Monday, 6 August 2012

Catholic News in Tamil - 06/08/12

1.  திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை.

2. Knights of Columbus அமைப்பின் சமய சுதந்திரம் குறித்த நடவடிக்கைகளுக்குத்  திருத்தந்தை பாராட்டு

3.திருத்தந்தையின் லெபனன் பயணத்திற்கு காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் வரவேற்பு

4.பிரச்சனைகளை வாய்ப்புக்களாகக் காண்பதற்குக் கீழைநாடுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன - இயேசுசபையின் அகில உலகத் தலைவர்

5.லாஸ் ஆஞ்சலஸ் நகரில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கொண்டாடிய குவாதலுப்பே அன்னை மரியாவின் திருநாள்

6.உலகில் அமைதி வேண்டி போலந்து பக்தர்களுடன் இராணூவ வீரர்களும் நடைபயணம்

7.ஹிரோஷிமா மக்கள் அணுசக்தியற்ற உலகுக்கு அழைப்பு.
...........................................................................

1.  திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை.

ஆக.06,2012. புதிய, முடிவற்ற‌ வாழ்வைப் பற்றி இறைவன் அளித்துள்ள வாக்குறுதியை நாம், உலக இன்பங்கள் அனைத்திற்கும் மேலானதாக கொள்ளவேண்டும் என இஞ்ஞாயிறன்று மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வுலகத் தேவைகளில் அதிகக் கவனம் செலுத்துவதை விடுத்து, அதையும் தாண்டி நாம் செல்வதற்கு உதவ இயேசு விரும்புகிறார் என்ற திருத்தந்தை, வாழ்வுக்கு முழு அர்த்தத்தையும்  நம்பிக்கையையும் வழங்கும் நம் இருப்பின் மையம் இயேசு கிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசமே என உரைத்தார்.
புனித அருளப்பர் நற்செய்தியில் காணப்படும் வாழ்வின் அப்பம் குறித்த உரையாடலையொட்டி தன் மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை, 'வாழ்வுதரும் உணவு நானே. என்னிடம் வருபருக்கு பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவ‌ருக்கு என்றுமே தாகம் இராது' என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துரைத்து, நாம் இவ்வுலகத் தேவைகளைத் தாண்டிச் செல்லவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இஸ்ராயேலர்களுக்கு வானிலிருந்து வழங்கப்பட்ட மன்னாவைக்காட்டிலும் மேலான ஒன்றால் விசுவாசிகள் ஊட்டம் பெற்றுள்ளார்கள், அதுவே கிறிஸ்து, ஏனெனில் அவர் ஏதாவது ஒன்றை வழங்குபவராக மட்டுமல்ல, தன்னையே வழங்குபவராக வருகின்றார் என மேலும் கூறினார் திருத்தந்தை.
நாம் இயேசுவில் விசுவாசம்கொண்டு, அவர் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ளும்போது வாழ்வை நிறைவாகப் பெறுவோம் எனவும் தன் ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.

2. Knights of Columbus அமைப்பின் சமய சுதந்திரம் குறித்த நடவடிக்கைகளுக்குத்  திருத்தந்தை பாராட்டு

ஆக.06,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரத்தைப் பாதுகாத்து வளர்க்கும் பணியைச் செய்துவரும் Knights of Columbus என்ற பிறரன்பு அமைப்பின் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சமய சுதந்திர உரிமை குறித்து மீண்டும் விளக்கி அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு முயற்சிகளை எடுத்துவரும் இவ்வேளையில், Knights of Columbus அமைப்பு, சமய சுதந்திரத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளில் தளராமல் ஈடுபட்டு வருவதை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
இம்மாதம் 7ம் தேதி, இச்செவ்வாய் முதல் 9ம் தேதி வரை கலிஃபோர்னியாவின் Anaheimல் 130வது உச்சி மாநாட்டை நடத்தவுள்ள இந்தப் பிறரன்பு அமைப்புக்குத் திருத்தந்தையின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இச்செய்தியை கர்தினால் பெர்த்தோனே, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார்.
18 இலட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள Knights of Columbus, உலகின் மிகப்பெரிய சகோதரத்துவ அமைப்பாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிகவும் செயல்திறத்துடன் இயங்கிவரும் முக்கிய பிறரன்பு அமைப்பாகவும் இது இருக்கின்றது. கடந்த ஆண்டில் 15 கோடியே 80 இலட்சம் டாலரையும் 7 கோடி மணி நேரங்களையும் பிறரன்பு பணிகளுக்கென இவ்வமைப்பு செலவழித்துள்ளது.

