Friday, 24 August 2012

Catholic News in Tamil - 24/08/12

1. தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர், துணை ஆயர்

2. திருப்பீடத் தூதர்:அயர்லாந்து நாடு உண்மையான கத்தோலிக்க மறுமலர்ச்சியின் மூலம் துன்பங்களை மேற்கொள்ள முடியும்

3. பேராயர் தொமாசி : சில கருத்துருவாக்கங்கள் சமய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன

4. தென்னாப்ரிக்காவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்

5. Rimsha Masihன் விடுதலைக்கு பாகிஸ்தான் சமயத் தலைவர்கள் உழைத்து வருகின்றனர்

6. அடிமை வியாபாரம் குறித்துச் சிந்திக்குமாறு யுனெஸ்கோ இயக்குனர் அழைப்பு

7. கூடுதலான அகதிகளை ஏற்றுக்கொள்ள ஆஸ்திரேலியா தீர்மானம்

8. ஆசிய நாடுகளுக்குக் கடத்தப்படவிருந்த 16,000 கடற்குதிரைகள் பெரு நாட்டில் பறிமுதல்

------------------------------------------------------------------------------------------------------

1.  தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர், துணை ஆயர்

ஆக.24,2012. இந்தியாவின் தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்திற்கு, அந்த ரீதியின் மாமன்றம் தேர்ந்தெடுத்துள்ள புதிய ஆயர் மற்றும் துணை ஆயரை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரளாவின் Saint Thomas Mountல் கூடிய சீரோ-மலபார் ரீதி மாமன்றம், தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, சலேசிய சபை அருள்தந்தை George Rajendran Kuttinadar அவர்களையும், துணை ஆயராக அருட்பணி Jacob Muricken அவர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்தின் புதிய ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருள்தந்தை George Rajendran Kuttinadar, ஷில்லாங் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகவும், துணை ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருட்பணி Jacob Muricken, Palai சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி மைய இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த Mar George Alencherry அவர்கள், சீரோ-மலபார் ரீதி திருஅவையின் தலைவராகவும், எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் 2011ம் ஆண்டு மே 24ம் தேதி நியமனம் செய்யப்பட்டதையடுத்து அம்மறைமாவட்டத்திற்கு இவ்வெள்ளியன்று புதிய ஆயரும் துணை ஆயரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கீழைரீதி திருஅவை சட்டத்தின்படி, கத்தோலிக்கத் திருஅவையில் இருக்கின்ற 21 தன்னாட்சி அதிகாரம் கொண்ட சிரிய ரீதி சபைகள், அச்சபைகளின் மாமன்றங்கள் தேர்ந்தெடுக்கும் ஆயர்களைத் திருத்தந்தை அங்கீகரிக்கிறார்.


2.  திருப்பீடத் தூதர்:அயர்லாந்து நாடு உண்மையான கத்தோலிக்க மறுமலர்ச்சியின் மூலம் துன்பங்களை மேற்கொள்ள முடியும் 

ஆக.24,2012. 19ம் நூற்றாண்டில் Knock அன்னைமரியா காட்சி கொடுத்ததற்குப் பின் அயர்லாந்தில் இடம்பெற்ற கிறிஸ்தவ மறுமலர்ச்சியைப் போன்று, தற்போதைய நவீன அயர்லாந்திலும் ஓர் உண்மையான கத்தோலிக்க மறுமலர்ச்சி இடம்பெற வேண்டுமென்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Charles Brown கேட்டுக் கொண்டார்.
அயர்லாந்தின் Mayo மாவட்டத்திலுள்ள Knock அன்னைமரியா திருத்தலத்தில் நடைபெற்ற தேசிய பொது நவநாள் பக்திமுயற்சியின் இறுதியில் மறையுரையாற்றிய பேராயர் Brown, பல ஆண்டுகள் துன்பங்களை எதிர்நோக்கியுள்ள அயர்லாந்தின் எதிர்காலம் இப்போது துவங்குகிறது என்று கூறினார்.
1879ம் ஆண்டில் அன்னைமரியா, Knock என்ற இந்த இடத்தில் காட்சி கொடுத்தபோது இந்நாட்டுக் கத்தோலிக்கர் செல்ல வேண்டியிருந்த பாதை எளிதானதாக இல்லையெனக் கூறிய பேராயர் Brown, இருந்தபோதிலும் அயர்லாந்து கத்தோலிக்கத்தின் 15 நூற்றாண்டுகால வரலாற்றில் இக்காட்சிக்குப் பின்னான காலம் மிகவும் பயனுள்ள காலமாக இருந்ததெனவும் பேராயர் குறிப்பிட்டார்.
1879ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி Knock ஆலயத்தில், அன்னைமரியா, புனித வளன், நற்செய்தியாளர் புனித யோவான் ஆகிய மூவரும் காட்சி கொடுத்ததை 15 பேர் பார்த்தனர். இவர்கள், கொட்டும் மழையிலும், இந்தக் காட்சியைப் பார்த்தவண்ணம் இரண்டு மணிநேரங்கள் அமைதியாகச் செபித்துக் கொண்டிருந்தனர் என வரலாறு கூறுகிறது.


