Thursday 26 July 2012

Catholic News in Tamil - 17/07/12

1. கார்மேல் துறவு சபை சீர்திருத்தம் அடைந்த 450ம் ஆண்டு நிறைவு குறித்த திருத்தந்தையின் சிந்தனைகள்

2. 2013ம் ஆண்டின் உலக அமைதி நாள் கருப்பொருள் : “அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்

3. புனிதபூமிக்கானத் திருப்பீடத் தூதர் : திருத்தந்தை வெளியிடவிருக்கும் அப்போஸ்தலிக்க ஏடு, அரசியல்ரீதியான திட்டத்தைக் கொண்டிருக்காது

4. சிரியா : Mussalahaவின் அமைதி முயற்சிகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆதரவு

5. பேராயர் மச்சாடோ : இந்தியாவுக்கும் விசுவாச ஆண்டு அவசியம்

6. போலந்து கத்தோலிக்கத் தலைவர்களும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தலைவரும் இவ்விரு நாடுகளுக்கிடையே ஒப்புரவை ஏற்படுத்த முயற்சி

7. சிலுவைப்போர் காலத் தங்க நாணயங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

8. பாகிஸ்தானில் தலிபான்களின் அச்சுறுத்தலால் சுமார் 2 இலடசத்து 50 ஆயிரம் சிறார் போலியோ தடுப்பூசிகளைப் பெற மாட்டார்கள்

9. ஆப்ரிக்க ஒன்றியத்தில் முதன்முறையாக பெண் தலைவர்

------------------------------------------------------------------------------------------------------
1. கார்மேல் துறவு சபை சீர்திருத்தம் அடைந்த 450ம் ஆண்டு நிறைவு குறித்த திருத்தந்தையின் சிந்தனைகள்  

ஜூலை 17,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியைத் தொடங்குவதற்குத் தற்போது திருஅவையில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு 16ம் நூற்றாண்டு புனித அவிலா தெரேசா எடுத்துக்காட்டாய் இருக்கின்றார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆன்மீக விழுமியங்களில் பின்னடைவு காணப்பட்ட அன்றைய உலகில் புனித அவிலா தெரேசா செய்த சீர்திருத்தத்தின் இலக்கும், அவர் புதிய துறவு மடங்களை உருவாக்கியதும்  செபத்தோடு அப்போஸ்தலப் பணியைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தன என்றும் திருத்தந்தை கூறினார்.
இஸ்பெயின் நாட்டு புனித அவிலா தெரேசா கார்மேல் சபையில் செய்த சீர்திருத்தத்தின் தொடக்கத்தைக் குறித்து நிற்கும் அவிலா நகர் புனித வளன் துறவு இல்லம் ஆரம்பக்கப்பட்டதன் 450ம் ஆண்டு நிறைவையொட்டி அவிலா ஆயர் Jesus Garcia Burillo வுக்குக் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
16ம் நூற்றாண்டைப் போலவே இன்றும் தீவிர மாற்றங்களுக்கு மத்தியிலும் அப்போஸ்தலத்துவப் பணிக்குச் செபமே முக்கியம் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும், இதன்மூலம் இயேசு கிறிஸ்துவின் மீட்பளிக்கும் செய்தி தெளிவாகவும் செயல்திறத்துடனும் ஒலிக்கும் என்றும் திருத்தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


2. 2013ம் ஆண்டின் உலக அமைதி நாள் கருப்பொருள் : “அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்

ஜூலை 17,2012. சமய சுதந்திரத்துக்கும் மற்றும்பிற அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், உலகளாவிய நிதி நெருக்கடி, அரசியலிலும் கல்வியிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஆகியவை, உலகில் மக்களாட்சி நெருக்கடியில் இருப்பதன் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீடம் அறிவித்தது.
2013ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று சிறப்பிக்கப்படும் 46வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருளை நிருபர் கூட்டத்தில் இத்திங்களன்று வெளியிட்ட திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை இவ்வாறு கூறியது.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என்ற இந்தக் கருப்பொருள் குறித்த சிந்தனைகளை வழங்கிய அவ்வவை, இன்றைய உலகில் பல நாடுகளைப் பாதித்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில், அறநெறி குறித்த சிந்தனைகளைத் திருத்தந்தை தனது செய்தியில் உலக சமுதாயத்துக்கு வழங்குவார் என்றும் தெரிவித்தது.
அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் வெளியிட்ட அவனியில் அமைதி” (Pacem in Terris) என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டை குறிக்கும் விதமாக, 46வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிடவிருக்கும் செய்தி அமையும் என்றும் அவ்வவை கூறியது.
46வது உலக அமைதி நாளுக்கானத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செய்தி வருகிற டிசம்பரில் வெளியாகும்.


