Wednesday, 1 August 2012

Catholic news in Tamil - 31/07/12

1. திருத்தந்தையின் ஆறுதல் வார்த்தைகள் சிரியாவின் அனைத்துச் மக்களுக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றன-அலெப்போ அர்மேனிய ரீதி பேராயர்

2. வெளியிலிருந்து வழங்கப்படும் ஆயுதங்களால் சிரியாவில் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது - அனைத்துலக காரித்தாஸ்

3. சிரியாவின் அகதிகளிடையே காரித்தாஸ் அமைப்பின் பணி

4. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் முதல் தேதி புதுடெல்லியில் மாபெரும் பேரணி

5. பிரதமரின் பயணம் அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கு உதவியுள்ளது

6. ஆப்ரிக்காவில் கருத்தடை சாதனங்களை ஊக்குவிப்பது குறித்து கென்ய ஆயர்கள் கவலை

7. உலகின் பசியைப் போக்குவதற்கு கல்வியாளர்களின் முயற்சி தேவை - ஐ.நா.

8. உலக அளவில் சமய சுதந்திரம் பின்னடைவு

9. உலகில் இடம்பெறும் 91 விழுக்காட்டு தாய்மைப்பேறு இறப்புகள் தடுத்து நிறுத்தக்கூடியவை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் ஆறுதல் வார்த்தைகள் சிரியாவின் அனைத்துச் மக்களுக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றன-அலெப்போ அர்மேனிய ரீதி பேராயர்

ஜூலை31,2012. துன்புறும் சிரியா மக்களோடு திருத்தந்தை ஆன்மீகரீதியில் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு அவர்களுக்கு அவர் தெரிவிக்கும் ஆறுதல் தங்கள் இதயங்களில் நம்பிக்கையை விதைப்பதாகத் தெரிவித்தார் அலெப்போ அர்மேனிய-கத்தோலிக்க ரீதி பேராயர் Boutros Marayati.
சிரியாவில் அமைதி ஏற்படுவதற்கு இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் திருத்தந்தை விடுத்த அழைப்பு, சிரியாவின் சுன்னி இசுலாம் பிரிவினருக்கும் Alawites இசுலாம் பிரிவினருக்கும் இடையே அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்குச் செபிக்க வேண்டுமென்று அந்நாட்டுக் கத்தோலிக்கருக்கு நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பேராயர் Marayati தெரிவித்தார்.
திருத்தந்தையின் இந்த அழைப்பு ஏற்கனவே அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றும், சிரியாவின் பல்வேறு பங்குகளில் அது விநியோகிக்கப்படும் என்றும் அலெப்போ பேராயர் கூறினார்.
சிரியாவின் இராணுவத்துக்கும் சுதந்திர சிரியா இராணுவம் என்ற புரட்சிப்படைக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் வன்முறைகளின் மத்தியில் அப்பாவி மக்கள் ஆதரவற்று பயந்த நிலையில் வாழ்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
Alawites என்ற இசுலாம் பிரிவானது, சிரியாவிலுள்ள புகழ்பெற்ற தியானயோகப் பிரிவாகும். இது ஷியா இசுலாமின் Twelver என்ற பிரிவைச் சேர்ந்தது.


2. வெளியிலிருந்து வழங்கப்படும் ஆயுதங்களால் சிரியாவில் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது - அனைத்துலக காரித்தாஸ்

ஜூலை,31,2012. வெளிநாடுகளிலிருந்து சிரியாவுக்குள் ஆயுதங்கள் கொண்டுவரப்படுவது அந்நாட்டின் தற்போதைய நிலைமையை மேலும் மோசமான நிலைக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்று அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனப் பொதுச் செயலர் Michel Roy கவலை தெரிவித்தார்.
தற்போது சிரியாவில் போர் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றது என்றும், புரட்சியாளர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் வெளியிலிருந்து வழங்கப்படும் ஆயுதங்களால் இந்தப் போர் மேலும் தீவிரமடைந்து வருகின்றது என்றும் Michel Roy கூறினார்.
சிரியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு இந்த வழியைப் பின்பற்றக் கூடாது என்றும் கூறிய அவர், சிரியாவில் அதிகரித்து வரும் வன்முறை, வருகிற செப்டம்பரில் திருத்தந்தை லெபனன் நாட்டுக்கு மேற்கொள்ளும் திருப்பயணம் இரத்து செய்யப்படுவதற்குக் காரணமாக அமையக்கூடுமோ என்ற கவலை இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தப் போர், ஏற்கனவே லெபனன் நாட்டின் வடபகுதியில் சுன்னி பிரிவினருக்கும் Alawites இசுலாம் பிரிவினருக்கும் இடையே பரவியுள்ளது என்றுரைக்கும் Michel Roy, இப்போது தொடங்கியுள்ள இந்தப் போர் வெகு எளிதாக முடியும் எனத் தான் கருதவில்லை எனவும் தெரிவித்தார்.
சிரியா நாட்டு அகதிகளுக்குத் தற்போது உணவு, உறைவிடம் மற்றும் மருந்துப் பொருள்களைக் கொடுத்து உதவி வரும் அரசு-சாரா அமைப்புக்களில் அனைத்துலக காரித்தாஸ் பெரிய அமைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது.


