Friday 24 August 2012

Catholic News in Tamil - 22/08/12

1. எத்தியோப்பியப் பிரதமரின் மறைவுக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி

2. சைப்ரஸ் நாட்டில் கிறிஸ்தவக் கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன - கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்

3. இருள் நிறைந்த ஒரு குகைக்குள் சிரியா பயணிக்கிறது - சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர்

4. சோமாலியாவில் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு Djibouti ஆயர்

5. "இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மனித முகம்" விருது பெற்ற செய்தியாளர் Kaiserன் உரைகள்

6. மாற்றுத்திறன் கொண்ட ஒலிம்பிக் வீரரின் கடவுள் நம்பிக்கை

7. "அமைதியற்ற உள்ளம்" - புனித அகஸ்தின் பற்றிய ஒரு திரைப்படம்

8. கண்ணாடி அணியாமல் பார்க்கக்கூடிய முப்பரிமாணப் படங்கள் விரைவில் அறிமுகம்

------------------------------------------------------------------------------------------------------

1. எத்தியோப்பியப் பிரதமரின் மறைவுக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி

ஆக.22,2012. இத்திங்களன்று காலமான எத்தியோப்பியப் பிரதமர் Meles Zenawiயின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.
57 வயதான Zenawi, 1991ம் ஆண்டு முதல் எத்தியோப்பியாவின் அரசுத் தலைவராகவும், 1995ம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் பிரதமாராகவும் பணியாற்றியவர்.
பிரதமரின் மறைவு குறித்து அந்நாட்டு அரசுத்தலைவர் Girma Wolde Giorgisக்கு திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த பிரதமரின் குடும்பத்திற்குத் திருத்தந்தையின் செபங்களைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் Zenawiயின் மறைவு குறித்து அனுதாபச் செய்தி அனுப்பியுள்ள ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் Zenawi அயராது உழைத்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.


2. சைப்ரஸ் நாட்டில் கிறிஸ்தவக் கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன - கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்

ஆக.22,2012. சைப்ரஸ் நாட்டில் 120க்கும் மேற்பட்ட கிறிஸ்தவக் கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Chrysostomos வெளியிட்டார்.
இத்தாலியின் ரிமினியில் நடைபெற்றுவரும் ஒரு மாநாட்டில் இத்திங்களன்று உரையாற்றிய முதுபெரும் தலைவர் இரண்டாம் Chrysostomos, சைப்ரஸ் நாட்டில் துருக்கி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பல கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
சூறையாடப்பட்டுள்ள கோவில்களை ஒரு அருங்காட்சியகமாக, அல்லது ஒரு கிடங்காக துருக்கி படைகள் மாற்றியுள்ளன என்றும், ஒரு சில இடங்களில் கிறிஸ்தவக் கோவில்கள் இஸ்லாமிய மசூதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன என்றும் முதுபெரும் தலைவர் எடுத்துரைத்தார்.
மதச்சுதந்திரம் குறித்து ரிமினியில் நடைபெறும் மாநாடு இச்சனிக்கிழமை முடிவுறும்.


3. இருள் நிறைந்த ஒரு குகைக்குள் சிரியா பயணிக்கிறது - சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர்

ஆக.22,2012. இருள் நிறைந்த ஒரு குகைக்குள் பயணிப்பதுபோல் சென்றுகொண்டிருக்கும் சிரியா, குகையின் முடிவில் தெரியும் ஒளியை இன்னும் நம்பி நடக்கிறது என்று Aleppoவின் சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர் Mar Gregorios Yohanna Abraham, கூறினார்.
சிரியாவில் தொன்றுதொட்டு நிலவி வந்த சகிப்புத்தன்மை குறைந்து வருவதைக் குறித்து தன் கவலையை வெளியிட்ட பேராயர் Abraham, வன்முறைகளைக் கைவிடுமாறு அனைத்து தரப்பினருக்கும்  வேண்டுகோள் விடுத்தார்.
'அரேபிய வசந்தம்' என்ற பெயரில் பல அரபு நாடுகளில் ஆரம்பித்த புரட்சிகளின் ஒரு பகுதியாக சிரியாவிலும் மக்கள் கிளர்ச்சி எழுந்தது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Abraham, இந்தக் கிளர்ச்சியால் நாட்டில் மேலும் குழப்பங்கள் நிலவியுள்ளது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது என்று கூறினார்.
உள்நாட்டுச் சண்டையில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஆயுதங்களைக் களையவும், போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யவும் பேராயர் Abraham அழைப்பு விடுத்தார்.


