Wednesday, 26 November 2014

செய்திகள் - 26.11.14

செய்திகள் - 26.11.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - தீவிரவாதிகளை ஒழிக்க அரசுகள் மேற்கொள்ளும் வன்முறைப் போக்குகளும் தீவிரவாதமாக உள்ளது

2. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது திருத்தந்தை மதிப்பு கொண்டுள்ளார் - கர்தினால் Marx

3. திருத்தந்தை எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடை தேடுவதில், ஐரோப்பாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது - ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு

4. "பெருநகரங்களில் மேய்ப்புப்பணி" - பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

5. திருப்பீடத்தின் தூதரக உறவுகளின் அடித்தளம், ஆன்மீகம் - வத்திக்கான் உயர் அதிகாரி

6. கோவாவில், இந்தியக் கிறிஸ்தவ கலையம்சங்களுடன் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி

7. இலங்கை அரசுத் தலைவர், திருத்தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்

8. வன்முறைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொணரும் என்ற பொய்யான நம்பிக்கையைக் கைவிடுங்கள் - அமெரிக்க பேராயர் Robert Carlson

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - தீவிரவாதிகளை ஒழிக்க அரசுகள் மேற்கொள்ளும் வன்முறைப் போக்குகளும் தீவிரவாதமாக உள்ளது

நவ.26,2014. ISIS போன்ற தீவிரவாத குழுக்கள் இருப்பது உண்மை; ஆயினும், தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அரசுகள் மேற்கொள்ளும் வன்முறைப் போக்குகளும், அரசு அதிகாரம் பெற்ற தீவிரவாதமாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
பிரான்ஸ் நாட்டின், Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம், மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அவை ஆகியவற்றில், இச்செவ்வாயன்று உரையாற்றிவிட்டு, மீண்டும் உரோம் நகர் திரும்புகையில், விமானப் பயணத்தில் பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசு அதிகாரம் பெற்ற தீவிரவாதம் உட்பட பல்வேறு கருத்துக்களை, செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
பிரெஞ்ச், இஸ்பானியம், இத்தாலியம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசும் செய்தியாளர்களின் பிரதிநிதிகளாக ஐவர் விடுத்த கேள்விகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிலளித்தார்.
சமுதாயச் சிந்தனைகளை அடிக்கடி பேசும் திருத்தந்தை, ஒரு சமூகவாதியா என்று கேட்ட செய்தியாளரிடம், கத்தோலிக்கத் திருஅவை வெளியிட்டுள்ள சமூகச் சிந்தனைகளையே தான் பகிர்ந்துகொள்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தீவிரவாதிகளை ஒழிப்பதாகக் கூறி, அரசு மேற்கொள்ளும் வன்முறைத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் ஆயிரமாயிரம் பேர் கொல்லப்படுவது நீதியல்ல என்றும், பன்னாட்டு அரசுகளுடன் கலந்தாலோசித்து, அரசுகள் இத்தகைய முடிவுகளை எடுக்கவேண்டும்  என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் இறுதியிலும் செய்தியாளர்களுடன் மனம் விட்டுப் பேசும் நேர்முகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது திருத்தந்தை மதிப்பு கொண்டுள்ளார் - கர்தினால் Marx

நவ.26,2014. மனித மாண்பை நிலைநாட்டும் அடிப்படையில், ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகள் ஒருங்கிணைந்து வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு வழங்கிய முக்கிய செய்தி என்று, ஐரோப்பிய ஒன்றிய கத்தோலிக்க ஆயர் குழுவின் தலைவர், கர்தினால் Reinhard Marx அவர்கள் கூறினார்.
ஐரோப்பாவில் உள்ள தனியொரு நாட்டிற்குச் செல்லாமல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும், ஐரோப்பிய ஒன்றிய அவைக்கும் வருகை தந்தது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது என்று கர்தினால் Marx அவர்கள் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம், சுற்றுச்சூழல் மீது காட்டும் அக்கறையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டு, பாராட்டியது வரவேற்கத்தக்கது என்று கர்தினால் Marx அவர்கள் கருத்து தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியமும், பல்வேறு மதக் குழுக்களும் உரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியது, கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு கருத்து என்று கர்தினால் Marx அவர்கள் எடுத்துரைத்தார்.
ஐரோப்பா, உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு வழிகாட்டியாக, ஓர் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியது, ஐரோப்பியக் கண்டத்தை ஊக்குவிக்கும் மருந்தாக அமையும் என்று கர்தினால் Marx அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடை தேடுவதில், ஐரோப்பாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது - ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு

நவ.26,2014. அமைதியை மையப்படுத்தும் முன்னேற்றப் பாதையில் ஐரோப்பா பயணிக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Strasbourg நகரில் கூறியது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்வைத் தந்துள்ளது என்று ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவே, உன் சக்தி எங்கே? உன் வரலாற்றை வடிவமைத்து, உன்னைத் தூண்டிவந்த கருத்தியல் எங்கே? உண்மையைக் கண்டுபிடிக்கும் உன் தாகம் எங்கே? என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடை தேடுவதில், ஐரோப்பாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்று பேரவைகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் நற்பணிகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளில் குறிப்பிட்டுள்ளது மனநிறைவைத் தருகிறது என்றும் இந்தக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு தலைவர் கர்தினால் Peter Erdő அவர்களும், இக்கூட்டமைப்பின் ஏனைய பொறுப்பாளர்கள் சிலரும் திருத்தந்தை உரை வழங்கிய கூட்டங்களில் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. "பெருநகரங்களில் மேய்ப்புப்பணி" - பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

நவ.26,2014. உலகின் பெரு நகரங்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் இன்றையச் சூழலில், நகர்களில் நற்செய்தி பணிகளை மேற்கொள்ளும் வழிகளை ஆய்வு செய்ய நடைபெறும் கருத்தரங்கிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று, திருத்தந்தை வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
நவம்பர் 24, 25 ஆகிய இரு நாட்கள், இஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் "பெருநகரங்களில் மேய்ப்புப்பணி" என்ற கருத்துடன் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
பார்சலோனா பேராயர், கர்தினால் Lluis Martinez Sistach அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், நகரங்களில் காணப்படும் பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள் மத்தியில், கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவுடன் எடுத்துரைப்பது பெரும் சவால் என்று கூறியுள்ளார்.
பார்சலோனா நகரில் அமைந்துள்ள 'Sacrada Familia' எனப்படும் புகழ்பெற்ற பசிலிக்காவில் இக்கருத்தரங்கின் நிறைவுக் கூட்டம் நடைபெறுவது, நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உண்மையைப் பகரும் ஓர் அடையாளமாக உள்ளது என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் ஐந்து கண்டங்களில் உள்ள பெருநகரங்களில் பணியாற்றும் கர்தினால்கள், ஆயர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் உறுப்பினர்கள், இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்திக்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருப்பீடத்தின் தூதரக உறவுகளின் அடித்தளம், ஆன்மீகம் - வத்திக்கான் உயர் அதிகாரி

நவ.26,2014. வர்த்தகம், இராணுவம், அரசியல் என்ற அடிப்படையில் நாடுகள் மேற்கொள்ளும் தூதரக உறவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, வத்திக்கான் தன் தூதரகப் பணிகளை மேற்கொள்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆஸ்திரேலிய நாடு, வத்திக்கானுடன் தூதரகத் தொடர்புகளை ஏற்படுத்திய முதல் நூற்றாண்டைச் சிறப்பிக்க, சிட்னி மாநகரில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், திருப்பீட வெளிநாட்டுத் துறையின் தலைவர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
திருப்பீடம், ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளைக் குறித்து விளக்கிப் பேசிய பேராயர் மம்பெர்த்தி அவர்கள், திருப்பீடத்தின் தூதரக உறவுகளின் அடித்தளம் ஆன்மீகம் என்று சுட்டிக்காட்டினார்.
அண்மைய மாதங்களில் மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதியை நிலைநிறுத்த திருத்தந்தையும், திருப்பீடமும் மேற்கொண்டுவரும் முயற்சிகளைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் மம்பெர்த்தி அவர்கள், இந்த முயற்சிகள் அனைத்தும், செபத்தையும், பிறரன்பு பணிகளையும் மையப்படுத்தியவை என்பதை வலியுறுத்தினார்.
மனித மாண்பு என்ற அடிப்படை உண்மையை வலியுறுத்த, திருப்பீடம் மேற்கொண்டு வரும் தூதரக செயல்பாடுகளையும் பேராயர் மம்பெர்த்தி அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. கோவாவில், இந்தியக் கிறிஸ்தவ கலையம்சங்களுடன் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி

நவ.26,2014. கிறிஸ்தவ ஓவியர்களான Angelo da Fonseca, Angela Trindade, அருள் சகோதரிகள் Genevieve, Claire ஆகியோர், கீழை நாடுகளின், குறிப்பாக, இந்திய நாட்டின் மதங்களையும், கிறிஸ்தவ மதத்தையும் இணைக்கும் பாலங்களாக அமைந்தனர் என்று கோவா பேராயர் Filipe Neri Ferrao அவர்கள் கூறினார்.
புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கோவாவில், இச்சிறப்பு நிகழ்வையொட்டி, இந்திய கிறிஸ்தவ கலையம்சங்களுடன் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியைத் திறந்துவைத்த பேராயர் Ferrao அவர்கள் இவ்வாறு கூறினார்.
இந்தியக் கிறிஸ்தவ கலைஞர்கள் கழகம் உருவாக்கியுள்ள ஓவியங்கள் அடங்கிய இந்தக் கண்காட்சி, கோவாவின் பேராலயத் திடலில் உள்ள கார்மேல் அன்னை சிற்றாலயத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் இறுதி நாளான சனவரி 4ம் தேதி முடிய, இந்தக் கண்காட்சியும் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : TOI/UCAN

7. இலங்கை அரசுத் தலைவர், திருத்தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்

நவ.26,2014. இலங்கையில் நடைபெறவிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அரசுத் தலைவர், Mahinda Rajapaksa அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் பதித்தப் புகைப்படங்களை விளம்பரப்படுத்தியுள்ளதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
சனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தை, எவ்வகையிலும் தவறாகப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் விளம்பரம் தேடக்கூடாது என்று தலத்திருஅவை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
தங்கள் எச்சரிக்கையை மீறி, தற்போதைய அரசுத் தலைவர், Rajapaksa அவர்கள், திருத்தந்தையுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சுவரொட்டிகளாக அச்சிட்டு வெளியிட்டுள்ளதை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று, இலங்கை கத்தோலிக்க சமூக ஊடக மையத்தின் இயக்குனர், அருள்பணி Cyril Gamini Fernando அவர்கள் கூறியுள்ளார்.
அரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற சில வன்முறைகள் குறித்து அரசு தீவிர விசாரணைகள் நடத்தவேண்டும் என்று சுதந்திரமான, நீதியான தேர்தல் என்ற அமைப்பினர் அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக, UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கைக்குச் செல்லும் சனவரி 13ம் தேதிக்கு, ஐந்து நாட்களுக்கு முன்னதாக, அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : UCAN          

8. வன்முறைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொணரும் என்ற பொய்யான நம்பிக்கையைக் கைவிடுங்கள் - அமெரிக்க பேராயர் Robert Carlson

நவ.26,2014. வன்முறைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொணரும் என்ற பொய்யான நம்பிக்கையைக் கைவிடுங்கள், வன்முறைமேலும் வன்முறையை மட்டுமே வளர்க்கும் என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Missouri மாநிலத்தில், Ferguson என்ற நகரில், Michael Brown என்ற 18 வயது இளையவரை, சுட்டுக் கொன்ற Darren Wilson என்ற காவல்துறை அதிகாரியை, நீதி மன்றம் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரில் இத்திங்கள் முதல் கலவரங்கள் பரவின. இத்தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றன.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தக் கொலையைத் தொடர்ந்து, இளைஞன் Brown அவர்களின் குடும்பம் விடுத்த பல விண்ணப்பங்களையும் மீறி, பல்வேறு குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளன என்று St Louis பேராயர், Robert Carlson அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்று கூறிய பேராயர் Carlson அவர்கள், அமைதியும், நீதியும் நிலைநாட்டப்படவேண்டும் என்ற கருத்துடன், இச்செவ்வாய் மாலை, St Louis உயர்மறை மாவட்டப் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தினார்.
கொல்லப்பட்ட இளைஞன் Brown அவர்களின் குடும்பத்திற்கும், காவல்துறை அதிகாரி Wilson அவர்களின் குடும்பத்திற்கும் செபிக்கும்படி பேராயர் Carlson அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / CNA/EWTN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...