Tuesday, 21 August 2012

Catholic News in Tamil - 17/08/12


1. போலந்து நாட்டுத் திருப்பயணிகளுக்குத் திருத்தந்தையின் தந்திச் செய்தி

2. இரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஓர் ஒப்பந்தம்

3. வியட்நாமில் அன்னைமரியாவின் விண்ணேற்புத் திருநாள் கொண்டாட்டம்

4. கடவுளைச் சார்ந்து நின்ற பாராளுமன்ற உறுப்பினருக்குப் பிலிப்பின்ஸ்  திருஅவை பாராட்டு

5. தாய்லாந்து கத்தோலிக்கத் திருஅவையின் நான்கு ஆண்டுகள் திட்டம்

6. மதுப் பழக்கத்திற்குத் தீர்வு காண தென்கொரியத் திருஅவையும் காவல் துறையும் இணைந்து முயற்சிகள்

7. இந்தியாவில் புதிய மருந்துகளுக்கான ஆய்வுகள் பற்றிய தெளிவான வரைமுறைகள் இல்லை

8. சிகரெட் பெட்டிகளை அச்சடிப்பதற்குப் பதிய வழிகள் - ஐரோப்பிய ஒன்றியம் ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------
1. போலந்து நாட்டுத் திருப்பயணிகளுக்குத் திருத்தந்தையின் தந்திச் செய்தி

ஆக.17,2012. இன்னும் பிறக்காதக் குழந்தைகளைத் தங்கள் செபங்கள் மூலம் பாதுக்காக்க முயற்சிகள் மேற்கொள்ளும் போலந்து நாட்டுத் திருப்பயணிகளை வாழ்த்தி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
போலந்து நாட்டில் Jasna Gora எனும் திருத்தலத்தில் உள்ள அன்னை மரியாவுக்கு கடந்த 300 ஆண்டுகளாக அந்நாட்டு மக்கள் திருப்பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். 1987ம் ஆண்டு முதல் இத்திருப்பயணத்தை இன்னும் பிறக்காத குழந்தைகளுக்கென மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இந்த முயற்சியின் 25ம் ஆண்டைச் சிறப்பிக்க இவ்வாண்டு Krakowவிலிருந்து Jasna Goraவுக்கு விசுவாசிகள் மேற்கொண்டுள்ள திருப்பயணத்தை வாழ்த்தி திருத்தந்தை தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
இன்னும் பிறக்காத குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்காக செபமாலை, திருநற்கருணை வழிபாடு போன்ற பக்தி முயற்சிகளை மேற்கொண்டு வரும் பக்தர்களின் தாராள, தளராத மனதை திருத்தந்தை தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.
கருவில் உயிர்களைச் சுமந்திருக்கும் அன்னையர் இந்த முயற்சிகளால் உறுதியடைந்து, கருக்கலைப்பு என்ற தவறான முடிவை எடுக்காமல் இருப்பர் என்று தான் நம்புவதாகவும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


2. இரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஓர் ஒப்பந்தம்

ஆக.17,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவரும், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரும் வரலாற்று சிறப்பு மிக்க ஓர் ஒப்பந்தத்தில் இவ்வெள்ளியன்று கையெழுத்திட்டுள்ளனர்.
இரஷ்யாவுக்கும், போலந்துக்கும் இடையே வரலாற்றில் நிகழ்ந்த பல கசப்பான பகைமை நிகழ்வுகளிலிருந்து இரு நாடுகளும் வெளியேறுவதன் ஆரம்ப முயற்சியாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவர் முதலாம் Kirill, இவ்வியாழனன்று போலந்து நாட்டுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்தின் உச்சகட்டமாக, முதலாம் Kirill அவர்களும், போலந்து ஆயர்கள் பேரவைத் தலைவரான பேராயர் Jozef Michalik அவர்களும் Warsawவில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரஷ்யா, போலந்து ஆகிய இருநாடுகளுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ள பகைமை உணர்வுகளால் விளைந்துள்ள காயங்களைக் குணமாக்கவும், ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒப்புரவில் வளரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது இவ்விரு நாடுகளும் எதிர்கொண்ட துயரங்களையும், முக்கியமாக எதுவும் அறியாத அப்பாவி மக்கள் சந்தித்த துயரங்களையும் இந்த ஒப்பந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், தொடர்ந்து இருநாடுகளும் திறந்த மனதுடன் உரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பும் இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவர் முதலாம் Kiril மேற்கொண்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் பயணத்தில்  அவர் போலந்து நாட்டு அரசுத்தலைவர் Bronislaw Komorowski அவர்களையும் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. வியட்நாமில் அன்னைமரியாவின் விண்ணேற்புத் திருநாள் கொண்டாட்டம்

