Thursday, 6 November 2014

செய்திகள் - 04.11.14

செய்திகள் - 04.11.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவனால் வழங்கப்படும் இலவச மீட்புப் பற்றி அஞ்ச வேண்டாம்

2. பாரம்பரியத் திருமணங்கள் குறித்த பல்சமயக் கருத்தரங்கில் திருத்தந்தை

3. நகர்ப்புறமயமாக்கலில் மக்களை மையப்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள் இடம்பெற வேண்டும், திருப்பீட அதிகாரி

4. சிரியாவின் மனிதாபிமான நெருக்கடி மிக மோசம், வத்திக்கான் அதிகாரி

5. புர்க்கினோ ஃபாசோ நாட்டுக்காக ஒரு வாரச் செபங்கள், தலத்திருஅவை

6. கொரியத் திருஅவை : ஏழைகளுக்கு உதவுவதற்காக திருத்தந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு

7. நாடற்ற மக்களின் நிலையை பத்து ஆண்டுகளுக்குள் சரிசெய்வதற்கு ஐ.நா. திட்டம்

8. காசாப் பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு மலாலா நன்கொடை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவனால் வழங்கப்படும் இலவச மீட்புப் பற்றி அஞ்ச வேண்டாம்

நவ.04,2014. இறைவனால் கொடையாக வழங்கப்படும் மீட்புப் பற்றி அஞ்ச வேண்டாம், இம்மீட்பு தன்னலத்தைக் கைவிடவைக்கின்றது என்று, இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்த மனிதர் ஒருவர், அவ்விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்களை அழைத்தபோது, ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி அழைப்புப் பெற்றவர்கள் வர மறுத்தது பற்றிக் கூறும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மனிதர் ஒவ்வொருவரின் இதய ஆழத்திலும் இறைவனின் இலவசக் கொடை பற்றிய பயம் இருக்கின்றது, அதனால் நாம் இறைவனிடம் செல்வதற்குச் சாக்குப்போக்குகளைக் கண்டுபிடிக்கிறோம், இறுதியில் உலகமே நம்மைச் சுற்றி இருக்கின்றது என்ற நினைப்பில் இது கொண்டுபோய்ச் சேர்க்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் அனைவரும் விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்கள்போல் இருக்கிறோம், ஆனால் இவ்விருந்து பற்றி ஏதோ நினைத்ததால், மூன்று பேர் இவ்விருந்தை விரும்பவில்லை, இந்த மூன்று பேர் போன்று நம்மில் பெரும்பாலானவர்கள் உள்ளோம் என்று மேலும் கூறினார் திருத்தந்தை.
நம் வீடுகளை விட்டு, இறைவனின் இல்லத்திற்கு மற்றவர்களோடு செல்வதற்கு கிடைக்கும் அழைப்புக்குப் பதில் சொல்வதற்கு நாம் பயப்படுகிறோம், அதேநேரம், நம் பாவங்களிலும், நம் வரையறைகளிலும் பாதுகாப்பை உணருகிறோம் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, இந்தப் பயம் கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்குள்ளும் ஆழமாக உள்ளது என்றும் கூறினார்.
நாம் கத்தோலிக்கராய் உள்ளோம், ஆனால் உறுதியான கத்தோலிக்கராய் இல்லை, இயேசுவில் நம்பிக்கை வைக்கிறோம், ஆனால் அதிகமாக அல்ல, இருக்கிறோம், ஆனால் இல்லை என்ற இந்த நிலை நம்மைச் சிறுமைப்படுத்துகின்றது என்று கூறினார்
திருத்தந்தை.
விருந்துக்கு ஏற்பாடு செய்த மனிதர், ஏழைகளையும் மற்றவர்களையும் விருந்துக்கு வருவதற்கு கட்டாயப்படுத்தியது போன்று, இயேசு நம்மிலும் பல சோதனைகளால் அவ்வாறு செய்கிறார், இதோ இலவசமான கொண்டாட்டம் என்று இயேசு கட்டாயப்படுத்துகிறார், இது மாபெரும் கொடை, இது இறைவனின் அன்பு என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பாரம்பரியத் திருமணங்கள் குறித்த பல்சமயக் கருத்தரங்கில் திருத்தந்தை

நவ.04,2014. தாழ்மையாக இருப்பது, பிறரின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நமக்கு உதவுகின்றதுஎன்ற வார்த்தைகளை இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் நிறைவடைந்துள்ள இவ்வேளையில், பாரம்பரியத் திருமணங்கள் குறித்த பல்சமயக் கருத்தரங்கு ஒன்றை இம்மாதத்தில் தொடங்கி வைக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம், இம்மாதம் 17 முதல் 19 வரை நடத்தும் இக்கருத்தரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடக்கவுரையாற்றி முதல் அமர்விலும் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாள் கருத்தரங்கில், 23 நாடுகளிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். மேலும், இதில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், இன்னும், யூதம், இஸ்லாம், இந்து, ஜைனம், தாவோயிசம், சீக்கியம் ஆகிய மதங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் உறவு என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது. செழுமையான ஒரு மனித சமுதாயத்தை வளர்ப்பதற்காக, திருமணம் மற்றும் குடும்ப வாழ்வுக்கு ஆதரவளித்து அவற்றை உயிரூட்டம் பெறச் செய்யும் வகையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவின் அழகை ஆராய்ந்து அதைப் புதுப்பிப்பதற்குப் பரிந்துரைகள் இக்கருத்தரங்கில் வழங்கப்படும்.
திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்துடன், திருப்பீட குடும்ப அவை, பல்சமய உரையாடல் அவை, கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை ஆகிய துறைகளும் சேர்ந்து இக்கருத்தரங்கை நடத்தவுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. நகர்ப்புறமயமாக்கலில் மக்களை மையப்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள் இடம்பெற வேண்டும், திருப்பீட அதிகாரி

