Friday 24 August 2012

Catholic News in Tamil - 23/08/12

1. திருத்தந்தை : திருஅவையில் பொதுநிலையினர் உடன்பொறுப்பாளர்கள்

2. இறையடி சேர்ந்த கர்தினாலின் மறைவுக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி

3. திருத்தந்தையின் லெபனான் நாட்டுப் பயணம் வசந்தத்தின் வருகையைப்போல் இருக்கும்

4. ஸ்காட்லாந்து அரசியல் தலைவர்கள் குடும்ப உறவுகளைக் கட்டியெழுப்பவேண்டும் -  கர்தினால் Keith O'Brien

5. சிரியாவில் பட்டினியாலும், நோயாலும் பாதிக்கப்பட்டுள்ள 12,000 கிரேக்கக் கத்தோலிக்க விசுவாசிகள்

6. ரிமினி அகில உலக மாநாட்டில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் இசை நிகழ்ச்சி

7. மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் வீரரின் முன்னேற்றத்திற்குக் கத்தோலிக்கப் பள்ளியும் காரணம்

8. உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல்: 4 இந்தியப் பெண்கள்


------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை : திருஅவையில் பொதுநிலையினர் உடன்பொறுப்பாளர்கள்

ஆக.23,2012. திருஅவையின் வாழ்விலும் செயலிலும் பொதுநிலை விசுவாசிகள் அருட்பணியாளர்களோடு ஒத்துழைப்பாளர்களாக நோக்கப்படாமல், உண்மையில் இவர்கள் உடன்பொறுப்பாளர்களாகக் கருதப்பட வேண்டுமென்று திருத்தந்தை கூறியுள்ளார்.
Romania நாட்டு Iasiல் இப்புதனன்று தொடங்கியுள்ள அனைத்துலக கத்தோலிக்க கழகத்தின் ஆறாவது பொதுப் பேரவைக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, திருஅவையில் பொதுநிலை விசுவாசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
விசுவாச ஆண்டும், நற்செய்தியைப் புதிய முறைகளில் அறிவிப்பது குறித்த ஆயர்கள் மாமன்றமும் தொடங்கவிருக்கும் இவ்வேளையில், திருஅவையிலும் சமூகத்திலும் பொதுநிலையினரின் பங்கு குறித்த  இப்பேரவை பொதுநிலையினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கிறிஸ்தவர்களின் பண்புகளை நினைவில் கொண்டு திருஅவையில் ஓர் ஆழமான ஒன்றிப்புடன் வாழவும் அவர் பொதுநிலையினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேய்ப்பர்களுக்கும் பொதுநிலையினருக்குமிடையே உள்ள உள்ளங்கலந்த உரையாடலின் மூலம் திருஅவைக்குப் பல நன்மைகள் உண்டாகும், இதனால் பொதுநிலையினரிடையே பொறுப்புணர்வு வலுப்பெற்று ஆர்வம் வளர்ந்து, மேய்ப்பர்களின் பணியோடு அவர்களின் ஆற்றல் அதிக எளிதாக இணைந்து செயல்பட ஏதுவாகும், மேய்ப்பர்கள் பொதுநிலையினரின் அனுபவத்தால் பயன்பெற்று ஆன்மீக, உலகக் காரியங்களில் இன்னும் தெளிவாகவும் ஏற்றமுறையிலும் தீர்வு எடுக்க முடியும் என்ற லூமென் ஜென்சியும் மறைக்கொள்கைத்திரட்டின் கூற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இந்த ஆறாவது அனைத்துலக கத்தோலிக்க கழகத்தின் பொதுப் பேரவை வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இதில் 4 கண்டங்களின் 35 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கத்தோலிக்க கழகத்தின் பொதுநிலையினர்: திருஅவையிலும் சமூகத்திலும் உடன்பொறுப்பாளர்கள்என்ற தலைப்பில் இப்பேரவை நடைபெற்று வருகிறது. கத்தோலிக்கத் திருஅவையில் பொதுநிலையினரின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.


2. இறையடி சேர்ந்த கர்தினாலின் மறைவுக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி

ஆக.23,2012. தாய்வான் நாட்டின் Kaohsiung மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயராகப் பணிபுரிந்த கர்தினால் Paul Shan Kuo-Hsi, இப்புதன் காலை இறையடி சேர்ந்தார். அவருக்கு வயது 89.
கர்தினாலின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Kaohsiung ஆயர் Peter Liu Cheng-chungக்கு இரங்கல் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
கர்தினாலின் மறைவு Kaohsiung மறைமாவட்டத்திற்கும் சீனத் திருஅவைக்கும் ஈடுசெய்ய இயலாத ஓர் இழப்பு என்று திருத்தந்தை தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
1923ம் ஆண்டு சீனாவின் Shanghaiயில் பிறந்த Paul Shan, தனது 23வது வயதில் பெய்ஜிங்கில் இயேசு சபையில் சேர்ந்து குருவானார்.
1963ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை இயேசுசபை நவதுறவிகளின் வழிகாட்டியாகவும், 1976 முதல் மூன்றாண்டுகள் Kuangchi கத்தோலிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணிபுரிந்த Paul Shan, 1980ம் ஆண்டு Hwalien மறைமாவட்டத்தின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆசிய ஆயர் பேரவையிலும், திருப்பீடத்திலும் பொறுப்பான பணிகளை ஆற்றிய ஆயர் Paul Shan Kuo-Hsiஐ 1998ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கர்தினாலாக உயர்த்தினார்.
கர்தினால் Paul Shan Kuo-Hsiன் விருப்பப்படி, அவரது அடக்கச் சடங்குகள் எளிமையான முறையில் செப்டம்பர் முதல் தேதி Kaohsiungல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் Paul Shan Kuo-Hsiன் மறைவை அடுத்து, திருஅவையில் 207 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை 118 பேருக்கு உள்ளது. கர்தினால்கள் குழுவில் தற்போது 7 பேர் இயேசு சபையைச் சேர்ந்தவர்கள்.


3. திருத்தந்தையின் லெபனான் நாட்டுப் பயணம் வசந்தத்தின் வருகையைப்போல் இருக்கும்

ஆக.23,2012. லெபனான் நாட்டுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணம் அந்நாட்டில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல, மாறாக, லெபனானில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் ஒரு பயணம் என்று லெபனான் நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
வருகிற செப்டம்பர் 14ம் தேதி முதல் 16ம் தேதி முடிய திருத்தந்தை லெபனான் நாட்டில் மேற்கொள்ளும் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை ஒருங்கிணைக்கும் ஆயர் Camille Zaidan, இப்பயணம் பற்றிய விவரங்களை இப்புதனன்று செய்தியாளர்களிடம் விளக்கியபோது இவ்வாறு கூறினார்.
லெபனான் நாட்டு ஆயர்கள் மட்டுமின்றி, நாட்டுத் தலைவரும் திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Zaidan, நாட்டின் உயர் அதிகாரிகள் வத்திக்கானுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர் என்றும் எடுத்துரைத்தார்.
லெபனான் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் திருத்தந்தையின் வருகை வசந்தத்தின் வருகையைப்போல் இருக்கும் என்ற தன் நம்பிக்கையை ஆயர் Zaidan நிருபர்கள் கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.
திருத்தந்தையின் லெபனான் பயணம் குறித்து ஊடகங்களில் அண்மையில் வெளியாகி வரும் வதந்திகளைப் பொருட்படுத்தாமல், லெபனானில் அவர் வருகை குறித்து எதிர்பாராத அளவு ஆர்வம் உருவாகியுள்ளதென பயண ஏற்பாடுகளைக் கண்காணிக்கும் அருள்தந்தை Abdo Abu Kassem செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, திருத்தந்தை லெபனான் நாட்டில் பல்வேறு இடங்களுக்குச் சாலைவழி மேற்கொள்ளும் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படவிருக்கும் சிறப்பு வாகனம் Beirut சென்றடைந்துள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.


4. ஸ்காட்லாந்து அரசியல் தலைவர்கள் குடும்ப உறவுகளைக் கட்டியெழுப்பவேண்டும் -  கர்தினால் Keith O'Brien

ஆக.23,2012. ஸ்காட்லாந்து அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் மணவாழ்வையும், குடும்ப உறவுகளையும் குலைப்பதற்குப் பதில், கட்டியெழுப்பவேண்டும் என்று கர்தினால் Keith O'Brien, கூறினார்.
ஆகஸ்ட் 26, வருகிற ஞாயிறன்று 'நாட்டின் திருமண ஞாயிறு' கடைபிடிக்கப்படும் என்று ஸ்காட்லாந்து ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் O'Brien அறிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து ஆயர்கள் பேரவை புதிதாக உருவாக்கியுள்ள திருமணம், குடும்பம் பணிகள் அவை என்ற பணிக்குழுவைப் பற்றிய சுற்றுமடல், வருகிற ஞாயிறன்று ஸ்காட்லாந்தில் உள்ள 500 கத்தோலிக்கப் பங்குகளில் வாசிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் திருஅவையில் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டில் இயற்கையின் வழிவந்த திருமண உறவையும், குடும்பங்களையும் போற்றி வளர்க்க ஒவ்வொரு கத்தோலிக்கரும் அழைக்கப்பட்டுள்ளார் என்று ஆயர்களின் சுற்றுமடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் ஒரே பாலினத் திருமணத்திற்கு ஆதரவு கூறாதபோது அரசியல் தலைவர்கள் ஒரே பாலினத் திருமணத்தை சட்டயமயமாக்க முயல்வது பெரும் அநீதி என்று கர்தினால் O'Brien அண்மைய நாட்களில் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


5. சிரியாவில் பட்டினியாலும், நோயாலும் பாதிக்கப்பட்டுள்ள 12,000 கிரேக்கக் கத்தோலிக்க விசுவாசிகள்

