Wednesday 1 August 2012

Catholic News in Tamil - 30/07/12

1. நம்மிடமுள்ள மிகக் குறைவானதையும் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் புதுமை எப்போதும் மீண்டும் நிகழும் - திருத்தந்தை

2. சிரியாவிலும் ஈராக்கிலும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு திருத்தந்தை அழைப்பு

3. இத்தாலியின் ILVA எஃகு உருக்கு ஆலை விவகாரத்துக்கு, நியாயமான தீர்வு காணப்பட திருத்தந்தை வலியுறுத்தல்

4. இயேசு சபை கல்வியாளர்களுக்கு அருட்தந்தை லொம்பார்தியின் உரை

5. நேபாளத்தில் தனியார் பள்ளிகள் தாக்க்கப்படுவதற்கு எதிராக தலைவர்களின் குரல்கள்

6. சீன அரசின் ஆயர் நியமனத்தை எதிர்த்த ஏழு குருக்களுக்கு அரசு எச்சரிக்கை

7. குழந்தைத் திருமணம் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும்

8. மியான்மார் கலவரத்தில் எண்பதாயிரம் பேர் இடம்பெயர்வு - ஐ.நா.


------------------------------------------------------------------------------------------------------
1. நம்மிடமுள்ள மிகக் குறைவானதையும் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் புதுமை எப்போதும் மீண்டும் நிகழும் - திருத்தந்தை

ஜூலை,30,2012. நம்மிடம் என்ன இல்லை என்பதை இயேசு கேட்கவில்லை, மாறாக, நாம் ஒவ்வொருவரும் நம்மிடமுள்ள மிகக் குறைவானதையும் பகிர்ந்து கொள்ள முன்வந்தால், நம் வாழ்க்கையில் புதுமை எப்போதும் மீண்டும் நிகழும் என்பதை, அப்பம் பலுகிய புதுமையின் மூலமாக இயேசு நமக்குக் காட்டுகிறார் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செயதி வாசகத்தை (யோவான் 6:8) மையமாக வைத்துப் பேசினார்.
5 அப்பங்களையும் 2 மீன்களையும் பலுகச் செய்த நிகழ்வில், இவ்வளவு மக்களுக்கு எவ்வாறு உணவளிக்க முடியும் என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்ட போது அங்கிருந்த சிறுவன் தன்னிடமிருந்த 5 அப்பங்களையும் 2 மீன்களையும் பகிர்ந்து கொள்ள முன்வந்தான் என அறிகிறோம் என்ற திருத்தந்தை, இந்தப் புதுமை ஒன்றுமில்லாமையிலிருந்து நிகழவில்லை, ஆனால் ஒரு சாதாரண சிறுவன் தன்னிடமிருந்ததைப் பகிர்ந்து கொள்ள விரும்பியதிலிருந்து நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.
நம் ஒவ்வொருவரின் சிறிய அன்புச் செயல்களையும் கடவுள் பலுகச் செய்யவல்லவர் மற்றும் அவரது கொடையில் நம்மை பங்குதாரர்களாக ஆக்குகிறார் என்றும் கூறினார் அவர்.
இப்புதுமையைக் கண்டு கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து இயேசுவில் புதிய மோசேயை, புதிய மன்னாவைப் பார்த்தனர், பொருள்சார்ந்த கண்ணோட்டத்தோடு மட்டும் நிறுத்திக் கொண்டனர், அவர்கள் அவரை அரசராக்க விரும்பியதை அறிந்து இயேசு மலைக்குத் தனியாகச் சென்றார் (யோவான் 6:15) என்றார் திருத்தந்தை.
இப்பூமியை ஆளும் அரசர் அல்ல இயேசு, ஆனால் அவர் மனிதரின் உடல் பசியை மட்டுமல்ல, அதைவிட ஆழமான ஒன்றான இறைவனுக்கானப் பசியையும் தீர்த்து வைப்பவர் என்று கூறினார் திருத்தந்தை.
எனவே திருநற்கருணை விருந்தில் விசுவாசமுடனும் மிகுந்த ஆர்வமுடனும் பங்கு கொண்டு கிறிஸ்துவின் உடலால் நாம் போஷிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் கண்டுணருவதற்கு இயேசுவிடம் செபிப்போம் எனவும் திருத்தந்தை கூறினார்.
மனித மாண்புக்கும், வன்முறை ஆயுதங்களால் அல்ல, ஆனால் பகிர்வு மற்றும் அன்பு வழியாக அனைத்துச் சமத்துவமற்ற நிலைகளும் அகற்றப்படுவதற்கும் தேவையான உணவு எவருக்கும் குறைவில்லாமல் கிடைப்பதற்காகவும் செபிப்போம், நமது செபங்களை அன்னைமரியா வழியாக அர்ப்பணிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. சிரியாவிலும் ஈராக்கிலும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு திருத்தந்தை அழைப்பு

