1.திருத்தந்தை : தங்களை அன்பு செய்யாதவர்கள், தங்களோடு வாழ்பவரை அன்பு செய்ய முடியாது
2. பிலிப்பீன்சில் குடும்பக்கட்டுபாடு மசோதாவுக்கு எதிராகச் செபப் பேரணிகள்
3. தாய்லாந்து ஆயர்கள் : ஆசியன் நாடுகளின் வளர்ச்சிக்கு திருஅவையின் சமூகக் கோட்பாடுகள் முக்கியமானவை
4. தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில் சிரியா கத்தோலிக்கர் பாரம்பரிய நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர்
5. சிரியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்
6. கராச்சி பேராயர் : கிறிஸ்தவத் தாதியருக்கு நஞ்சு கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தல்
7. வறுமை, நீதி குறித்து மறையுரையாற்றியதற்காக ஜாம்பியா நாட்டிலிருந்து அருட்பணியாளர் வெளியேற்றம்
8. இலங்கையில் சில முன்னேற்றம், ஆனால் தேவைகள் பல : ஐ.நா.அதிகாரி
------------------------------------------------------------------------------------------------------
1.திருத்தந்தை : தங்களை அன்பு செய்யாதவர்கள், தங்களோடு வாழ்பவரை அன்பு செய்ய முடியாது
ஆக.04,2012. தங்களை அன்பு செய்யாதவர்கள், தங்களோடு வாழ்பவரை அன்பு செய்ய முடியாது, அவர்களுக்கு உதவ முடியாது மற்றும் அமைதியின் தூதுவர்களாக இருக்க முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கடந்த
ஏப்ரல் 16ம் தேதி தனது 85வது பிறந்தநாளைச் சிறப்பித்த திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்களை வாழ்த்துவதற்கு அவரின் தாயகமான ஜெர்மனியின் பவேரியாப்
பகுதியிலிருந்து காஸ்தெல் கந்தோல்ஃபோவுக்கு இவ்வெள்ளிக்கிழமை மாலை வந்து
அப்பகுதியின் கலாச்சார மரபுகளில் இன்னிசை விருந்தளித்த ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மக்களுக்கு உரையாற்றியபோது, பவேரிய மகிழ்ச்சி குறித்து விளக்கினார்.
பவேரியக் கலாச்சாரம் நாகரீகமற்றதோ முரட்டுத்தனமானதோ அல்ல, மாறாக, அம்மக்கள், இறைவனையும்
அவரது படைப்பையும் தங்களது அகவாழ்வில் ஏற்பதால் கிடைக்கும்
அகமகிழ்ச்சியோடு ஒன்றாகக் கலந்திருப்பது என்று கூறினார் திருத்தந்தை.
இந்த உலகம் துன்பங்களால் நிறைந்துள்ளவேளை, இந்த நமது மகிழ்ச்சி குறித்து சிலர் கேள்வி எழுப்பலாம், ஆனால், மகிழ்ச்சியைப்
புறக்கணிப்பது யாருக்கும் நன்மையைப் பெற்றுத் தராது மற்றும் உலகையும்
இருளில் ஆழ்த்தும் என்றும் திருத்தந்தை உரையாற்றினார்.
தனது தாயக மக்கள், இந்த மகிழ்ச்சியை பிறருக்கு வழங்கவும், தீமையைப் புறக்கணித்து, அமைதி மற்றும் ஒப்புரவின் பணியாளர்களாக வாழவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து இம்மக்களை அழைத்து வந்த Munich மற்றும் Frising பேராயர் கர்தினால் Reinhard Marx அவர்களுக்கும், அவ்வுயர்மறைமாவட்டத்தின் முன்னாள் கர்தினால் Wetter அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவராக வத்திக்கான் வருவதற்கு முன்னர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Munich மற்றும் Frising உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. பிலிப்பீன்சில் குடும்பக்கட்டுபாடு மசோதாவுக்கு எதிராகச் செபப் பேரணிகள்
ஆக.04,2012.
பிலிப்பீன்ஸ் அரசு அமல்படுத்துவதற்குத் திட்டமிட்டுவரும்
குடும்பக்கட்டுபாடு குறித்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்
விதமாக, அந்நாட்டின் ஆயர்கள் தலைமையில் செபப் பேரணிகளும் திருவழிபாடுகளும் இச்சனிக்கிழமை நடத்தப்பட்டன.
கருத்தடைச் சாதனங்களுக்கு நிதியுதவி செய்தல், குடும்பக்கட்டுப்பாட்டை அமல்படுத்துதல், பள்ளிகளில் பாலியல் கல்வியை புகுத்துதல் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கும் இம்மசோதா, அறநெறி விழுமியங்களைக் கறைப்படுத்தும் மற்றும் குழந்தைகள் தொல்லை கொடுப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தை ஊக்குவிக்கும் என்று Pangasinan பேராயர் Socrates Villegas இப்பேரணியில் எச்சரித்தார்.
