Wednesday 29 August 2012

Catholic News in Tamil - 29/08/12


1. திருப்பீடத்தூதர் : சிரியா நரகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது

2. CELRA : அலெப்போ கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகக் கடிதம்

3. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் : நியுயார்க் கர்தினால் கோரிக்கை

4. உலகக் கத்தோலிக்கருக்கு உதவும் திருப்பீடத்தின் புதிய இணையதளம்

5. ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் : சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்காக மனம் வருந்த வேண்டும்

6. பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறாரை வேலையில் அமர்த்தினால் மூன்று ஆண்டு சிறை

7. குஜராத் கலவரம்: 32 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

8. மணிப்பூரில் Mary Kom பெயரில் புதிய சாலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடத்தூதர் : சிரியா நரகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது

ஆக.29,2012. சிரியா நாட்டில் ஒவ்வொரு நாளின் விடியலும் புதிது புதிதான மரணங்களின் பட்டியலோடும், வெற்றிகளின் அறிவிப்புக்களோடும்  தொடங்குகின்றது என்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
சிரியாவின் ஜோபர் மாவட்டத்தில் இராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடியவண்ணம் புரட்சியாளர்கள் இச்செவ்வாய்க்கிழமையைத் தொடங்கினார்கள் என்றுரைத்த பேராயர் Zenari, இந்த வெற்றிகள் உண்மையோ அல்லது கற்பனையோ எப்படியிருப்பினும், இத்தகைய கொண்டாட்டங்கள் மற்றும் மரண அறிவிப்புக்களுடன் ஒவ்வொரு நாளும் விடிகின்றது என்று தெரிவித்தார்.
சிரியா அரசு Daraya நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அறிவிக்கின்றது, மறுபக்கம், பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 320 பேர் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர் எனப் புரட்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்றுரைத்த பேராயர், சிரியாவில் ஒவ்வொரு நாளும் இப்படித் தொடங்குகின்றது என்று கூறினார்.
சிரியாவில் இடம்பெறுவது, சில அரபு நாடுகளில் இடம்பெற்ற அரபு வசந்தம் கிளர்ச்சி போல் அல்லாமல் கற்பனைக்கு எட்டாத கடும் விளைவுகளைக் கொண்டுவரும் மிகவும் சிக்கலான பிரச்சனையாக இருக்கின்றது என்றும் எச்சரித்த திருப்பீடத் தூதர், சிரியா, நரகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது என்றே சொல்லத் தோன்றுகின்றது  என்று கவலை தெரிவித்தார்.
இதற்கிடையே, புரட்சிப்படைகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி பெறுவதற்கு சிரியா அரசுக்கு இன்னும் அவகாசம் தேவைப்படுகின்றது என்று சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assad  இப்புதனன்று கூறியுள்ளார்.


2. CELRA : அலெப்போ கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகக் கடிதம்

ஆக.29,2012. சிரியாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கும் அலெப்போ இலத்தீன்ரீதி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giuseppe Nazzaroவுக்கும் ஆதரவாகச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது CELRA என்ற அரபுப் பகுதிகளின் இலத்தீன் ரீதி ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு. 
சிரியாவில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்த ஆயர்கள் கூட்டமைப்பு, வன்முறை என்றென்றும் நிலைத்திருக்காது என்று சொல்லி, சிரியா கிறிஸ்தவர்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளது.
ஜோர்டன் நாட்டு Ammanல் வருகிற செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெறவிருக்கும் CELRA கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் அலெப்போ ஆயர் கலந்துகொண்டு செய்திகளைப் பகிர்ந்துகொள்வார் என்றும், சிரியாவில் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு ஆதரவாகச் செய்தி ஒன்று இக்கூட்டத்தில் கையெழுத்திடப்பட்டு வெளியிடப்படும் என்றும் அச்செய்தி கூறுகிறது.


3. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் : நியுயார்க் கர்தினால் கோரிக்கை

ஆக.29,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற நவம்பரில் நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் தனிப்பட்ட விதத்தில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டுமென நியுயார்க் கர்தினால் Timothy M. Dolan கேட்டுக் கொண்டார்.
அந்நாட்டின் குடியரசு கட்சி, சனநாயக கட்சி ஆகிய இரண்டின் அரசுத்தலைவர், உதவி அரசுத்தலைவர் ஆகிய வேட்பாளர்கள், குடிமக்களுடன் உரையாடல் நடத்தும் மனுவில் கையெழுத்திடுமாறும் வலியுறுத்திய கர்தினால் டோலன், இந்த வேட்பாளர்கள் ஒருவர் மற்றவரின் சொந்த வாழ்க்கையைத் தாக்கிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளார்.
இந்த மிகப் பெரிய நாட்டின் வேட்பாளர்கள் இந்தத் தனது கோரிக்கைக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதனைத் தான் எழுதுவதாகக் கூறியுள்ள கர்தினால் டோலன், இவ்வாறு செயல்படுவதன் மூலம் தற்போது நாடு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளில் வேட்பாளர்கள் கவனம் செலுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
சனநாயக கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் Barack Obama, உதவி அரசுத்தலைவர் வேட்பாளர் Joe Biden, குடியரசு கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் Mitt Romney, உதவி அரசுத்தலைவர் வேட்பாளர் Paul Ryan ஆகிய நால்வருக்கும் நியுயார்க் கர்தினால் எழுதிய கடிதங்களில் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இம்மனுவில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளனர்.


4. உலகக் கத்தோலிக்கருக்கு உதவும் திருப்பீடத்தின் புதிய இணையதளம்

ஆக.29,2012. வருகிற அக்டோபரில் தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டு குறித்த விபரங்களைப் பொதுநிலையினர் அறிந்து கொள்வதற்கு உதவியாக புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது திருப்பீட பொதுநிலையினர் அவை.
இந்தப் புதிய இணையதளம் குறித்து CNA செய்தி நிறுவனத்திடம் விளக்கிய இத்திருப்பீட அவையின் பெண்கள் பிரிவின் Ana Cristina Betancourt, திருஅவையில்  தங்களது பங்கையும் அழைப்பையும் இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள விரும்பும் அனைத்துப் பொதுநிலை விசுவாசிகளுக்குமென இந்தப் புதிய இணையதளம் திறக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பொதுநிலையினர் தங்களது அழைப்பை வாழ்வதற்குத் திருத்தந்தை வழங்கும் வழிமுறைகள், இன்னும், திருப்பீட பொதுநிலையினர் அவையின் அன்றாடச் செயல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்கும் இந்த இணையதளம் உதவும் என்றும் அவர் கூறினார்.
திருத்தந்தை ஆறாம் பவுல், திருப்பீட பொதுநிலையினர் அவையை 1967ம் ஆண்டில் உருவாக்கினார். இந்த அவை திருப்பீடத்தில் நிரந்தரமாகச் செயல்படும் நோக்கத்தில் இதே திருத்தந்தை 1976ம் ஆண்டில்  இந்த அவையை மீண்டும் உறுதி செய்தார்.
திருப்பீட பொதுநிலையினர் அவையின் இணையதள முகவரி www.laici.va. 


5. ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் : சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்காக மனம் வருந்த வேண்டும்

