது. கோளவடிவமான, திடப்பொருள் இல்லாத் தோற்றம் கொண்ட சூரியனில், ஆற்றல் உருவாகும்போது, ஒளி வெளியிடப்படுகிறது. தற்போது, டெலிஸ்கோப் மூலம் பார்க்கும் போது, சூரியனிலுள்ள புள்ளிகள் தெரிகின்றன. இவை, வெகு சாமர்த்தியமாகவும், வலிமையும் கொண்ட காந்த சக்தியுடன் திகழ்கிறது என்றும் மதுலிகா கூறினார்.
சூரிய ஆற்றலில் ஏற்படும் மாற்றங்களால், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப நிகழ்வுகள் முடக்கம், மனிதர்களுக்கு தீமைகள் ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு நிலைகள் உருவாகின்றன என்றும் Madhulika கூறினார்.
வானிலை மாற்றங்கள் என்பது, சூரியக் காற்றின் தன்மையை பொருத்தது. வானிலை மாற்றங்கள் காரணமாக, விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் தாமதம், தோல்வி, விமானங்களின் தகவல் தொடர்பு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பொருளாதார ரீதியாக, பல கோடி ரூபாய்களை இழந்துள்ளோம். சூரியக் காற்று, சூரியனிலுள்ள புள்ளிகள், அங்கு ஏற்படும் தட்பவெட்ப நிலைகள் ஆகியவற்றை, கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்றார் Madhulika.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...