1. உலகுசார் துறவு சபைகளின் அனைத்துலக மாநாட்டுக்குத் திருத்தந்தை வாழ்த்து
2. பொறுப்புள்ள சுற்றுலாக்களுக்குத் திருப்பீடம் அழைப்பு
3. இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவருக்குச் செபமும் நல்வாழ்த்தும் : இந்திய ஆயர் பேரவைத் தலைவர்
4. கத்தோலிக்கர் தங்கள் உடல்களை இறைவனின் மகிமைக்காகப் பயன்படுத்துமாறு பிரிட்டன், அயர்லாந்து ஆயர்கள் வலியுறுத்தல்
5. சண்டை தீவிரமடைந்துள்ள சிரியாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது, ஆயர் கவலை
6. சிரியா அகதிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது: லெபனன் காரித்தாஸ் இயக்குனர்
7. சிரியாவில் வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது, பான் கி மூன் கவலை
8. மருந்துக்கு கட்டுப்படாத HIV தொற்று அதிகரிக்கிறது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உலகுசார் துறவு சபைகளின் அனைத்துலக மாநாட்டுக்குத் திருத்தந்தை வாழ்த்து
ஜூலை,24,2012. உலகுசார் துறவு சபையினர், உலகு மற்றும் திருஅவையின் காயங்களை அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு, குறிப்பாக நட்புணர்வு மற்றும் மன்னிக்கும் திறனோடு, முழுமையான மற்றும் மகிழ்வான வாழ்வு வாழுமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியின்
அசிசி நகரில் நடைபெற்று வரும் உலகுசார் துறவு சபைகளின் அனைத்துலக
மாநாட்டுக்குத் திருத்தந்தையின் பெயரில் செய்தி அனுப்பியுள்ள திருப்பீடச்
செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, இச்சபைகளுக்குத் திருத்தந்தை கூறும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தூயஆவி
புதியனவற்றைக் கட்டி எழுப்புவதால் இச்சபைகளைச் சேர்ந்தவர்கள் படைப்பாற்றல்
மிக்கவர்களாக வாழுமாறும் கேட்டுக் கொண்டுள்ள திருத்தந்தை, இவர்கள் மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்துமாறும் பரிந்துரைத்துள்ளார்.
இறைவனே
தங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறார் என்பதைக் கண்டு கொண்ட இவர்கள் தங்களது
வாழ்வை முழுமையாக அவருக்குக் கொடுக்க வேண்டும் எனவும், ஆன்மீக வாழ்க்கையிலும் துறவறப் பயிற்சியிலும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் திருத்தந்தை.
இந்த மூன்று நாள் அனைத்துலக மாநாடு, இப்புதன்கிழமையன்று நிறைவடையும். அதன்பின்னர் அச்சபைகளின் பொதுப் பேரவையும் நடைபெறும்.
2. பொறுப்புள்ள சுற்றுலாக்களுக்குத் திருப்பீடம் அழைப்பு
ஜூலை,24,2012.
சுற்றுலாவைப் பொறுப்புள்ள மற்றும் மதிப்புமிக்க விதத்தில் ஊக்குவித்து
வளர்க்குமாறு ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது திருப்பீட
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கான மேய்ப்புப்பணி அவை.
வருகிற
செப்டம்பர் 27ம் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக சுற்றுலா
தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட குடியேற்றதாரர் மற்றும்
புலம்பெயர்வோர்க்கான மேய்ப்புப்பணி அவை, சுற்றுச்சூழலைப்
பாதுகாப்பது உள்ளிட்ட மில்லென்யம் வளர்ச்சித்திட்ட இலக்குகளை அடைவதற்குச்
சுற்றுலா முக்கியமான அங்கம் வகிக்கின்றது என்று கூறியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் சுற்றுலா குறிப்பிட்டத்தக்க வகையில் முன்னேறியுள்ளது என்றுரைக்கும் இச்செய்தி, பன்னாட்டு அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நூறு கோடியை எட்டியுள்ளது, இது 2030ம் ஆண்டில் 200 கோடியை எட்டும் என WTO என்ற உலகச் சுற்றுலா நிறுவனம் வெளியிட்ட புள்ளி விபரங்களையும் சுட்டிக் காட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தற்போது மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்ற போதிலும், விடுமுறை
காலங்களில் சில வசதிகளைத் தேடி மக்கள் தங்களது இந்த விழிப்புணர்வு
நடவடிக்கைகளை மறந்து விடுகின்றனர் என்றும் அச்செய்தி கூறுகிறது.
புதிய
வாழ்க்கைமுறைகளை அமைத்துக் கொள்வதற்கு கற்றுக் கொள்வதற்குப் பெருமளவில்
முயற்சிகள் எடுக்கப்படுமாறும் அச்செய்தி வலியுறுத்துகிறது.
