Friday, 24 August 2012

Catholic News in Tamil - 21/08/12

1. ரிமினி கூட்டத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து

2. திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணத்தைத் தள்ளிப்போடும் திட்டமில்லை : அருள்தந்தை லொம்பார்தி

3. யாழ்ப்பாணத்தின் படைக்குறைப்பில் திருப்தியில்லை: அமெரிக்க அதிகாரிகளிடம் யாழ்ப்பாணம் ஆயர் புகார்

4. தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள சிறுமி விவகாரத்தை மனித உரிமை நிறுவனங்கள் ஊதிப் பெரிதுபடுத்தின : இராவல்பிண்டி ஆயர், Paul Bhatti குற்றச்சாட்டு

5. சென்னை : முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் விடுதலை செய்யப்படுமாறு சிறைப்பணி அமைப்பு வலியுறுத்தல்

6. வடகிழக்கு மாநில மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு புனே ஆயர் வலியுறுத்தல்

7. வடகிழக்கு இந்தியருக்கெதிரான செய்திகளுக்கு அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம் கண்டனம்

8. இலங்கையில் புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மையால் ஒரு நாளைக்கு 650 பேர் மரணம்

------------------------------------------------------------------------------------------------------

1. ரிமினி கூட்டத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து

ஆக.21,2012. "இயல்பாகவே, மனிதர் இறைவனோடு உறவு கொண்டிருக்கிறார்" என்ற தலைப்பில் இத்தாலியின் ரிமினியில் நடைபெற்றுவரும் கூட்டத்திற்கு நல்வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆகஸ்ட் 19, இஞ்ஞாயிறன்று ரிமினியில் தொடங்கியுள்ள இக்கூட்டத்திற்கென அந்நகர் ஆயர் Francesco Lambiasiக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, மனிதர் பற்றியும், இறைவனுக்கான அவரது ஏக்கம் பற்றியும் பேசுவதென்பது, முதலில் மனிதருக்கு இயல்பாகவே படைத்தவரோடு இருக்கின்ற உறவை ஏற்பதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதர் இறைவனின் படைப்பு; படைப்பு என்ற சொல், இன்றைய உலகோடு ஏறக்குறைய ஒத்துவராத ஒன்றாகத் தெரிகின்றது; மனிதர் தன்னிலே முழுமையானவர், தனது இறுதிக்கதிக்குத் தானே பொறுப்பானவர் என்று நினைக்கவே நாம் விரும்புகின்றோம் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
மனிதர் இறைவனோடு தான் கொண்டுள்ள அடிப்படை உறவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றதையும் விடுத்து அவரது இதயம் இன்னும் இறைவனைத் தேடுகின்றது, ஆயினும் இத்தேடலை தவறான திசையில் தேடுகின்றார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.
போதைப்பொருள்கள், முறையற்ற வழிகளில் வாழும் பாலியல் வாழ்வு, எந்தவிலை கொடுத்தேனும் வெற்றியை அடைய முயற்சித்தல், தீவிர மத உணர்வின் ஏமாற்று வழிகள் போன்ற ஆபத்தான இடங்களுக்கு இட்டுச்செல்லும் சலிப்பூட்டும் மற்றும் போலியானவைகளில் மனிதர் வெறித்தனமாக முடிவில்லாதவரைத் தேடத் தொடங்குகின்றார் என்றும்  கூறியுள்ளார் திருத்தந்தை.
வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும் இக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து எட்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஒன்றிப்பும் விடுதலையும் என்ற கத்தோலிக்கப் பொதுநிலை இயக்கத்தால் 1980ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ரிமினியில் இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. மக்கள் மத்தியில் நட்புறவை ஏற்படுத்தும் நோக்கத்தையும் இக்கூட்டம் கொண்டுள்ளது.
1950களில் மிலானில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அருட்பணி Luigi Giussani, இளையோர் தங்களது கத்தோலிக்க விசுவாசத்தை அன்றாட வாழ்வில் வாழ்வதற்கு உதவும் நோக்கத்தில் இவ்வியக்கத்தை உருவாக்கினார்.


2. திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணத்தைத் தள்ளிப்போடும் திட்டமில்லை : அருள்தந்தை லொம்பார்தி

ஆக.21,2012. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையினால் லெபனன் பகுதியில் பதட்டநிலைகள் உருவாகியிருந்தாலும், லெபனன் நாட்டுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகள், லெபனன் நாட்டுக்குள்ளும் பரவக்கூடும் என்ற அச்சநிலை உருவாகியுள்ளதால் இது திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணத்திற்கு ஆபத்தாக அமையக்கூடும் என்று கடந்த வாரத்தில் செய்திகள் வெளியானதை முன்னிட்டு இவ்வாறு நிருபர்களிடம் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.
இத்திருப்பயணத்தின்போது பயன்படுத்தப்படும் திருத்தந்தையின் வாகனம் ஏற்கனவே கப்பல் மூலம் லெபனனுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் அறிவித்தார் திருப்பீடப் பேச்சாளர்.
வருகிற செப்டம்பர் 14 முதல் 16 முடிய திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணம் இடம்பெறும்.