3. பேராயர் தொமாசி : சில கருத்துருவாக்கங்கள் சமய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன

ஆக.24,2012. மதங்களுக்கு இடையே நிலவும் வேறுபாடுகள், கலவரங்களுக்கு இட்டுச் செல்லாமல், உரையாடலை மேலும் அதிகமாக ஊக்கப்படுத்த வழிநடத்த வேண்டும் என்பது பரவலாக உணர்த்தப்பட வேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்தாலியின் ரிமினியில் ஒன்றிப்பும் விடுதலையும் என்ற பொதுநிலையினர் அமைப்பு நடத்திவரும் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு தெரிவித்தார்.
மதங்களுக்கு இடையே சகிப்பற்றதன்மை வளர்ந்து வருவது வன்முறையை அல்லது சண்டையை மட்டும் தூண்டிவிடவில்லை, ஆனால், மத நம்பிக்கை கொண்டவர்கள் பொதுநலவாழ்வில் பங்கு கொண்டு பொதுநலனுக்குச் செய்ய முயற்சிக்கும் நற்செயல்களுக்கு இடையூறாகவும் இருக்கின்றது என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
மதம், குறிப்பாக கிறிஸ்தவம் தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது என்று சில ஊடகங்கள் விவரிக்கின்றன, ஆனால் இதனை நாம் வேறு விதமாக நோக்க வேண்டும் என்றுரைத்த பேராயர், சில கருத்துருவாக்கங்கள் சமயத்தை சுதந்திரமாகச் செயல்படுத்துவதைக் கட்டுப்படுத்துகின்றன என்று கூறினார்.
இச்சனிக்கிழமையன்று நிறைவடையும் இக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, அரசியல், மதம், பொருளாதாரம், கலாச்சாரம் எனப் பல துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைவர்கள் உட்பட  எட்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.


4. தென்னாப்ரிக்காவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்

ஆக.24,2012. தென்னாப்ரிக்காவில் மேலும் வன்முறைகள் இடம்பெறாமலிருப்பதற்கு உரையாடலை ஊக்குவிக்குமாறு அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள் அரசை கேட்டுள்ளனர்.
தென்னாப்ரிக்காவில் கடந்த வாரத்தில் கொல்லப்பட்ட Marikana நகர் பவளச் சுரங்கத் தொழிலாளர்கள் நினைவாகத் திருப்பலி நிகழ்த்திய Durban பேராயர் கர்தினால் Wilfrid Napier, காவல்துறையால் இத்தகைய வன்முறைச் செயல்கள் இனிமேல் நடக்காது என்று நம்பியிருந்த இக்காலக்கட்டத்தில் இக்கொலைகள் நடந்திருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது என்று கூறினார்.
இந்நினைவு நாளில் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Napier, மக்கள் வருத்தமும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
1960களில் Sharpeville நகரத்தில் காவல்துறையால் 60 பேர் கொல்லப்பட்டதையும் கர்தினால் நினைவுகூர்ந்தார்.
கடந்த வாரத்தில் தென்னாப்ரிக்காவில் ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய பவளச் சுரங்கத் தொழிலாளர்மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 34 பேர் கொல்லப்பட்டனர்.


5. Rimsha Masihன் விடுதலைக்கு பாகிஸ்தான் சமயத் தலைவர்கள் உழைத்து வருகின்றனர்

ஆக.24,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் சிறையில் வைக்கப்பட்டுள்ள Rimsha Masih என்ற 11 வயது சிறுமியின் விடுதலைக்கும், இவ்விவகாரத்தை வைத்து முஸ்லீம்-கிறிஸ்தவ வன்முறை ஏற்படாமலிருக்கவும் அந்நாட்டு சமயத் தலைவர்களும் நிறுவனங்களும் உழைத்து வருகின்றன என்று அந்நாட்டு கத்தோலிக்க அரசியல் தலைவர் Paul Bhatti கூறினார்.
இவ்வியாழனன்று ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமரின் தேசிய நல்லிணக்க ஆலோசகர் Paul Bhatti, முஸ்லீம் தலைவர்கள் உட்பட பலர் இச்சிறுமியின் விடுதலைக்காக உழைத்து வருகின்றனர் என்று கூறினார்.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு இம்மாதம் 18ம் தேதி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, இச்சிறுமியிடம் கேட்கப்படும் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் இருக்கிறாள் என்றும், குரானைக் கற்றுக்கொள்ள உதவும் ஒரு நூலின் எரிக்கப்பட்ட பக்கங்கள் கொண்ட ஒரு பையுடன் அவளைக் கண்டுபிடித்திருக்கின்றனர் என்றும், இந்தப் பையை அவளிடம் யார் கொடுத்தது, அல்லது இதனை அவள் எங்கிருந்து எடுத்தாள் என்பதும் தெரியவில்லை என பாகிஸ்தானில் பணியாற்றும் புனித பால் துறவு சபை அருள்சகோதரி Daniela Baronchelli தெரிவித்தார்.
சிறுமி Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.