3. புனிதபூமிக்கானத் திருப்பீடத் தூதர் : திருத்தந்தை வெளியிடவிருக்கும் அப்போஸ்தலிக்க ஏடு, அரசியல்ரீதியான திட்டத்தைக் கொண்டிருக்காது

ஜூலை17,2012. மத்திய கிழக்கு நாடுகளின் திருஅவைகளுக்கென வருகிற செப்டம்பரில் திருத்தந்தை வெளியிடவிருக்கும் அப்போஸ்தலிக்க ஏடு, அப்பகுதியின் மோதல்களுக்குத் தீர்வுகளை வழங்கும் அரசியல்ரீதியான திட்டத்தைக் கொண்டிருக்காது என்பதை நினைவுபடுத்தியுள்ளார் பேராயர் Antonio Franco.
இம்மாதத்தில் பணி ஓய்வு பெறும் புனிதபூமிக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Franco, Aid to the Church in Need என்ற ஜெர்மன் பிறரன்பு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு அக்டோபரில் மத்திய கிழக்கு நாடுகள் குறித்து வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர் மாமன்றத் தீர்மானத் தொகுப்பை வருகிற செப்டம்பரில் திருத்தந்தை லெபனன் நாட்டுக்கு மேற்கொள்ளும் திருப்பயணத்தில் வெளியிடுவார்.
இத்தீர்மானத் தொகுப்பு குறித்துப் பேசிய பேராயர் Franco, இந்த அப்போஸ்தலிக்க ஏடு குறித்த உண்மையான கூறை மக்கள் எதிர்நோக்குமாறு கேட்டுக் கொண்டார்.


4. சிரியா : Mussalahaவின் அமைதி முயற்சிகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆதரவு

ஜூலை 17,2012. சிரியாவில் போரிட்டுவரும் தரப்புக்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்துவதற்கு Mussalaha என்ற பல்சமய அமைப்பு எடுத்துவரும் முயற்சிகளுக்கு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை தனது ஆதரவை வழங்குவதாக Aleppo அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் Giuseppe Nazzaro கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது பாதையாக உருவாகியுள்ள Mussalaha பல்சமய அமைப்பு, அந்நாட்டில் பல்வேறு அரசியல், சமூக மற்றும் சமயக் குழுக்கள் மத்தியில் உரையாடல் நடத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் ஆயர் கூறினார்.
மனித வாழ்வு கடவுளின் கொடை, எனவே எந்தக் கடும் மோதல்களிலும், வாழ்வு, கடவுள் தனக்குக் கொடுத்திருக்கும் கொடையெனக் கருதி, எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அனைவரும் அதை மதித்து வாழ வேண்டும் எனவும் ஆயர்  Nazzaro கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, சிரியாவின் பிரச்சனை குறித்து ஐ.நா.பிரதிநிதி கோஃபி ஆனன், இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin ஐச் சந்திப்பதற்குத் தயாரித்து வரும்வேளை, தமாஸ்கஸ் மற்றும் பிற நகரங்களில் கடும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.


5. பேராயர் மச்சாடோ : இந்தியாவுக்கும் விசுவாச ஆண்டு அவசியம்

ஜூலை 17,2012. விசுவாச ஆண்டு குறித்த "Porta Fidei" என்ற திருத்தந்தையின் அப்போஸ்தலிக்கக் கடிதம், இந்தியச் சூழலிடம் நேரிடையாகப் பேசுவதாக இருக்கின்றது என்று நாசிக் ஆயர் பேராயர் Felix Machado கூறினார்.
இந்தியாவில் பரவலாக விசுவாசம் குறைவுபடுவதைக் காண முடிகின்றது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் உரைத்த பேராயர் மச்சாடோ, விசுவாசம் குன்றியுள்ள சூழலுக்கு விசுவாச ஆண்டு ஒரு கொடையாகவும், பல்சமய உரையாடலுக்கு இவ்வாண்டு உந்துதலாகவும் இருக்கின்றது எனவும் கூறினார்.
விசுவாச ஆண்டைச் சிறப்பிப்பது குறித்துப் பேசிய பேராயர், தனது நாசிக் மறைமாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் விசுவாச அறிக்கையும், "Porta Fidei" என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அப்போஸ்தலிக்கக் கடிதமும் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் ஒளியைப் பின்பற்றி நமது விசுவாச விளக்கை ஏற்றுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் பேராயர் கூறினார்.