3. யாழ்ப்பாணத்தின் படைக்குறைப்பில் திருப்தியில்லை: அமெரிக்க அதிகாரிகளிடம் யாழ்ப்பாணம் ஆயர் புகார்

ஆக.21,2012. யாழ்ப்பாண மாவட்டத்தில் படைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், படைக்குறைப்பில் திருப்தியில்லையென யாழ்ப்பாணம் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
இத்திங்களன்று யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரி வில்லியம்ஸ் கைன் ஸ்ரைனிடம் இவ்வாறு தெரிவித்தார் ஆயர் தாமஸ்.
இச்சந்திப்பு குறித்து நிருபர்களிடம் பேசிய ஆயர் தாமஸ்,  மீள்க்குடியமர்வுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், மீள்க்குடியமர்வில் மக்களுக்கு தேவையான வீடு, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாகச் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசு இன்னமும் முன்வைக்கவில்லை எனவும் வடமாநிலத் தேர்தலை அரசு இன்னமும் நடத்தவில்லை எனவும்,  ஒருவேளை இப்பகுதிக்கானத் தேர்தலை அரசு நடத்தினால் மக்கள் தம்முடன் இல்லையென்பதை உலகம் அறிந்து விடும் என அச்சம் கொள்கின்றது எனவும் அவர் கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளபோதும் அரசு அவற்றை அமல்படுத்த வேண்டும். அவற்றை அமல்படுத்தினால் அது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார் ஆயர் தாமஸ்.
யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த அமெரிக்க தூதரகக் குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


4. தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள சிறுமி விவகாரத்தை மனித உரிமை நிறுவனங்கள் ஊதிப் பெரிதுபடுத்தின : இராவல்பிண்டி ஆயர், Paul Bhatti குற்றச்சாட்டு

ஆக.21,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் சிறையில் வைக்கப்பட்டுள்ள Rimsha Masih என்ற 11 வயது சிறுமி விவகாரத்தில் சமூக ஆர்வலர்களும் மனித உரிமை நிறுவனங்களும் நடந்து கொள்ளும் விதம் குறித்து குறை கூறியுள்ளார் Islamabad-Rawalpindi ஆயர் Rufin Anthony.
சமூக ஆர்வலர்களும் மனித உரிமை நிறுவனங்களும் தங்களது சொந்த ஆதாயங்களின் அடிப்படையில் அவ்விவகாரத்தை விவரித்துள்ளனர் எனக்கூறிய ஆயர் அந்தோணி, இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும் குறை கூறினார்.
ஆயரின் இதே கருத்தையே வெளிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பிரதமரின் தேசிய நல்லிணக்க ஆலோசகர் Paul Bhatti, இச்சிறுமியின் விவகாரம், 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் வன்முறைக்குப் பயந்து வெளியேறவும் காரணமாகியுள்ளது என்றும் கூறினார்.   
இவ்விவகாரத்தில் இச்சிறுமிக்குச் சாதகமாக முடிவுகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையையும் கத்தோலிக்க அரசியல்வாதியான Paul Bhatti தெரிவித்தார்.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேவ நிந்தனைச் சட்டத்திற்குக் கீழ், இதுவரை குறைந்தது 1000 பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 60க்கும் மேற்பட்டோர் சட்டங்களுக்குப் புறம்பாக மக்களின் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
வயது குறைந்த ஒருவரை, தேவ நிந்தனைச் சட்டத்திற்குக் கீழ் கைது செய்திருப்பது இதுவே முதல் முறை. மனநலம் சரியில்லாத இவரைக் கைது செய்திருப்பதைக் கண்டு இஸ்லாமியரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.


5. சென்னை : முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் விடுதலை செய்யப்படுமாறு சிறைப்பணி அமைப்பு வலியுறுத்தல்

ஆக.21,2012. தமிழகச் சிறைகளில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனைகளை அனுபவித்துவரும் முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் விடுதலை செய்யப்படுமாறு தமிழகக் கத்தோலிக்க சிறைப்பணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்றும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியன்றும் தமிழகத்தில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது.
இதையொட்டி தமிழக அரசு கைதிகளின் பட்டியலை தயாரித்து வரும் இவ்வேளையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக் கைதிகள் மீது அரசு சலுகை காட்ட வேண்டுமென்று தாங்கள் வலியுறுத்துவதாக, இந்திய சிறைப்பணி அமைப்பின் செயலர் அமலதாஸ் சேசுராஜா கூறினார்.
தமிழக ஆளுனர் திருவாளர் ஜி.ரோசைய்யாவை, சென்னை-மயிலை பேராயர் மலையப்பன் சின்னப்பா அவர்கள் தலைமையில் சந்தித்து இந்தத் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது இந்திய சிறைப்பணி அமைப்பு.  
கத்தோலிக்கத் திருஅவையின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்திய சிறைப்பணி அமைப்பின் தமிழகக்கிளையின் 300க்கும் மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்கள் தமிழகத்தின் முக்கிய சிறைகளைச் சந்தித்து வருகின்றனர்.  
அக்டோபர் 2, இந்திய தேசிய சிறைக் கைதிகள் நல்வாழ்வு தினமாகும்.


