Friday, 31 August 2012

Catholic News in Tamil - 30/08/12

1. பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமி Rimsha Masihயின் வழக்கு ஆரம்பம்

2. புரட்சிக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருப்பதற்குக் கொலம்பிய ஆயர் பேரவை மகிழ்ச்சி

3. தமஸ்கு நகரில் கிறிஸ்தவ இறுதி ஊர்வலத்தின்போது குண்டுவெடிப்புத் தாக்குதல் - 12 பேர் கொலை

4. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் முள்ளிக்குளம் பகுதியில் விண்ணேற்படைந்த அன்னை மரியாவின் திருநாள்

5. நன்னெறியற்றத் தலைவர் ஒருவருடன் ஒரே மேடையில் உரையாற்ற விருப்பமில்லை - பேராயர் Desmond Tutu

6. அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாளுக்கு ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டச் செய்தி

7. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்குப் பாதிப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை

8. இலண்டனில் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவக்கம்

------------------------------------------------------------------------------------------------------

1. பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமி Rimsha Masihயின் வழக்கு ஆரம்பம்

ஆக.30,2012. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமி Rimsha Masihயின் வழக்கு தொடர்பாக மக்களிடையே உணர்வுகள் அதிகமாய்  எழுவதால், இவ்வழக்கைத் திசைதிருப்பும் ஆபத்து உள்ளது என்று லாகூர் உயர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் செபஸ்டின் ஷா கூறினார்.
Rimsha Masihயின் வழக்கு இவ்வியாழனன்று நீதிமன்றத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கைக் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள உணர்வு கொந்தளிப்புக்களால் 300க்கும் அதிகமான சிறுபான்மை மதங்களைச் சார்ந்த குடும்பங்கள் இஸ்லாமாபாதிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மக்களிடையே நிலவும் இந்தச் சூழலைக் குறித்து Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்குப் பேட்டியளித்த ஆயர் ஷா, Rimsha Masihயின் குடும்பத்தினரை இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony சென்று சந்தித்ததையும் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
சிறுமி Rimsha மூளை வளர்ச்சிக் குன்றியவர் என்பதற்கு மருத்துவ ஆதாரங்கள் தகுந்த அளவில் உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கத்தோலிக்க வழக்கறிஞர் பீட்டர் ஜேக்கப், இஸ்லாமியர் ஒரு சிலரின் தனிப்பட்டப் பகையுணர்வுக்கு இச்சிறுமி பலியாக்கப்பட்டுள்ளதை உணரமுடிகிறது என்று கூறினார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் வன்முறைகளுக்கு எதிராக, திருத்தந்தையும், வத்திக்கான் அதிகாரிகளும் குரல் எழுப்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி Rimsha கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran  வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானில் மிக அதிகமாய் தற்போது தேவைப்படுவது மக்களிடையே மனம் திறந்த உரையாடலே என்றும், இத்தகைய உரையாடல்களே இவ்வன்முறைகள் பெருகாமல் காக்கும் சிறந்த வழி என்றும் கூறினார்.


2. புரட்சிக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருப்பதற்குக் கொலம்பிய ஆயர் பேரவை மகிழ்ச்சி

ஆக.30,2012. 'மக்கள் படை' என்றழைக்கப்படும் FARC என்ற கொலம்பியப் புரட்சிக் குழுவினருடன் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தைகளைத் துவக்க விருப்பம் தெரிவித்துள்ளதை அந்நாட்டில் உள்ள ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.
நாட்டின் அமைதியை வளர்ப்பதற்கு, கொலம்பிய அரசுத் தலைவரும், அரசு அதிகாரிகளும் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியால் மக்கள் கவலையின்றி வாழ வழி பிறந்துள்ளது என்று கொலம்பிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ruben Salazar கையெழுத்திட்டு அனுப்பியுள்ள செய்தியில், ஆயர்கள் தங்கள் மகிழ்வைத் தெரிவித்துள்ளனர்.
அரசு அறிவித்துள்ள இந்த அழைப்புக்குத் தங்கள் முழு ஆதரவையும் வெளியிட்டுள்ள ஆயர்கள், மன்னிப்பும், ஒப்புரவுமே இந்நாட்டில் அமைதியையும், வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்று கூறியுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் அரசுக்கும் FARC புரட்சிக் குழுவுக்கும் இடையே முதன்முறையாக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த பேச்சுவார்த்தைகள் Oslo  நகரில் வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. தமஸ்கு நகரில் கிறிஸ்தவ இறுதி ஊர்வலத்தின்போது குண்டுவெடிப்புத் தாக்குதல் - 12 பேர் கொலை
ஆக.30,2012. சிரியாவின் தமஸ்கு நகரின் புறநகர் பகுதியில் ஆகஸ்ட் 28, இச்செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட, 12 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். வேறு சில செய்திகளில் இறந்தோரின் எண்ணிக்கை 27 என்றும் சொல்லப்படுகிறது.
இத்திங்களன்று வன்முறைத் தாக்குதல்களால் கொலையுண்ட இரு கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இச்செவ்வாயன்று நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின்போது, குண்டுகள் வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனம் வெடித்ததில் இக்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த 6 இலட்சம் மக்கள் வாழும் Jaramana பகுதியில் 250,000 கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகள் உடையோரிடமிருந்து இம்மக்களுக்குத் தொடர்ந்து அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சிரியாவில் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு தருகின்றனர் என்ற தவறான வதந்திகளால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய வன்முறையாளர்களின் இலக்காக மாறி வருவது வேதனையே என்று இலத்தீன் கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் தன் பெயரைக் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்தார்.


4. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் முள்ளிக்குளம் பகுதியில் விண்ணேற்படைந்த அன்னை மரியாவின் திருநாள்

ஆக.30,2012. வட இலங்கையின் முள்ளிக்குளம் பகுதியில் விண்ணேற்படைந்த அன்னை மரியா திருநாளை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கத்தோலிக்கர்கள் கொண்டாடினர்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் 20க்கும் அதிகமான அருள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முள்ளிக்குளம் பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அதிகம் உள்ளதென்று காரணம் கூறி, அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை இராணுவம் தடை செய்துள்ளது.
அன்னை மரியாவின் விண்ணேற்புத் திருநாளைக் கொண்டாடுவதற்காக இராணுவம் தன் தடைகளைத் தளர்த்தியது என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மின்சக்தியையும், மருத்துவ உதவிகளையும் வழங்கிய இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற இவ்விழாவில் 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.


5. நன்னெறியற்றத் தலைவர் ஒருவருடன் ஒரே மேடையில் உரையாற்ற விருப்பமில்லை - பேராயர் Desmond Tutu

ஆக.30,2012. நன்னெறியும், தலைமைப் பண்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; எனவே, நன்னெறியற்றத் தலைவர் ஒருவருடன் ஒரே மேடையில் தான் உரையாற்ற விரும்பவில்லை என்று முன்னாள் ஆங்கிலிக்கன் பேராயர் Desmond Tutu கூறினார்.
தலைமைப் பண்புத் தேடல் உச்சி மாநாடு (The Discovery Invest Leadership Summit) ஒன்று இவ்வியாழனன்று தென் அப்பிரிக்காவின் Johannesburg நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்ற பிரித்தானிய முன்னாள் பிரதமர் Tony Blairம், ஆங்கலிக்கன் பேராயர் Desmond Tutuவும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அமைதிக்கான நொபெல் பரிசை வென்றுள்ள பேராயர் Desmond Tutu,   அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் சேர்ந்து பிரித்தானிய அரசும் ஈராக்கில் மேற்கொண்ட இராணுவ ஊடுருவலும், ஆக்கிரமிப்பும் நன்னெறி விழுமியங்களுக்கு முரணானது  என்ற தன் கண்டனத்தைக் கூறிவந்தவர்.
பிரித்தானிய அரசின் அன்றையப் பிரதமராக இருந்த Tony Blairஉடன் ஒரே மேடையில் தோன்றி கருத்துக்களைப் பரிமாறத் தனக்கு விருப்பமில்லை என்று பேராயர் Tutu இச்செவ்வாயன்று அறிவித்தார்.
பேராயர் Tutu வெளியிட்ட இக்கருத்தைப் பாராட்டி, பல அமைதிக் குழுக்களும், இஸ்லாமிய குழுக்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.


6. அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாளுக்கு ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டச் செய்தி

ஆக.30,2012. அணுசக்தி ஆய்வுகள் மனித குலத்தின் நலனுக்கும், உலக பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆகஸ்ட் 29 இப்புதனன்று அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், பாதுகாப்பான உலகை உருவாக்கும் கடமை அனைத்து நாடுகளையும் சார்ந்தது என்று கூறினார்.
1991ம் ஆண்டு Kazakhstan நாட்டில் இருந்த Semipalatinsk என்ற ஒரு மாபெரும் அணு ஆய்வுக்களம் ஆகஸ்ட் 29ம் தேதி முற்றிலும் மூடப்பட்டதால், அந்நாளை அணு ஆய்வுகளுக்கு எதிரான நாளென்று ஐ.நா. அறிவித்தது.
அணு ஆய்வுகளால் இந்தப் பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் நாம் விளைவிக்கும் கேடுகளை அரசுகள் விரைவில் உணர்வது மிக்க அவசியம் என்று கூறிய ஐ.நா. பொதுச் செயலர், அணு ஆய்வுகளுக்கு எதிராக இன்னும் முடிவெடுக்காத அரசுகள் விரைவில் அத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
அணு ஆய்வுகளை நிறுத்தும் ஒரு தீர்மானத்தில் இதுவரை 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவற்றில் 157 நாடுகள் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியும் உள்ளன என்று ஐ.நா. அறிவித்துள்ளது.


7. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்குப் பாதிப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை

ஆக.30,2012. தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்குப் பாதிப்புக்கள் ஏற்படும் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர். எனவே, இலங்கையின் வெளியுறவுத்துறை இந்த விடயத்தை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
அணுமின் உற்பத்தியை மேற்கொள்ளும் முன்னர் இந்திய அரசு அருகில் உள்ள நாடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பில் பேசிய ஜெகத் குணவர்த்தன கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் வரவிருக்கும் ஆபத்துக்களை மனதிற்கொண்டு, இலங்கை அரசு முன்னெச்சரிக்கை கோபுரங்களை அமைக்கவேண்டும் என்றும் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் இலங்கையின் புத்தளத்தில் இருந்து 240 கிலோமீட்டர் தூரத்திலேயே அமைந்துள்ளது என்பதை ஜெகத் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.

8. இலண்டனில் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவக்கம்

ஆக.30,2012. 166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இலண்டன் மாநகரில் இப்புதனன்று மாலை ஆரம்பமானது.
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் தன் இரு கால்களையும் இழந்த ஒரு பிரித்தானிய இராணுவ வீரர் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்குபெற்ற இந்த ஆரம்பவிழாவின் இறுதியில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.
இரண்டாம் எலிசபெத் அரசியால் துவக்கிவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் Stephen Hawking, மனிதர்களின் விடாமுயற்சிக்குத் தன் வணக்கத்தைக் கூறினார்.
இம்முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடுகளும் அதன் வீரர்களும் கலந்து கொள்வது, இந்தப் போட்டிகளுக்கு உலக அளவில் மேலும் ஒரு ஏற்றமும் ஆதரவும் கிடைத்துள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது என்று விளையாட்டுச் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வழக்கமாக ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஐந்து வளையங்களுக்குப் பதிலாக, மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் அடையாளமாக, மூன்று பிறை நிலா வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
"நான் நகர்கிறேன்" என்ற பொருள்படும் இலத்தீன் வார்த்தையான Agitos ஐக் குறிக்கும் இந்த பிறை வடிவங்கள் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் நிறங்களான பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் அமைந்துள்ளன.
இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டைப் பெறுவதற்கு மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டியதாகக் கூறும் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இணையாக இந்த விளையாட்டுக்களும் அமையும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டனர்.
 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...