4. சோமாலியாவில் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு Djibouti ஆயர்

ஆக.22,2012. கடந்த 21 ஆண்டுகள் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருந்த சோமாலியாவில் இத்திங்களன்று அந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துள்ளது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று Djiboutiன் ஆயரும், Mogadishu மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான Giorgio Bertin கூறினார்.
சோமாலியாவில் உள்ள 135 பழங்குடி இனங்களின் தலைவர்களால் தெரிவு செய்யப்பட 275 பிரதிநிதிகள் இத்திங்களன்று Mogadishu விமான நிலையத்தில் சந்தித்ததைப் பற்றி கருத்து தெரிவித்த ஆயர் Bertin, இச்சந்திப்பு நம்பிக்கை தரும் ஒரு முயற்சி என்று குறிப்பிட்டார்.
பாதுகாப்புக் காரணங்களால் சோமாலியாவின் பாராளுமன்றம் 2000ம் ஆண்டு Djiboutiயிலும், 2004ம் ஆண்டு கென்யாவிலும் சந்திக்க வேண்டியிருந்தது. இவ்வாண்டு முதன் முறையாக அந்நாட்டின் பாராளுமன்றம் Mogadishuவில் சந்தித்துள்ளது.
இச்சந்திப்பு ஒரு முன்னேற்றம் என்றாலும், சோமாலியாவின் பயணம் இன்னும் பல காதங்கள் செல்லவேண்டியுள்ளது என்று ஆயர் Bertin சுட்டிக்காட்டினார்.


5. "இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மனித முகம்" விருது பெற்ற செய்தியாளர் Kaiserன் உரைகள்

ஆக.22,2012. அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டிற்குகந்த ஒரு தயாரிப்பாக, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்போது Time மாதஇதழின்  செய்தியாளராகப் பணியாற்றி விருதுகள் பெற்ற Robert Blair Kaiser இந்தியாவின் பல இடங்களில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்புத்துறை எழுத்தாளராகப் புகழ்பெற்ற இயேசு சபை அருள்தந்தை Gaston Roberge அவர்களும், SIGNIS அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சியில், "இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மனித முகம்" என்ற தலைப்பில் Kaiser உரைகள் நிகழ்த்துவார் என்று கூறப்படுகிறது.
பல்வேறு மதங்களையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்ட இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் எண்ணங்களுக்கு ஏற்ப, Kaiser தன் உரைகளை பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும் வழங்குவார்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 13ம் தேதி இந்தியாவை அடையும் Kaiser,  டார்ஜீலிங், குவஹாத்தி, ஷில்லாங், மும்பை, பூனே, புதுடில்லி ஆகிய பல இடங்களில் அக்டோபர் மாதம் 4ம் தேதி முடிய உரையாற்றுவார்.