நவ.04,2014. நகர்ப்புறமயமாக்கலால் ஏற்படும் தீமைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளில் மக்களை மையப்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.
மக்களை மையப்படுத்திய நகர்ப்புறமயமாக்கல் : இன்றைய நகரங்களில் இனங்களின் பன்மைத்தன்மையை நிர்வகித்தல்என்ற தலைப்பில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவ்சா அவர்கள் இவ்வாறு கூறினார்.
அதிகரித்துவரும் நகர்ப்புறமயமாக்கல், நம் அனைவரையும் நகரங்களில் உடலளவிலும் பொருளாதார அளவிலும் நெருங்கிவரவைக்கும் அதேவேளையில், இது சமூக, கலாச்சார, சமய மற்றும் பொருளாதாரத் தனிமையையும், பிரிவினையையும், இன்னும் பிற தீமைகளையும் ஏற்படுத்துகின்றது என்பதையும் நாம் உணர வேண்டும் என்று கூறினார் பேராயர் அவ்சா.
நகரங்கள் மிகுந்த வாய்ப்புக்களை வழங்கினாலும், ஊழல் மற்றும் மனித வணிகம், போதைப்பொருள் வணிகம், போதைப்பொருள் பயன்பாடு, நலிந்தவர்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களையும் பெருக்குகின்றன என்றும் பேராயர் அவ்சா கூறினார்.
அக்டோபர் 31ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் பெர்னதித்தோ அவ்சா அவர்கள் இவ்வாறு பல கருத்துக்களை எடுத்துச் சொன்னார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சிரியாவின் மனிதாபிமான நெருக்கடி மிக மோசம், வத்திக்கான் அதிகாரி

நவ.04,2014. போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் காணப்படும் மனிதாபிமானச் சூழல், தான் நினைத்ததைவிட மோசமாக உள்ளது என்று, அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த அக்டோபர் 28, 29 தேதிகளில் சிரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள, திருப்பீட Cor Unum பிறரன்பு அவையின் செயலர் பேரருள்திரு Giampietro Dal Toso அவர்கள், பெய்ரூட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
ஈராக்கிலுள்ள மனிதாபிமான நெருக்கடி, சிரியாவின் பிரச்சனையோடு தொடர்புடையது, இவ்விரு நாடுகளின் பிரச்சனைகளை ஒரே பிரச்சனையாக நோக்க வேண்டும் என்றும், சிரியாவில் நடுத்தர வர்க்கத்தினர் காணாமல்போயுள்ளனர், அந்நாட்டினர் அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் பேரருள்திரு Dal Toso.
சிரியாவில் 2011ம் ஆண்டில் போர் தொடங்குவதற்கு முன்னர் 2 கோடியே 20 இலட்சமாக இருந்த மக்கள் தொகையில் குறைந்தது ஒரு கோடிப்பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் உரைத்த பேரருள்திரு Dal Toso அவர்கள், ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து செல்லும் புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு நாடுகள் தயக்கம் காட்டுகின்றன என்றும் கூறினார்.
நாற்பது இலட்சம் மக்களைக் கொண்ட லெபனோன் நாட்டு எல்லைகளில், மேலும் 15 இலட்சம் புலம்பெயர்ந்தோர் வாழ்வதையும் பேரருள்திரு Dal Toso அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. புர்க்கினோ ஃபாசோ நாட்டுக்காக ஒரு வாரச் செபங்கள், தலத்திருஅவை

