Monday, 13 August 2012

Catholic News in Tamil - 09/08/12

1. பேராயர் Celata : அனைத்து மதங்களும் உலகில் அமைதி ஏற்படுவதற்கு உழைக்குமாறு அழைப்பு

2. உறுதியான மணவாழ்வே நலமான மனித சமுதாயத்தின் அடித்தளம் - அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் டோலன்

3. ஆகஸ்ட் 10 இவ்வெள்ளியன்று கருப்புநாள் கடைபிடிக்கப்படும்

4. மக்கள்பேறு நலம் பற்றிய ஒரு சட்டத்தை அமலாக்கும் பிலிப்பின்ஸ் அரசின் முயற்சிக்கு ஆயர்கள் எதிர்ப்பு

5. அடிப்படைவாத கும்பல்களுக்கு மதம் முக்கியமல்ல, வன்முறையே முக்கியம் - Abuja பேராயர்

6. தென் கொரியாவின் Jeju தீவில் திருப்பலியில் காவல்துறையினர் நுழைந்து தாக்குதல்

7. ஓடிஸ்ஸாவில் கிறிஸ்தவப் போதகர் இறந்தது, விபத்தல்ல ஒரு கொலையே - Baliguda நீதி மன்றம் தீர்ப்பு

8. செவ்வாய் கோளத்தின் வண்ணப் புகைப்படத்தை அனுப்பியது கியூரியாசிட்டி

------------------------------------------------------------------------------------------------------

1. பேராயர் Celata : அனைத்து மதங்களும் உலகில் அமைதி ஏற்படுவதற்கு உழைக்குமாறு அழைப்பு

ஆக.09,2012. உலகின் அனைத்து மதங்களைச் சார்ந்த விசுவாசிகள் தங்களது மதங்களின் ஆன்மீக மரபுகளைப் பின்பற்றி உலகில் அமைதி ஏற்படுவதற்கு உழைக்குமாறு கேட்டுக் கொண்டார் பேராயர் Pier Luigi Celata.
ஒவ்வொரு மதத்தினரும் பரிவு, இரக்கம், மன்னிப்பு, அன்பு ஆகிய பண்புகளை வெளிப்படுத்தி நாம் எல்லாரும் ஒரே மனிதக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வில் வாழுமாறும் பேராயர் Celata பரிந்துரைத்தார்.
ஜப்பானின் நாகசாகி பேராலயத்தில் இவ்வியாழனன்று திருப்பலி நிகழ்த்தி அமைதிக்காகச் செபித்த, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் முன்னாள் செயலர் பேராயர் Celata, 67 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
இத்தாக்குதலில், பாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததைக் குறிப்பிட்டு, நாம் இறைவனிடம் அமைதிக்காகச் செபிக்குமாறு இந்நிகழ்வு வலியுறுத்துகின்றது என்றும் அவர் கூறினார்.
அமைதியை இறைவனில் மட்டுமே அடைய முடியும் என்பதை, கிறிஸ்தவர்களாகிய நாம் நமது விசுவாச ஒளியில் புரிந்து கொள்கின்றோம் என்றுரைத்த பேராயர் Celata, நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் கூறினார்.
இரண்டாம் உலகப்போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி மீது அமெரிக்க ஐக்கிய நாடு வீசிய Fat man என்ற அணுகுண்டுத் தாக்குதலில், அன்றே ஏறக்குறைய 70 ஆயிரம் பேர் இறந்தனர்.
இதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டினால் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர். இத்தாக்குதல்கள் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடையக் காரணமாக இருந்தன.
நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்ட இடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அமைதிப் பூங்காவில் இவ்வியாழனன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்கென அமெரிக்க ஐக்கிய நாடு முதன்முறையாகத் தனது தூதர் John Roosஐ அனுப்பியது.


2. உறுதியான மணவாழ்வே நலமான மனித சமுதாயத்தின் அடித்தளம் - அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் டோலன்

ஆக.09,2012. கடவுளின் அன்புக்கு தகுந்த சான்றாக இருக்கும் மணவாழ்க்கை, நலமானதொரு மனித சமுதாயத்தின் அடித்தளம் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Timothy Dolan கூறினார்.
Knights of Columbus என்ற கிறிஸ்தவப் பிறரன்பு அமைப்பு கடந்த ஒரு வாரமாக கலிபோர்னியா மாநிலத்தின் Anaheim நகரில் மாநாடு ஒன்றை நடத்தியது. இவ்வியாழனன்று நிறைவுற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய நியூயார்க் பேராயர் கர்தினால் Dolan, Knights of Columbus அமைப்பின் உறுப்பினர்கள் திருமண வாழ்வுக்கு உயர்ந்த சாட்சிகளாக வாழ்வதற்குத் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
கணவன், மனைவி இருவருக்கும் இடையே உள்ள நிலையான உறவே உறுதியான குடும்பத்தையும், உறுதியான சமுதாயத்தையும் உருவாக்கும் என்றும், இத்தகையக் குடும்பங்களே இறை அழைத்தலின் விளைநிலமாய் உள்ளதென்றும் கர்தினால் Dolan எடுத்துரைத்தார்.
Knights of Columbus அமைப்பின் இந்த 130வது மாநாட்டில் இப்புதனன்று திருப்பலியாற்றி, மறையுரை வழங்கினார் Toronto பேராயர் கர்தினால் Thomas Collins.
இன்றைய உலகை நிறைத்துவரும் தவறான, பொய்மை நிறைந்த செய்திகளுக்கு மத்தியில் உண்மையான நற்செய்தியைப் பரப்பும் கடமை அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள ஒரு சவால் என்று கர்தினால் Collins தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.


