Monday, 27 August 2012

Catholic News in Tamil - 25/08/12

1.கர்தினால் Tauran : கடவுளை மறந்து வாழும் உலகம் மனிதமற்ற உலகம்

2. Rimsha Masihயின் விடுதலையை வலியுறுத்தி ஆக.25ல் லாகூரில் பேரணி

3. அனைத்துக் குடிமக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கு அரசுக்கும் ஐ.நாவுக்கும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்

4. இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினத்தைக் கடைப்பிடிக்குமாறு மத்திய பிரதேச கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு வேண்டுகோள்

5. ஜாம்பியாவை ஒரு கிறிஸ்தவ நாடு என்று அறிவிக்கும் பரிந்துரைக்கு ஆயர்கள் எதிர்ப்பு

6. சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் விவிலியம் ஓர் இலத்தீன் அமெரிக்க நாட்டில் வெளியிடப்படவிருக்கின்றது

7. இங்கிலாந்தில் 8வது உலக இளம் கிறிஸ்தவத் தொழிலாளர் மாநாடு

8. கொழும்பு : அணுத்தொழில்நுட்பம் தொடர்பான அனைத்துலக மாநாடு



------------------------------------------------------------------------------------------------------

1.கர்தினால் Tauran : கடவுளை மறந்து வாழும் உலகம் மனிதமற்ற உலகம்

ஆக.25,2012. கடவுளை மறந்து வாழும் உலகம் மனிதமற்ற உலகம் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, ரிமினி கூட்டத்தில் கூறினார்.
இத்தாலியின் ரிமினியில் ஒன்றிப்பும் விடுதலையும்என்ற பொதுநிலையினர் அமைப்பு நடத்திய கூட்டத்தில், பன்னாட்டு அரசியலும் சமய சுதந்திரமும் என்ற தலைப்பில் இடம்பெற்ற அமர்வில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய கர்தினால் Tauran இவ்வாறு  கூறினார். இவ்வமர்வில் ஐ.நா.பொது அவையின் தலைவர் Nassir Abdulaziz Al-Nasser, இத்தாலிய வெளியுறவு அமைச்சர் Giulio Terzi உட்பட பல தலைவர்கள் பங்கு பெற்றனர்.
மனிதர்கள் தன்னிலே சமயப் பண்பு கொண்டவர்கள் என்பதால் அவர்களின் சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நாடுகள் கவனம் செலுத்துமாறும் கர்தினால் கேட்டுக் கொண்டார்.
நைஜீரியாவிலும் பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து கவலை தெரிவித்த கர்தினால் Tauran, பாகிஸ்தானில் இந்நாள்களில் தேவநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 11 வயதுச் சிறுமி Rimsha Masihவின் நிலைமை குறித்தும் கவலை தெரிவித்தார்.
இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த இக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, அரசியல், மதம், பொருளாதாரம், கலாச்சாரம் எனப் பல துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைவர்கள் உட்பட எட்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இக்கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2. Rimsha Masihயின் விடுதலையை வலியுறுத்தி ஆக.25ல் லாகூரில் பேரணி

ஆக.25,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள 11 வயதுச் சிறுமி Rimsha Masih விடுதலை செய்யப்படுவதை வலியுறுத்தி இச்சனிக்கிழமையன்று லாகூரில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து இந்தச் சிறுமியோடு ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதற்கு இதுவே தக்க தருணம் என்று இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி ஆயர் ரூஃபின் அந்தோணி கூறினார்.
மேலும், அனைத்துப் பாகிஸ்தான் சிறுபான்மையினர் கூட்டமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் Tahir Naveed Chaudhry என்ற வழக்கறிஞரை Rimshaவுக்காக வாதிடுவதற்காக நியமித்துள்ளது.
World Vision in Progress என்ற கிறிஸ்தவ அரசு சாரா அமைப்பு இச்சிறுமியின் பிணையலுக்காக மனுக் கொடுத்துள்ளது. இது வருகிற செவ்வாயன்று விவாதிக்கப்படும் எனவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. 
இதற்கிடையே, Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், பாகிஸ்தான் சட்டத்தின்படி அவள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டில் முஸ்லீம்கள் மத்தியில் பரவலான எண்ணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள 11 வயதுச் சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு இம்மாதம் 18ம் தேதி சிறையில் வைக்கப்பட்டார்.
Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.


