Saturday, 29 November 2014

இயேசுவின் முதல் சீடர் - திருத்தூதரான புனித அந்திரேயா

இயேசுவின் முதல் சீடர் - திருத்தூதரான புனித அந்திரேயா

ஆண்மை, வலிமை என்ற பொருள்படும், 'அந்திரேயா' என்ற பெயரைத் தாங்கியவர், இயேசுவின் முதல் சீடராக மாறினார். "Protocletus" (the First Called), அதாவது, 'முதல் அழைப்புப் பெற்றவர்' என்றும் இவர் அழைக்கப்படுகிறார். மீன்பிடிக்கும் தொழிலாளியான அந்திரேயா, திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தார்.
'இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி' (யோவான் நற்செய்தி 1,36) என்று திருமுழுக்கு யோவான் அவர்கள் இயேசுவைச் சுட்டிக்காட்டியதும், அந்திரேயா, இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசுவோடு ஒருநாள் தங்கிய அந்திரேயா அவர்கள், அவரது முதல் சீடராக மாறியதோடு நில்லாமல், இயேசுவை, தன் சகோதரர் பேதுருவுக்கு அறிமுகம் செய்து, அவரும் இயேசுவின் சீடராக மாற வழிவகுத்தார்.
அவர் அறிமுகம் செய்துவைத்த சகோதரர் பேதுரு, அந்திரேயாவை விட திருஅவை வரலாற்றில் புகழ்பெற்றார். அந்திரேயா, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவின் முதல் நான்கு சீடர்கள் எனினும், பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூவரின் பெயர்கள் மட்டுமே, நற்செய்தியில் அடிக்கடி இடம்பெற்றுள்ளன. தான் மறைந்து, இயேசு வளரவேண்டும் என்று வாழ்ந்த திருமுழுக்கு யோவானைப் போல, அந்திரேயாவும் தன்னை மறைத்து, இயேசுவை அறிக்கையிட்ட திருத்தூதராக வாழ்ந்தார்.
பாலை நிலத்தில் மக்களுக்கு உணவளிக்குமாறு இயேசு கூறியபோது, (யோவான் 6, 1-14) அங்கு ஒரு சிறுவனிடம் "ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்" (யோவான் 6, 8-9) இருந்ததாகக் கூறும் அந்திரேயா அவர்கள், அங்கு நிகழ்ந்த புதுமைக்கு மறைமுகமாகக் காரணமானார்.
கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப்பின் அவரை அறிக்கையிடச் சென்ற முதல் திருத்தூதர் அந்திரேயா என்று சொல்லப்படுகிறது. இவரது திருத்தூதுப் பணி, கருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கிரேக்க நாட்டிலும் மேற்கொள்ளப்பட்டது.
அவரது திருத்தூதுப் பணியால் கோபமடைந்த உரோமைய அதிகாரிகள், அவரை, 'எக்ஸ்' (X) வடிவ சிலுவையில் அறைந்தனர். அச்சிலுவையில் தொங்கியபடி அவர் மூன்று நாள் போதித்தார் என்று சொல்லப்படுகிறது.
திருத்தூதர் அந்திரேயா அவர்களின் வழித்தோன்றலாக இன்று பணியாற்றுபவர், Constantinople முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள். கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையான முதலாம் பர்த்தலோமேயு அவர்களை, நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்கிறார்.
ஸ்காட்லாந்து, இரஷ்யா, உட்பட பல நாடுகளுக்கும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைக்கும்,  மீன்பிடிக்கும் தொழிலாளிகளுக்கும் பாதுகாவலாரான, திருத்தூதர் புனித அந்திரேயா அவர்களின் திருநாள் நவம்பர் 30ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...