Wednesday, 29 August 2012

Catholic News in Tamil - 27/08/12

1. திருத்தந்தை : நேர்மையின்மை தீயவனின் அடையாளம்

2. திருமணத்தின் புனிதத்தன்மை குறித்த ஸ்காட்லாந்து ஆயர்களின் அறிக்கை

3. அசாமில் அமைதி நிலவ  பல்சமய செப வழிபாடு

4. தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் சிறுமி விடுவிக்கப்பட இந்திய கிறிஸ்தவ தலைவர் அழைப்பு

5. பழங்குடி சிறுமிகளின் கல்வி தொடர கிறிஸ்தவ அமைப்பின் உதவி

6. இரண்டு இலட்சம் சிரிய அகதிகள் அண்மை நாடுகளில் குடிபுகுந்துள்ளனர்

7. டில்லியில் நாள் ஒன்றுக்கு 12 குழந்தைகள் காணாமல் போகின்றன

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நேர்மையின்மை தீயவனின் அடையாளம்

ஆக.27,2012. யூதாஸ் இஸ்காரியோத் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதை நிறுத்திய பின்னரும் அவரைத் தொடர்ந்து பின்செல்வதற்கு எடுத்த தீர்மானத்தில் வெளிப்படுவது போன்று, நேர்மை குறைவுபடுவது தீயவனின் அடையாளமாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்ல வளாகத்திலிருந்து வழங்கிய இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்துப் பேசிய போது, இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத்தின் போலித்தனம் பற்றி விளக்கினார் திருத்தந்தை.
இயேசு கப்பர்நாகுமிலுள்ள தொழுகைக்கூடத்தில், விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று தன்னை அறிவித்த போது, இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் என்று சொல்லி அவரைப் பின்சென்றவர்களில் பலர் அவரை விட்டு விலகினர், அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. அப்போது இயேசு பன்னிரு சீடரிடம், நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். அதற்கு புனித பேதுரு, ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என பன்னிருவர் சார்பாகச் சொன்னார் என நற்செய்தியாளர் யோவான் எழுதியிருக்கிறார். 
இப்பகுதியை விவரித்த திருத்தந்தை, இதில் யூதாஸ் இஸ்காரியோத் விதிவிலக்காக இருந்தார், யூதாஸ் நேர்மையாளராய் இருந்திருந்தால் இவரும் இயேசுவை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும், ஆனால் அவர் இயேசுவோடு இருக்கவே முடிவு செய்தார், இது, யூதாஸ் இயேசு மீது கொண்டிருந்த பற்றுறுதியாலோ அல்லது அன்பாலோ அல்ல, மாறாக, தனது போதகர் மீதி பழிவாங்கும் இரகசிய ஆசையாலே இயேசுவோடு இருந்தார் என்றார்.
ஏனெனில் யூதாஸ், தான் இயேசுவால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார், அதற்காக அவரை மறுதலிக்கத் தீர்மானித்தார், யூதாஸ் உரோமை ஆதிக்கத்தை வெறுத்த ஒரு தீவிரவாத யூதர், உரோமையருக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டக்கூடிய வெற்றிகளைக் கொண்டு வரும் மெசியாவை அவர் விரும்பினார், ஆனால் யூதாஸ் தனது அந்த எதிர்பார்ப்புகளால் ஏமாற்றமடைந்தார் என்று விளக்கினார் திருத்தந்தை.
புனித பேதுரு செய்தது போல நாமும் இயேசுவில் பற்றுறுதி கொள்ளவும், அவரோடும் அனைத்து மக்களோடும் எப்போதும் நேர்மையாய் வாழவும் அன்னைமரியின் உதவியை நாடுவோம் என்றும் திருத்தந்தை கூறினார்.
இயேசுவின் போதனைகள்மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் சோதிக்கப்பட்டாலும் நாம் என்றும் ஆண்டவருக்குப் பிரமாணிக்கமாக வாழ்வோம் என்றும் மூவேளை செப உரையில் கேட்டுக் கொண்டார்  திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. திருமணத்தின் புனிதத்தன்மை குறித்த ஸ்காட்லாந்து ஆயர்களின் அறிக்கை

ஆக.27,2012. திருமணம் என்பதற்குப் புது விளக்கம் கொடுக்கவும், ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கவும் ஸ்காட்லாந்து அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்து தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
திருமணத்தின் உண்மைத்தன்மை பாதிக்கப்படும்போது அதைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு திருஅவைக்கு உள்ளது என உரைத்துள்ள ஆயர்கள், திருமணத்திற்கு ஆதரவளிக்கும் மற்றும் திருமணத்திற்கான மேய்ப்புப்பணி குறித்த புதிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
திருமணம் மற்றும் குடும்பத்திற்கென புதிய அவை ஒன்றை உருவாக்கியுள்ளது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டனர் ஸ்காட்லாந்து ஆயர்கள்.
திருமணத்திற்குப் புதிய அர்த்தங்கள் கொடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக பொதுமக்களின் தொடர்ந்த ஆதரவை நாடும் ஆயர்களின் மேய்ப்புப்பணி சுற்றறிக்கை இஞ்ஞாயிறன்று ஸ்காட்லாந்தின் எல்லாக் கோவில்களிலும் திருப்பலியின்போது வாசிக்கப்பட்டது.


3. அசாமில் அமைதி நிலவ  பல்சமய செப வழிபாடு

ஆக.27,2012. அசாமில் வன்முறைகள் முடிவுக்கு வந்து அமைதி நிலவவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தூய பவுல் புதல்வியர் சபை ஏற்பாடு செய்த பல்சமய செப வழிபாடு இச்சனிக்கிழமையன்று Guwahatiயில் இடம்பெற்றது.
மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்தவும் நம்மிடமுள்ள நிதி, அறிவு, ஆர்வம் என அனைத்தையும் பயன்படுத்தவேண்டும் என அறிவித்தார் இச்செபவழிபாட்டிற்கு ஏற்பாடு செய்த இச்சபையின் அருட்சகோதரி. ஃபிலோ ஜோசப்.
இந்தப் பல்சமய செபவழிபாட்டில் கலந்துகொண்ட Guwahatiயின் முன்னாள் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில், வன்முறைக்குக் காரணமானவர்களின் மனதில் கூட அமைதிக்கான ஏக்கம் இருக்கும் என்று கூறினார்.
அமைதிக்கான விருப்பம் செபத்துடன் இணைக்கப்படும்போது அது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது எனவும் கூறினார் பேராயர்.
அழிவுக்குக் காரணமானவர்களின் மனதிலும் அமைதியின் தேவை குறித்த உணர்வை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் என்ற அழைப்பையும் அனைத்து மத பிரதிநிதிகளிடம் விடுத்தார் பேராயர் மேனம்பரம்பில்.


4. தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் சிறுமி விடுவிக்கப்பட இந்திய கிறிஸ்தவ தலைவர் அழைப்பு

ஆக.27,2012. எழுதப்படிக்கத் தெரியாத பாகிஸ்தானிய சிறுமி ஒருவர், இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானைக் கற்றுக்கொள்ள உதவும் குழந்தைகளுக்கான மதபோதக நூலின் சில பக்கங்களை எரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேவநிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவையின் தலைவர் Sajan George.
மனநிலைப் பாதிக்கப்பட்டுள்ள ஏழைச் சிறுமி Rimsha Masih, உடனடியாக விடுவிக்கப்படவேண்டும், மற்றும் அச்சிறுமியின் குடும்பத்திற்கு இஸ்லாம் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பளிக்க வேண்டும் எனவும் உலகச் சமூகத்தை நோக்கியும் இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் நோக்கியும் அழைப்பு விடுத்துள்ளார் Sajan.
பாகிஸ்தானில் தேவ‌நிந்த‌னைச் ச‌ட்ட‌ம் எந்த‌ அள‌வுக்குத் த‌வ‌றாகப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து என்ப‌து குறித்து உல‌கின் க‌வ‌ன‌த்தைத் திருப்ப‌ Rimsha Masihன் அண்மை கைது ஒரு வாய்ப்பாக‌ இருக்கிற‌து என‌வும் எடுத்துரைத்தார் அவ‌ர்.
எதிரிக‌ளைப் ப‌ழிவாங்க‌வும், அண்டை வீட்டாருட‌ன் ஆன‌ சிறு ச‌ச்ச‌ர‌வுக‌ளில் வெற்றி காண‌வும், அர‌சிய‌ல் ம‌ற்றும் பொருளாதார‌க் கார‌ண‌ங்க‌ளுக்காக‌வும் தேவ‌நிந்த‌னைச் ச‌ட்ட‌ம் ம‌க்க‌ளால் த‌வ‌றாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து என‌ மேலும் கூறினார் இந்திய கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர் Sajan.
தேவநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறுமியின் இவ்வழக்கு இம்மாதம் 31ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வர உள்ளது.


5. பழங்குடி சிறுமிகளின் கல்வி தொடர கிறிஸ்தவ அமைப்பின் உதவி

ஆக.27,2012. இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலச் சிறுமிகள் தங்கள் கல்வியைத் தொடர உதவும் பொருட்டு, மிதிவண்டிகளை இலவசமாக வழங்கியுள்ளது கிறிஸ்தவ துயர்துடைப்பு நிறுவனமான World Vision.
மகராஷ்டிர மாநிலத்தின் கிராமங்களில் வாழும் பழங்குடி இனங்களிடையே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சேவையாற்றி வரும் இந்த கிறிஸ்தவ அமைப்பு, சிறுமிகளின் கல்வியில் கவனம் செலுத்துவதுடன், விவசாயிகளுக்குப் பயிரிடத் தேவையானப் பொருட்களையும், கால்நடை வளர்ப்புக்குத் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறது.
பள்ளிகளுக்குத் தேவையான இருக்கைகளையும், விளையாட்டுத் துறைக்குத் தேவையானப் பொருட்களையும் கொடுத்து உதவி வருகிறது World Vision கிறிஸ்தவ அமைப்பு.
ஆரம்பக்கல்வியை தங்கள் கிராமங்களில் படிக்கும் மாணவிகள், உயர் நிலைக்கல்வியைத் தொடர தூர இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கு அண்மையில் 65 மிதி வண்டிகளை இலவசமாக வழங்கி, அவர்கள் கல்வியைத் தொடர உதவியுள்ளது இக்கிறிஸ்தவ அமைப்பு.


6. இரண்டு இலட்சம் சிரிய அகதிகள் அண்மை நாடுகளில் குடிபுகுந்துள்ளனர்

ஆக.27,2012. சிரியாவில் மோதல்கள் தொடர்வதால் அந்நாட்டிலிருந்து இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்மை நாடுகளுக்குள் அடைக்கலம் தேடியுள்ளதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த ஏழு நாட்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் அகதிகளாக துருக்கி, லெபனன், ஜோர்டன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளதாக உரைத்த ஐநாவின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் ஏட்ரியன் எட்வர்ட்ஸ், அகதிகளாக வந்துள்ளோரில் பெருமெண்ணிக்கையினோர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், பெற்றோர் துணையின்றி வந்துள்ள சிறார்களும் இதில் அடங்குவர் எனவும் தெரிவித்தார்.
அகதிகளுக்கான ஐநா அமைப்பின் கணிப்பின்படி, சிரியாவிற்குள் ஏறத்தாழ 12 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர், மேலும் 25 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.


7. டில்லியில் நாள் ஒன்றுக்கு 12 குழந்தைகள் காணாமல் போகின்றன

ஆக.27,2012. டில்லியில் நாள் ஒன்றுக்கு 12 குழந்தைகள் காணாமல் போகின்றன  எனவும், இதில், பெண் குழந்தைகளே அதிகம்  எனவும், அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
டில்லியில், இந்த ஆண்டு, இம்மாதம் 15ம் தேதி வரை, 1,652 பெண் குழந்தைகள் உட்பட 3,171 குழந்தைகள் காணாமல் போயுள்ளன எனக்கூறும் அரசின் அறிக்கை, இது கடந்த ஆண்டை விட குறைவே எனவும் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு, நாள் ஒன்றுக்கு, 12 குழந்தைகள் காணாமல் போயுள்ள நிலையில், இது 2011ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு, 14 குழந்தைகள் என இருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது எனவும், சிலரால் தவறாக வழிகாட்டப்படுவது, பெற்றோர்கள் அன்பாக நடந்து கொள்ளாதது, படிப்பில் நாட்டம் இல்லாமை, கடத்தப்படுவது போன்றவை, குழந்தைகள் காணாமல் போவதற்கானக் காரணங்களாக, புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...