Monday, 13 August 2012

Catholic News in Tamil - 11/08/12


1. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் இளைஞர்களில் மாற்றத்தை உருவாக்கும்

2. இஸ்லாமிய, கிறிஸ்தவ தலித் மக்களுக்கு உரிமை வேண்டி கறுப்பு தினம்

3. இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் விசுவாச வெளிப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு

4. வேளாங்கண்ணி திருவிழாவிற்கு 67 இரயில்கள்:திருச்சி கோட்ட மேலாளர் தகவல்

5. தென் சூடான் அக‌திக‌ளின் துன்ப‌நிலை

6. இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்குப் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்

7. குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் ஊட்டுவதில் பின்தங்கிய நிலையில் தமிழகம்

8. ஆகஸ்ட் 12 - அகில உலக இளையோர் நாளுக்கென ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் இளைஞர்களில் மாற்றத்தை உருவாக்கும்

ஆக.11,2012. லெபனன் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதிக்கும், பேச்சுவார்த்தைகளுக்கும் ஒப்புரவுக்கும் லெபனின் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து குரல்கொடுத்து வரும் இவ்வேளையில், திருத்தந்தையின் திருப்பயணம் அந்நாட்டில் இடம்பெற உள்ளது முக்கியத்துவம் நிறைந்த ஒன்று என்றார் அந்நாட்டு திருச்சபை அதிகாரி ஒருவர்.
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள  “Redemptoris Mater” குருத்துவப் பயிற்சி இல்லத் தலைவர்  குரு Guillaume Bruté de Rémur, திருத்தந்தையின் செப்டம்பர் மாதத் திருப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய நேர்முகத்தில், மத்தியக்கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் மன்றப் பரிந்துரைகள் அடங்கிய சிறப்பு ஏட்டை வெளியிட திருத்தந்தை லெபனன் வரும்போது, பெரும் எண்ணிக்கையில் விசுவாசிகள் எகிப்திலிருந்தும் ஈராக்கிலிருந்தும் வந்து கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவ சபைகள் மட்டுமல்ல, கத்தோலிக்கத் திருசபைக்குள்ளேயே இருக்கும் மெல்கியத், மாரோனைட் மற்றும் காப்டிக் ரீதி சபைகளும் ஒன்றிணைந்து இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் குரு. Bruté de Rémur.
ஏனையத் திருப்பயணங்களுக்குப்பின் இடம்பெறுவதுபோல் லெபனனிலும் திருத்தந்தையின் இப்பயணம், இளைஞர்களிடையே உற்சாகத்தை வழங்கி, தேவ அழைத்தல்கள் பெருக உதவும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார் பெய்ரூட்டின் “Redemptoris Mater” குருத்துவப் பயிற்சி இல்லத் தலைவர்.


2. இஸ்லாமிய, கிறிஸ்தவ தலித் மக்களுக்கு உரிமை வேண்டி கறுப்பு தினம்

ஆக.11,2012. இந்தியாவில் இஸ்லாமிய‌த்திலும் கிறிஸ்த‌வ‌த்திலும் உள்ள‌ த‌லித் ம‌க்க‌ளுக்கு, அவ‌ர்க‌ளுக்கேயுரிய‌ உரிமைக‌ள் எவ்வித‌ பாகுபாடுமின்றி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ற‌ வேண்டுகோளுட‌ன் இவ்விரு ம‌த‌ங்களின் பிர‌திநிதிக‌ள் இவ்வெள்ளிய‌ன்று க‌றுப்பு தின‌த்தைக் க‌டைபிடித்த‌ன‌ர்.
கால‌தாம‌தமான‌ நீதி என்ப‌து ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ நீதிக்குச் ச‌ம‌ம் என இந்த‌ க‌றுப்பு தின‌ப் பேர‌ணியில் க‌ல‌ந்துகொண்டோருக்கு உரையாற்றிய டெல்லி பேராய‌ர் Vincent Concessao, இன்னும் காத்திருத்தல் இயலாது என உரைத்தார்.
இந்திய அரசியலமைப்பின் கீழ் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்திய வட இந்திய கிறிஸ்தவ சபையின் பொதுச்செயலர் Alwan Masih,  நாடு முன்னேற வேண்டுமெனில் அனைத்து சமூகங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என உரைத்தார்.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தலித் மக்களுக்கும், ஏனைய மதத்தில் உள்ள இதே இன மக்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்து, நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் நடத்தப்பட்ட இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, இந்திய கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை, தலித் கிறிஸ்தவர்களின் தேசிய அவை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.


3. இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் விசுவாச வெளிப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு

ஆக.11,2012. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தின் வெளிப்பாடு என அறிவித்துள்ளனர் கேரள ஆயர்கள்.
பெங்களூருவில் இவ்வெள்ளியன்று இடம்பெற்ற கேரள ஆயர்கள் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், இறைவனின் படைப்பை பாதுகாக்கவும், அதற்கேற்றாற்போல் நம் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்கவும் நம் விசுவாசம் அழைப்பு விடுக்கிறது என அவர்கள் கூறியுள்ளனர்.
மின்சக்தி பயன்பாடு மற்றும் கழிவகற்றும் திட்டங்களில் பல்வேறுப் பிரச்னைகளைச் சந்தித்து வரும் கேரளாவிற்கு, சூரிய சக்தி பயன்பாடு குறித்தும் சுற்றுச்சூழல் அக்கறையுடன் கூடிய கழிவுகளகற்றும் திட்டம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டியது ஆயர்களின் கடமை என, இவ்வெள்ளியன்று கூடிய 36 கேரள ஆயர்களும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து போதிப்பதோடு நிறுத்திவிடவில்லை, மாறாக ஆயர் இல்லங்களும் கத்தோலிக்க நிறுவனங்களும் சூரிய சக்தியைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளன என்றார் கேரள ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Andrews Thazhath.