3. சிரியாவின் அகதிகளிடையே காரித்தாஸ் அமைப்பின் பணி

ஜூலை,31,2012. சிரியாவில் இடம்பெறும் மோதல்களால் இதுவரை இரண்டு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், அதில் ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் லெபனனில் குடியேறியுள்ளதாகவும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ஜோர்டன் மற்றும் துருக்கியிலும்கூட எண்ணற்ற சிரியா நாட்டினர் அடைக்கலம் தேடியுள்ளதாகக் கூறும் காரித்தாஸ் அமைப்பு, லெபனன் எல்லையில் அகதிகளைத் தடுக்க, இராணுவத்தை நிறுத்த முயலும் லெபனன் அரசின் திட்டம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளது.
சிரியா நாட்டு அகதிகளிடையே லெபனன் நாட்டில் தன் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு, உணவு மற்றும் உளரீதியான உதவிகளை வழங்குவதோடு, குழந்தைகளுக்கான நடமாடும் மருத்துவமனை ஒன்றையும் நடத்திவருகிறது.
ஜோர்டன் மற்றும் துருக்கியிலும் அகதிகளுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்குவதோடு, சிரியாவில் இடம்பெயர்ந்து வாழும் மக்களிடையேயும் தன் சேவைகளை ஆற்றிவருகின்றது கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.


4. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் முதல் தேதி புதுடெல்லியில் மாபெரும் பேரணி

ஜூலை,31,2012. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் முதல் தேதி இப்புதன்கிழமையன்று புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் காலை 9 மணிக்கு மாபெரும் போராட்டமும் பேரணியும் நடைபெறும் என்று இந்திய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் அவர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் ஆகஸ்ட் 10ம் தேதியன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வகைகளில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற ஒரு மக்களாட்சி நாட்டில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்குத் தொடர்ந்து போராட வேண்டியிருக்கின்றது, எனவே வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இவ்விவகாரத்தை அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு தாங்கள் வலியுறுத்துவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆயர் நீதிநாதன். 
தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சலுகைகள் மறுக்கப்படும் பகுதி 1950ம் ஆண்டின் அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 10ம் தேதியாகும். இந்நாள் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.


5. பிரதமரின் பயணம் அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கு உதவியுள்ளது

ஜூலை,31,2012. இன வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தை பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிட்டுள்ளது, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கு பிறரன்பு நிறுவனங்களுக்கு உதவியுள்ளது என யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.
வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் போடோ பழங்குடி இன மக்களுக்கும், மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து குடியேறியுள்ள முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரங்களில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 4 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் 235 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமரின் பயணம் பற்றிக் கூறிய Bongaigaon மறைமாவட்ட பேச்சாளர் அருட்பணி தாமஸ் டி சில்வா, பிரதமரின் பயணம் நிவாரணப் பணிகளைச் செய்வதற்கு வழி அமைத்துள்ளது என்று கூறினார்.


