1. “நொபெல் இறையியல் விருது”
2. இந்தியாவில் சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களை நிறுத்துவதற்கு டெல்லி உயர்மறைமாவட்டம் பெண் தலைவர்களுக்குப் பயிற்சி
3. புனித பத்தாம் பத்திநாதர் சகோதரத்துவ அமைப்பின் அறிக்கை குறித்த திருப்பீடத்தின் கருத்து
4. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணத்துக்கு மத்திய கிழக்கில் தயாரிப்பு
5. ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது அமைதியை ஊக்குவிக்க இளையோர்க்கு அழைப்பு
6. அல்பேனியாவில் இசுலாமின் கண்டிப்பான வழிமுறைகள் பரப்பப்பட்டு வருவது பதட்டநிலையை உருவாக்குகின்றது –கத்தோலிக்கத் தலைவர் ஒருவர் கவலை
7. உலகில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 6 கோடியே 20 இலட்சமாக அதிகரிப்பு
8. நிலவில் மனிதர் கால் பதித்த 43ம் ஆண்டு நினைவு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. “நொபெல் இறையியல் விருது”
ஜூலை,20,2012. இறையியலுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே தொடர்பை உருவாக்குவதற்கு அயராது உழைப்பவர்க்கென வழங்கப்படும் “இராட்சிங்கர் விருதை”, வருகிற அக்டோபர் 20ம் தேதியன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற
அக்டோபர் 7ம் தேதி முதல் 28ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும்
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள்
மாமன்றத்தின்போது இவ்விருது திருத்தந்தையால் வழங்கப்படும்.
“நொபெல் இறையியல் விருது” என அழைக்கப்படும் இவ்விருது, “ஜோசப் இராட்சிங்கர் – 16ம் பெனடிக்ட்” என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. திருத்தந்தையோடு ஆழமான ஒன்றிப்புணர்வு கொண்டு, உண்மையின் மேன்மையை உலகுக்கு அறிவிப்பதற்குப கடின முயற்சிகள் எடுப்பவர்களுக்கு இந்நிறுவனத் தலைவர் பேரருட்திரு Giuseppe Antonio Scotti இவ்விருது நாளில் நன்றி சொல்வார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
நூல்களை
வெளியிடுவதிலும் அறிவியல் ஆய்வுகளிலும் சிறப்பாகப் பங்காற்றி வரும்
வல்லுனர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இது 87 ஆயிரம் டாலர் ரொக்கப்
பரிசைக் கொண்டது. இவ்விருது கடந்த ஆண்டில் முதன்முறையாக வழங்கப்பட்டது.
2. இந்தியாவில் சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களை நிறுத்துவதற்கு டெல்லி உயர்மறைமாவட்டம் பெண் தலைவர்களுக்குப் பயிற்சி
ஜூலை,20,2012.
இந்தியாவில் சிறார்க்கு எதிராக இடம் பெறும் உரிமை மீறல்களைத் தடுத்து
நிறுத்தும் நோக்கத்தில் டெல்லி உயர்மறைமாவட்டம் பெண் தலைவர்களைத் தயாரித்து
வருகிறது.
இந்தியாவின்
பல மாநிலங்களிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிறார்க்கெதிரான உரிமை
மீறல்கள் குறித்து டெல்லி உயர்மறைமாவட்ட பெண் தலைவர்களுக்கு விழிப்புணர்வு
கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதைத் தாங்கள் உணருவதாக, அவ்வுயர்மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி ஆணைய ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Ann Moyalan கூறினார்.
டெல்லி உயர்மறைமாவட்ட பெண்கள் ஆணையம் மற்றும் கத்தோலிக்கப் பெண்கள் அவையுடன் இணைந்து இவ்வாணையம் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
டெல்லியில் உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் சிறார்க்கு உதவுவதற்கென “1098” என்ற தொலைபேசி வசதியை டெல்லி அரசு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3. புனித பத்தாம் பத்திநாதர் சகோதரத்துவ அமைப்பின் அறிக்கை குறித்த திருப்பீடத்தின் கருத்து
ஜூலை,20,2012. புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவ சகோதரத்துவ அமைப்பு, திருஅவை சட்டப்படி, திருப்பீடத்துடன் ஒன்று சேருவது குறித்த அந்த அமைப்பின் பொதுப்பேரவையின் அறிக்கை, முதலில்
அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் கலந்தாய்வுக்கும்
விவாதங்களுக்கும் விடப்பட்டுள்ள அறிக்கை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு
சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவித்த அருள்தந்தை லொம்பார்தி, “Ecclesia Dei” என்ற
திருப்பீட அவையுடன் உரையாடல் நடத்துவதற்கு இந்த அமைப்பு
அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிப்பதற்காகத் திருப்பீடம் காத்திருக்கின்றது
என்றும் கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தீர்மானங்களையடுத்து திருஅவையில் ஏற்பட்ட மாற்றங்களை ஏற்காமல் 1970ம் ஆண்டு ப்ரெஞ்ச் பேராயர் Marcel Lefebvre என்பவரால் இந்தப் புனித 10ம் பத்திநாதர் குருக்கள் சகோதரத்துவ அமைப்பு உருவாக்கப்பட்டது.
4. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணத்துக்கு மத்திய கிழக்கில் தயாரிப்பு
ஜூலை,20,2012.
வருகிற செப்டம்பர் 14ம் தேதியன்று லெபனன் நாட்டுக்குத் திருத்தந்தை
திருப்பயணம் மேற்கொள்வதற்குத் தயாரிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள
கிறிஸ்தவர்கள் தொடர் செபத்தில் ஈடுபடவுள்ளனர் என்று இத்திருப்பயண
ஒருங்கிணைப்பாளர் அருட்பணி Marwan Tabet அறிவித்தார்.
திருத்தந்தையின் இத்திருப்பயணத் தயாரிப்பு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த இவர், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் இத்திருப்பயணத்தை மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் பதட்டநிலைகள், போர்கள், சிலசமயங்களில்
சமய அடக்குமுறைகள் போன்றவற்றால் நாடுகளைவிட்டு வெளியேறுவதற்குச்
சோதிக்கப்படும் இளையோரும் திருத்தந்தையின் உரையைக் கேட்பதற்காகக்
காத்திருக்கிறார்கள் என்று அருட்பணி Tabet கூறினார்.
வருகிற ஆகஸ்டிலிருந்து செப்டம்பர் 14 வரை மாரத்தான் தொடர் செபங்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
மத்திய
கிழக்குத் திருஅவைகளுக்கென 2010ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு
ஆயர் மாமன்றத் தீர்மானங்கள் கொண்ட அப்போஸ்தலிக்க ஏட்டை வெளியிடுவதற்காக
லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட்.
5. ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது அமைதியை ஊக்குவிக்க இளையோர்க்கு அழைப்பு
ஜூலை,20,2012.
இலண்டன் மாநகரில் இம்மாதம் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை
இடம்பெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது அமைதியை ஊக்குவிக்குமாறு CAFOD பிறரன்பு அமைப்பு இளையோர்க்கு அழைப்பு விடுத்துள்ளது.
விளையாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு உதவியாக 100 நாள் போர் நிறுத்த அமைதி நடவடிக்கையை ஊக்குவித்து வரும் CAFOD அமைப்பு, 2012ம்
ஆண்டில் உலகில் அமைதியில் வாழாத அனைத்துப் பகுதிகளுக்கும் அமைதி குறித்த
ஒலி-ஒளிப் படங்கள் மற்றும் செய்திகளை வலைத்தளத்தில் பதிவு செய்யுமாறு
இளையோருக்கு விண்ணப்பித்துள்ளது.
அமைதி மற்றும் ஒப்புரவுப் பணிக்காக விளையாட்டைப் பயன்படுத்தும் உகாண்டா, கொலம்பியா, ருவாண்டா, பிரிட்டன் பிலிப்பீன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளில் இவ்வமைப்பு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.
CAFOD அமைப்பின் இந்த வலைத்தள நடவடிக்கையில் இதுவரை 500க்கும் அதிகமான இளையோர் பங்கெடுத்துள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டின் எரியும் சுடரை அருள்சகோதரி Mary-Joy Langdon இம்மாதம் 24ம் தேதி Kingston லிருந்து எடுத்துச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தீயணைப்புப்படைப் பிரிவில் 1976ம் ஆண்டில் முதல் முதலாகச் சேர்ந்த பெண் என்ற பெருமையைப் பெறுபவர் அருள்சகோதரி Mary-Joy Langdon. இவர் 1984ம் ஆண்டில் குழந்தை இயேசு சகோதரிகள் சபையில் சேர்ந்தார்.