ஆக.17,2012. விண்ணேற்பு அடைந்துள்ள நமது அன்னை மரியாவைக் குறித்து மகிழும் நாம், அந்த அன்னைக்கு தகுந்ததொரு பேராலயம் கட்டப்பட்டால், நமது மகிழ்வு இன்னும் பல மடங்காக உயரும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
இப்புதனன்று அன்னைமரியாவின் விண்ணேற்புத் திருநாளைக் கொண்டாட வியட்நாமின் La Vang என்ற மரியன்னைத் திருத்தலத்தில் கூடியிருந்த பல்லாயிரம் விசுவாசிகளுக்குத் வியட்நாம் நாட்டுக்கென நியமிக்கப்பட்டுள்ள சிறப்புத் தூதர் பேராயர் Leopoldo Girelli திருப்பலி நிறைவேற்றியபோது இவ்வாறு கூறினார்.
வியட்நாமின் பல்வேறு மறைமாவட்டங்களின் பேராயர்கள், ஆயர்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டுத் திருப்பலியின் இறுதியில், அத்திருத்தலத்தில் புதியதொரு பேராலயம் கட்டப்படுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பேராலயம் கட்டப்படும் அதே வேளையில், வியட்நாமில் மதச் சுதந்திரத்துடன் தலத் திருஅவையும் செழித்து வளர வேண்டிக்கொள்வது நமது கடமை என்று பேராயர் Girelli தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.


4. கடவுளைச் சார்ந்து நின்ற பாராளுமன்ற உறுப்பினருக்குப் பிலிப்பின்ஸ்  திருஅவை பாராட்டு

ஆக.17,2012. அரசியல் முடிவுகள் எடுக்கும்போது, கடவுளைச் சார்ந்து நின்று, விசுவாசக் கண்ணோட்டத்துடன் செயல்படும் தலைவர்களை திருஅவை பாராட்டுகிறது என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Jose Palma கூறினார்.
குழந்தைபேறு பற்றிய கருத்து வேறுபாடுகள் மிகுந்த ஒரு சட்டவரைவு பிலிப்பின்ஸ் பாராளுமன்றத்தில் விவாதத்தில் உள்ளது. இந்த சட்டவரைவின் குறைகளைச் சுட்டிக்காட்டி, பாராளுமன்ற உறுப்பினர் Vicente Sotto தெரிவித்துள்ள கருத்துக்களைப் பாராட்டி பேராயர் Palma இவ்வாறு கூறினார்.
கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தியதன் ஒரு பக்க விளைவாக 1975ம் ஆண்டு தனக்குப் பிறந்த மகனை, ஐந்து மாதங்களில் தான் இழக்க வேண்டியிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் Sotto, மனித உயிர்களைத் தடுக்கும் அரசின் எந்த முயற்சியையும் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்றுக்கு மணிலா பேராயர் மட்டுமன்றி, ஏனைய ஆயர்களும் தங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.
வளர்ச்சியடைந்துள்ள சிங்கப்பூர் போன்ற நாடுகள் கருக்கலைப்பு, கருத்தடை என்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டதன் விளைவுகளைத் தற்போது உணர்ந்து வருகின்றனர் என்று பேராயர் Palma அண்மையில் அனுப்பியிருந்த ஒரு மடலில் கூறியுள்ளார்.


5. தாய்லாந்து கத்தோலிக்கத் திருஅவையின் நான்கு ஆண்டுகள் திட்டம்

ஆக.17,2012. இப்புதனன்று கொண்டாடப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று தாய்லாந்து கத்தோலிக்கத் திருஅவை நான்கு ஆண்டுகள் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ள விசுவாச ஆண்டுடன் ஆரம்பமாகும் இத்திட்டம், 2015ம் ஆண்டு நிறைவடையும் என்று தாய்லாந்து ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Louis Chamniern Santisukniran கூறினார்.
2012-2013 ஆகிய இரு ஆண்டுகள் கொண்டாடப்படும் விசுவாச ஆண்டைத் தொடர்ந்து 2014-2015 ஆகிய இரு ஆண்டுகள் தாய்லாந்தில் புனித ஆண்டு கொண்டாடப்படும் என்று இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டில், அடிப்படை கிறிஸ்தவக் குழுமங்களை வளர்ப்பதில் தலத் திருஅவை முயற்சிகளை மேற்கொள்ளும் என்று பேராயர் Santisukniran கூறினார்.
அதே வேளையில், விவிலியத்தை மக்களிடம் இன்னும் அதிகமாக அறிமுகம் செய்யும் முயற்சிகளை அருள் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பேராயர் வலியுறுத்தினார்.