3.திருத்தந்தையின் லெபனன் பயணத்திற்கு காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் வரவேற்பு

ஆக.06,2012. வரும் மாதம் லெபனனில் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அந்நாட்டு காப்டிக் ரீதி கத்தோலிக்க திரு அவையின் சார்பில் தன் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் வெளியிட்டு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் காப்டிக் ரீதியின் முதுபெரும் தலைவர் கர்தினால் Anba Boulos Najib.
மத்திய கிழக்குப்பகுதி திரு அவைகளுக்கென நடத்தப்பட்ட சிறப்பு ஆயர் பேரவையின் இறுதி அறிக்கையை வெளியிடவரும் திருத்தந்தையின் இப்பயணம், அன்னைமரி எலிசபெத்தைச் சந்தித்ததை ஒத்திருக்கிறது என விவிலிய நிகழ்வை தன் செய்தியில் மேற்கோள் காட்டியுள்ள கர்தினால், திருத்தந்தையின் திருப்பயணம் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அத்தியாவசியமான ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு ஆயர் மாநாட்டின் இறுதி அறிக்கை மத்தியக்கிழக்குப்பகுதி மக்களை வழிநடத்த கத்தோலிக்கத் தலைவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும், மற்றும் திருத்தந்தையின் திருப்பயணம் அப்பகுதி மக்களுக்கு அமைதியையும் இணக்க வாழ்வையும் கொண்டு வருவதோடு நம்பிக்கையுடன் வாழ்வில் நடைபோட உதவும் என்ற தன் நம்பிக்கையும் தன் செய்தியில் வெளீயிட்டுள்ளார்  காப்டிக் ரீதியின் முதுபெரும் தலைவர் கர்தினால் Anba Boulos Najib.

4.பிரச்சனைகளை வாய்ப்புக்களாகக் காண்பதற்குக் கீழைநாடுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன - இயேசுசபையின் அகில உலகத் தலைவர்

ஆக.06,2012. நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தையும் வாய்ப்புக்களாகக் காண்பதற்குக் கீழை நாடுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன என்று இயேசுசபையின் அகில உலகத் தலைவர், அருள்தந்தை Adolfo Nicolas கூறினார்.
அண்மையில் கொண்டாடப்பட்ட புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருநாளையொட்டி இயேசுசபைத் தலைவர் வழங்கிய ஒரு மறையுரையில் உலகம் சந்தித்து வரும் பிரச்சனைகளை ஆசிய, ஆப்ரிக்க நாடுகளின் கலாச்சாரக் கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
இம்மறையுரையின் ஒரு தொடர்ச்சியாக, அவர் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், ஐரோப்பிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகள் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சனைகளை எவ்விதம் மாற்றுக் கண்ணோட்டத்துடன் காணவேண்டும் என்பது குறித்துப் பேசினார்.
தீர்க்கமுடியாதப் பிரச்சனை என்ற எண்ணத்தை வெளிப்படுத்த, சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் “Kiki” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய இயேசு சபைத் தலைவர், இந்த வார்த்தையைப் பதம் பிரித்து பொருள் கண்டால், ஆபத்து, வாய்ப்பு என்ற இரு எண்ணங்களை “Kiki” என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கியுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் இன்றும் பொருளுள்ளதாய் கருதப்படும் குடும்பம் என்ற உண்மையை அடித்தளமாகக் கொண்டு, இவ்வுலகை நாம் கட்டியெழுப்பினால் சமுதாயம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் என்ற அனைத்துத் துறைகளிலும் நாம் தகுந்த தீர்வுகளைக் காணமுடியும் என்றும் இயேசு சபைத் தலைவர் எடுத்துரைத்தார்.
ஆசிய, ஆப்ரிக்கக் கலாச்சாரங்களில் காணப்படும் பல உயர்ந்த எண்ணங்களை மேற்கத்திய கலாச்சாரங்களில் வாழ்பவர்கள் கற்றுக்கொண்டால், இன்றைய ஆபத்துக்களை நாம் நேர்மறையான மனதோடு எதிர்கொள்ளமுடியும் என்று அருள்தந்தை Adolfo Nicolas தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

5.லாஸ் ஆஞ்சலஸ் நகரில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கொண்டாடிய குவாதலுப்பே அன்னை மரியாவின் திருநாள்