இச்செய்தியில் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கான மேய்ப்புப்பணி அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அதன் செயலர் ஆயர் Joseph Kalathiparambil ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
3. இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவருக்குச் செபமும் நல்வாழ்த்தும் : இந்திய ஆயர் பேரவைத் தலைவர்
ஜூலை,24,2012. இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் பிரணாப் முகர்ஜி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, வாழ்வுக் கலாச்சாரம், அமைதி, நல்லிணக்கம், உரையாடல், பொதுவாழ்வில்
ஒருங்கமைவு ஆகிய விழுமியங்களை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு நல்ல
வாய்ப்பாக இருக்கின்றது என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
இப்புதன்கிழமையன்று இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு கர்தினால் Gracias அனுப்பியுள்ள நல்வாழ்த்துக் கடிதத்தில், நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் மறைப்பணியின் முக்கிய கூறுகளைக் குறிப்பிட்டுள்ளதோடு, நாட்டைக்
கட்டியெழுப்புவதில் இந்தியத் திருஅவைக்கும் அரசுக்கும் இடையே இடம்பெற்று
வரும் ஒத்துழைப்பு தொடர்ந்து இடம்பெறுமாறும் கேட்டுள்ளார்.
நாட்டின் 13வது குடியரசுத் தலைவருக்கு இந்தியத் திருஅவையின் சார்பில் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், பிரணாப் முகர்ஜி அவர்களின் இந்தத் தேர்தல் முடிவைத் தாங்கள் வரவேற்பதாகவும், புதிய
அரசுத்தலைவர் மற்றும் நாட்டின்மீது இறையாசிர் நிரம்பப் பொழியப்படுமாறு
செபிப்பதாகவும் உறுதி கூறியுள்ளார் மும்பை பேராயர் கர்தினால் Gracias.
பிரணாப் முகர்ஜி அவர்கள், ஆழமான
அரசியல் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டவர் மற்றும் நாட்டின் பொதுநலன்மீது
மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் இந்திய ஆயர் பேரவைத்
தலைவர் கர்தினால் Oswald Gracias.
இந்தியாவில் சுமார் 60 விழுக்காட்டுக் கத்தோலிக்கப் பள்ளிகள் கிராமங்களில் உள்ளன.
76 வயதான பிரணாப் முகர்ஜி அவர்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
4. கத்தோலிக்கர் தங்கள் உடல்களை இறைவனின் மகிமைக்காகப் பயன்படுத்துமாறு பிரிட்டன், அயர்லாந்து ஆயர்கள் வலியுறுத்தல்
ஜூலை,24,2012. கத்தோலிக்கர் தங்கள் உடல்களை “இறைவனின் மகிமை”க்காகப் பயன்படுத்துமாறு வாழ்வு தினச் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து ஆயர்கள்.
இவ்வெள்ளிக்கிழமையன்று
ஒலிம்பிக்ஸ் மற்றும் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி மாற்றுத்திறனாளிக்களுக்கான
ஒலிம்பிக்ஸ் இலண்டனில் தொடங்கவிருப்பதைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், அறநெறி விழுமியங்களோடு நலமாக வாழ்வதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2012” தொடங்கவிருக்கும் இவ்வேளையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உணர்வுகளுடன், எதிலும்
சமநிலை காக்கும் ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வதற்கு உதவும் நான்கு
இலட்சத்துக்கு மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருப்பதாகவும்
ஆயர்கள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்திலும் வேல்சிலும் ஜூலை 29, வருகிற ஞாயிறன்று வாழ்வு தினம் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.
இவ்வாண்டின் இத்தினம்,
ஒவ்வொருவரும் நமது உடலை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு கட்டத்திலும்
பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது என்று பேராயர் பீட்டர்
ஸ்மித் கூறினார். இவர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஆணையத் தலைவர்.
5. சண்டை தீவிரமடைந்துள்ள சிரியாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது, ஆயர் கவலை
ஜூலை,24,2012. சிரியாவில் சண்டை வலுவடைந்துவரும் நிலையில், தமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் மூத்த ஆயர் ஒருவர் தெரிவித்தார்.
தமாஸ்கஸ்
மற்றும் அலெப்போ நகரங்களில் வாழும் கிறிஸ்தவர்கள் தாங்கள் குறிவைத்து
தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் வாழ்வதாகக் கூறினார் அலெப்போவின்
கல்தேயரீதி கத்தோலிக்க ஆயர் Antoine Audo.
இவ்வாண்டு
வசந்த காலத்தில் ஹோம்ஸ் நகரில் கடும் சண்டை இடம்பெற்றபோது கிறிஸ்தவர்கள்
வாழ்ந்த பகுதி முழுவதும் கடும் தாக்குதலுக்கு உள்ளானதால் ஏறக்குறைய
எல்லாரும், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேறியதைக் குறிப்பிட்டார் ஆயர் Audo.