நவ.04,2014. புர்க்கினோ ஃபாசோ நாட்டில் நீண்ட காலமாக ஆட்சியிலிருந்த அரசுத்தலைவர் Blaise Compaore அவர்கள் பதவி விலகியுள்ள நிலையில், நாட்டினர் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டுத் திருஅவை அதிகாரி ஒருவர்.
மேற்கு ஆப்ரிக்க நாடாகிய புர்க்கினோ ஃபாசோவை கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசுத்தலைவர் Compaore அவர்கள், பொதுமக்களின் கிளர்ச்சியால் பதவியைத் துறந்து ஐவரி கோஸ்ட் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ளார். தற்போது புர்க்கினோ ஃபாசோ நாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அரசுத்தலைவர் காவல் அமைப்பின் உதவித் தலைவர் அதிபர் Isaac Yacouba Zida அவர்கள், இடைக்கால அரசின் தலைவர் என்று, தன்னை இம்மாதம் முதல் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் நாட்டில் ஒப்புரவும், நீதியும், அமைதியும் நிலவுவதற்காக, செப வாரம் ஒன்றை அறிவித்துள்ள அந்நாட்டுக் கர்தினால் Philippe Ouédraogo அவர்கள், புதிய இராணுவ ஆட்சியாளர்கள் சனநாயகத்தை மதிப்பதற்கு உறுதி வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, புதிய அரசுத்தலைவரான அதிபர் Zida அவர்கள், அந்நாட்டின் கத்தோலிக்க, முஸ்லிம் மற்றும்பிற சமயத் தலைவர்களை இத்திங்களன்று சந்தித்து புதிய இடைக்கால அரசு நிர்வாகத்துக்கு ஆலோசனைகளைக் கேட்டுள்ளார் என, ஆயர் பேரவை பேச்சாளர் ஜோசப் கின்டா அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : CNS

6. கொரியத் திருஅவை : ஏழைகளுக்கு உதவுவதற்காக திருத்தந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு

நவ.04,2014. சமுதாயத்தில் ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும், பிற பிறரன்புப் பணிகளுக்கு உதவுவதற்குமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்குவதற்கு தென் கொரிய ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.
நல்ல சமாரியர் சேமிப்பு என்ற பெயரிலும் இயங்கும் இந்த வங்கிக் கணக்கு, 2015ம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஆயர்கள் நடத்திய ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தந்தையின் அறிவுரைத் தொகுப்பை உண்மையிலேயே நடைமுறைப்படுத்துவதற்கு ஆயர்களாகிய நாங்கள் இந்த வங்கிக் கணக்கை ஆரம்பிக்கிறோம் என்று, கொரிய ஆயர்கள் பேரவையின் தலைவர் பணியை நிறைவுசெய்திருக்கும் ஆயர் Peter Kang U-il அறிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் மகிழ்வோடு கொண்டிருக்கும் தொடர்பை விசுவாசிகள் நினைவுகூருமாறும் கேட்டுள்ள ஆயர் Kang அவர்கள், கொரிய ஆயர்களும் தங்கள் வாழ்வுமுறையை மாற்றியமைக்குமாறு பரிந்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews

7. நாடற்ற மக்களின் நிலையை பத்து ஆண்டுகளுக்குள் சரிசெய்வதற்கு ஐ.நா. திட்டம்

நவ.04,2014. உலகில் தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் துன்புறும் மக்களின் நிலைமையை பத்து ஆண்டுகளுக்குள் சரிசெய்வதற்கு, UNHCR என்ற ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இன்று உலகில் குறைந்தது ஒரு கோடிப் பேர் எந்த நாட்டையும் சேராமலும், கடவுச்சீட்டு இல்லாமலும் உள்ளனர் என்றுரைக்கும் UNHCR நிறுவனம், மருத்துவ உதவி, கல்வி வாய்ப்பு, தேர்தலில் ஓட்டளிப்பது போன்ற அரசியல் உரிமைகள் ஆகியவை மறுக்கப்படும் நிலைக்கு இது இட்டுச்செல்லும் என்றும் கூறியுள்ளது.
மியான்மாரின் ரோஹின்யா சிறுபான்மையினம் போன்ற இனக் குழுக்களுக்கு குடியுரிமையும், பிற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன என்றும், அகதிகள் முகாம்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாங்கள் பிறக்கும் நாடுகளின் குடியுரிமை கிடைப்பதில்லை என்றும் UNHCR நிறுவனம் மேலும் கூறியது.
தற்போது 27 நாடுகளில் பெண்கள் தங்களின் குடியுரிமையை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN

8. காசாப் பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு மலாலா நன்கொடை

நவ.04,2014. 2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்துகொண்டுள்ள 17 வயது பாகிஸ்தானியச் சிறுமி மலாலா யூசாப்சாய் அவர்கள், பாலஸ்தீனாவின் காசாப் பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்குத் தனது ஒரு விருது நிதியான ஐம்பதாயிரம் டாலரை வழங்கியுள்ளார்.
பாலஸ்தீனப் புலம்பெயர்ந்தோருக்கு உதவிவரும் UNRWA நிறுவனம், காசாப் பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கென, தனக்குக் கிடைத்த உலகச் சிறார் விருதின் ஐம்பதாயிரம் டாலரை மலாலா வழங்கியுள்ளார் என்று AP செய்தி நிறுவனம் கூறியது.
கல்வியின்றி அமைதி ஒருபோதும் இடம்பெறாது என்றும், பாலஸ்தீனச் சிறார் தரமான கல்விபெறத் தகுதியுடையவர்கள் என்றும் மலாலா கூறியதாக UNRWA நிறுவனம் தெரிவித்தது. இவ்விருதை ஸ்டாக்ஹோமில் பெற்றுள்ளார் மலாலா.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே நடந்த 50 நாள் சண்டையில் காசாவில் ஐ.நா. நடத்தும் பல பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன மற்றும் சேதமாக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : AP

No comments:

Post a Comment