ஆக.06,2012. அமெரிக்கக் கண்டத்தில் நற்செய்தி முதன்முறை அறிவிக்கப்பட்டபோது அன்னை மரியா நற்செய்திப் பணியாளர்களுடன் இருந்து செயல்பட்டதுபோல, இன்று நாம் நற்செய்தியைப் புதிய வழிகளில் பறைசாற்றும்போதும் குவாதலுப்பே அன்னை மரியா நம்முடன் பணியாற்றுவார் என்று லாஸ் ஆஞ்சலஸ் பேராயர் Jose Gomez கூறினார்.
அமெரிக்காவின் லாஸ் ஆஞ்சலஸ் நகரின் Memorial Coliseum எனப்படும் ஒரு பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடி, குவாதலுப்பே அன்னை மரியாவின் திருநாளை இஞ்ஞாயிறன்று கொண்டாடினர். இத்திருப்பலியில் மறையுரையாற்றிய பேராயர் Gomez, குவாதலுப்பே அன்னை மரியா மெக்சிகோ மக்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கக் கண்டத்தில் வாழும் அனைவருக்குமே தனிப்பட்ட வகையில் தாயாக விளங்குகிறார் என்று கூறினார்.
Knights of Columbus என்ற அனைத்துலகக் கிறிஸ்தவ அமைப்பும், லாஸ் அஞ்சலஸ் உயர் மறைமாவட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்பெருவிழாவில் குவாதலுப்பே அன்னையின் உருவம் பதிந்த அற்புதத் துணியின் ஒரு பகுதியாக விளங்கும் புனிதப் பொருள் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருந்தது.
லாஸ் அஞ்சலஸ் நகரின் கத்தோலிக்க வரலாற்றில் இவ்வளவு மக்கள் கூடிவந்தது அண்மையக் காலங்களில் இருந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், Knights of Columbus அமைப்பினர் 2009ம் ஆண்டில் அரிசோனாவில் இதையொத்த ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

6.உலகில் அமைதி வேண்டி போலந்து பக்தர்களுடன் இராணூவ வீரர்களும் நடைபயணம்

ஆக.06,2012. உலகில் அமைதிவேண்டி போலந்தின் Warsaw நகரிலிருந்து 5000க்கும் மேற்பட்ட மக்கள் நான்கு குழுக்களாக அந்நாட்டின் Jasna Gora மரியன்னை திருத்தலம் நோக்கி கடந்த சனிக்கிழமையன்று நடைப்பயணத்தைத் துவக்கினர்.
700 இராணுவ வீரர்கள் கொண்ட குழுவும் இதில் ஒன்றாகும். இந்த இராணுவ வீரர்களுள் ஏறத்தாழ நூறுபேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
'சாட்சியம் வழங்குக' என்ற விருதுவாக்குடன் இடம்பெறும் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்வோருக்கு, இராணுவத்தினரிடையேப் பணியாற்றும் ஆயர் Jozef Guzdek திருப்பலி நிறைவேற்றி, இப்பயணத்தைத் துவக்கி வைத்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தினரிடையே பணியாற்றும் ஆயர் Richard Spencer,  Jasna Gora மரியன்னை திருத்தலத்தில் இராணுவத்தினரை சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கென நடைப்பயணம் மேற்கொள்ளும் இந்த பல்வேறு நாடுகளின் இராணுவ வீரர்கள், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தாலும், கத்தோலிக்க திருஅவை எனும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாக இந்த நடைப்பயணத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தார் போலந்து ஆயர் Guzdek.

7.ஹிரோஷிமா மக்கள் அணுசக்தியற்ற உலகுக்கு அழைப்பு.

ஆக.06,2012. ஜப்பானின் ஹிரோஷிமா நகர் அணுகுண்டு தாக்குதலின் அழிவுக்குள்ளாக்கப்பட்ட 67ம் ஆண்டு நினைவை அந்நகரில் 50,000 மக்கள் ஒன்று கூடி சிறப்பித்தனர்.
ஹிரோஷிமா நகர்  அணுகுண்டு வீச்சின் தாக்குதலுக்கு உள்ளானவர்களும் அண்மை ஃபுக்குஷிமா அணு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கலந்துகொண்ட  இந்நிகழ்வில், அணு ஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படவும், அணுசக்தியற்ற சமுதாயத்தைப் படைக்கவும் அழைப்பு விடப்பட்டது.
எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்குபெற்ற இந்த நிகழ்வில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா, ஹீரோஷீமா மேயர் Kazumi Matsui உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி நில நடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுக்குஷிமா அணு ஆலை விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அந்நாட்டின் அனைத்து 50 அணு ஆலைகளையும் மூடிய ஜப்பான் அரசு, தற்போது மின்சக்தி தேவையை முன்னிட்டு இரண்டு ஆலைகளை மட்டும் திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...