6. மாற்றுத்திறன் கொண்ட ஒலிம்பிக் வீரரின் கடவுள் நம்பிக்கை

ஆக.22,2012. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தான் வென்றாலும் தோற்றாலும் இறைவன் தன்னை எப்போதும் கண்காணித்து வருகிறார் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் Gemma Rose Foo, கூறினார்.
ஆகஸ்ட் 29, வருகிற புதனன்று இலண்டன் நகரில் ஆரம்பமாகும் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குதிரைப் பந்தயப் பிரிவில் கலந்து கொள்ள பயிற்சிகளை மேற்கொண்டு வரும் Gemma, தான் வாழ்வில் சந்தித்த பல்வேறு சவால்களில் இறைவனின் தொடர்ந்த கண்காணிப்பை உணர்ந்ததாக CNS கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
புனித தெரேசா கான்வென்ட் பள்ளியில் பயிலும் 16 வயது இளம்பெண் Gemma, cerebral palsy எனப்படும் மூளை மற்றும் நரம்பு தொடர்பான குறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்.
சரிவர நடக்க முடியாத Gemma, தன் குறையைப் பெரிதுபடுத்தாமல், குதிரை மீது பயணிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டவர். இப்பந்தயங்களில் பங்கேற்பதன் மூலம் தனது வலிமையைவிட இறைவனின் அருளையே பெரிதும் நம்பும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் குதிரைப் பந்தயத்தில் ஆசியாவிலிருந்து பங்கேற்கும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர் Gemma Rose Foo.


7. "அமைதியற்ற உள்ளம்" - புனித அகஸ்தின் பற்றிய ஒரு திரைப்படம்

ஆக.22,2012. "அமைதியற்ற உள்ளம்" (“Restless Heart”) என்ற பெயர்தாங்கிய புனித அகஸ்தின் பற்றிய ஒரு திரைப்படம் வெளியிடப்படும் நிலையில் உள்ளது என இயேசு சபையினர் நடத்திவரும் Ignatius அச்சகம் அறிவித்துள்ளது.
Christian Duguay என்ற இயக்குனரால் உருவாக்கப்பட்ட புனித அகஸ்தின் என்ற தொலைக்காட்சித் தொடரை Ignatius அச்சகத்தார் ஒரு திரைப்படமாக தற்போது வெளியிட உள்ளனர்.
2009ம் ஆண்டு இத்தாலிய மொழியில் உருவான இத்தொலைக்காட்சிப் படம் அவ்வாண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தைக்குத் தனிப்பட்ட வகையில் காண்பிக்கப்பட்டபோது, திரைப்படத்தை உருவாக்கிய அனைவரையும் அவர் பாராட்டினார்.
ஆகஸ்ட் 27ம் தேதி அகஸ்தினின் தாய் புனித மோனிகா அவர்களின் திருநாளும், அதற்கு அடுத்த நாள் புனித அகஸ்தின் திருநாளும் தொடர்ந்து வருவதையொட்டி, இத்திரைப்படம் அமெரிக்காவின் பல திரையரங்குகளில் வர்த்தக ரீதியில்லாத வகையில் காண்பிக்கப்படும்  என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


8. கண்ணாடி அணியாமல் பார்க்கக்கூடிய முப்பரிமாணப் படங்கள் விரைவில் அறிமுகம்

ஆக.22,2012. முப்பரிமாணப் படங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக, புதிய தொழில்நுட்பமொன்று விரைவில் அறிமுகமாக உள்ளது.
இதுவரை ப்ளூரே (Blu-ray) தொழில்நுட்பத்தில் வெளிவந்துள்ள முப்பரிமாணப் படங்களில் ஒரு காட்சி இரண்டு வடிவங்களில் இருக்கும். ஆனால் ஒரே காட்சியை 10க்கும் மேற்பட்ட வடிவங்களில் பார்க்கவேண்டும் எனில், அதற்கு autostereoscopic display தேவைப்படும்.
ஜெர்மனியைச் சேர்ந்த Heinrich Hertz Instituteல் உள்ள Fraunhofer Institute for Telecommunications  நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் autostereoscopic display அடங்கிய ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இப்புதிய தொழில் நுட்பத்தின் உதவியுடன் முப்பரிமாணப் படங்களை, அதற்கென அணியப்படும் சிறப்புக் கண்ணாடி அணியாமல் தொலைக்காட்சியின் மூலம் நேரடியாகப் பார்த்து மகிழலாம்.
இம்மாதம் 31ம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெர்லினில் நடைபெற உள்ள IFA வர்த்தகக் கண்காட்சியில் இத்தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...