Thursday, 26 July 2012

Catholic News in Tamil - 12/07/12


1. புனித பெனடிக்ட் திருநாளையொட்டி, திருத்தந்தைக்கென சிறப்பான இசை நிகழ்ச்சி

2. உரையாடல்கள் மூலம் தீர்வுகளைக் காண பெரு நாட்டின் கர்தினால் அழைப்பு

3. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை நடத்திய மாற்றுத் திறனாளிகள் தேசிய நாள்

4. வறுமையில் வாடும் குடும்பங்களுக்குக் கிடைக்கும் தினசரி ஊதியத்தை அதிகரிப்பதில் திருஅவை வழிகாட்ட வேண்டும்

5. குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.8 விழுக்காடு அளவு உயரவேண்டும் தென்கொரிய அரசு

6. பிரம்மபுத்ராவில் மிதக்கும் மருத்துவமனைகள்

7. மியான்மர் மீதான அமெரிக்கத் தடைகள் 15 ஆண்டுகளுக்குப் பின் நீக்கம்

8. ஒலிம்பிக் போட்டிகள் - Dow Chemicals ஆதரவுக்கு இலண்டன் மாநகர அவை கண்டனம்

------------------------------------------------------------------------------------------------------
1. புனித பெனடிக்ட் திருநாளையொட்டி, திருத்தந்தைக்கென சிறப்பான இசை நிகழ்ச்சி

ஜூலை,12,2012 ஓர் இசைக் குழுவில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களோடு இணைந்து ஒருமித்த இசையை உருவாக்குவதுபோல், மக்களும் ஒருவருக்கொருவர் செவிமடுத்து செயல்பட்டால் உலக அமைதியை உருவாக்க முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஜூலை 11, இப்புதனன்று கொண்டாடப்பட்ட புனித பெனடிக்ட் திருநாளையொட்டி, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காச்தல் கொந்தோல்போவில் ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சி திருத்தந்தைக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitanoவும் சென்றிருந்தார்.
இவ்விசை நிகழ்ச்சியின்போது திருத்தந்தை வழங்கிய உரையில், இசைக் குழுவினர் மத்தியில் நிலவும் ஒருமைப்பாட்டையும், ஒருவரை ஒருவர் மதிக்கும் பாங்கையும் திருத்தந்தை பாராட்டினார்.
மேற்கத்திய-கிழக்கித்திய திவான் இசைக்குழு (West-Eastern Divan Orchestra) என்ற இவ்விசைக்குழுவில் இஸ்ரேல், பாலஸ்தீனம், மற்றும் ஏனைய அரபு நாடுகளின் இளையோர் பங்கேற்றனர். இவர்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வோர் இசைக் குழுவிலும் பல்வேறு இசைக் கருவிகள் வாசிக்கப்படுகின்றது, பல குரல்கள் ஒலிக்கின்றன, எனினும் இவை அனைத்தும் இணைந்து உருவாக்கும் இசை, கலைநயம் மிக்கதாய் மனதை மேலே எழுப்புகிறது என்று கூறியத் திருத்தந்தை, இசைக்கருவிகளும், குரல்களும் இணைந்து வருவது தானாய், எதேச்சையாய் உருவாவதில்லை, மாறாக, பலரது நீடித்த முயற்சியினால் உருவாகிறது என்று எடுத்துரைத்தார்.
மதம், நாடு என்ற பிரிவுகளைக் கடந்து, இசை நம்மை இணைக்க உதவுவதுபோல், உரையாடல்களும் நம்மிடையே உள்ள வேறுபாடுகளை நீக்கி நம்மை ஒருங்கிணைக்க முடியும் என்று திருத்தந்தை கூறினார்.


2. உரையாடல்கள் மூலம் தீர்வுகளைக் காண பெரு நாட்டின் கர்தினால் அழைப்பு

ஜூலை,12,2012 பெரு நாட்டின் நலனை மனதில் கொண்டு மோதல்களை விடுத்து, உரையாடல்கள் மூலம் தீர்வுகளைக் காணவேண்டும் என்று Lima உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Juan Luis Cipriani அழைப்பு விடுத்துள்ளார்.
பெரு நாட்டின் Cajamarca பகுதியில், நாட்டிலேயே மிகப் பெரிதெனக் கருதப்படும் Conga என்ற தங்கம் மற்றும் வெண்கலச் சுரங்கம் தோண்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அப்பகுதி மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஜூன் மாத இறுதியில் ஆரம்பித்த இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளனர், மற்றும் 20க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைகளை நடத்த அந்நாட்டுப் பேராயர் Miguel Cabrejos அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுப் பேசிய கர்தினால் Cipriani, கடந்த சில வாரங்களாக பெரு நாடு சந்தித்துவரும் கடினமான காலத்திற்கு விரைவில் ஒரு தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மனித உயிர்களையும், மனித மாண்பையும் முன்னிறுத்தி மக்களாட்சி அமைவதையே திருஅவை ஆதரித்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் Cipriani, கருத்துவேறுபாடுகள் நிலவும்போது உண்மையை அறிவதற்கு அனைவரும் திறந்த மனம் கொண்டிருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


3. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை நடத்திய மாற்றுத் திறனாளிகள் தேசிய நாள்

ஜூலை,12,2012 இலண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கிவரும் வேளையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை, மாற்றுத் திறனாளிகளை மையப்படுத்திய ஒரு கருத்தரங்கையும், தேசிய நாளையும் கடைபிடித்தது.
"கடவுளின் மிக ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் மென்மையான குரலோலியே மாற்றுத் திறனாளிகளின் உடல்" என்று அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறிய வார்த்தைகளுக்கு ஒரு வெளிப்படையான அடையாளமாக திருஅவை கொண்டாடிய இந்த நாள் அமைந்தது என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.
Southwark பேராயர் Peter Smith துவக்கிவைத்த இந்தக் கருத்தரங்கில் 'அனைவருக்கும் இடமுண்டு' என்ற மையக்கருத்தில் விளையாட்டுக்களையும், இறையியலையும் இணைத்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கருணையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை இணைத்துக்கொள்வது என்ற எண்ணம் மட்டுமே இன்றைய காலத்தில் போதாது என்று கூறிய பேராசிரியர் John Swinton, விவிலிய மதிப்பீடுகளின் கண்ணோட்டத்தில், அனைவருக்கும் இவ்வுலகில் இடம் உண்டு என்ற உண்மையை எடுத்துரைக்கவேண்டும் என்று கூறினார்.
வெளித்தோற்றத்தைக் கொண்டு மட்டும் மனிதர்களை மதிப்பிடும் போக்கிற்கு மாற்றாக, கிறிஸ்துவின் பார்வையில் ஒவ்வொரு மனிதரையும் சிறப்பான படைப்பாகக் காணும் ஒரு வாய்ப்பை மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் நமக்குத் தருகின்றன என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் திருஅவையின் அதிகாரி Cristina Gangemi கூறினார்.


4. வறுமையில் வாடும் குடும்பங்களுக்குக் கிடைக்கும் தினசரி ஊதியத்தை அதிகரிப்பதில் திருஅவை வழிகாட்ட வேண்டும்

ஜூலை,12,2012 பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள இக்காலக்கட்டத்தில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குக் கிடைக்கும் தினசரி ஊதியத்தை அதிகரிப்பதில் திருஅவை வழிகாட்ட வேண்டும் என்று கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று இலண்டனில் இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வறுமைக்கு எதிரான திருஅவையின் செயல்பாடுகள் என்று பொருள்படும் Church Action on Poverty என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தினசரி ஊதியம் வறியோரின் குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்க போதுமானது அல்ல என்று இவ்வறிக்கையில் கூறியுள்ளது.
அரசின் குறைந்தபட்ச தின ஊதியத்தை விட அதிகமான ஊதியத்தைத் திருஅவை நிறுவனங்கள் வழங்கி, பிறருக்கு எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும் என்று இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.
குறைத்தபட்ச ஊதியம் என்பதற்குப் பதில், வாழ்வதற்கான ஊதியம் என்ற அளவில் அனைத்து நிறுவனங்களும் தங்கள் எண்ணங்களை மாற்றினால் வறியோரின் பல பிரச்சனைகள் தீரும் என்று Church Action on Poverty அமைப்பின் உறுப்பினர் Alan Thornton கூறினார்.


5. குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.8 விழுக்காடு அளவு உயரவேண்டும் தென்கொரிய அரசு

ஜூலை,12,2012 குழந்தைப்பேறு, குடும்பநலம் என்ற கொள்கைகளைப் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்த தென்கொரிய கத்தோலிக்கத் திருஅவையின் எண்ணங்களை ஆதரித்து அந்நாட்டு அரசு அறிக்கையொன்றை இப்புதனன்று வெளியிட்டது.
ஜூலை 11, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட உலக மக்கள்தொகை நாளையொட்டி, தென்கொரிய நலவாழ்வுத்துறை விடுத்துள்ள ஓர் அறிக்கையில், தங்கள் நாட்டில் இன்னும் அதிகமான குழந்தைகளை மக்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த 1.05 விழுக்காட்டு குழந்தைகள் பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது தென்கொரியா. இந்த நிலை அடுத்த பத்தாண்டுகளில் கூடி, குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.8 விழுக்காடு அளவு உயரவேண்டும் என்று இந்த அரசு அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் இந்தப் பிரச்னையை உணர்ந்திருந்த தென்கொரியத் திருஅவை, குழந்தைப்பேறு, குடும்பநலம் என்ற கொள்கைகளை வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


6. பிரம்மபுத்ராவில் மிதக்கும் மருத்துவமனைகள்

ஜூலை,12,2012 மருந்துகள் வழங்குவதும், சிகிச்சை அளிப்பதும் மட்டும் எங்கள் பணி அல்ல, மாறாக, உடல்நலக் குறைவைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களைக் களையும் வகையில் அவர்களுக்குத் தகுந்த கல்வி புகட்டுவதும் எங்கள் பணி என்று இளம் மருத்துவர் Minhazuddin Ahmed கூறினார்.
ஆசியாவின் பெரும் நதிகளில் ஒன்றான பிரம்மபுத்ராவின் நடுவிலும், அதைச் சுற்றிலும் வாழும் மக்களுக்கு உதவிகள் செய்யும் மருத்துவ மனைகள் படகுகள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை நதியின் வழியே சென்று மக்களுக்குப் பணிகள் புரிந்து வருகின்றன.
படகு மருத்துவமனையில் பணிபுரியும் இளம் மருத்துவர்களான Bedanta Sarma,  Minhazuddin Ahmed என்ர இருவரும் யாராலும் சென்றடைய முடியாத கடினமான பகுதிகளில் மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர்.
ஐ.நா.வின் கல்வி, கலாச்சார அமைப்பான UNICEFம், அஸ்ஸாம் அரசு நலத்துறையும் 2005ம் ஆண்டு முதல் இணைந்து நடத்தும் இந்த முயற்சியால், 13 மாவட்டங்களில் உள்ள 8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் 15 மிதக்கும் மருத்துவமனைகள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இப்பணியால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான வறியோர் பயனடைந்து வருகின்றனர், முக்கியமாக, மழைக் காலங்களில் பிரம்மபுத்ரா வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் வேளையில் இம்மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பது மிக அரிதாகி விடுவதால், இந்த மிதக்கும் மருத்துவமனையை மக்கள் ஒரு பெரும் கொடையாகக் கருதுகின்றனர் என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. மியான்மர் மீதான அமெரிக்கத் தடைகள் 15 ஆண்டுகளுக்குப் பின் நீக்கம்

ஜூலை,12,2012 மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளதற்கு எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi, வரவேற்பு அளித்தார்.
அமெரிக்கா தன்னுடைய தொழிலதிபர்களிடம் இனி மியான்மரில் முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த முடிவு ஒருவாரமாக அமெரிக்காவில் தங்கி பேச்சுவார்த்தை நடத்திவரும் Suu Kyi முயற்சிக்கு கிடைத்த வெற்றி என ஊடகங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் அரசுத்தலைவரும், Suu Kyiம், அந்நாட்டு மக்களும் குடியரசுப் பாதையில் தங்களின் பயணத்தை தொடங்கியுள்ளனர்; அரசும் பல முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது என்று பாராட்டினார்.


8. ஒலிம்பிக் போட்டிகள் - Dow Chemicals ஆதரவுக்கு இலண்டன் மாநகர அவை கண்டனம்

ஜூலை,12,2012 அமெரிக்க நிறுவனமான Dow Chemicalsஐ இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு அதிகாரப்பூர்வ விளம்பரதாரராக நியமித்துள்ள அனைத்துலக ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு, இலண்டன் மாநகர அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்  Dow Chemicals நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதால் ஒலிம்பிக் கூட்டமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஒரு தீர்மானத்துக்கு இலண்டன் மாநகர அவை ஆதரவு தெரிவித்துள்ளது.
Dow Chemicalsன் இந்தியக் கிளையான Union Carbideன் போபால் ஆலையில் 1984ம் ஆண்டு ஏற்பட்ட நச்சுவாயு கசிவில், சுமார் 25,000 பேர் கொல்லப்பட்டனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இக்கொடிய விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டி, இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...