சண்டை தீவிரமடைந்துவரும் நிலையில் மக்கள் தன்னை அணுகுவதாகவும், தங்களது உடமைகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதாகவும் ஆயர் தெரிவித்தார்.
6. சிரியா அகதிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது: லெபனன் காரித்தாஸ் இயக்குனர்
ஜூலை,24,2012. சிரியா எல்லைப் பகுதியிலுள்ள லெபனன் அகதிகள் முகாம்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், சிரியாவில்
இடம்பெறும் சண்டைகளுக்குப் பயந்து தினமும் ஆயிரக்கணக்கான அகதிகள்
எல்லைகளைக் கடப்பதாகவும் லெபனன் காரித்தாஸ் இயக்குனர் அருட்பணி Simon Faddoul கூறினார்.
இம்மக்களின் துன்பங்கள் சொல்லும் தரமன்று என ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறிய அருட்பணி Faddoul, எங்கு சென்றாலும் ஏமாற்றம், வெறுப்பு, பழிவாங்குதல் போன்ற அழுகைச் சப்தங்களையே கேட்க முடிகின்றது, இவர்களில் பலர் கடவுள் தங்களை கைவிட்டு விட்டதாக உணருகின்றனர் என்று தெரிவித்தார்.
இச்செவ்வாயன்று மட்டும் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் எல்லைகளைக் கடந்துள்ளனர், சிரியாவுக்கும் லெபனனுக்கும் இடையே வடக்கிலுள்ள Bekaa
பள்ளத்தாக்கு அகதிகள் முகாம்களில் வாழும் 47 ஆயிரத்துக்கு மேற்பட்ட
மக்களில் பெரும்பாலானோர் சுன்னி முஸ்லீம்கள். கிறிஸ்தவர்கள் 5
விழுக்காட்டினர் மட்டுமே என்றும் அக்குரு கூறினார்.
மேற்கத்திய நாடுகள் சிரியாவை மறந்து விடாமல் உடனடியான போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அருட்பணி Faddoul கேட்டுக் கொண்டார்.
7. சிரியாவில் வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது, பான் கி மூன் கவலை
ஜூலை,24,2012. சிரியாவில் இடம்பெற்று வரும் கடும் சண்டையில் வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், அனைத்துலகச் சமுதாயம் சிரியாவின் நிலைமையை உன்னிப்பாய்க் கவனித்து வருமாறும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
வேதிய ஆயுதங்கள் போன்ற பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்த யாராவது நினைத்தால், அது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் பான் கி மூன் கூறினார்.
OPCW என்ற வேதிய ஆயுதங்கள் தடை நிறுவனத்தில் சிரியா உறுப்பினர் இல்லை என்பதையும் கவலையோடு குறிப்பிட்ட அவர், வெளிநாட்டுத்
தாக்குதலுக்கு எதிராக வேதிய மற்றும் உயிரியல் ஆயுதங்களை சிரியா
பயன்படுத்தும் என்று சிரியா அரசு எச்சரித்து வருவதையும் குறிப்பிட்டார்.
சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assadக்கு எதிராக சுமார் 16 மாதங்களாக இடம்பெற்று வரும் கடும் சண்டையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
8. மருந்துக்கு கட்டுப்படாத HIV தொற்று அதிகரிக்கிறது
ஜூலை,24,2012. கிழக்கு ஆப்பிரிக்காவில் மருந்துக்கு கட்டுப்படாத HIV நோய்க்கிருமிகள் வேகமாக அதிகரித்துவருவதாக உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஆய்வு எச்சரித்துள்ளது.
உலக நலவாழ்வு நிறுவனமும் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியும் இணைந்து செய்த ஆய்வின்படி கிழக்கு ஆப்ரிக்காவில் HIV நோய்க்கிருமியானது மருந்துக்கு கட்டுப்படாத தன்மையை அடைந்து வருவதாக தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் HIV
நோய்க்கிருமிகள் பரவியவர்களில் சுமார் 10 விழுக்காட்டுக்கும்
குறைவானவர்களுக்கு மட்டுமே மருந்துக்கு கட்டுப்படாத தன்மை காணப்படுகின்றது.
ஆனால்
கிழக்கு ஆப்ரிக்காவில் இத்தகையவர்கள் 29 விழுக்காடாக இருப்பதைக்
கண்டுபிடித்த ஆய்வாளர்கள் இது ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிரித்துக்
கொண்டிருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்நிலை நீடித்தால் கடந்த பத்து ஆண்டுகளாக எய்ட்ஸ் மரணங்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலைமை மாறி, மீண்டும் எய்ட்ஸ் மரணங்கள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் இந்த ஆய்வை நடத்தியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment