Wednesday, 29 August 2012

Catholic News in Tamil - 28/08/12


1.திருத்தந்தை, இத்தாலியப் பிரதமர் சந்திப்பு

2. வெனெசுவேலா எண்ணெய் ஆலை தீ விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை அனுதாபம்

3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து குறித்து வெனெசுவேலா ஆயர்கள் வேதனை

4. அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு எதிராகச் செயல்பட முதுபெரும் தலைவர் உறுதி

5. அலெப்போ கத்தோலிக்கப் பேராயர் லெபனனில் தஞ்சம்

6. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையுடன் முழு ஒப்புரவு ஏற்படுத்துவதற்குப் போலந்து ஆயர்கள் தீவிரம்

7. புனே ஆயர் : வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்கள் அர்த்தமற்றவை

8. சிறிய ஆயுதங்கள் சட்டத்துக்குப் புறம்பே வியாபாரம் செய்யப்படுவதைத் தடை செய்ய ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்

9. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள Rimsha Masih 14 வயது நிரம்பியவள் : மருத்துவ ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------

1.திருத்தந்தை, இத்தாலியப் பிரதமர் சந்திப்பு

ஆக.28,2012. பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இத்தாலியப் பிரதமர் Mario Montiயை இத்திங்கள் மாலை சந்தித்துப் பேசினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
ஏறத்தாழ 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐரோப்பிய சமுதாய அவை எதிர்நோக்கும் சவால்கள், குறிப்பாக, ஐரோப்பாவின் தற்போதைய நிலைமை குறித்தும், ஐரோப்பியர்கள், குறிப்பாக இளைய தலைமுறைகள், அக்கண்டத்தின் மனித மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்விதத்தில் உதவ முடியும் என்பது குறித்தும் பேசப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
தற்போது கடன் நெருக்கடியிலுள்ள இத்தாலியை ஆட்சி செய்வதற்காகக் கடந்த நவம்பரில் அரசுத்தலைவர் Giorgio Napolitano அமைத்த புதிய அரசின் பிரதமரான Monti, கடந்த நவம்பரிலிருந்து பல தடவைகள் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய ஐரோப்பிய நெருக்கடிகள் குறித்து பெர்லினில் ஜெர்மன் Chancellor Angela Merkelஐ இப்புதனன்று சந்திக்கும் Monti, வருகிற செப்டம்பர் 4ம் தேதி உரோமையில் ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் Francois Hollandeயையும்  சந்திக்கவுள்ளார்.

2. வெனெசுவேலா எண்ணெய் ஆலை தீ விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை அனுதாபம்
ஆக.28,2012. வெனெசுவேலா நாட்டின் மிகப் பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, வெனெசுவேலா நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Diego Rafael Padron Sanchezக்கு அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுடன் திருத்தந்தை ஆன்மீகரீதியில் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனெசுவேலாவின் வடமேற்கிலுள்ள Falcón மாநிலத்தின் Amuay எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இம்மாதம் 25ம் தேதி அதிகாலை ஏற்பட்ட எரிவாயுக் கசிவால் தீப் பற்றிக் கொண்டது. இச்செவ்வாய் காலை நிலவரத்தின்படி இத்தீ விபத்தில் 3 சிறார் உட்பட 48 பேர் இறந்துள்ளனர் மற்றும் 80க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
கொளுந்து விட்டெரியும் தீயை அணைப்பதற்குத் தீயணைப்புப் படையினர் கடுமையாய் முயற்சித்துவரும்வேளை, அந்த ஆலை இச்செவ்வாயன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன. 
இந்த Amuay ஆலை உலகின் மிகப்பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளுள் ஒன்றாகும். இந்தத் தீ விபத்தில் 209 வீடுகள், 11 கடைகள் எரிந்து நாசமாயின. 13 குடும்பத்தினரின் வீடுகள் முற்றிலும் தரைமட்டமாயின.

3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து குறித்து வெனெசுவேலா ஆயர்கள் வேதனை

ஆக.28,2012. வெனெசுவேலா நாட்டின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ள வெனெசுவேலா ஆயர்கள் துயருறும் மக்களுடன் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். 
மேலும், அந்நாட்டில் 3 நாள்களுக்கு தேசிய துக்க தினத்தைக் கடைப்பிடிக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் அரசுத் தலைவர் Hugo Chavez.
நல்லவேளையாக இந்தக் கொடூரமான சம்பவம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது' என்று கூறியுள்ள அரசுத் தலைவர், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
வெனெசுவேலாவில் 40 இலட்சம் பீப்பாய் எரிவாயும் பெட்ரோலியமும் சேமிப்பில் இருப்பதாகவும், தொடர்ந்து ஒரு நாளைக்கு 7,35,000 பீப்பாய்கள் வீதம் இவை உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
வெனெசுவேலாவின் எண்ணெய்த்துறை அமைச்சர் இரஃபேல் ரமிரெஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆலையில் உள்ள ஒரு குழாயில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

4. அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு எதிராகச் செயல்பட முதுபெரும் தலைவர் உறுதி

ஆக.28,2012. அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பைச் சட்டரீதியாக அங்கீகரிப்பதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் மிகத் தீவிரமாகவும் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய விதத்திலும் எதிர்க்கப்படும் என்று அனைத்து அயர்லாந்துக்குமான கத்தோலிக்க முதுபெரும் தலைவர் உறுதியளித்துள்ளார்.
ஐரோப்பிய நீதிமன்றத்தின் 2010ம் ஆண்டின் தீர்ப்புக்கு ஒத்திணங்கிச் செல்லும் வகையில் அயர்லாந்தின் கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கு அந்நாட்டு அரசுக்கு எந்தவிதத் தேவையும் ஏற்படவில்லையென முதுபெரும் தலைவர் கர்தினால் Sean Brady கூறினார்.
கருக்கலைப்பைத் தடை செய்வதற்கு அயர்லாந்து அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதையும் கர்தினால் சுட்டிக் காட்டியுள்ளார்.   
கருக்கலைப்பு குறித்து பொதுவான விவாதம் இடம்பெறும்போது கத்தோலிக்கர்கள் கருக்கலைப்புக்கு எதிரானத் தங்கள் குரல்களைத் துணிவுடன் எழுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
                                                                         
5. அலெப்போ கத்தோலிக்கப் பேராயர் லெபனனில் தஞ்சம்

ஆக.28,2012. சிரியா நாட்டு அலெப்போ மெல்கித்தே கத்தோலிக்கப் பேராயர் Jean-Clement Jeanbartன் இல்லம் புரட்சியாளர்களால் சூறையாடப்பட்டதையடுத்து அப்பேராயர் லெபனன் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ளார் என வத்திக்கானின் பீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
அலெப்போ மாரனைட்ரீதி கத்தோலிக்கப் பேராயர் இல்லத்தின் அலுவலகங்கள், Byzantine கிறிஸ்தவ அருங்காட்சியகம் ஆகியவையும் புரட்சியாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.
புரட்சியாளர்களின் இந்த அட்டூழியங்கள் குறித்துக் கண்டனம் தெரிவித்த சிரியா நாட்டுத் தலத்திருஅவையின் பேச்சாளர் ஒருவர், இந்தப் புரட்சியாளர்கள் சமயப் போர் தொடங்குவதற்கு விரும்புவதாகவும், சிரியா மக்களை வகுப்புவாத மோதல்களுக்குள் இட்டுச் செல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் சண்டையினால், அந்நாட்டின் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள், துருக்கி, லெபனன், ஜோர்டன் மற்றும் ஈராக் நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர் என ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.



6. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையுடன் முழு ஒப்புரவு ஏற்படுத்துவதற்குப் போலந்து ஆயர்கள் தீவிரம்

ஆக.28,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையுடன் முழு ஒப்புரவு ஏற்படுத்தும் நோக்கத்தில் பெரியதொரு திட்டம் வகுத்து வருகின்றனர் போலந்து கத்தோலிக்க ஆயர்கள்.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், போலந்து தலத்திருஅவைக்கும் இடையே ஒப்புரவு ஏற்படுவது குறித்து அவ்விரு திருஅவைத் தலைவர்கள் இணைந்து இம்மாதத்தில் கையெழுத்திட்ட முழு அறிக்கையும் போலந்தின் அனைத்துப் பங்குகளிலும் திருப்பலியின்போது வாசிக்கப்பட வேண்டுமென போலந்து ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போலந்தின் பாதுகாவலியாகிய Czestochowa அன்னைமரி விழாவை இவ்வார இறுதியில் சிறப்பிக்கும்போது, இந்தத் தங்களது ஆவலை அன்னைமரியிடம் அர்ப்பணிக்கவும் ஆயர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் Kirillம், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Józef Michalikம் இம்மாதம் 17ம் தேதி Warsawவில் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்புரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ள பகைமை உணர்வுகளால் விளைந்துள்ள காயங்களைக் குணமாக்கவும், ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒப்புரவில் வளரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

