Monday, 13 August 2012

Catholic News in Tamil - 07/08/12

1. அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சீக்கிய சமுதாயத்துக்கு ஆயர்கள் அனுதாபம்

2. விஸ்கான்சின் குருத்வாரா வன்முறை, இந்தியப் பிரதமர் அதிர்ச்சி

3. ஜோஸ் நகர் பேராயர் மசூதியைப் பார்வையிட்டு ஒற்றுமைக்கு அழைப்பு

4. சிரியா:கிறிஸ்தவர்கள் பிரிவினைவாதப் போரைப் புறக்கணிக்குமாறு தலைவர்கள் வலியுறுத்தல்

5. பிலிப்பீன்சில் குடும்பக்கட்டுபாடு மசோதா குறித்த விவாதங்களை நிறுத்தி வைக்குமாறு தலத்திருஅவை வேண்டுகோள்

6. பிலிப்பீன்சில் வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது

7. பிரான்சில் கோடைகால  “நற்செய்தி அறிவிப்பு விழா

8. ஜாம்பியாவில் மலேரியா, எய்ட்ஸ் நோய்களை ஒழிப்பதற்கு நலப்பணியாளர்கள் கடும் உழைப்பு

9. வட இலங்கையில் கடுமையான வறட்சி

------------------------------------------------------------------------------------------------------

1. அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சீக்கிய சமுதாயத்துக்கு ஆயர்கள் அனுதாபம்

ஆக.07,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டின் விஸ்கான்சின் மாநில சீக்கியரின் குருத்வாராவில் நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூடு துயர நிகழ்வால் வருந்தும் சீக்கிய சமுதாயத்துக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவை.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றம் பல்சமய ஆணையத் தலைவர் பால்டிமோர் ஆயர் Denis Madden வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க ஆயர்கள் சீக்கிய சமுதாயத்துடன் கைகோர்த்து அனைத்துவிதமான வன்முறைகளையும், குறிப்பாக, சமய சகிப்பற்றதன்மையால் தூண்டப்பட்ட வன்முறையைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் குடும்பமாக இணைந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு எதிராக வழிபாட்டுத்தலத்தில் நடத்தப்பட்டுள்ள இவ்வன்முறை ஆயர்களை மிகவும் வருத்தப்படுத்தியிருப்பதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.
இந்தியாவின் பஞ்சாபில் 1400களில் ஆரம்பிக்கப்பட்ட சீக்கிய மதத்தில் தற்போது உலக அளவில் ஏறக்குறைய மூன்று கோடி விசுவாசிகள் உள்ளனர். இவர்களில் ஏறக்குறைய 5 இலட்சம் பேர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ளனர்.
இவ்வன்முறையில் ஏழுபேர் இறந்துள்ளனர் மற்றும் இருபது பேர் காயமடைந்துள்ளனர்.


2. விஸ்கான்சின் குருத்வாரா வன்முறை, இந்தியப் பிரதமர் அதிர்ச்சி

ஆக.07,2012. விஸ்கான்சின் மாநில சீக்கியரின் குருத்வாராவில் நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூடு வன்முறைத் தாக்குதல் குறித்து தான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்காதபடி விஸ்கான்சின் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள், இது குறித்து புலன்விசாரணையையும் நடத்துவார்கள் என்ற தனது நம்பிக்கையையும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கோவிலுக்கு வந்த அப்பாவி பக்தர்கள் மீது, காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகுந்த வேதனையளிக்கிறது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓக் கிரிக் பகுதியில் ஏழாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட இந்த சீக்கியர் கோவிலில், இஞ்ஞாயிறன்று இந்தியாவிலிருந்து வந்த ஒருவர் பக்தி சொற்பொழிவாற்றியதால் 400க்கும் அதிகமான சீக்கியர்கள் கூடியிருந்தனர். அப்போது குருத்வாராவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரெனப் பக்தர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஏழு பேர் பலியாகினர்; இந்த நபர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் எனச் சொல்லப்படுகிறது.