3. ஆகஸ்ட் 10 இவ்வெள்ளியன்று கருப்புநாள் கடைபிடிக்கப்படும்

ஆக.09,2012. இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் உதவிகள், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10 இவ்வெள்ளியன்று கருப்புநாள் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருப்பு நாளையொட்டி, டில்லி பேராயர் Vincent Concessao மற்றும் வடஇந்திய கிறிஸ்தவ சபையின் பொதுச் செயலர் Alwan Masih ஆகியோரின் தலைமையில் டில்லியில் ஒரு போராட்ட ஊர்வலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதனன்று இந்திய பாராளுமன்றத்தில் துவங்கிய மழைக்காலக் கூட்டத்தொடரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் சட்டமாக வேண்டும் என்று ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்ற ஒரு போராட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
நடைபெறும் இந்த பாராளுமன்ற அமர்வில் அஸ்ஸாமில் 73 பேரை பலி வாங்கிய கலவரங்கள், அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் மின்சக்தி துண்டிப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகள் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது.


4. மக்கள்பேறு நலம் பற்றிய ஒரு சட்டத்தை அமலாக்கும் பிலிப்பின்ஸ் அரசின் முயற்சிக்கு ஆயர்கள் எதிர்ப்பு

ஆக.09,2012. பிலிப்பின்ஸ் மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நாட்டின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டிருக்கும் போராட்டம் என்பதை அரசு உணரும் நேரம் வரும் என்று Jaro உயர்மறைமாவட்டப் பேராயர் Angel Lagdameo கூறினார்.
மக்கள்பேறு நலம் பற்றிய பிரச்சனைகள் நிறைந்த ஒரு சட்டத்தை அமலாக்கும் முயற்சியில் பிலிப்பின்ஸ் பாராளுமன்றம் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டுள்ளது. இச்சட்டத்தின் பல அம்சங்களை எதிர்த்து பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையும் தலத்திருஅவையும் குரல் கொடுத்து வந்துள்ளது.
திருஅவையின் எதிர்ப்புக்கு உரிய கவனம் செலுத்தாமல் அரசு செயல்படும் முறை குறித்து பேசிய பேராயர் Lagdameo, மக்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருக்கலைப்பு, கருத்தடை ஆகிய செயல்திட்டங்களை உள்ளடக்கிய இந்தச் சட்டவரைவை எதிர்த்து ஆயர் Gabriel Reyes தலைமையில் நடைபெற்ற ஒரு திருப்பலியில் 10,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.


5. அடிப்படைவாத கும்பல்களுக்கு மதம் முக்கியமல்ல, வன்முறையே முக்கியம் - Abuja பேராயர்

ஆக.09,2012. நைஜீரியாவின் Okene நகரில் இத்திங்களன்று ஒரு கிறிஸ்தவ கோவில் தாக்கப்பட்டதில் 20 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு மசூதியும் தாக்கப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், Abuja பேராயர் John Olorunfemi Onaiyekan, Boko Haram என்ற அடிப்படைவாதக் கும்பலுக்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமியரும் பலியாகி வருகின்றனர் என்று கூறினார்.
Okene நகரில் இஸ்லாமியர் பெரும்பான்மையினாய் இருந்தாலும், அந்நகரில் இதுவரை கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் நல்லுறவுடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் Onaiyekan, அடிப்படைவாத இஸ்லாமியக் கும்பல்களுக்கு மதம் முக்கியமல்ல, வன்முறையே முக்கியம் என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன என்றார்.
உண்மை நிலையைப் புரிந்துகொண்டு, நாட்டை அமைதி வழிக்கு மீண்டும் கொணர்வதற்கு கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து உழைக்க வேண்டும் என்று பேராயர் Onaiyekan அழைப்பு விடுத்துள்ளார்.