6. அல்பேனியாவில் இசுலாமின் கண்டிப்பான வழிமுறைகள் பரப்பப்பட்டு வருவது பதட்டநிலையை உருவாக்குகின்றது –கத்தோலிக்கத் தலைவர் ஒருவர் கவலை
ஜூலை,20,2012. அல்பேனியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் இசுலாம் மத வழிமுறைகளிலிருந்து வேறுபட்ட முறையை மற்ற நாடுகள் பரப்பி வருவது, அல்பேனியாவில்
வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மத்தியில் பதட்டநிலைகள்
உருவாகக் காரணமாகியுள்ளன என்று கத்தோலிக்கப் பிறரன்புப் பணியாளர் Peter Rettig குறை கூறினார்.
துருக்கி
மற்றும் சவுதி அரேபியாவில் பயிற்சி பெற்ற இளம் இசுலாம் குருக்கள்
அல்பேனியாவில் இசுலாமியப் பள்ளிகள் கட்டப்படுவதைத் தீவிரமாக ஊக்குவித்து
வருவதாகவும், இது பொதுமக்கள் மத்தியில் பதட்டநிலைகளை உருவாக்குவதாகவும் Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் தென்கிழக்கு ஐரோப்பா பிரிவின் தலைவர் Rettig கூறினார்.
அல்பேனியாவின் மற்ற பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்ட Rettig, அந்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஊழல், சொத்துரிமை பிரச்சனைகள் போன்றவை அந்நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று கூறினார்.
அல்பேனியாவின்
சுமார் 32 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் சுன்னி இசுலாம்
பிரிவைச் சேர்ந்தவர்கள். 8 விழுக்காட்டினர் இசுலாமிய சூஃபிசம் போன்ற Bektashi மதத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் சுமார் 20 விழுக்காடும், கத்தோலிக்கர் 10 விழுக்காடும் உள்ளனர்.
7. உலகில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 6 கோடியே 20 இலட்சமாக அதிகரிப்பு
ஜூலை,20,2012. உணவுப் பாதுகாப்பின்மை, உள்நாட்டுச் சண்டைகள், இயற்கைப்
பேரிடர்கள் போன்ற காரணங்களால் உலகில் தற்போது ஏறக்குறைய 6 கோடியே 20
இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. அதிகாரி ஒருவர்
கூறினார்.
இவ்வாண்டின்
முதல் பாதிப் பகுதியில் இருபது நாடுகளில் அவசர உதவிகள் தேவைப்படும்
மக்களைக் காண முடிந்ததாகத் தெரிவித்தார் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்கள்
மற்றும் அவசரகால நிவாரண உதவி அமைப்பின் நேரடிப் பொதுச் செயலர் Valerie Amos.
உதவிகள்
தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் பாதிப் பகுதியில் 5
கோடியே 10 இலட்சத்திலிருந்து 6 கோடியே 20 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும்
ஆமோஸ் தெரிவித்தார்.
சாட், மாலி, மவ்ரித்தானியா, நைஜர், சூடானின் ஒரு பகுதி உள்ளிட்ட ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதி, காமரூன், நைஜீரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் மக்களில் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகள் குறித்தும் அவர் விளக்கினார்.
ஏமன் நாட்டில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 60 விழுக்காட்டுச் சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகவும், ஆப்கானிஸ்தானில்
இவ்வாண்டில் இதுவரை ஏற்பட்டுள்ள சுமார் 300 இயற்கைப் பேரிடர்களால் 2
இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.அதிகாரி
ஆமோஸ் தெரிவித்தார்.
8. நிலவில் மனிதர் கால் பதித்த 43ம் ஆண்டு நினைவு
ஜூலை,20,2012. 43 ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக நிலவில் மனிதர் காலடி பதித்த நாள் இவ்வெள்ளியன்று உலகில் நினைவுகூரப்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு புளோரிடா மாநிலத்திலிருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி Apollo 11 என்ற விண்கலம் நிலவுக்குப் பயணமானது. அதில் Neil Armstrong, Buzz Aldrin, Michael Collins ஆகிய 3 விண்வெளி வீரர்கள் பயணித்தனர். அவ்வாண்டு ஜூலை 20ம் தேதி இரவு 8.17 மணிக்கு மனிதர் நிலவில் காலடி வைத்தனர்.
விண்கலத்தில் பயணம் செய்த வீரர்களில் Neil Armstrong, விண்கலத்திலிருந்து இறங்கி நிலவில் முதலில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசியக் கொடியையும் நிலவில் பறக்கவிட்டு, நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையையும் படைத்தார்.
No comments:
Post a Comment