6. அடிமை வியாபாரம் குறித்துச் சிந்திக்குமாறு யுனெஸ்கோ இயக்குனர் அழைப்பு 

ஆக.24,2012. அடிமை வியாபாரம் உலகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்துச் சிந்திக்குமாறு இவ்வியாழனன்று கேட்டுள்ளார் யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, கலாச்சாரம் மற்றும் அறிவியல் நிறுவன இயக்குனர் Irina Bokova.
அனைத்துலக அடிமை வியாபார ஒழிப்பு நாள், ஆகஸ்ட் 23ம் தேதியன்று  நினைவுகூரப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட யுனெஸ்கோ இயக்குனர் Bokova, இனவெறி மற்றும் கட்டாயவேலைக்கு எதிராய்த் தன் குடிமக்களைப் பாதுகாக்குமாறு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்ரிக்கப் பூர்வீக இன மக்களுக்கு ஆதரவாக அடுத்த ஆண்டில் தொடங்கவிருக்கும் ஆப்ரிக்கப் பூர்வீக இன மக்களுக்கானப் பத்தாண்டுகள் என்ற நடவடிக்கைக்குத் தயாரிப்பாக இவ்வாண்டின் இந்த அனைத்துலக நாளின் நிகழ்வுகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1791ம் ஆண்டு ஆகஸ்ட் 22 மற்றும் 23ம் தேதிகளில் Saint Domingueவிலிருந்த (தற்போதைய ஹெய்ட்டி) அடிமைகள் கிளர்ச்சி செய்ததன் நினைவாக இந்த அனைத்துலக அடிமை வியாபார ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.


7. கூடுதலான அகதிகளை ஏற்றுக்கொள்ள ஆஸ்திரேலியா தீர்மானம்

ஆக.24,2012. ஆஸ்திரேலியாவில் குடியேற்றதாரர் கொள்கையில்  ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தத்தின் பயனாக, அந்நாடு ஒவ்வோர் ஆண்டும் 45 விழுக்காட்டு அகதிகளைக் கூடுதலாக ஏற்றுக்கொள்ளும் என அந்நாட்டுப் பிரதமர் Julia Gillard  அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையொட்டி இதற்குத் தீர்வு காணும் நோக்கத்தில் அரசு நியமித்த ஒரு தனிப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரையின்படி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளும் அகதிகளின் எண்ணிக்கையை 13,750லிருந்து 20,000 ஆக அதிகரிக்குமாறும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவ்வெண்ணிக்கையை 27,000 ஆக உயர்த்துமாறும் அக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடிப் படகுகளில் வரும் மக்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களாகவே அதிகரித்து வருகின்றது. இப்பயணங்களின்போது கடந்த ஆண்டில் மட்டும் 600 பேர் கடலில் மூழ்கியுள்ளனர்.


8. ஆசிய நாடுகளுக்குக் கடத்தப்படவிருந்த 16,000 கடற்குதிரைகள் பெரு நாட்டில் பறிமுதல்

ஆக.24,2012. சீனா, ஜப்பான் உட்பட ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 16,000 உலர்ந்த கடற்குதிரைகளை பெரு நாட்டின் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பெரு நாட்டு லீமா நகர் விமானநிலையத்தில் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட இக்கடற்குதிரைகள், 2,50,000 டாலர்கள் வரை விற்பனையாகலாம் என காவல்துறை அதிகாரி Victor Fernandez தெரிவித்தார்.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கடற்குதிரைகளின் தூள், பாரம்பரிய மருந்துகளுக்கும், பாலுணர்வுப் பயன்பாடுகளுக்கும் அரிய மருத்துவத்திற்குமெனப் பயன்படுத்தப்படுகின்றது.
தென் அமெரிக்க நாடாடன பெரு கடற்பகுதியில் கடற்குதிரைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. இந்நாட்டில் இவற்றைப் பிடிப்பது 2004ம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. 
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...