3. ஜோஸ் நகர் பேராயர் மசூதியைப் பார்வையிட்டு ஒற்றுமைக்கு அழைப்பு

ஆக.07,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மத்தியில் ஒற்றுமையும் அமைதியும் ஏற்படுமாறு அந்நாட்டு ஜோஸ் நகர் மசூதியில் கேட்டுக் கொண்டார் அந்நகர் கத்தோலிக்கப் பேராயர் Ignatius Ayau Kaigama.
கடந்த வாரத்தில் ஜோஸ் நகர் மசூதிக்குச் சென்று தலைமை முஸ்லீம் குரு Sheikh Balarabe Dawudவைச் சந்தித்துப் பேசிய ஜோஸ் நகர் பேராயர் Kaigama, நைஜீரியாவில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சந்திக்கவே முடியாது என்ற எண்ணத்தை அகற்றும் நோக்கத்தில் இந்த மைய மசூதிக்குத் தான் வருகை தந்ததாகத் தெரிவித்தார்.
நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்றும், சிலநேரங்களில் பிரச்சனைகளும் பதட்டநிலைகளும் ஏற்படலாம், அவற்றைக் கண்டு நாம் ஒருவர் ஒருவர் மீது பயம் கொள்ளத் தேவையில்லை, அப்பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் பேராயர் Kaigama   கூறினார்.
நம் அனைவருக்கும் ஒரே கடவுள், நாம் கடவுளின் பிள்ளைகள் போன்று நடக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, மத்திய நைஜீரியாவிலுள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது, இத்திங்கள் இரவு வெளியிலிருந்து துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் இறந்துள்ளனர். எத்தனைபேர் காயமடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இச்செவ்வாய் காலை அவ்வாலயத்தைப் பார்த்த இராணுவத்தினர் கூறினர். 


4. சிரியா:கிறிஸ்தவர்கள் பிரிவினைவாதப் போரைப் புறக்கணிக்குமாறு தலைவர்கள் வலியுறுத்தல்

ஆக.07,2012. சிரியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் ஆயுதங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் மற்றும் உள்நாட்டுச் சண்டையில் ஈடுபட வேண்டாமெனக் கேட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
தற்போது சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுச் சண்டை அந்நாட்டுக்கு  வெளியிலிருந்தும் தூண்டிவிடப்படுவதால் அது இன்னும் கடுமையாகப் போய்க் கொண்டிருக்கின்றது என்று கவலை  தெரிவித்துள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமொரு பிரிவினைவாதக்குழுவாக மாறுவதைத் தாஙக்ள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் சிரியா நாட்டுக் குடிமக்கள், மற்ற குடிமக்களோடு அமைதியில் வாழவே நாங்கள் விரும்புகிறோம், நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையுமே விரும்புகிறோம் என்று Fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர் அத்தலைவர்கள்.
இதற்கிடையே, சிரியாவில் புரட்சியாளர்களால் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள 48 ஈரானியத் திருப்பயணிகள் விடுதலை செய்யப்படுவதற்கு துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் உதவிகளைக் கேட்டுள்ளது ஈரான்.    


5. பிலிப்பீன்சில் குடும்பக்கட்டுபாடு மசோதா குறித்த விவாதங்களை நிறுத்தி வைக்குமாறு தலத்திருஅவை வேண்டுகோள்

ஆக.07,2012. பிலிப்பீன்சில் விவாதிக்கப்பட்டு வரும் குடும்பக்கட்டுபாடு குறித்த மசோதாவை இடைநிறுத்தம் செய்துவிட்டு, தற்போது கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு இச்செவ்வாயன்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்நாட்டுத் திருஅவைத் தலைவர் ஒருவர்.
விடாது தொடர்ந்து பெய்ந்து வரும் பருவமழையால் பெரிய நீர்த்தேக்கங்களும், மனிலா மற்றும் அதற்கருகிலுள்ள ஒன்பது மாநிலங்களின் ஆறுகளும் நிரம்பி கரைபுரண்டோடுவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். சில பகுதிகளில் மூன்று மீட்டர் உயரத்துக்கும் மேலாக தண்ணீர் ஓடுகிறது.
இந்நிலையில், இவ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவ முன்வருமாறு பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் மனித வாழ்வு ஆணையத்தின் அருட்பணி Melvin Castro கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்தில் இச்செவ்வாயன்று இடம்பெறவிருந்த குடும்பக்கட்டுபாடு மசோதா குறித்த விவாதத்தை அரசு தள்ளி வைத்திருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

6. பிலிப்பீன்சில் வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது

ஆக.07,2012. பிலிப்பீன்ஸ் அரசு, வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தத்தை இத்திங்களன்று அமல்படுத்தியிருப்பதற்குத் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது ஒரு மனித உரிமைகள் அமைப்பு.
இதன்மூலம் உலகில் ஒப்பந்தத்தை அமல்படுத்தியிருக்கும் இரண்டாவது நாடு என்ற பெருமையையும் பெறுகிறது பிலிப்பீன்ஸ். இந்த ஒப்பந்தத்தை முதன்முதலாக உருகுவாய் நாடு கடந்த ஏப்ரல் 30ம் தேதி அமல்படுத்தியது.
பிலிப்பீன்ஸ் அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றுப் பேசிய நியூயார்க்கை மையமாகக் கொண்ட HRW என்ற மனித உரிமைகள் அமைப்பு,  ஜோர்டன், லெபனன், குவைத், சவுதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலைசெய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவர், அடிஉதைகள், கடவுட்சீட்டுப் பறிமுதல், வீட்டைவிட்டு வெளியே செல்ல விடாமல் வீட்டுக்குள்ளே வைத்திருத்தல், நீண்டநேர வேலை, மாதங்கள் அல்லது ஆண்டுகளாய்ச் சிலருக்கு ஊதியம் கொடுக்காமல் இருப்பது உள்ளிட்ட பல உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர் எனக் கூறியது.
வெளிநாடுகளில் வேலைசெய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவர், ஆண்டுதோறும் இரண்டாயிரம் கோடி டாலருக்கு அதிகமாகத் தங்களது நாட்டுக்கு அனுப்புகின்றனர்.

7. பிரான்சில் கோடைகால  “நற்செய்தி அறிவிப்பு விழா

ஆக.07,2012. பிரான்சில் நற்செய்தி அறிவிப்பில் புதிய முறைகளைப் புகுத்தும் விதமாக, இம்மாதம் 15 முதல் 26ம் தேதி வரை அறிவிப்பு என்ற தலைப்பில் 12 நாள்கள் கோடைகால நற்செய்தி அறிவிப்புவிழாவைச் சிறப்பிக்கவிருக்கின்றது தலத்திருஅவை.
இந்தக் கோடைகால விழாவில், 18க்கும் 35 வயதுக்கும் உட்பட்ட இளையோருக்கு நற்செய்தி அறிவிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நற்செய்தி அறிவிக்கும் முயற்சி 4 கட்டங்களாக இடம்பெறும். முதல் கட்டமாக, இம்மாதம் 15 முதல் 17 வரை செபத்தில் கவனம் செலுத்தப்படும்.  பின்னர் 23ம் தேதி வரை பிரான்சின் தெருக்கள் மற்றும் கடற்கரைகளில் நற்செய்தி அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பில், செபமும் பாடல்களும் இடம்பெறும். இறுதியாக அனைவரும் சேர்ந்து விழாவில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் ஐரோப்பாவுக்கு கோடைகாலமாகும்.

8. ஜாம்பியாவில் மலேரியா, எய்ட்ஸ் நோய்களை ஒழிப்பதற்கு நலப்பணியாளர்கள் கடும் உழைப்பு

ஆக.07,2012. ஜாம்பியா நாட்டில் மலேரியா, எய்ட்ஸ், காசநோய் போன்ற நோய்களை முற்றிலும் பரவ விடாமல் தடுப்பதற்கு ஏறத்தாழ 1,200 மருத்துவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் 5 வயதுக்குட்பட்ட சிறாரில் 10க்கு குறைந்தது இருவர் வீதம் மலேரியாவால் இறக்கின்றனர், இந்நோயை 2015ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிப்பதற்குத் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர் நலப்பணியாளர்கள்.
கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து நலப்பணியாளர்கள் மற்றும் உளவியல் மருத்துவர்கள் மத்தியில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இப்பணியைச் செய்து வருகின்றனர்.
ஏறத்தாழ 1,200 மருத்துவர்கள் ஜாம்பியாவின் ஒரு கோடியே 30 இலட்சம் பேரின் நலவாழ்வைக் கண்காணித்து வருகின்றனர்.

9. வட இலங்கையில் கடுமையான வறட்சி

ஆக.07,2012. இலங்கையின் வடக்கே ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சிறுபோக நெல்விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
பல இடங்களில் குடிநீருக்காக மக்கள் நீண்ட தூரம் அலைய நேரிட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின்கீழ் மூவாயிரம் ஏக்கர் நெற்பயிர் இதுவரையில் நீரின்றி கருகியிருப்பதாக விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சிறுபோக நெல் சாகுபடிக்கு இம்முறை சீரான நீர்விநியோகம் செய்யப்படவில்லை என்றும் இதுவே இந்தப் பாதிப்புக்குக் காரணம் என்றும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, கடும்வறட்சி காரணமாக வவுனியாவிலும் நெல்விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதுடன், ஒருபோதும் இல்லாத வகையில் வவுனியா நகருக்கு அருகிலுள்ள குளத்தில் நீர் முழுமையாக வற்றிக் குளம் வறண்டிருப்பதனால் குளத்து மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...