1. அவசரக்கால அளவில் செயல்பட்டால் மட்டுமே உணவு பற்றாக்குறை நெருக்கடியை நாம் உலகில் சமாளிக்கமுடியும் - பேராயர் சில்வானோ தொமாசி
2. கிராம மக்களின் வளர்ச்சிக்கு இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை பெரும்பணியாற்றியுள்ளது - இந்தியக் குடியரசுத் தலைவர்
3. எட்டு ஆண்டுகளுக்கு முன் திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் மேற்கொண்ட இறுதிப் பயணம்
4. பிலிப்பின்ஸ் அரசுக்கு அந்நாட்டு ஆயர்கள் பேரவையின் வன்மையானக் கண்டனம்
5. அமெரிக்காவில் கடைபிடிக்கப்படும் உழைப்பாளர் நாளையொட்டி, ஆயர்களின் செய்தி
6. இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவை உறுதிப்படுத்தும் ஒரு தருணம் இரமதான்
7. தமிழ் அரசியல் கைதிகளின் கொலையைக் கண்டித்து யாழ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
8. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரம் இயற்கைப் பேரிடர்களால் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும்
------------------------------
------------------------------
1. அவசரக்கால அளவில் செயல்பட்டால் மட்டுமே உணவு பற்றாக்குறை நெருக்கடியை நாம் உலகில் சமாளிக்கமுடியும் - பேராயர் சில்வானோ தொமாசி
ஆக.15,2012.
உடனடியாக நாம் செயல்பட்டால் மட்டுமே உணவு பற்றாக்குறை நெருக்கடியை நாம்
உலகில் சமாளிக்கமுடியும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இயங்கி வரும் ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பாக நிரந்தப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பெட்டியில் ஆகஸ்ட் 27ம் தேதி கூடவிருக்கும் G20 உச்சி மாநாட்டில் உணவுப் பிரச்சனை முக்கிய இடம் பெறவேண்டும் என்று கூறினார்.
தற்போது நிலவிவரும் உணவு பற்றாக்குறை நெருக்கடி, கடந்த 60 ஆண்டுகளில் கண்டிராத அளவு வளர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, இந்த நெருக்கடியை உலக அரசுகள் உடனடியாகத் தீர்க்க முயற்சிகள் எடுக்கவில்லையெனில், 2007 - 2008ம் ஆண்டுகளில் நிலவிய உணவு நெருக்கடி பல்வேறு நாடுகளில் கலவரங்களைத் தூண்டியதுபோல், இப்போதும் நிகழக்கூடும் என்ற தன் கவலையை வெளியிட்டார்.
அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நிலவும் வறட்சி இந்த உணவு நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறிய பேராயர் தொமாசி, கடந்த ஜூலை மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 17 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
உணவு பற்றாக்குறையால் உலகில் தற்போது 17 கோடி குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், அவசரக்கால
அளவில் இந்த நெருக்கடியைச் சமாளிக்க 800 கோடி டாலர்கள் தேவைப்படும் என்று
ஐ.நா. கூறியுள்ளதையும் பேராயர் தன் வானொலி பேட்டியில் எடுத்துரைத்தார்.
2. கிராம மக்களின் வளர்ச்சிக்கு இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை பெரும்பணியாற்றியுள்ளது - இந்தியக் குடியரசுத் தலைவர்
ஆக.15,2012. இந்தியாவின் வளர்ச்சிக்கு, முக்கியமாக, கிராம
மக்களின் வளர்ச்சிக்கு இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை
பெரும்பணியாற்றியுள்ளது என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப்
முக்கர்ஜி கூறினார்.
அண்மையில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிரணாப் முக்கர்ஜி அவர்களை இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias அவர்களும், பேரவையின் பொதுச் செயலர் பேராயர் Albert D’Souza அவர்களும் சந்தித்து, இந்தியத் திருஅவையின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, குடியரசுத் தலைவர் இவ்வாறு கூறினார்.
துவக்கக் காலத்திலிருந்தே கிறிஸ்துவ மறை இந்திய மண்ணில் வேரூன்றிய ஒரு சமயம் என்பதைச் சுட்டிக்காட்டிய அரசுத்தலைவர், இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை கல்விக்கும், நல வாழ்வுக்கும் ஆற்றிவரும் பணிகளைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
நாட்டில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் உருவாக்க கத்தோலிக்கத் திருஅவை இதுவரை உழைத்ததைப் போலவே, தொடர்ந்து தீவிரமாக உழைக்கும் என்ற உறுதியை ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Gracias குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார்.
