Thursday, 26 July 2012

Catholic News in Tamil - 11/07/12

1. அமராவதி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு Elias Gonsalves

2. உரோம் நகரில் நடைபெற்ற கத்தோலிக்க, இஸ்லாமிய நல்லுறவுக் கூட்டம்

3. அருள்பணி என்ற கொடையை பேணிக் காப்பதில் குருக்கள் தாராள மனதுடன் செயல்படவேண்டும் - கர்தினால் Fernando Filoni

4. சிரியாவில் போரிட்டுவரும் 300 இளையோர் தங்கள் ஆயுதங்களைக் களைவதற்கு முன் வந்துள்ளனர்

5. சிரியாவில் நடைபெறும் போராட்டங்களை ஊடகங்கள் திரித்து, பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன

6. இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதற்கு சென்னையில் எதிர்ப்பு

7. இந்தியாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்கும் பதியத் திட்டத்திற்கு வரவேற்பு

8. ஜூலை 11 - உலக மக்கள்தொகை நாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி

------------------------------------------------------------------------------------------------------

1. அமராவதி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு Elias Gonsalves

ஜூலை11,2012. இந்தியாவின் அமராவதி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, பேரருட்திரு Elias Gonsalves அவர்களை இப்புதனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Vasai மறைமாவட்டத்தின் Chulneல் 1961ம் ஆண்டு பிறந்த இவர், 1983ம் ஆண்டு பம்பாய் உயர்மறைமாவட்டத்தின் Goregaon புனித பயஸ் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1990ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
அமராவதி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்திரு Elias Gonsalves, பம்பாய் உயர்மறைமாவட்டத்தில் பல முக்கிய பணிகளை ஆற்றியபின், 2009ம் ஆண்டு முதல் பம்பாய் உயர்மறைமாவட்டத்தின் சமூகப்பணி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். 
1955ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமராவதி மறைமாவட்டத்தின் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்களில் 5,600க்கு அதிகமானோர் கத்தோலிக்கர்.
அமராவதியின் ஆயராகப் பணியாற்றிய ஆயர் Daniel Lourdes, நாசிக் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து, அமராவதி மறைமாவட்டம், 2010ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதியிலிருந்து ஆயரின்றி இருந்தது.


2. உரோம் நகரில் நடைபெற்ற கத்தோலிக்க, இஸ்லாமிய நல்லுறவுக் கூட்டம்

ஜூலை,11,2012. கத்தோலிக்க, இஸ்லாமிய நல்லுறவுக் கூட்டம் இச்செவ்வாயன்று உரோம் நகரில் நடைபெற்றது. திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, கத்தோலிக்கர்களின் சார்பாகவும், பேராசிரியர் Hamid bin Ahmad Al-Rifaie,  இஸ்லாமியர்களின் சார்பாகவும் இக்கூட்டத்தில் தலைமைப் பொறுப்பேற்றனர்.
1995ம் ஆண்டு முதல் கத்தோலிக்க இஸ்லாமிய உரையாடல் வளர்ந்துவந்துள்ள வரலாறு இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. இன்றைய உலகில் இவ்விரு மதங்களுக்கும் இடையே நிலவும் உறவுகள் பற்றி கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இவ்வமைப்பின் அடுத்த அமர்வு உரோம் நகரில் 2013ம் ஆண்டு நடைபெறும் என்றும், மதம் சாராப் போக்கும், பொருளியலும் மத நம்பிக்கையுள்ளவர்களை எவ்வகையில் பாதிக்கின்றன என்பது அந்த அமர்வில் விவாதிக்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


3. அருள்பணி என்ற கொடையைப் பேணிக் காப்பதில் குருக்கள் தாராள மனதுடன் செயல்படவேண்டும் - கர்தினால் Fernando Filoni