ஆக.29,2012. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்காகச் செபிக்கும்போது, அச்சுற்றுச்சூழலை சிறிய அல்லது பெரிய அளவில் ஒவ்வொருவரும் மாசுபடுத்தி வருவதற்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்குமாறு பரிந்துரைத்துள்ளார் Constantinople Ecumenical ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Bartholomew. 
துருக்கி நாட்டு Istanbulலில் தலைமையகத்தைக் கொண்டுள்ள உலக   ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவராகிய முதுபெரும் தலைவர் Bartholomew, வருகிற செப்டம்பர் முதல் தேதி கடைப்பிடிக்கப்படவிருக்கும் சுற்றுச்சூழல் செப நாளுக்குத் தயாரிப்பாக வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மனித சமுதாயம் வாழ்வதற்கு ஏற்ற பூமியாக இறைவன் இந்த உலகைப் படைத்தார் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள முதுபெரும் தலைவர் Bartholomew, இந்தச் சுற்றுச்சூழலை இறைவன் பாதுகாக்குமாறு செபிக்கும்போது, நாம் அதை அழிக்கும் பாவச்செயலுக்காகவும் மனம் வருந்த வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
இந்தச் செப நாளை 1989ம் ஆண்டிலிருந்து Istanbul ஆர்த்தடாக்ஸ் சபை கடைப்பிடித்து வருகிறது. இச்செப நாள் ஒரு முக்கியமான கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்டும் பாராட்டியுள்ளார்.


6. பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறாரை வேலையில் அமர்த்தினால் மூன்று ஆண்டு சிறை

ஆக.29,2012. இந்தியாவில் பதினான்கு வயதிற்கு உட்பட்ட சிறாரை எந்த விதமான வேலையில் ஈடுபடுத்தினாலும், அவ்வாறு செய்யும் நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என்பது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இச்செவ்வாயன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில்,  1986ம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தச் சட்டத்தின்படி, அபாயமான அல்லது அபாயமற்ற எந்த விதமான தொழில்களிலும், 14 வயதிற்கு உட்பட்ட சிறாரை ஈடுபடுத்தக் கூடாது. அதை மீறினால் மூன்றாண்டு சிறைத்தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன், சுரங்கம் போன்ற அபாயகரமான தொழில்களில் 18 வயதிற்குக் குறைவானவர்களை ஈடுபடுத்தவும்  இந்தச் சட்ட மசோதா தடை விதிக்கிறது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், இந்தியாவில் தொழில் சட்டங்கள், ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாய் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.


7. குஜராத் கலவரம்: 32 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

ஆக.29, 2012. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் தொடர்புடையவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 32 பேர் குற்றவாளிகள் என்று அம்மாநில சிறப்பு நீதிமன்றம் இப்புதனன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான Maya Kodnani மற்றும் பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் Babu Bajrangi ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கானத் தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Naroda-Patiya கலவரம் என்று அழைக்கப்படும் அந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 29 பேர் குற்றமற்றவர்கள் என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.
Ahmedabad நகரில் உள்ள Naroda-Patiya  பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2002-ம் ஆண்டு, கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்தில் 60 இந்து திருப்பயணிகள் கொல்லப்பட்டதையடுத்து நடந்த இனக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களி்ல் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.


8. மணிப்பூரில் Mary Kom பெயரில் புதிய சாலை

ஆக.29,2012. இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் Churachandpur மாவட்டத்திலுள்ள ஒரு சாலைக்கு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற Mary Kom பெயரை வைப்பதற்கு அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.
உலக குத்துச் சண்டை வீரராக ஐந்து முறை தேர்வாகியுள்ள Mary Kom, இவ்வாண்டு இலண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டையில் வெண்கலம் வென்றதைப் பாராட்டும் விதமாக அவருக்கு கூடுதல் காவல்துறை ஆணையர் என்ற பதவி உயர்வு அளித்துள்ளதுடன் 50 இலட்சம் ரூபாய்ப் பரிசுத் தொகையையும் மாநில அரசு வழங்கியுள்ளது.
Churachandpur நகரையும் அந்நகரின் உதவி காவல்துறை அதிகாரியின் அலுவலகத்தையும் இணைக்கும் சாலைக்கு Mary Kom சுற்றுச்சாலை எனப் பெயரிடவிருப்பதாக மணிப்பூர் நலவாழ்வு அமைச்சர் T Phungzathang அறிவித்தார்.
மேலும், Churachandpurல் பொது வளாகம் ஒன்று அமைப்பதற்கு பத்து இலட்சம் ரூபாய்க்கும் அரசு அனுமதியளித்துள்ளது. Mary Kom, Churachandpur மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...