6.    வடகிழக்கு மாநில மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு புனே ஆயர் வலியுறுத்தல்

ஆக.21,2012. இந்தியாவின் வடகிழக்கு மாநில மக்கள் எந்தவிதத் தாக்குதலுக்கும் உள்ளாகாதவாறு பாதுகாக்கப்படுமாறும் அவர்கள் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழ்வதற்கு உதவுமாறும் புனே ஆயர் Thomas Dabre மகாராஷ்டிர அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஞ்ஞாயிறு திருப்பலி முடிந்து புனே நகரில் வாழும் ஏறத்தாழ 500 வடகிழக்கு மாநில மக்களைச் சந்தித்துப் பேசிய ஆயர் தாப்ரே இவ்வாறு மாநில அரசை வலியுறுத்தினார்.
சமத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகிய பண்புகளைக் கொண்ட நகரம் புனே எனவும், இந்நகரத்தில் இச்சனிக்கிழமை இரவு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நகரத்தின் அமைதியைக் குலைப்பதாக இருக்கின்றன எனவும் ஆயர் கவலை தெரிவித்தார்.


7. வடகிழக்கு இந்தியருக்கெதிரான செய்திகளுக்கு அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம் கண்டனம்

ஆக.21,2012. இந்தியாவின் வடகிழக்கில் வாழும் மக்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் செய்திகளைப் பரப்பி நாட்டில் வன்முறையைத் தூண்டும் சில சமயத் தீவிரவாதிகளின் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது AICU என்ற அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம்.  
வடகிழக்கு இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள AICUன் புதிய தலைவர் Eugene Gonsalves, சமூக ஊடக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாட்டை குழப்பத்துக்குள் உள்ளாக்கியவர்களுக்கு எதிரானத் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
அசாமில் இடம்பெறும் இன வன்முறை தொடர்பாக தென்னிந்தியாவில் வாழும் வடகிழக்கு இந்தியர்கள் தாக்கப்படுவார்கள் என்ற வதந்திச் செய்திகள் வெளியானதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தாயகங்களுக்குத் திரும்பினர்.
ஆயினும், வட கிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவதாக பரவிய செய்தி வதந்தி என உணர்ந்த, அம்மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மீண்டும் சென்னை திரும்பி வருவதாக, இரயில்வே துறை அதிகாரிகள் இச்செவ்வாயன்று தெரிவித்தனர்  
இந்தியாவில் 91 வருட பழமை கொண்ட AICU அமைப்பில் ஏறத்தாழ ஒரு கோடியே 70 இலட்சம் கத்தோலிக்கப் பொதுநிலையினர் உறுப்பினர்களாக உள்ளனர்.


8. இலங்கையில் புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மையால் ஒரு நாளைக்கு 650 பேர் மரணம்

ஆக.21,2012. ஏறத்தாழ 2 கோடியே 10 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் ஒரு நாளைக்கு 650 பேர் வீதம் இறக்கின்றனர் என்று  அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகத்தின் உதவிச் செயலர் Palitha Mahipala அறிவித்தார்.
56 விழுக்காட்டினர் இதயம் தொடர்புடைய நோய்களாலும், 10.6 விழுக்காட்டினர் சுவாசம் தொடர்புடைய நோய்களாலும், 26 விழுக்காட்டினர் போதுமான உடற்பயிற்சியின்மையாலும் இறக்கின்றனர் என்றும் அவர் கூறினார். 
புகைப்பிடித்தல், மது அருந்துதல், முறையற்ற உணவுப் பழக்கம், அமைதியற்ற வாழ்க்கை ஆகியவை இவ்விறப்புகளுக்கு முக்கிய காரணங்கள் என்று தெரிவித்த Mahipala, இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 23 இலட்சம் அமெரிக்க டாலர் கொண்ட திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார்.
இலங்கையில் ஒரு நாளில் 1,250 குழந்தைகள் பிறக்கும் அதேவேளை, ஒரு நாளில் ஏறக்குறைய ஆயிரம் இறப்புகள் இடம்பெறுகின்றன, இவற்றில் 65 விழுக்காட்டுக்கு, இதய நோய்கள், மூளையில் இரத்தக்கசிவு, புற்றுநோய், சர்க்கரை நோய் ஆகியவை காரணங்கள் என்றும் Mahipala அறிவித்தார். 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...