6. ஆப்ரிக்காவில் கருத்தடை சாதனங்களை ஊக்குவிப்பது குறித்து கென்ய ஆயர்கள் கவலை

ஜூலை,31,2012. ஆப்ரிக்காவில் கருத்தடை சாதனங்களை ஊக்குவிப்பதற்கு பன்னாட்டு அளவில் முயற்சிகள் எடுக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர் கென்ய ஆயர்கள்.
கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது மனிதத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றது மற்றும் இந்நடவடிக்கை திருஅவையின் போதனைகளுக்கு எதிரானது, குறிப்பாக பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற கென்யாவில் இது அவர்களின் மத நம்பிக்கைக்கு முரணானது என்று கூறியுள்ளனர் கென்ய ஆயர்கள்.
இது ஏற்கனவே சமுதாயத்தின் அறநெறிக்கூறுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது மற்றும் இது மனித மாண்பையும் ஒருங்கமைவையும் புண்படுத்துவதாக இருக்கின்றது என்றும் அவர்கள் கூறினர்.
2020ம் ஆண்டுக்குள் இலட்சக்கணக்கான ஆப்ரிக்கச் சிறுமிகள் மற்றும் பெண்களுக்குச் செயற்கைக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இது கற்பனைக்கு எட்டாதது மற்றும் ஆபத்தானது என்றும் கென்ய ஆயர்கள் கூறியுள்ளனர்.


7. உலகின் பசியைப் போக்குவதற்கு கல்வியாளர்களின் முயற்சி தேவை - ஐ.நா.

ஜூலை,31,2012. பசியைப் போக்குவதற்கான உலகளாவிய முயற்சியின் ஓர் அங்கமாக, கல்வியாளர்கள் குறுநில விவசாயிகளுக்கு உதவவும், கிராமப்புற ஏழ்மையைக் குறைப்பதற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் வேண்டுமென ஐ.நா.உயர் அதிகாரி ஒருவர் கேட்டுள்ளார்.
போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில் கிராம சமூகவியல் குறித்து நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் உரையாற்றிய ஐ.நா.வின் FAO எனப்படும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத் தலைவர் José Graziano da Silva, கிராம மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அதனை மேம்படுத்துவதற்கு கல்வியறிவு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், சிறிய மற்றும் பெரிய உணவு உற்பத்தியாளர்கள் மத்தியில் போட்டிகளை நீக்குதல் உட்பட பசியைப் போக்குவதற்கான உலகளாவிய முயற்சியில் கல்வியாளர்கள் உதவுமாறு கேட்டுள்ளார் da Silva.


8. உலக அளவில் சமய சுதந்திரம் பின்னடைவு

ஜூலை,31,2012. உலக அளவில் சமய சுதந்திரம் பின்னடைவு கண்டுள்ளதாக உலகில் சமய சுதந்திரம் குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
உலக அளவில் யூதமத விரோதப்போக்கும், சிறுபான்மை சமயச் சமூகங்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தெய்வநிந்தனைச் சட்ட நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது அவ்வறிக்கை.
மேலும், இலங்கையில் சமுதாய மீறல்கள் மற்றும் மதப் பாகுபாட்டுச் சம்பவங்கள் கடந்த 2011ம் ஆண்டு பதிவாகியுள்ளதெனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கிறிஸ்தவ ஆலயத்தின்மீது பௌத்தர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இவ்வாறான சில சமூகமீறல் செயல்பாடுகளால் இலங்கையில் ஆங்காங்கே பரபரப்பு ஏற்பட்டது எனவும் கூறும் அவ்வறிக்கை, இருந்தபோதிலும், அண்மை ஆண்டுகளில் நடைபெற்ற தாக்குதல்களைவிட கடந்த வருடம் குறைவான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்தது.
மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல சம்பவங்கள் இடம்பெற்றபோது அதற்கு அரசு கண்டனம் வெளியிட்டது, ஆயினும் நடைமுறையில் செயல்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கும் திட்டத்தில் பிரச்சனை உள்ளதென அமெரிக்காவின் அறிக்கை குறை கூறியுள்ளது.


9. உலகில் இடம்பெறும் 91 விழுக்காட்டு தாய்மைப்பேறு இறப்புகள் தடுத்து நிறுத்தக்கூடியவை

ஜூலை,31,2012. உலகில் இடம்பெறும் 91 விழுக்காட்டு தாய்மைப்பேறு இறப்புகள் தடுத்து நிறுத்தக்கூடியவை என்பதால் தாய்மை மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறப்பின்போதும் போதிய கவனம் செலுத்தப்படாததால் ஆண்டுதோறும் 3 இலட்சத்து 33 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர் என்றும் அந்நிறுவனம் கூறியது.
இவ்விறப்புக்களில் 99 விழுக்காடு வளரும் நாடுகளில், குறிப்பாக, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் இடம்பெறுகின்றது என்று அந்நிறுவனம் மேலும் கூறியது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...