4. வேளாங்கண்ணி திருவிழாவிற்கு 67 இரயில்கள்:திருச்சி கோட்ட மேலாளர் தகவல்

ஆக.11,2012. இந்தியாவின் முக்கியப்பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி திருவிழாவிற்கு திருவாரூர் வழியாக 67 இரயில்கள் முதல் முறையாக இந்த ஆண்டு இயக்கப்பட உள்ளது என்று திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் தெரிவித்தார்.
வேளாங்கண்ணி திருவிழா இம்மாதம் 28ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடக்கும் நிலையில், இப்பகுதிக்குப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல வசதியாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து முதல் முறையாக 67 இரயில்கள் இயக்கப்பட உள்ளன என பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்த திருச்சி கோட்ட இரயில்வே பொது மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன், அத்துடன் திருச்சியில் இருந்து சோதனை ஓட்டமாக இரயில்கள் இயக்கப்படும் என்றும், நாகூர்- சென்னைக்கு கம்பன் இரயில் அக்டோபர் மாதம் 11ம் தேதியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என்றும் கூறினார்.


5. தென் சூடான் அக‌திக‌ளின் துன்ப‌நிலை

ஆக.11,2012. தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிவரும் தென்சூடான் அகதிகள், உதவி நிறுவனங்களின் போதிய நிதி உதவிகளின்றி பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக ஃபிதெஸ் செய்தி நிறுவனம் அறிவிக்கின்றது.
போதிய நிதிகள் இன்மையால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அனைத்து பிறரன்புப் பணிகளையும் நிறுத்தி வைப்பதாக IOM எனும் குடியேற்றதாரர்களுக்கான அனைத்துலக அமைப்பு அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டும் இக்கத்தோலிக்க செய்தி நிறுவனம், அண்மையில் திரும்பி வந்துள்ள 16,000 தென் சூடான் அகதிகளும் பெரும் துயர்களை எதிர்நோக்குவதாகவும் அறிவித்துள்ளது.
புதிதாகச் சுதந்திரம் பெற்ற தென்சூடானுக்குள் இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை 1,16,000 தென்சூடான் மக்கள் அகதிகளாக சூடானிலிருந்து குடிபுகுந்துள்ளனர்.
புதிதாக்க் குடியேறியுள்ள மக்களுக்கு உதவ 4 கோடியே 50 இலட்சம் டாலர்கள் தேவைப்படுவதாக IOM அமைப்பு அறிவித்துள்ள வேளை, இதுவரை அதில் 12 விழுக்காடே கிட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6. இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்குப் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்

ஆக.11,2012. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நியாயங்களைத் தேட ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான பக்கச்சார்பற்ற விசாரணையே சிறந்த தீர்வாகும் என்று Amnesty International எனப்படும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான அதிகாரி அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசைப் பொறுத்தவரையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை அது கொண்டுள்ளது என உரைத்த அவர், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் வழியாக பல உறுதிமொழிகளை வழங்கியுள்ள இலங்கை அரசு, கடந்த ஜூலையில் வெளியிட்ட குழுவின் இறுதி அறிக்கையிலும் உறுதிமொழிகளை வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தமிழக மக்கள், இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் விதிமுறைப்படி இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்ந்தோர் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் அனந்த பத்மநாபன் வலியுறுத்தியுள்ளார்.


7. குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் ஊட்டுவதில் பின்தங்கிய நிலையில் தமிழகம்

ஆக.11,2012. குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்திய அளவில் தமிழகம் 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நோய் தொற்றுகளை தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தாயுடனான பிணைப்பைக் கூட்டுவது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிப்பது என, குழந்தைக்குப் பல நன்மைகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்ற போதிலும், தாய்ப்பால் ஊட்டுவதில், இந்திய அளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குனர் ஜெயா கூறும்போது, இந்திய அளவில், முதல் ஆறு மாதம், முழுமையாக தாய்ப்பால் ஊட்டும் விகிதம், தமிழகத்தில், 33.3 விழுக்காடாக உள்ளது, இது, தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது எனத் தெரிவித்தார்.


8. ஆகஸ்ட் 12 - அகில உலக இளையோர் நாளுக்கென ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி

ஆக.11,2012. உலக வரலாற்றில் இதுவரைக் கண்டிராத அளவு வளர்ந்துள்ள இளையோரின் எண்ணிக்கை நம்பிக்கை தருகிறது; இவர்களில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆகஸ்ட் 12 , இஞ்ஞாயிறன்று கொண்டாடப்படும் அகில உலக இளையோர் நாளுக்கென சிறப்புச்செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர், இளையோரிடம் உள்ள திறமைகளைச் சரியான வழியில் பயன்படுத்தினால் உலகக் குடும்பம் செழித்து வளரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலகம் சந்தித்துவரும் பொருளாதாரச் சரிவு இளையோரையே பெருமளவு பாதித்துள்ளது என்று கூறிய பான் கி மூன், இந்த நெருக்கடிக்கு அனைத்து நாடுகளும் சரியானதொரு தீர்வை விரைவில் காணாவிடில், இந்தத் தலைமுறையை நாம் இழக்கும் ஆபத்து உள்ளது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
புதிய எண்ணங்களின் விளைநிலங்கலாய் இருக்கும் இளையோருக்குத் தகுந்த கல்வியையும், பாதுகாப்பான பணிச் சூழலையும் நாம் உருவாக்கினால், இளையோர் உலக அமைதிக்காக உழைக்கும் சிறந்த தூதர்களாக மாறுவார்கள் என்று UNESCO தலைமை இயக்குனர் Irina Bokova செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...