“Prayer Power Rally” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பேசிய Lipa பேராயர் Ramon Arguelles, இம்மசோதா
குறித்து தீர்மானம் செய்யும் வாக்கெடுப்பு பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்தில்
இடம்பெறவுள்ள வருகிற செவ்வாய்க்கிழமை வரை விசுவாசிகள் தொடர்ந்து
செபங்களையும் தியாகங்களையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மழை, காற்றைப்
பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான விசுவாசிகள்
கலந்து கொண்டு இந்த மசோதாவுக்கு எதிரானத் தங்களது கடும் எதிர்ப்பைத்
தெரிவித்தனர்.
ஆசியாவில் மக்கள்தொகை அதிவேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் பிலிப்பீன்சும் ஒன்று எனக் கூறப்படுகின்றது.
3. தாய்லாந்து ஆயர்கள் : ஆசியன் நாடுகளின் வளர்ச்சிக்கு திருஅவையின் சமூகக் கோட்பாடுகள் முக்கியமானவை
ஆக.04,2012. முதலாளித்துவம், காணும் பொருளே உண்மை என்னும் வாதம்,
பணத்தையும் வெற்றியையும் வெறித்தனமாகத் தேடும்நிலை ஆகியவற்றுக்கு
அடிமையாகியுள்ள ஒரு சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சிக்கு திருஅவையின்
விழுமியங்களும் மனிதர் மையமாக நோக்கப்படுதலும் இன்றியமையாதவை என தாய்லாந்து
ஆயர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
ஆசியன் (ASEAN) என்ற பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு, தங்களுக்கிடையே
கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை 2015ம் ஆண்டுக்குள் கொண்டு வருவதற்கு
திட்டமிட்டு வருவதையொட்டி அறிக்கை வெளியிட்ட தாய்லாந்து ஆயர்கள் இவ்வாறு
கூறியுள்ளனர்.
ஆசியன்
நாடுகளின் இம்முயற்சிக்கு திருஅவையின் சமூகக் கோட்பாடுகளும் மனிதரை
மையப்படுத்திய திட்டங்களும் முக்கியமானவை மற்றும் இவை உடனடியாகச்
செயல்படுத்தப்பட வேண்டியவை என்றும் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்கள் தங்களது பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றவும், மனிதரும் அவரது மாண்பும் மதிக்கப்படவும் ஆசியன் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், கல்வித்
துறையில் ஆயர்கள் பேரவைக்கும் தனிப்பட்ட மறைமாவட்டங்களுக்கும் இடையே
ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் ஆயர்களின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
ASEAN கூட்டமைப்பு இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கு இவை தேவை என்றும் கூறுகிறது அவ்வறிக்கை.
ASEAN கூட்டமைப்பில், தாய்லாந்து, கம்போடியா, மியான்மார், புருனெய், லாவோஸ், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
4. தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில் சிரியா கத்தோலிக்கர் பாரம்பரிய நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர்
ஆக.04,2012.
அன்னை கன்னிமரியை மேன்மைப்படுத்தும் நோக்கத்தில் இம்மாதம் முதல்
தேதியிலிருந்து 14ம் தேதி வரை நோன்பு இருக்கும் சிரியா நாட்டின் கீழைரீதிக்
கத்தோலிக்கர், அந்நாட்டின்
அமைதிக்காகச் செபிக்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார் மெல்கித்தே கிரேக்கரீதி
கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தலைவர் 3ம் Gregorios Laham.
ஆகஸ்ட்
15ம் தேதி சிறப்பிக்கப்படும் விண்ணேற்பு அன்னைப் பெருவிழாவுக்கென இரண்டு
வாரப் பாரம்பரிய நோன்பைக் கடைப்பிடித்து வரும் சிரியா நாட்டுக்
கத்தோலிக்கருக்கென அறிக்கை வெளியிட்டுள்ள முதுபெரும் தலைவர் 3ம் Gregorios, இம்மக்கள் சிரியாவில் வன்முறைகள் நிறுத்தப்படவும், அந்நாட்டினரின் பாதுகாப்புக்காகவும் செபித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா நாட்டினர் ஒருவர் ஒருவரை அன்பு செய்து, மன்னித்து, ஒருவர் ஒருவருடன் ஒப்புரவாகி சகிப்புத்தன்மையுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கும், அழிக்கப்பட்டுள்ள
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி வளர்ச்சி மற்றும் வளமைக்காக உழைப்பதற்கு
இன்னும் அவர்களால் இயலும் என்றும் அவரின் அறிக்கை கூறுகிறது.
சிரியாவில் கிறிஸ்தவர்கள் நோன்பிருக்கும் இந்நாள்களில், இசுலாமியரும் ரமதான் நோன்பிருக்கின்றனர் என்பதையும் முதுபெரும் தலைவர் 3ம்Gregorios குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளால் ஏறக்குறைய 4 இலட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
5. சிரியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்
ஆக.04,2012.