ஜூலை,30,2012. சிரியாவிலும் ஈராக்கிலும் இடம்பெறும் இரத்தம் சிந்தும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபத்திற்குப் பின்னர் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சிரியாவில் அதிகரித்து வரும் கொடூர வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் இறப்புகளும் படுகாயங்களும் குறித்து தான் அறிந்து வருவதாகவும், இந்த வன்முறைகளுக்கு அஞ்சி அகதிகளாகச் செல்லும் மக்களுக்கு அண்டை நாடுகள் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளைச் செய்யுமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
இந்த மோதல்களுக்கு உரையாடல் மூலம் ஓர் அரசியல் தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்டுவதற்கு உலக சக்திகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
மேலும், ஈராக்கில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் ஒருநாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கும்வேளை, கடந்த வாரத்தில் நடந்த பல வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிட்டு, இந்த நாடு மீண்டும் உறுதியான தன்மை, ஒப்புரவு மற்றும் அமைதியின் பாதையில் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
சிரியாவிலும் ஈராக்கிலும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தான் ஆன்மீகரீதியில் ஒன்றித்திருப்பதாகவும் உறுதி கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சிரியாவில் அதிகரித்து வரும் மோதல்களால் ஓராண்டுக்குள்ளாக சுமார் 20 ஆயிரம் பேர் அகதிகளாகியுள்ளனர்.


3. இத்தாலியின் ILVA எஃகு உருக்கு ஆலை விவகாரத்துக்கு, நியாயமான தீர்வு காணப்பட திருத்தந்தை வலியுறுத்தல்

ஜூலை,30,2012. இத்தாலியின் Taranto வில் ILVA எஃகு உருக்கு ஆலை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் என்று சொல்லி நீதிமன்றம் அந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டிருப்பது குறித்து குறிப்பிட்டு இதனால் தங்களது முக்கிய வருவாயை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த விவகாரத்துக்கு, சிறப்பாக, பொருளாதார நெருக்கடி மிகுந்துள்ள இக்காலத்தில் மக்களின் நலவாழ்வுக்கும் அவர்கள் வேலை செய்வதற்கும் இருக்கும் உரிமையை அங்கீகரித்து இதற்கு நியாயமான தீர்வு காணப்பட முயற்சிகள் எடுக்குமாறு தேசிய மற்றும் உள்ளூர் அரசுகளைக் கேட்டுள்ளார் திருத்தந்தை.
இன்னும், அடுத்த ஆண்டு இதே நாளில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 28வது உலக இளையோர் தினம் தொடங்கவிருக்கின்றது, திருஅவையில் இருப்பது மற்றும் விசுவாசத்தை வாழ்வதன் அழகையும் மகிழ்வையும் அனுபவிப்பதற்கு ஏற்ற தருணமாக இத்தினம் இருக்கும், எனவே இத்தினத்திற்காகத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் ஊக்கமும் நன்றியும் தெரிவிப்பதாகக் கூறினார் திருத்தந்தை.


4. இயேசு சபை கல்வியாளர்களுக்கு அருட்தந்தை லொம்பார்தியின் உரை

ஜூலை,30,2012. இன்றைய நவீன உலகில் விசுவாசப்பணி என்பது நீதிக்கான அர்ப்பணம், மற்றும் நாம் வாழும் மக்களிடையே கலாச்சார, பாரம்பரிய மற்றும் மத அனுபவங்களுடன் ஆன பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியதாக உள்ளது என இயேசு சபை கல்வியாளர்களுக்கு உரையாற்றினார் அருட்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி.
இயேசு சபை கல்வி நிறுவனங்கள் தங்கள் பணி நோக்கத்திற்கு விசுவாசமாக இருப்பது குறித்து இடம்பெறும் அனைத்து நாடுகளின் இயேசு சபை கல்விக் கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு உரைவழங்கிய, இயேசு சபையின் நான்கு உயர்மட்ட துணைத் தலைவர்களுள் ஒருவரான அருட்தந்தை லொம்பார்தி, இயேசு சபையின் 35வது பொது அவை ஒப்புரவின் தேவை குறித்து வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டினார்.
புதிய நற்செய்தி அறிவித்தல், கல்விக்கான அவசரத்தேவை, தலைமுறை இடைவெளி, விசுவாசமும் பகுத்தறிவும், பொருளாதாரமும் சமூக நீதியும் போன்ற தலைப்புகளில் தன் கருத்துக்களை வழங்கிய அவர், இயேசு சபையின் முன்னாள் அதிபர்கள், அருட்தந்தையர்கள் அருப்பே மற்றும் கோல்வன்பாக் ஆகியோர் பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ள கருத்துக்களையும் மேற்கோள் காட்டினார்.
புதிய‌த் தகவல் தொழில்நுட்பத் துறையால் பலம் பெற்றிருக்கும் இன்றைய கல்வித்துறையின் உதவியுடன் மனித உறவுகளை ஆழப்படுத்தும் நோக்குடன் இளையோரிடையே பணியாற்றவேண்டிய அவசியத்தையும் இயேசுசபை கல்வியாளர்களிடம் வலியுறுத்தினார் அருட்தந்தை லொம்பார்தி.