ஆக.23,2012. சிரியா நாட்டின் Rableh என்ற கிராமத்தில் துன்புறும் 12000 கிரேக்கக் கத்தோலிக்க விசுவாசிகளைக் காப்பாற்றுமாறு முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregorios III Laham  உலகின் அனைத்து அரசுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
Rableh கிராமத்தில் வாழும் இம்மக்கள் வெளி உலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இன்றி கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக துண்டிக்கப்பட்டு, பட்டினியாலும், நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறியது.
சிரியாவின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முன்னர், அங்கு மிகவும் நலிந்த நிலையில் வாடும் மக்களைக் காப்பது அகில உலக மனிதாபிமான அமைப்புக்களின் நிர்ப்பந்தம் என்று திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பன்னாட்டு உதவிகளும் உணவுப் பொருட்களும் சிரியாவை அடைந்துள்ளது என்றாலும், பிணைக் கைதிகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் Rableh கிராமத்து மக்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்காமல் அரசுக்கு எதிராகப் போரிட்டு வரும் குழுக்கள் உதவிகளைத் தடுத்து வருகின்றன என்று Fides செய்தி கூறியது.


6. ரிமினி அகில உலக மாநாட்டில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் இசை நிகழ்ச்சி

ஆக.23,2012. இத்த்தாலியின் ரிமினியில் நடைபெற்றுவரும் அகில உலக மாநாட்டில் மூளை வளர்ச்சி தொடர்பான Down Syndrome அறிகுறிகள் கொண்ட குழந்தைகள் இவ்வெள்ளியன்று இசை நிகழ்ச்சியொன்றை நடத்த உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இஸ்லாமாபாதில் Down Syndrome அறிகுறிகள் கொண்ட Rimsha Mashi என்ற 11 வயது சிறுமி தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது என்று Zenit கத்தோலிக்கச் செய்திக்குறிப்பொன்று கூறியது.
மனித உயிர்களைக் காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஓர் இத்தாலியக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விசை நிகழ்ச்சி மூலம் Down Syndrome உள்ள குழந்தைகளின் திறமைகள் வெளிப்படும் என்று இக்குழுவின் தலைவர் Pino Morandini கூறினார்.
Down Syndrome உள்ள குழந்தைகள் பொதுவாகவே அதிக அன்புடன் பழகக்கூடியவர்கள் என்றும், பிறருக்கு அதிகம் தருவதிலேயே இக்குழந்தைகள் கவனம் செலுத்துவார்கள் என்றும் இக்குழுவினர் கூறினர்.


7. மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் வீரரின் முன்னேற்றத்திற்குக் கத்தோலிக்கப் பள்ளியும் காரணம்

ஆக.23,2012. தான் வளர்ந்த குடும்பமும், தன்னை உற்சாகப்படுத்திய கத்தோலிக்கப் பள்ளியும் தனது முன்னேற்றத்திற்கு பெரும் காரணங்கள் என்று ஒலிம்பிக் வீரர் ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 29 வருகிற புதனன்று இலண்டன் நகரில் ஆரம்பமாகும் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பில் பல ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ளவிருக்கும் Brian Siemann என்ற இளைஞர் இவ்வாறு கூறினார்.
தான் பிறந்த மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான ஒரு சிகிச்சையால், பிறப்பிலிருந்தே இடுப்புக்குக் கீழ் உணர்விழந்த நிலையில் பிறந்த Siemann, Notre Dame என்ற கத்தோலிக்கப் பள்ளியில் சேர்ந்தபோது, அங்கிருந்த உடற்பயிற்சி ஆசிரியர் அளித்தத் தூண்டுதலால் தடகளப் போட்டிகளில் ஈடுபட முடிந்தது என்று கூறினார்.
ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி முடிய நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 110, 200, 400, 800 மீட்டர் ஓட்டங்களிலும், மாரத்தான் ஓட்டத்திலும் கலந்து கொள்ளவிருக்கும் Siemann, தான் அடைந்துள்ள இந்த உயர் நிலைக்குத் தன் குடும்பத்தினரும், பள்ளியும், தான் வளர்ந்த ஊர்ச்சமுதாயமுமே காரணம் என்று கூறினார்.


8. உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் 4 இந்தியப் பெண்கள்

ஆக.23,2012. உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் முதலிடத்தையும், இவரைத் தொடர்ந்து அமெரிக்கா அரசுத்தலைவரின் மனைவி மிச்செல் ஒபாமா, அயல்நாட்டு உறவுகள் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் ஆகியோரும் குறிப்பிட்ட இடங்களை பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல Forbes, நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் அரசியல், பொருளாதாரம் ஆகியத் துறைகளில் சக்தி மிகுந்தவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சார்பில், காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியா காந்தி 6வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, (Indra Nooyi), ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சாந்தா கோச்சர் (Chanda Kochhar) உட்பட மேலும் 4 இந்தியப் பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மியான்மார் அரசில் மாற்றங்கள் உருவாகக் காரணமானவரும், நொபெல் அமைதி விருதைப் பெற்றவருமான Aung San Suu Kyi, இப்பட்டியலில் 19வது இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...