3. எட்டு ஆண்டுகளுக்கு முன் திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் மேற்கொண்ட இறுதிப் பயணம்
ஆக.15,2012. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன், 2004ம் ஆண்டு, ஆகஸ்ட் 14,15
தேதிகளில் திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் தன் இறுதிப்
பயணத்தை மேற்கொண்டதை வத்திக்கான் வானொலி இச்செவ்வாயன்று நினைவுகூர்ந்தது.
வயதாலும், பார்கின்சன்ஸ் நோயாலும் உடல்நலம் மிகவும் குன்றிய நிலையில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் மேற்கொண்ட அந்த இறுதிப் பயணம், அவரது 104வது அயல்நாட்டுப் பயணமாக விளங்கியது.
திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதத்தில், அதாவது, 1979ம் ஆண்டு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 1 வரை மெக்சிகோ, தோமினிக்கன் குடியரசு, மற்றும் பஹாமா நாடுகளுக்குத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் மேற்கொண்டது முதல் பயணம் என்பதையும், 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 14,15
தேதிகளில் பிரான்ஸ் நாட்டு லூர்து அன்னைத் திருத்தலத்திற்கு மேற்கொண்டது
இறுதிப்பயணம் என்பதையும் வத்திக்கான் வானொலி நினைவுறுத்துகிறது.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் திருத்தந்தையாகப் பணியாற்றிய 27 ஆண்டுகளில், லூர்து அன்னைத் திருத்தலத்திற்கு மும்முறை திருப்பயணியாகச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. பிலிப்பின்ஸ் அரசுக்கு அந்நாட்டு ஆயர்கள் பேரவையின் வன்மையானக் கண்டனம்
ஆக.15,2012. மக்கள்பேறு நலம் பற்றிய பிரச்சனைகள் நிறைந்த ஒரு சட்ட வரைவை, தகுந்த கலந்தாலோசனைகள் இன்றி சட்டமாக்க பிலிப்பின்ஸ் அரசு காட்டும் அவசரத்தை அந்நாட்டு ஆயர்கள் பேரவை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஆயர்கள் பேரவை இத்திங்களன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மக்களின் மனசாட்சிக் குரலை ஒடுக்குவதற்கு அரசு பயன்படுத்தும் சக்தி அடக்கு முறைக்கு ஒப்பாகும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
பிரச்சனைக்குரிய இந்தச் சட்டம் அமலாக்கப்பட்டால், ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுவர் சிறுமியருக்கு பாலியல் கல்வியைக் கட்டாயமாகப் புகட்டுதல், கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வழி செய்தல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்தச் சட்டவரைவு பாராளு மன்றத்தில் நுழைக்கப்பட்டது முதல், தற்போது
அதனை சட்டமாக்கும் அவசரம் வரை அரசு மேற்கொண்டுள்ள அனைத்து செயல்பாடுகளும்
மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத்
தலைவரும் Cebu பேராயருமான Jose Palma கூறினார்.
5. அமெரிக்காவில் கடைபிடிக்கப்படும் உழைப்பாளர் நாளையொட்டி, ஆயர்களின் செய்தி
ஆக.15,2012. வேலையின்றி, அல்லது
போதுமான ஊதியம் இன்றி இலட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் தங்கள்
குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர்
என்று அமெரிக்க ஆயர் பேரவையின் ஓர் அதிகாரி கூறினார்.
ஒவ்வோர்
ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் திங்களன்று அமெரிக்காவில் உழைப்பாளர் நாள்
கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு செப்டம்பர் 3ம் தேதி நிகழவிருக்கும் இந்த
நாளையொட்டி, அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி, மனித முன்னேற்றம் என்ற பணிக்குழுவின் தலைவரான ஆயர் Stephen Blaire அறிக்கையொன்றை இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.
இன்றைய நிலவரப்படி, 1 கோடியே, 20 இலட்சம் அமெரிக்கர்கள் வேலையின்றி இருப்பதாகவும், இன்னும் பல இலட்சம் அமெரிக்கர்கள் தகுந்த வேலையோ, வேலைக்கேற்ற ஊதியமோ பெறாமல் இருப்பதாகவும் கூறிய ஆயர் Blaire, இந்நிலையால் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதர்கள் செய்யும் வேலைகளுக்கு உரிய மதிப்பைத் தகர்க்கும் ஒரு வழி, வறுமை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளதை மேற்கோளாகக் கூறிய ஆயர் Blaire, இந்த
அவல நிலையில் வாழும் 4 கோடியே 60 இலட்சம் அமெரிக்கர்களுக்கு உழைப்பாளர்
நாளன்று சிறப்பாக வேண்டுதல்களை எழுப்புமாறு தன் அறிக்கையில் அழைப்பு
விடுத்துள்ளார்.
6. இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவை உறுதிப்படுத்தும் ஒரு தருணம் இரமதான்
ஆக.15,2012. இஸ்லாமியர் கடைப்பிடித்துவரும் இரமதான் மாதத்தின் மாலை உணவு, பாகிஸ்தானில் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவை உறுதிப்படுத்தும் ஒரு தருணமாக அமைந்து வருகிறது.
ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 18, இச்சனிக்கிழமை
முடிய உலகெங்கும் உள்ள இஸ்லாம் மதத்தவர் இரமதான் மாதத்தைக் கொண்டாடி
வருகின்றனர். இம்மாதத்தில் ஒவ்வொரு நாளும் நோன்பு இருந்து, மாலையில் ஒரு விருந்துடன் தங்கள் நோன்பை நிறைவு செய்து வருகின்றனர்.
Iftar எனப்படும் இந்த உணவு பரிமாற்றம், இலாகூரில் உள்ள Loyola Hall எனப்படும் இயேசு சபையினர் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது. 'மதங்களுக்கிடையே உறவை வளர்க்கும் இளையோர்' என்ற அமைப்பினாரால் நடத்தப்பட்ட இந்த விருந்தில் இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் கலந்துகொண்டனர்.
உணவு
பரிமாற்றம் என்பதில் ஆரம்பமாகும் உறவு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு
தகுந்த ஓர் அடித்தளம் என்று இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த இயேசுசபை
அருள்தந்தை Imran Ghouri கூறினார்.
இந்த விருந்தில் கலந்துகொள்ள பல இஸ்லாமியர் தயக்கம் காட்டினாலும், விருந்தில் கலந்துகொண்ட கிறிஸ்தவ, இஸ்லாமிய இளையோர் தற்போது Facebook மூலம் தங்கள் நட்பைத் தொடர்கின்றனர் என்றும் அருள்தந்தை Ghouri கூறினார்.
இதற்கிடையே, இரமாதான் மாதத்தையொட்டி, கிறிஸ்தவ நலவாழ்வு அமைப்பு என்ற ஒரு பிறரன்பு அமைப்பு, இஸ்லாமியப் பெண்களுக்கு உணவு தாயரிக்கும் பொருட்களை வழங்கியுள்ளது என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
7. தமிழ் அரசியல் கைதிகளின் கொலையைக் கண்டித்து யாழ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
ஆக.15,2012. தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையைக் கண்டித்தும், சிறையிலுள்ள
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணி யாழில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக
நடைபெற்றது.
இப்புதன் காலை இடம்பெற்ற போராட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினருடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமாசவஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் சில சிங்கள முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.
போராட்டத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வந்து தமது பங்களிப்பை செலுத்தியிருந்ததுடன், படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, இப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
மேலும்
கடந்த பல வருடங்களுக்குப் பின்னர் யாழ் நகரில் இடம்பெற்ற
போராட்டத்திற்குப் பல்கலைக்கழக ஆசியர்கள் தங்கள் பங்களிப்பை
வழங்கியிருந்தனர். இதேவேளை இந்தப் போராட்டத்திற்கும் தடையொன்று போடப்படும்
என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்ப்புக்கள் எவையுமின்றி போராட்டம்
நடைபெற்றது.
8. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரம் இயற்கைப் பேரிடர்களால் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும்
ஆக.15,2012. இந்தியா, பிலிப்பின்ஸ்
ஆகிய வளரும் நாடுகளின் பொருளாதாரம் இயற்கைப் பேரிடர்களால் பெருமளவு
நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இயற்கைப் பேரிடர்களிலிருந்து எவ்வளவு விரைவில் ஒரு நாடு மீளமுடிகிறது என்ற ஆய்வை மேற்கொண்ட Maplecraft என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறனில் இறுதி நிலையில் உள்ள 10 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது.
இயற்கைப் பேரிடர் நெருக்கடிகளைச் சமாளிப்பதில் மிகவும் பின்தங்கிய நாடு பங்களாதேஷ் என்றும், அதற்கு அடுத்தபடியாக பிலிப்பின்ஸ் மற்றும் தோமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகள் என்று கூறும் இந்தப் பட்டியலில், இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது.
2011ம் ஆண்டு நிகழ்ந்த இயற்கை பேரிடர்களைச் சமாளிக்க உலகம் 38,000 கோடி டாலர்கள் செலவழித்தது என்று கூறும் இவ்வறிக்கை, இந்தச் செலவின் பெரும்பகுதி ஜப்பானில் உருவான நிலநடுக்கம், சுனாமி இவைகளால் ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
வளர்ந்து
வரும் பொருளாதாரங்கள் என்று கருதப்படும் நாடுகளே இயற்கைப்
பேரிடர்களுக்குப் பெருமளவில் உள்ளாக்கப்படுகின்றன என்று கூறும் இவ்வறிக்கை, இதற்கு எடுத்துக்காட்டாக, சீனா, மெக்சிகோ, இந்தியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.
No comments:
Post a Comment