6. போலந்து கத்தோலிக்கத் தலைவர்களும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தலைவரும் இவ்விரு நாடுகளுக்கிடையே ஒப்புரவை ஏற்படுத்த முயற்சி

ஜூலை 17,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill வருகிற ஆகஸ்டில் போலந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது இரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையே ஒப்புரவை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என  போலந்து கத்தோலிக்கத் தலைவர்கள் கூறினர்.
இரஷ்யாவும் போலந்தும் தங்களது கடந்தகாலப் பகையுணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளி ஒருவர் ஒருவரின் தவறுகளை மன்னிக்குமாறு அழைப்புவிடுக்கும் பொது அறிக்கையில் அச்சமயத்தில் முதுபெரும் தலைவர் Kirillம், போலந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jozef Michalikம் கையெழுத்திடுவார்கள் என்று இத்திங்களன்று போலந்து கத்தோலிக்கத் திருஅவை கூறியது.
1940ம் ஆண்டில் இரஷ்யாவின் Katynல் ஸ்டாலினின் அனுமதியின் பேரில் ஆயிரக்கணக்கான போலந்து இராணுவ அதிகாரிகளும் குடிமக்களும் படுகொலை செய்யப்பட்ட  இடத்தில் உயிர்ப்பு என்ற பெயரில் ஆலயத்தை எழுப்பி அதனை இஞ்ஞாயிறன்று திருநிலைப்படுத்தினார் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill.
அச்சயம் அவர் உரையாற்றிய போது,  இந்தப் படுகொலைகள் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும், இரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையே ஒப்புரவு இடம்பெறுமாறும் அழைப்பு விடுத்தார்.


7. சிலுவைப்போர் காலத் தங்க நாணயங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

ஜூலை 17,2012. புனிதபூமியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே சண்டைகள் இடம்பெற்ற காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டத் தங்க நாணயங்களை இஸ்ரேல் புதைபொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது ஓர் அசாதரணக் கண்டுபிடிப்பு என்றும், சிலுவைப்போர் காலத்துத் தங்க நாணயங்கள் தங்களிடம் அதிகம் இல்லையென்றும் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய Tel Aviv பல்கலைக்கழகப் பேராசிரியர் Oren Tal கூறினார்.
Tel Aviv வுக்கு சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இடத்தில் 108 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், இஸ்ரேலில் இவ்வளவு பெரிய அளவு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், அப்பேராசிரியர் தெரிவித்தார். 
12ம் நூற்றாண்டில் Richard the Lionheart என்பவர் Arsuf நகரில் Saladinஐ வென்றார். எனினும், 1265ம் ஆண்டில் முஸ்லீம் இராணுவம் மீண்டும் திரும்பி வந்து அந்நகரை 40 நாள்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.


8. பாகிஸ்தானில் தலிபான்களின் அச்சுறுத்தலால் சுமார் 2 இலடசத்து 50 ஆயிரம் சிறார் போலியோ தடுப்பூசிகளைப் பெற மாட்டார்கள்

ஜூலை 17,2012.  பாகிஸ்தானில் பழங்குடியினர் வாழும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் தலிபான் குழுக்களின் அச்சுறுத்தலால் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் சிறார் போலியோ தடுப்பூசிகளைப் பெற மாட்டார்கள் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலிபான் குழுக்கள் நலவாழ்வுத் திட்டங்கள் நடைபெறுவதற்குத் தடங்கலாய் இருந்து வருகின்றன என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.
உலகில் போலியோ நோய்ப் பரவி வரும் மூன்று நாடுகளுள் பாகிஸ்தானும் ஒன்று. 2011ம் ஆண்டில் சுமார் 200 சிறார் போலியோவால் தாக்கப்பட்டனர்.


9. ஆப்ரிக்க ஒன்றியத்தில் முதன்முறையாக பெண் தலைவர்

ஜூலை 17,2012. AU என்ற ஆப்ரிக்க ஒன்றியத்தில் முதன்முறையாக பெண் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் Jacob Zumaவின் முன்னாள் மனைவியான Nkosazana Dlamini-Zuma, 2008ம் ஆண்டிலிருந்து ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவராக இருக்கும் காபோன் நாட்டு Jean Ping என்பவரைத் தோற்கடித்து தலைவராகியுள்ளார்.
Dlamini-Zuma, இத்தலைவர் பதவிக்கு வந்துள்ள முதல் பெண் என்பது தவிர, தென்னாப்ரிக்காவிலிருந்து இப்பதவிக்கு வந்துள்ள முதல் நபரும் ஆவார். தென்னாப்ரிக்காவில் நெல்சன் மண்டேலா அமைச்சரவையில் நலவாழ்வு அமைச்சராகவும் பணியாற்றிய இவர் ஒரு மருத்துவர் மற்றும் அரசியல் தூதர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...