6. தென் கொரியாவில் திருப்பலிநேரத்தில் காவல்துறையினர் நுழைந்து தாக்குதல்

ஆக.09,2012. தென் கொரியாவின் Jeju தீவில் இப்புதனன்று நடைபெற்ற ஒரு திருப்பலியில் காவல்துறையினர் நுழைந்து தாக்கியதில், திருப்பலி நிறைவேற்றிய அருள்பணியாளர் உட்பட பலர் காயமடைந்தனர்.
தென் கொரியாவில் Jeju என்ற தீவில் கப்பல்படைத் தளம் ஒன்றை அமைக்க அரசு முயன்றுவருகிறது. இதனால், அத்தீவில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களும், அத்தீவின் சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படும் என்பதால், இந்த முயற்சியை  எதிர்த்து தலத்திருஅவை போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் இயேசு சபை அருள் பணியாளர் Bartholomew Mun Jung-hyun, அம்மக்களுக்கு இப்புதன் மாலை திருப்பலி நிகழ்த்தியபோது அங்கு வந்த காவல் துறையினர், திருப்பலியைத் தடுக்க முயன்றனர்.
திருப்பலி ஆற்றிய அருள்தந்தை Mun அவர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர் கையில் ஏந்திய திருநற்கருணையோடு கீழே விழந்தபோது, காவல்துறையைச் சார்ந்த ஒருவர் காலில் திருநற்கருணை மிதிபட்டதென்றும் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
நடைபெற்ற இந்த அராஜகச் செயலுக்கு காவல்துறை தகுந்த விளக்கம் தர வேண்டும் என்று Cheju மறைமாவட்ட நீதி அமைதிப் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை John Ko Buyeong-soo கூறினார்.
Jeju தீவு உலகப் பாரம்பரியத் தலம் என்று UNESCO அறிவித்துள்ளதையும் மீறி, அங்கு தென்கொரிய அரசு கடற்படை தளத்தை அமைப்பது சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதகமாக அமையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கூறியுள்ளனர்.


7. ஓடிஸ்ஸாவில் கிறிஸ்தவப் போதகர் இறந்தது, விபத்தல்ல ஒரு கொலையே - Baliguda நீதி மன்றம் தீர்ப்பு

ஆக.09,2012. இந்திய நீதி மன்றங்கள் வெகு தாமதமாகச் செயல்படுகின்றன என்றும், மதக் கலவரங்கள் குறித்த வழக்குகளில் நீதி மன்றங்கள் காட்டும் தாமதப்போக்கு சிறுபான்மையினருக்குப் பெரும் பாதகமாக அமைகிறது என்றும் இந்தியக் கிறிஸ்தவக் கழகத்தின் தலைவர் Sajan George கூறினார்.
2011ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி ஓடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் Michael Nayak என்ற ஒரு கிறிஸ்தவப் போதகர் இந்து அடிப்படைவாத கும்பலால் கொல்லப்பட்டார். இவரது கொலையை ஒரு விபத்து என்று கூறி, காவல் துறையினர் இந்த வழக்கைத் தொடரவில்லை.
இது விபத்தல்ல ஒரு கொலையே என்று Baliguda நீதி மன்றம் இப்புதனன்று தீர்ப்பு அளித்து, Michael Nayakகைக் கொன்ற கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நம்பிக்கைதரும் ஒரு அடையாளமாக இருந்தாலும், இந்தியாவில் நீதித் துறையின் தாமதமான நடவடிக்கைகள் அடிப்படைவாத கும்பல்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது என்று Sajan George கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாய் ஒடிஸ்ஸா மாநிலத்தில் 3500க்கும் அதிகமான புகார்களைச் சிறுபான்மையினர் அளித்துள்ளபோதிலும், காவல்துறையினரும், நீதித் துறையும் 827 புகார்களையே வழக்குகளாக எடுத்துள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.


8. செவ்வாய் கோளத்தின் வண்ணப் புகைப்படத்தை அனுப்பியது கியூரியாசிட்டி

ஆக.09,2012. செவ்வாய் கோளத்தில் தரையிறங்கியுள்ள அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் அக்கோளத்தின் வண்ணப் புகைப்படங்களை எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பியிருந்த கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கோள ஆய்வில் ஈடுபட்டுவருகின்றது. கடந்த ஞாயிறு இரவு செவ்வாயில் தரையிறங்கிய கியூரியாசிட்டி இதுவரை கருப்பு-வெள்ளை புகைப்படங்களையே அனுப்பியிருந்தது.
இந்நிலையில் தற்போது வண்ணப் படமொன்றை அனுப்பியுள்ளது. இந்த வண்ணப் படமும் இரண்டரை நிமிட வீடியோ படமாக இருப்பதாக அறவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்க்கும்போது செவ்வாய் கோளத்தில் தரைதளம் மிகவும் இளகி உள்ளதாகத் தெரிகிறது என்றும் அறவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கோளத்தில் தடம் பதித்துள்ள கியூரியாசிட்டி விண்கலம் இன்னும் இரண்டு வருடங்கள் செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வைத் தொடரும் என்று தெரிகிறது. இந்த ஆய்வின் முடிவில் செவ்வாய் கோளத்தில் மனிதர்கள் வாழமுடியுமா என்பது தெளிவாகும் எனவும் அறவியலாளர்கள் கருதுகின்றனர்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...