3. அனைத்துக் குடிமக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கு அரசுக்கும் ஐ.நாவுக்கும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் வேண்டுகோள் 

ஆக.25,2012. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்க்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைகளில் பல சிறார்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என தொமினிக்கன் சபை அருள்தந்தை James Channan குறை கூறினார்.
பல்சமய உரையாடலை ஊக்குவிப்பதற்காக லாகூரில் இயங்கி வரும் அமைதி மையத்தின் இயக்குனர் அருள்தந்தை Channan, ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம்  இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தானில் வாழும் அனைத்துக் குடிமக்களின் மனித மாண்பும் மனித உரிமைகளும் மதிக்கப்படுவதற்கு உறுதியளிக்கும் வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் வலியுறுத்துவதாகவும் இவர் கூறினார். 
மேலும், சமய சுதந்திரத்துக்கான ஐ.நா.சிறப்புப் பார்வையாளர் சார்பில் பாகிஸ்தானில் ஒரு சிறப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும், பாகிஸ்தானில் இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் என்று இந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் விரும்புவதாகவும் அருள்தந்தை Channan கூறினார்.      
கிறிஸ்தவர்களுக்குப் பாகிஸ்தானில் வாழ்வது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டு வருகின்றதெனவும், பல கிறிஸ்தவச் சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டாயமாக இசுலாமில் இணைக்கப்படுகின்றனர் எனவும், பாகிஸ்தானின் 'Maria Goretti” என அழைக்கப்படும் Amariah Masih விவகாரத்தில் நடந்துள்ளது போல சிறுமிகள் கொலையும் செய்யப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது தேவநிந்தனை சட்டத்தின்கீழும் சிறார் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்றுரைத்த அருள்தந்தை Channan, இவ்வாறு சிறார்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தால், சகிப்பற்றதன்மையினால் செய்யப்படும் உரிமை மீறல்களும், மனிதமற்ற செயல்களும் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று கவலை தெரிவித்தார்.


4. இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினத்தைக் கடைப்பிடிக்குமாறு மத்திய பிரதேச கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு வேண்டுகோள்

ஆக.25,2012. ஆகஸ்ட் 26ம் தேதி இஞ்ஞாயிற்றுக்கிழமையை இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினமாகக் கடைப்பிடிக்குமாறு இந்தியாவின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது மத்திய பிரதேச மாநிலத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு ஒன்று. 
போபாலை மையமாகக் கொண்டு செயல்படும், மத்திய பிரதேச இசை மகாசங் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு, திருத்தூதர் தோமையார் தொடங்கி, தங்களது கிறிஸ்தவ விசுவாசத்திற்காக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மறைசாட்சிகள் தினத்தைக் கடைப்பிடிக்கும் நடவடிக்கையை ஊக்குவித்து வருகிறது.
நான்காண்டுகளுக்கு முன்னர் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் இடம்பெற்ற பின்னர் இந்த மறைசாட்சிகள் தினத்தைக் கடைப்பிடிப்பதற்குக் கிறிஸ்தவர்களை ஊக்குவித்து வருகிறது இவ்வமைப்பு. 
போபால் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த மறைசாட்சிகள் தினத்தில் கிறிஸ்தவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுத்து இரத்த தான முகாம்களில் இரத்த தானம் செய்யுமாறும் இசை மகாசங் அமைப்பு பரிந்துரை செய்கின்றது. 
5. ஜாம்பியாவை ஒரு கிறிஸ்தவ நாடு என்று அறிவிக்கும் பரிந்துரைக்கு ஆயர்கள் எதிர்ப்பு

ஆக.25,2012. ஜாம்பிய நாட்டுப் புதிய அரசியல் அமைப்பின் முன்னுரையில் அந்நாட்டை ஒரு கிறிஸ்தவ நாடு என்று அறிவிக்கும் பரிந்துரைக்கு அந்நாட்டு ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   
புதிய அரசியல் அமைப்பு குறித்த தங்கள் பரிந்துரைகளை வெளியிட்டுள்ள ஆயர்கள், ஜாம்பியாவை ஒரு கிறிஸ்தவ நாடு என்று அரசியல் அமைப்பில் அறிவிப்பதால் மட்டும் அந்நாடு கிறிஸ்தவ விழுமியஙகளையும் கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளையும் அனுசரிக்காது என்று சொல்லியுள்ளனர்.
ஜாம்பியா, பல சமயத்தவரைக் கொண்ட நாடு என்பதையும் சுட்டிக் காட்டியுள்ள  ஆயர்கள், அரசும் திருஅவையும் தனித்தனியானவை என்ற கொள்கையை இழக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
ஜாம்பியாவில் தற்போது சில குறிப்பிட்ட விவகாரங்களில் கருக்கலைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மரணதண்டனையும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு, மரணதண்டனை, கருணைக்கொலை ஆகியவற்றுக்குப் புதிய அரசியல் அமைப்பில் ஆதரவளிக்கக் கூடாது எனவும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.


6. சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் விவிலியம் ஓர் இலத்தீன் அமெரிக்க நாட்டில் வெளியிடப்படவிருக்கின்றது

ஆக.25,2012. மறுசுழற்சி செய்யப்பட்ட தாள்களில் காய்கறிகளில் தயாரிக்கப்பட்ட மையால் பதிவுசெய்யப்பட்ட வார்த்தைகளைக் கொண்ட விவிலியம் ஒன்று தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில் வெளியிடப்படவிருக்கின்றது.
சுற்றுச்சூழலுடன் நல்லுறவு கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஒன்றிணைந்த விவிலியக் கழகங்கள் இந்தத் திட்டத்தைச் செய்து வருகின்றன.
இயற்கைத்தாய் மதிக்கப்படும் ஈக்குவதோரின் Galapagos தீவுகளில் இந்த விவிலியத்தை இம்மாதம் 28ம் தேதி வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளன இக்கழகங்கள்.
Galapagos தீவுகள் 1979ம் ஆண்டிலிருந்து பாரம்பரிய இயற்கைவளச் சின்னமாக மாறியுள்ளன.
படைப்பின்மீது கடவுள் அக்கறை கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் பகுதிகள் இந்த விவிலியத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

7. இங்கிலாந்தில் 8வது உலக இளம் கிறிஸ்தவத் தொழிலாளர் மாநாடு

ஆக.25,2012. வாழ்க்கையின் ஒரு பள்ளியைக் கட்டியெழுப்பு என்ற தலைப்பில் இங்கிலாந்தின் Altonல் இச்சனிக்கிழமையன்று 8வது உலக இளம் கிறிஸ்தவத் தொழிலாளர் மாநாடு தொடங்கியுள்ளது.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில் இளம் தொழிலாளர்கள், மாணவர்கள், வேலையின்றி இருக்கும் இளையோர் என ஏறக்குறைய 50 நாடுகளிலிருந்து இளையோர் கலந்து கொள்கின்றனர்.
இன்றைய இளையோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பன்னாட்டினரின் கவனத்துக்குக் கொண்டு வரவும், இவர்களின் பிரச்சனைகளுக்குத் திருஅவை எவ்வாறு பதில் சொல்கிறது என்பதை அறியவும் இம்மாநாட்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள 8வது உலக இளம் கிறிஸ்தவத் தொழிலாளர் மாநாடு, வருகிற செப்டம்பர் 5ம் தேதி நிறைவடையும்.

8. கொழும்பு : அணுத்தொழில்நுட்பம் தொடர்பான அனைத்துலக மாநாடு

ஆக.25,2012. அணுத் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்துலக மாநாடு இலங்கையின் கொழும்பில்,  தலதாரி பயணியர் மாளிகையில் இம்மாதம் 27ம் தேதி தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதைக் கருப்பொருளாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறவுள்ளது.
சீனா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த அனைத்துலக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
ஐ.நா. உறுப்பு நாடுகளில் நில வளங்களைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து இம்மாநாட்டில் விவரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...