7. புனே ஆயர் : வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்கள் அர்த்தமற்றவை

ஆக.28,2012. வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்கள் அர்த்தமற்றவை மற்றும் இவை மத உணர்வுகளுக்கு எதிரானவை என்று புனே ஆயர் Thomas Dabre குறை கூறினார்.
உலகம் ஒரே குடும்பம் என்ற (Vasudhaiva Kutumbakam) ஓர் இந்து அரசு-சாரா அமைப்பு நடத்திய பல்சமயக் கூட்டத்தில் பேசிய ஆயர் Dabre, பழிவாங்குவதும், அதற்குப் பதிலடி கொடுப்பதும் மேலும் அதிகப் பதட்டநிலைகளையே உருவாக்கும், மாறாக, மன்னிப்பும் அன்பும் காயங்களைக் குணப்படுத்தும் என்று கூறினார்.
வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்களால் புனே நகருக்கு மக்கள் பெருமளவில் வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
இன்று மக்களிடம் போதுமான அன்பும் மன்னிப்பு உணர்வும் இல்லை என்றும், இப்பண்புகளே கலவரத்தால் பாதிக்கப்படும் பல்வேறு சமயத்தவரை ஒன்று சேர்க்கும் என்றும் புனே ஆயர் தெரிவித்தார்.
அசாமின் நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இன மோதல்களில் 88 பேர் இறந்துள்ளனர்.

8. சிறிய ஆயுதங்கள் சட்டத்துக்குப் புறம்பே வியாபாரம் செய்யப்படுவதைத் தடை செய்ய ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்

ஆக.28,2012. ஒவ்வோர் ஆண்டும் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிர்களைக் காவு கொள்ளும் சிறிய ஆயுதங்களும், சுமந்து செல்லக்கூடிய வெடி கலங்களும் சட்டத்துக்குப் புறம்பே வியாபாரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உறுதியுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
சண்டை நடக்கும் இடங்கள், சண்டை நடந்து முடிந்த இடங்கள், போதைப்பொருள் வியாபாரிகள், ஆட்கடத்தல் தொழில் செய்வோர், குற்றக் கும்பல்கள் ஆகியவர்களிடம் சிறிய ஆயுதங்கள் சட்டத்துக்குப் புறம்பேத் தாராளமாகப் புழக்கத்தில் உள்ளது தடை செய்யப்பட வேண்டும் என்று மூன் கூறினார்.
சிறிய ஆயுதங்களும், சுமந்து செல்லக்கூடிய வெடி கலங்களும் குறித்த ஐ.நா.ஆய்வுக் கூட்டத்தில் இவ்வாறு பேசினார் மூன்.
பன்னாட்டு அளவில் சட்டத்துக்கு உட்பட்டு வியாபாரம் செய்யப்படும் இவ்வாயுதங்களின் மதிப்பு 850 கோடி டாலர் எனவும், இது 2006ம் ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகம் எனவும் ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

9. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள Rimsha Masih 14 வயது நிரம்பியவள் : மருத்துவ ஆய்வு

ஆக.28,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள Rimsha Masih 14 வயது நிரம்பியவள் என மருத்துவ ஆய்வுக் குழு கூறுவதாகவும், இதனால் அவள் இளம் குற்றவாளிகளுக்குரிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமென்று இச்செவ்வாயன்று சொல்லப்பட்டுள்ளதாகவும் அச்சிறுமியின் வழக்கறிஞர் Tahir Naveed Chaudhry தெரிவித்தார்.
Rimshaவின் மனநலம் அவளை 14 வயது நிரம்பியவளாகக் காட்டுவதாகவும், அவளது மனநலம், அவளது வயதுக்கு ஒத்ததாக இல்லையெனவும் அவளைப் பரிசோதித்த மருத்துவ ஆய்வுக் குழு கூறுவதாகவும் Chaudhry தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இராவல்பிண்டி சிறையில் Rimshaவைச் சந்தித்த போது அவள் அழுது கதறினாள் என்றும் Chaudhry கூறினார்.
இதற்கிடையே, ரிம்ஷாவின் விவகாரத்தால் வன்முறைக்குப் பயந்து காடுகளில் வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் மரங்களை வெட்டி கோவில்கள் அமைத்து வருவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு இம்மாதம் 18ம் தேதி சிறையில் வைக்கப்பட்டார்.
Rimsha மீதான இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...