ஜூலை,11,2012. காங்கோ நாட்டில், கத்தோலிக்கர்களின் வாழ்வைப் பேணி வளர்ப்பதுடன், மற்றவர்களின் கலாச்சார, சமுதாயத் தளங்களில் தங்கள் எண்ணங்களை புதிய வழிகளில் விதைக்க குருக்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த வாரம் காங்கோ குடியரசில் பயணம் மேற்கொண்ட திருப்பீட புதிய நற்செய்திப் பணி அவையின் தலைவர் கர்தினால் Fernando Filoni, அந்நாட்டு குருக்களுக்கு அளித்த இறுதி உரையில், படைப்பாற்றல் மிக்க வழிகளில் நற்செய்தியை பரப்பும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
திருஅவையில் உள்ள கத்தோலிக்கர்களின் தரம் அருள் பணியாளர்களின் தரத்தைப் பொறுத்தே இருக்கும் என்று கூறிய கர்தினால் Filoni, எனவே, குருக்கள் வெறும் வாய் வார்த்தைகளால் நற்செய்தியைப் போதிப்பது மட்டும் போதாது என்றும், தங்கள் வாழ்விலும் நற்செய்தியை வாழ்பவர்களாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
அருள்பணி என்பது இறைவன் வழங்கியக் கோடை என்று குருக்களுக்கு நினைவுறுத்திய கர்தினால் Filoni, இக்கொடையைப் பேணிக் காப்பதில் குருக்கள் தாராள மனதுடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


4. சிரியாவில் போரிட்டுவரும் 300 இளையோர் தங்கள் ஆயுதங்களைக் களைவதற்கு முன் வந்துள்ளனர்

ஜூலை,11,2012. சிரியாவின் Homs பகுதியில் போரிட்டுவரும் 300 இளையோர் தங்கள் ஆயுதங்களைக் களைவதற்கு முன் வந்துள்ளனர் என்று Fides செய்தி கூறுகிறது.
சிரியாவில் மக்கள் மத்தியிலிருந்து இயல்பாகவே உருவான ஒப்புரவு என்ற பொருள்படும் "Mussalaha" என்ற அமைப்பின் தொடர்ந்த முயற்சியால் அப்பகுதியில் ஆயுதம் தாங்கி போரிட்டு வரும் போராளிகள் அமைப்பைச் சேர்ந்த இளையோர் இவ்வமைப்பின் ஆதரவுடன் ஆயுதங்களைக் களைய முன்வந்துள்ளனர்.
சிரியாவில் தொடர்ந்துவரும் போராலும், உயிர்ச் சேதங்களாலும், மக்கள் நம்பிக்கை இழந்து வருவதைக் கண்ட அருள்தந்தை Michel Naaman, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களின் தொடர்ந்த முயற்சிகளால் பொதுமக்களின் பிரதிநிதிகள் அடங்கிய Mussalaha அமைப்பு உருவாக்கப்பட்டது.
இராணுவத்துடன் மோதிவரும் போராளிகள் 1000 பேருக்கும் மேல் உள்ள Homs பகுதியில், Mussalaha அமைப்பின் முயற்சிகளால் உந்தப்பட்டு, 300 இளையோர் ஆயுதங்களைக் களைந்துவிட்டு, சிரியாவில் அமைதி நிலவ அரசியல் தீர்வுகளைத் தேடுவதற்கு முன்வந்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. சிரியாவில் நடைபெறும் போராட்டங்களை ஊடகங்கள் திரித்து, பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன

ஜூலை,11,2012. சிரியாவில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஊடகங்கள் அளவுக்கு மீறி திரித்து, பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என்று மத்தியகிழக்குப் பகுதியில் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அருள்தந்தை Andrew Halemba கூறினார்.
Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பின் மத்தியகிழக்கு திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Halemba, சிரியாவைக் குறித்து வெளியாகும் பல செய்திகளில் பிரசுரிக்கப்படும் புகைப்படங்கள் கணணி வழியாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
50 பேர் கலந்துகொள்ளும் ஒரு போராட்டத்தின் புகைப்படத்தை கணணி வழியாக மாற்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதைப்போல் வெளியிடும் Al Jazeera போன்ற செய்தி நிறுவனங்களைக் குறிப்பிட்டு, இத்தகையப் பொய்யான செய்திகள், நாட்டில் அமைதி நிலவ மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பெரும் தடைகளாக உள்ளன என்று எடுத்துரைத்தார்.
ஊடகங்களால் தவறாகத் திரித்து காட்டப்படும் சிரியாவின் உண்மை நிலையை உணர்ந்து செயல்பட வேண்டியது Aid to the Church in Need போன்ற அமைப்புக்களின் பெரும் சவால் என்றும் அருள்தந்தை Halemba கூறினார்.
இக்கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, சிரியாவில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு 130000 யூரோக்கள், அதாவது, 80 இலட்சம் ரூபாய் அளவில் அவசர நிதி உதவிகள் செய்து வருகின்றது.


6. இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதற்கு சென்னையில் எதிர்ப்பு

ஜூலை,11,2012. இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்று கூறி சென்னையில் பல்சமயத் தலைவர்கள் பங்குபெற்ற ஆர்ப்பாட்டம் இச்செவ்வாயன்று இடம்பெற்றது.
இலங்கையில் இஸ்லாமிய, இந்து, கிறுத்துவ மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அழிக்கப்படுவதாகவும் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் எனும் அமைப்பு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம். சின்னப்பா தலைமையேற்றிருந்தார்.
இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபை வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்படுவது ஏற்கனவே திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஐ.நா.அமைப்பு தலையிடவும், அவர்கள் அனைத்துரிமைகளையும் பெற்று வாழும் வகையில் அரசியல் தீர்வு உருவாகவும் இந்தியா பல்வேறு தளங்களில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரினர்.


7. இந்தியாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்கும் பதியத் திட்டத்திற்கு வரவேற்பு

ஜூலை,11,2012. இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு இலவச மருந்துகள் வழங்கும் பதியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பதை மக்கள் நல அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.
27,000 கோடி ரூபாய் மதிப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தால் 6 இலட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் வாழும் மக்களும், 779 நகரங்களில் வாழும் மக்களும் பயன்பெறுவர் என்று மத்திய நலத்துறை செயலர் P.K.Pradhan அறிவித்துள்ளார்.
மத்திய அரசு வழங்கும் இத்திட்டத்தின் பயன்கள் மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கு, கத்தோலிக்க நலவாழ்வு மையங்களை அரசு பயன்படுத்துவது அவசியம் என்று இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகத்தின் தலைவரான அருள்தந்தை Tomi Thomas, UCA செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
இத்திட்டத்தின் மூலம் பெரும் நிறுவனங்களின் பெயர்களைத் தாங்காத பல முக்கிய மருந்து வகைகள் மக்களுக்கு இலவசமாகச் சென்றடைய வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.
அதிக விலையில் மருத்துகளை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தைச் செயலிழக்கச்செய்யும் என்ற எச்சரிக்கையை மக்கள் நல அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன.


8. ஜூலை 11 - உலக மக்கள்தொகை நாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி

ஜூலை,11,2012. குழந்தைப் பேறுகால நலவசதிகள் அனைவருக்கும் சமமாக கிடைப்பதற்கு உலக அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை நாள் என்று ஐ.நா. அறிவித்துள்ளது. 1989ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படும் இந்நாளையொட்டி, இவ்வாண்டுக்கான செய்தியை வெளியிட்ட பான் கி மூன், குழந்தைப் பேறு நலவசதிகள் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை எடுத்துரைத்தார்.
ஐ.நா. அமைப்பு உருவான 1945ம் ஆண்டில் இருந்த உலக மக்கள் தொகை தற்போது மூன்று மடங்கு அதிகமாகி, 700 கோடிக்கும் அதிகமாக உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன், உலகின் செல்வங்கள் சமமான முறையில் பகிரப்படாததே உலகின் முக்கியப் பிரச்சனை என்றும் தன் செய்தியில் கூறியுள்ளார்.
குழந்தைப் பேறுகாலப் பிரச்சனைகளால் உலகெங்கும் 800 பெண்கள் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர் என்று ஐ.நா. குடும்பக் கட்டுப்பாடு அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 180 கோடி இளையோர் வயதுக்கு வந்தவண்ணம் உள்ளனர் என்று கூறும் ஐ.நா. அறிக்கை, பொதுவாக, குடும்ப அமைப்பு குறித்து இளையோருக்கு சரியான தகவல்கள் சென்றடைவதில்லை என்றும் கூறியுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...