5. நேபாளத்தில் தனியார் பள்ளிகள் தாக்க்கப்படுவதற்கு எதிராக தலைவர்களின் குரல்கள்

ஜூலை,30,2012. நேபாளத்தில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் கல்வி நிலையங்கள் தாக்கப்படுவது குறித்து தங்கள் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு அரசுத்தலைவரும் ஐ.நா. அதிகாரிகளும்.
மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு கல்வி நிலையங்களை 'அமைதியின் இடங்களாக' அறிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள இத்தலைவர்கள், வன்முறைகளால் பாதிக்கப்படாத கல்வியைப் பெறுவதற்கு குழந்தைகளுக்கு இருக்கும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட்டு, சிறார்களின் கல்வி கற்கும் உரிமை உறுதிச் செய்யப்பட வேண்டும் என நேபாள பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் செய்தி அனுப்பியுள்ளார் அந்நாட்டு அரசுத்தலைவர் ராம் பரன் யாதவ்.
நேபாளத்தில் மொத்த மாணவர்களுள் பாதிப்பேர் அந்நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை நடத்தி வரும் 33 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


6. சீன அரசின் ஆயர் நியமனத்தை எதிர்த்த ஏழு குருக்களுக்கு அரசு எச்சரிக்கை

ஜூலை,30,2012. திருத்தந்தையின் அனுமதியின்றி சீன குரு ஒருவர் ஆயராக திருநிலைப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏழு குருக்கள் தங்கள் பங்குதளங்களிலிருந்து விலகவேண்டும் என அரசு கட்டளை பிறப்பித்துள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அரசால் அறிவிக்கப்பட்ட ஆயர் நியமனத்தை எதிர்க்கும் குருக்கள் தண்டிக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவித்துள்ள சீன அரசு, தற்போது இந்த ஏழு குருக்களும் மூன்று மாத கட்டாய விடுமுறையில் சென்று, தங்கள் தவறான நிலைப்பாடு குறித்து ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் என அறிவித்துள்ளது.
இம்மாதம் ஆறாம் தேதி திருத்தந்தையின் அனுமதியின்றி சீன அரசால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட குரு ஜோசப் யூ ஃபூசெங்கிடம் அடுத்த மூன்று மாதத்திற்குள் இக்குருக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் திருச்சபையிலிருந்து நீக்கப்படுவர் எனவும் அரசு இக்குருக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


7. குழந்தைத் திருமணம் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும்

ஜூலை, 30, 2012.    தமிழகத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்கள், பெரிய அளவில் குறைந்துள்ளன. எனினும், இதை முற்றிலும் ஒழிக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த ஏழு மாதத்தில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடக்க இருந்த, 218  குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன எனக் கூறும் சமூக நலத்துறை அதிகாரிகள், கடந்த ஆண்டில், 540; அதற்கு முந்தைய ஆண்டில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தனர்.
முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், குழந்தைத் திருமணங்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள போதிலும்,  இதை முற்றிலும் ஒழிக்க, தீவிர நடவடிக்கை தேவை என்ற கருத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்திலேயே, அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கும் தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் மட்டும், 107 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.


8. மியான்மார் கலவரத்தில் எண்பதாயிரம் பேர் இடம்பெயர்வு - ஐ.நா.

ஜூலை, 30,2012. மியான்மாரின் வடபகுதியில் இரக்கீன் (Rakhine) மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட இனக்கலவரங்களைத் தொடர்ந்து சுமார் எண்பதாயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா. அமைப்பின் அகதிகளுக்கான நிறுவனமான UNHCR அறிவித்துள்ளது.
இப்படி வெளியேறியவர்கள் முகாம்களில் வாழ்ந்து வருவதாகவும், அவசர இருப்பிடத் தேவைகளுக்காக, இன்னும் அதிகமாகக் கூடாரங்கள் விமானமூலம் கொண்டுவரப்படுவதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இரக்கீன் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவது இன்னும் தொடர்ந்து நடைபெறுவது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கவலை தெரிவித்திருப்பதுடன், இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மியான்மார் காவல் துறையினர், சிறுபான்மையின மக்களை, குறிப்பாக Rohingya இஸ்லாமிய இன மக்களை இலக்கு வைத்து தாக்குவதாக கூறப்படுவதாகவும் நவிபிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...