சிரியாவில் சண்டை வலுத்து வருவதால் அதனை நிறுத்துவதற்கு அனைத்துலக
சமுதாயம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர்
பான் கி மூன்.
சிரியாவில்
சண்டை தொடர்ந்து நடந்து வருவதால் அதனைக் கண்டிக்கும் வகையில் தீர்மானம்
எடுக்கப்படுமாறு ஐ.நா.பொது அவையில் இவ்வெள்ளிக்கிழமை கேட்டுள்ளார் பான் கி
மூன்.
ஐ.நா.
எதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறதோ அவை அனைத்தையும் பரிசோதிக்கும் விதமாக
சிரியாவின் இப்போதைய நிலைமை இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
தமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் சண்டை மிகவும் கொடூரமாய் இடம்பெறுவதாக இச்சனிக்கிழமை செய்திகள் கூறுகின்றன.
சிரியாவில் கடந்த 17 மாதங்களாக இடம்பெற்றுவரும் சண்டையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
6. கராச்சி பேராயர் : கிறிஸ்தவத் தாதியருக்கு நஞ்சு கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தல்
ஆக.04,2012.
பாகிஸ்தானின் கராச்சியில் கிறிஸ்தவத் தாதியருக்கு நஞ்சு கொடுக்கப்பட்ட
விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுமாறு அந்நாட்டு நீதி மற்றும் அமைதி
அவையைக் கேட்டுள்ளார் கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ்.
தாதியர்
பயிற்சி பெறும் ஒன்பது கிறிஸ்தவத் தாதியருக்கு கடந்த ஜூலை 29ம் தேதி
தேனீரில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய பேராயர்
கூட்ஸ், இதன்
நோக்கம் மதம் சார்ந்ததா அல்லது கொலை செய்யும் நோக்கம் கொண்டதா அல்லது
முற்றிலும் தற்செயலாக நடந்ததா என்பது குறித்து விரிவாக விசாரணை
நடத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
எதுவாக இருந்தாலும் இவ்விவகாரம் கவலையுடன் நோக்கப்பட வேண்டியது என்றுரைத்த பேராயர், சிறுபான்மையினர் நசுக்கப்படுவது குறித்து பாகிஸ்தான் அரசு கண்மூடித்தனமாகவே இருக்கின்றது என்றும் குறை கூறினார்.
7. வறுமை, நீதி குறித்து மறையுரையாற்றியதற்காக ஜாம்பியா நாட்டிலிருந்து அருட்பணியாளர் வெளியேற்றம்
ஆக.04,2012.
திருப்பலியின்போது வறுமை மற்றும் ஏழைகளுக்கு நீதி குறித்து மறையுரை
நிகழ்த்தியதற்காக கேள்வி கேட்கப்பட்டு இரண்டு நாள்கள் காவலில் வைக்கப்பட்டு
பின்னர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் ருவாண்டா நாட்டு
அருட்பணியாளர் ஒருவர்.
ஜாம்பியா நாட்டின் Lundazi பங்குக் குருவாகப் பணியாற்றிய ருவாண்டா நாட்டு Viateur Banyangandora என்ற 40 வயது அருட்பணியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றுரைத்த உள்துறை அமைச்சர் Edgar Lungu அதற்கான காரணத்தைச் சொல்ல மறுத்துவிட்டார் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
ஆயினும், ஜாம்பியாவின் அமைதிக்கும் ஒழுங்குக்கும் இக்கரு அச்சுறுத்தலாய் இருந்தார் எனக் கண்டுபிடிக்கப்பட்டதாக Lungu கூறியுள்ளார்.
8. இலங்கையில் சில முன்னேற்றம், ஆனால் தேவைகள் பல : ஐ.நா.அதிகாரி
ஆக.04,2012. இலங்கையில் 4 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையில் முன்னேற்றம் தெரிந்தாலும், அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர் என்று ஐ. நா. அதிகாரி John Ging தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு இலங்கையில் போர் முடிந்த மூன்று ஆண்டுகளில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடச் சென்ற, ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்(OCHA) இயக்குனர் John Ging இவ்வாறு கூறியுள்ளார்.
போருக்குப் பின்னானக் காலகட்டத்தைப் பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும், இன்னமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் மோசமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும், மீளக் குடியேறியவர்களின் நிலையும் அதேபோன்று மோசமாகவே உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது எனவும் John Ging கூறினார்.
வடகிழக்குப்
பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு அரசால் மீளக்
குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அதிகமான
உதவிகள் தேவைப்படுகின்றன என அவர் மேலும் கூறுகிறார்.
"பன்னாட்டு நிதியுதவிகள் 80 விழுக்காடு குறைந்துள்ளது மக்களை துன்பத்துக்குள் தள்ளியிருக்கிறது" என்றும் John Ging கூறினார்.
No comments:
Post a Comment