Monday, 13 August 2012

Catholic News in Tamil - 10/08/12

1. சிட்னி நகரில் ஆரம்பமாகியுள்ள "அறிவியுங்கள் 2012" கருத்தரங்கில் பேராயர் Rino Fisichella

2. வறியவர்களுக்குப் பணிசெய்வதே திருஅவையின் முக்கியப் பணி - கர்தினால் Angelo Bagnasco

3. விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்ட புதிய பேராயர் பொறுப்பேற்றார்

4. பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படவேண்டும்

5. அணுசக்திக்கு மாற்றுச் சக்திகளைக் கண்டுபிடிக்கும் தார்மீகக் கடமை ஜப்பான்  அரசுக்கு அதிகம் உள்ளது

6. அகில உலக மண்ணின் மைந்தர்கள் நாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி

7. இரவுநேரப் பணிகள் இதயநோய்க்கு வழிவகுக்கும்: எச்சரிக்கைத் தகவல்

8. உலகளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. சிட்னி நகரில் ஆரம்பமாகியுள்ள "அறிவியுங்கள் 2012" கருத்தரங்கில் பேராயர் Rino Fisichella

ஆக.10,2012. கடவுளின் குரலை அடக்கிவிடுவதால் மனித சமுதாயம் சுயமாகத் தீர்மானங்களை எடுக்கும் சுதந்திரம் பெற்றுவிடும் என்று எண்ணுவது தவறான முடிவு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 9 இவ்வியாழன் முதல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பமாகியுள்ள "அறிவியுங்கள் 2012" என்ற ஒரு கருத்தரங்கில், புதிய வழிகளில் நற்செய்தி பரப்புதல் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella இவ்வாறு கூறினார்.
சமுதாயத்தின் ஓரங்களுக்குத் கிறிஸ்தவத்தைத் தள்ளிவிட்டால், புதியதொரு சமுதாயத்தை உருவாக்கலாம் என்று தவறான வழிகளில் இவ்வுலகம் நம்மைத் அழைத்துச் செல்கிறது என்று பேராயர் Fisichella எடுத்துரைத்தார்.
திருத்தந்தையர்கள் 6ம் பவுல், அருளாளர் இரண்டாம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் ஆகிய மூவரும் நற்செய்தியைப் பரப்பும் புதிய வழிகள் குறித்து எழுதியுள்ள மடல்களைத் தன் உரையில் சுட்டிக்காட்டினார் பேராயர் Fisichella.
ஆஸ்திரேலிய ஆயர் பேரவை 2012ம் ஆண்டு தூய ஆவியார் திருநாளன்று துவக்கிய அருள்நிறை ஆண்டு 2013ம் ஆண்டு தூய ஆவியார் திருநாள்வரைத் தொடரும். இந்த ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, புதிய வழிகளில் நற்செய்தி பரப்புதல் பணிகள்பற்றிய முதல் கருத்தரங்கு சிட்னி நகர் Chatswood எனுமிடத்தில் இச்சனிக்கிழமை முடிய நடைபெறுகிறது.


2. வறியவர்களுக்குப் பணிசெய்வதே திருஅவையின் முக்கியப் பணி - கர்தினால் Angelo Bagnasco

ஆக.10,2012. திருஅவையின் முக்கியக் கருவூலம் வறியவர்கள் என்பதையும், வறியவர்களுக்குப் பணிசெய்வதே ஒவ்வொரு நாட்டிலும் திருஅவையின் முக்கியப் பணி என்றும் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.
ஆகஸ்ட் 10 இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனித இலாரன்ஸ் திருநாளன்று ஜெனோவா பேராலயத்தில் திருப்பலியாற்றி, மறையுரை வழங்கிய ஜெனோவா பேராயர் கர்தினால் Bagnasco, திருஅவையின் செல்வங்களைத் தனக்கு அளிக்குமாறு பணித்த உரோமைய அதிகாரியின் முன் வறியோரை நிறுத்திய புனித இலாரன்ஸ் வாழ்வு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டினார்.
'பேரரசனுக்குப் பணிபுரிய மாட்டேன்' என்ற விருதுவாக்குடன் வாழ்ந்த புனித இலாரன்ஸ் என்ற இளைஞன், இன்றும் இளையோருக்கு பொருளுள்ள ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்று கூறிய கர்தினால் Bagnasco, பொருளாதாரச் சரிவில் சிக்கியுள்ள இவ்வுலகில், இளையோர் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் வாழ புனிதர் வழிகாட்டுகிறார் என்று கூறினார்.


3. விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்ட புதிய பேராயர் பொறுப்பேற்றார்

ஆக.10,2012. விஜயவாடா ஆயராக பணியாற்றிய பிரகாஷ் மல்லவரப்பு அவர்கள், விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்ட பேராயராக பொறுப்பேற்ற திருப்பலியை இந்தியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio, முன்னின்று நடத்தினார்.
விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டப் பேராலயத்தின் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், ஒய்வு பெற்றுள்ள முன்னாள் பேராயர் மரியதாஸ் காகிதப்பூ அவர்களுக்குப் பிரியாவிடையும் அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வெடுத்துச் செல்லும் பேராயர் காகிதப்பூ  அவர்கள் பணியை பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கும் பேராயர் மல்லவரப்பு அவர்களை வரவேற்றும் வத்திக்கானிலிருந்து அனுப்பப்பட்டிருந்த வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன.
160 ஆண்டுகள் வரலாறு கண்டுள்ள விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டத்தில் 2,50,186 கத்தோலிக்கர்கள் உள்ளனர், 154 குருக்களும், 500க்கும் மேற்பட்ட இருபால் துறவியரும் இங்கு பணிபுரிகின்றனர்.


4. பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படவேண்டும்

ஆக.10,2012. கருவில் வளர்வது ஆணா, பெண்ணா என்று ஆய்வுகள் செய்து, பெண்குழந்தை என்றால் கருவிலேயே அதை அழிப்பதில் ஈடுபடுபவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படவேண்டும் என்று இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் ஓர் அதிகாரி கூறினார்.
பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கும் அவலம் குறித்து இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பெண்கள் பணிகளின் செயலர் அருள்சகோதரி ஹெலன் சல்தானா CNS கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை ஆய்வுசெய்து கருக்கலைப்பை மேற்கொள்வது இந்தியாவில் சட்டப்படி குற்றம் என்றாலும், இத்தகையக் கொடுமைகளில் ஈடுபடுவோருக்குச் சட்டப்படி தண்டனைகள் இல்லாததால், இக்குற்றம் பரவி வருகிறது என்று அருள்சகோதரி சல்தானா சுட்டிக்காட்டினார்.
பெண் குழந்தைகளைக் கருக்கலைப்பு செய்வோர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, அதற்குரிய தண்டைனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு ஜூலை மாதம் முதல் இந்தியாவில் ஆதரவு வளர்ந்துவருகிறது என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த அவலமான பழக்கத்தைப்பற்றிய விழிப்புணர்வை வளர்க்க, ஒவ்வோர் ஆண்டும்  செப்டம்பர் 8ம் தேதி அன்னை மரியாவின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் நாளாக இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை 1997ம் ஆண்டு முதல் சிறப்பித்து வருகிறது.


5. அணுசக்திக்கு மாற்றுச் சக்திகளைக் கண்டுபிடிக்கும் தார்மீகக் கடமை ஜப்பான்  அரசுக்கு அதிகம் உள்ளது

ஆக.10,2012. அணுசக்திக்கு மாற்றுச் சக்திகளைக் காணும் தார்மீகக் கடமை ஜப்பான்  அரசுக்கு அதிகம் உள்ளது என்று நாகசாகி நகர மேயர் Tomihisa Taue கூறினார்.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டு வீசியதன் 67ம் ஆண்டு நினைவு இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்டபோது, அந்நினைவு நிகழ்வில் பேசிய நாகசாகி மேயர் Taue, புகுஷிமா அணு உலை விபத்தைக் குறித்தும் பேசினார்.
கதிர்வீச்சு ஆபத்திலிருந்து மக்களைக் காப்பது ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் தலையாயக் கடமை என்று கூறிய மேயர் Taue, அணு உலைகளின் கழிவுப் பொருட்களிலும் கதிர்வீச்சு ஆபத்து இருப்பதை முக்கியமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
புகுஷிமா அணு உலை ஆபத்துக்குப் பின், ஜப்பான் மாற்றுச் சக்திகளைத் தேடவேண்டும் என்ற கோரிக்கையை நாகசாகி மேயர் Tomihisa Taue தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் 80,000க்கும் அதிகமானோர் இறந்தனர். கதிர்வீச்சு விளைவுகளுடன் இன்னும் வாழ்ந்து வருபவர்கள் 39,324 பேர் என்றும், இவர்கள் அனைவரும் 77 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. அகில உலக மண்ணின் மைந்தர்கள் நாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி

ஆக.10,2012. சமுதாய வானொலி முதல், கணணி வழித் தொடர்புகள் வரை, தற்காலத் தொடர்புக்கருவிகள் அனைத்தையும் மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்தி, தங்கள் குரலை உலகெங்கும் ஒலிக்கச்செய்கின்றனர் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆகஸ்ட் 9, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அகில உலக மண்ணின் மைந்தர்கள் நாளையொட்டி, செய்தி வெளியிட்ட பான் கி மூன், உலகின் கண்களிலிருந்து பெரும்பாலும் மறைந்து வாழ்ந்த இம்மக்களும் தற்போது உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று கூறினார்.
"மண்ணின் மைந்தர்களின் குரல்களைச் சக்திபெறச் செய்தல்" என்ற மையக் கருத்துடன் இவ்வாண்டு கொண்டாடப்பட்ட இந்த அகில உலக நாள், 1994ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுக்குள் இம்மக்கள் முழு மனித மாண்படைய வேண்டும் என்பதே ஐ.நா.வின் இலக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை, அநீதி, பாகுபாடுகளுடன் நடத்தப்படுதல் என்ற பல வழிகளிலும் துன்புறும் இம்மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்புச் சாதனங்கள் பெருமளவு பயன்படுத்தப்படவேண்டும் என்று UNESCO தலைமை இயக்குனர் Irina Bokova கூறினார்.


7. இரவுநேரப் பணிகள் இதயநோய்க்கு வழிவகுக்கும்: எச்சரிக்கைத் தகவல்

ஆக.10,2012. சரியாக உறங்காமல் இரவில் கண்விழித்து வேலை செய்பவர்களில் 23 விழுக்காட்டினர் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு உண்ணாமல் இரவு நேரங்களில் துரித உணவு வகைகளை அதிகம் உண்ணுதல் போன்ற காரணங்களால், உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு இளையோர் ஆளாகி விடுகின்றனர்.
இன்றைய இயந்திர வாழ்வில், கணனித் துறை, மற்றும் BPO மையங்களில் வேலை பார்ப்பவர்களின் பணி நேரம் இரவில் என்பதால், தூங்காமல் விழித்திருக்க டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்குகிறது. இதனால் இதயத்துக்குச் செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
சரியான அளவு தூக்கம், மன அழுத்தம் இல்லாத நிம்மதியான செயல்பாடு போன்றவைகளே உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்றும், நாள்தோறும் 30 நிமிடங்களாகிலும் உடற்பயிற்சி செய்வதால், உடலில் கொழுப்பு குறைந்து தசைகள் வலுவடைந்து, இரத்த ஓட்டம் சீராகும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


8. உலகளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது

ஆக.10,2012. உலகளவில் உணவு தானியங்கள் மற்றும் சர்க்கரையின் விலை ஜூலை மாதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பான FAO கூறியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கோதுமை, சோளம், கம்பு, போன்ற பல தானியங்களின் விலை 17 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று FAO தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட வறட்சி மற்றும் இரஷ்யாவில் ஏற்பட்ட உற்பத்தி பிரச்சினைகளாலேயே இந்தக் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடான பிரேசிலில் கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டதால், சர்க்கரையின் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. எனினும் அரிசியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தானியங்கள் மற்றும் சர்க்கரை மட்டுமல்லாமல், உலகளவில் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் சராசரியாக ஆறு விழுக்காடு உயர்ந்துள்ளது என்று FAO தெரிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...