6. மதுப் பழக்கத்திற்குத் தீர்வு காண தென்கொரியத் திருஅவையும் காவல் துறையும் இணைந்து முயற்சிகள்

ஆக.17,2012. மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகளை, சட்டங்களைக்கொண்டு மட்டும் தீர்த்துவிடமுடியாது, அந்தப் பிரச்னைக்கு மனநல ரீதியாகவும் உதவிகள் தேவைப்படுகின்றன என்று Seoul பேராயர் Andrew Yeom Soo-jung கூறினார்.
குடும்பங்களில் வன்முறைகளையும், சாலைகளில் விபத்துக்களையும் பெருகச்செய்யும் மதுப் பழக்கத்திற்குத் தீர்வு காண்பதற்கு காவல் துறையும், தலத் திருஅவையும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ளும் ஓர் ஒப்பந்தம் Seoul உயர்மறைமாவட்ட அலுவலகத்தில் அண்மையில் கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பேராயர் Soo-jung, ஐந்து கோடி மக்களைக் கொண்ட தென் கொரியாவில் 77 இலட்சம் மக்கள் மது அருந்துவது கவலையைத் தருகிறது என்று கூறினார்.
மது அருந்துவதால், பல சாலைவிபத்துகளுக்குக் காரணமாகும் நபர்களைக் கடுமையாகத் தண்டிக்க காவல்துறை முயற்சிகள் மேற்கொள்வது மட்டும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்காது, எனவே கத்தோலிக்க நிறுவனங்கள் மூலம் இந்தப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தகுந்த வழிகளைக் காட்டவும் நாங்கள் முயல்கிறோம் என்று காவல்துறை உயர் அதிகாரி Kim Yong-pan செய்தியாளர்களிடம் கூறினார்.


7. இந்தியாவில் புதிய மருந்துகளுக்கான ஆய்வுகள் பற்றிய தெளிவான வரைமுறைகள் இல்லை

ஆக.17,2012. புதிய மருந்துகளுக்கான ஆய்வுகள் இந்தியாவில் நடத்தப்படும்போது, ஆய்வுகளில் பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள், உயிரிழப்புகளுக்கான இழப்பீடு குறித்து இந்திய அரசு கொண்டுவரும் புதிய சட்டத்தில் தெளிவான வரைமுறைகள் இல்லை என்று நலவாழ்வு ஆர்வலர்கள் கூறினர்.
மனிதர்களின் நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்போது, அவை மனிதர்களுக்கு எவ்வகை பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதற்காக பலகட்ட ஆய்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் புதிய மருந்துகளை மனிதர்களிடம் ஆய்வு செய்வதற்கு கடுமையான சட்டதிட்டங்களும், கண்காணிப்புகளும் உள்ளதால், அண்மை ஆண்டுகளில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய ஆய்வுகளை முறையாக கண்காணிப்பதற்கான கடுமையான சட்டதிட்டங்களோ, முறையாக பயிற்சியளிக்கப்பட்ட கண்காணிப்பு குழுக்களோ இல்லாமலிருப்பதும் இந்த ஆர்வத்திற்கு மற்றொரு காரணம் என்றும் கருதப்படுகிறது.
இந்தியாவில் முறைப்படுத்தப்படாத மருத்துவ ஆய்வுகளில் பங்குபெற்றவர்கள் சிலர் மரணமடைந்த சம்பவங்கள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் விளைவாக, இந்திய அரசின் மருத்துவ தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்திருக்கிறது.
மருத்துவ ஆய்வுகளில் பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மற்றும் இந்த ஆய்வுகளால் ஏற்படும் மரணங்களுக்கு உரிய இழப்பீடு அளிப்பது தொடர்பான பிரிவுகள் இப்புதிய விதிமுறைகளில் முறையாக இல்லை என்று நலவாழ்வு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.


8. சிகரெட் பெட்டிகளை அச்சடிப்பதற்குப் பதிய வழிகள் - ஐரோப்பிய ஒன்றியம் ஆய்வு

ஆக.17,2012. புகையிலை நிறுவனங்களின் அடையாளங்களை சிகரெட் பெட்டிகளில் அச்சடிப்பதைத் தடுக்கும் வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆய்வு செய்து வருகிறது.
ஒரே நிறத்திலும், சிகரெட் புகைப்பதன் தீய விளைவுகளைக் காட்டும் படங்களுடனும் சிகரெட் பேட்டிகள் அமையவேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் அரசு விதித்த அணையை ஆதரித்து அந்நாட்டு  உச்ச நீதி மன்றம் அண்மையில் கொடுத்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலும் இந்த ஆணை நடைமுறைப்படுத்த முடியுமா என்று ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
பொதுவாக, இளையோர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவது அந்தந்த நிறுவனங்களின் பெயர்களாலேயே என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதால், இளையோரிடையே புகைபிடிக்கும் மோகத்தைக் குறைக்க இந்த வழிமுறை ஓரளவாகிலும் உதவும் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, பிரித்தானிய அரசும் சிகரெட் பெட்டிகளில் மாற்றங்களைக் கொணரும் வழிகளை கடந்த நான்கு மாதங்களாக ஆய்வு செய்து வருகிறது என்று ஊடகங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...