Monday, 24 November 2014

செய்திகள் - 24.11.14

செய்திகள் - 24.11.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - தற்பெருமை கொண்ட திருஅவையையும், எதுவும் அற்ற 'வறியத் திருஅவை'யையும் நாம் வரலாற்றில் காண்கிறோம்

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் எகிப்தின் அரசுத் தலைவர் சந்திப்பு

3. திருத்தந்தை : புதிய புனிதர்கள் இறைவன் மீது கொண்டிருந்த அன்பு, பிறரன்பில் வெளிப்பட்டது

4. திருத்தந்தை பிரான்சிஸ் - இறையன்பு, பிறரன்பு என்ற இருபெரும் கட்டளைகளை, புதிய புனிதர்கள் தங்கள் வாழ்வில் உயிர்பெறச் செய்தனர்

5. திருவழிபாட்டு முறை மற்றும் திருவருள்சாதன ஒழுங்குமுறை பேராயத்தின் புதியத் தலைவர் - கர்தினால் Robert Sarah

6. கர்நாடகாவில் மீண்டும் ஒரு கிறிஸ்தவக் கோவில் மீது தாக்குதல்

7. சென்னை உட்பட மூன்று நகரங்களில் விரைவில் குழந்தைகள் உதவி மையம்

8. சமையல் தொடர்புடைய காசு மாசுக்கேட்டால் உயிரிழப்புக்கள்

9. அமைதி மற்றும் ஒப்புரவிற்கென மொசாம்பிக் அரசு நிதி ஒதுக்கீடு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - தற்பெருமை கொண்ட திருஅவையையும், எதுவும் அற்ற 'வறியத் திருஅவை'யையும் நாம் வரலாற்றில் காண்கிறோம்

நவ.24,2014. எளிமையாக, வறுமையாக வாழும் திருஅவையே இவ்வுலகிற்கு இறைவனை வழங்கமுடியும், இதற்கு மாறாக நடக்கும் திருஅவை, தன் ஒளியை விளம்பரப்படுத்தும் சோதனைக்கு உள்ளாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவர், இரண்டு காசுகளை, காணிக்கைப் பெட்டிக்குள் போட்ட நிகழ்வைக் கூறும் நற்செய்தியின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.
நாளிதழ்களில் இடம்பெறும் அளவு முக்கியத்துவம் ஏதுமற்ற கைம்பெண் ஆற்றிய சிறு செயல், இத்தனை நூற்றாண்டுகளாக நமக்குப் பாடமாக அமைந்து வருகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
மனுமகன் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் திருஅவை காத்திருப்பதால், தலைவன் இல்லாத ஒரு கைம்பெண்ணாகவும் திருஅவையை நாம் உருவகிக்க முடியும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
வரலாற்றில் திருஅவை காட்டியுள்ள ஒருவகை போக்குகளைப் பற்றிக் குறிப்பிட்டத் திருத்தந்தை, தன்னையே விளம்பரப்படுத்தும் தற்பெருமை கொண்ட திருஅவையையும், எதுவும் அற்ற 'வறியத் திருஅவை'யையும் நாம் வரலாற்றில் காண்கிறோம் என்று கூறினார்.
கதிரவனின் ஒளியைப் பிரதிபலிக்கும் நிலவைப் போல, திருஅவையானது இயேசு என்ற உண்மை ஒளியைப் பிரதிபலிக்க வேண்டுமே தவிர, தன்னுடைய ஒளியை உலகில் விளம்பரப்படுத்தக்கூடாது என்று திருத்தந்தை அறிவுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் எகிப்தின் அரசுத் தலைவர் சந்திப்பு

நவ.24,2014. நவம்பர் 24, இத்திங்கள் பிற்பகல், 2.30 மணியளவில், எகிப்தின் அரசுத் தலைவர், Abdel Fattah Al Sisi அவர்களையும், உடன் வந்திருந்த அரசு அதிகாரிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக எகிப்தின் அரசுத் தலைவர் ஒருவர், திருத்தந்தையைச் சந்திக்க வத்திக்கானுக்கு வந்துள்ளதை ஊடகங்கள் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளன.
இச்சந்திப்பின்போது, மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகளில் நிலவும் அமைதியற்றச் சூழல் குறித்து பேசப்பட்டதென, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் கூறியது.
எகிப்து அரசுத்தலைவர் Al Sisi அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்த பிறகு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : புதிய புனிதர்கள் இறைவன் மீது கொண்டிருந்த அன்பு, பிறரன்பில் வெளிப்பட்டது

நவ.24,2014. இஞ்ஞாயிறன்று புனிதராக அறிவிக்கப்பட்ட இரு இந்திய துறவியருக்கும், இறை அன்பே, அவர்கள் புனிதத்துவம் அடைவதற்கு நோக்கமாகவும், ஆதரவாகவும், ஆதாரமாகவும் இருந்தது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 23, ஞாயிறன்று நடைபெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாவையொட்டி உரோம் நகர் வந்திருந்த இந்தியத் திருப்பயணிகளை திங்களன்று காலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய புனிதர்கள் குரியாக்கோஸ் எலியாஸ் சாவ்ரா அவர்களும், யூஃப்ரேசியா எலுவாத்திங்கலும் தங்கள் புனிதத்துவத்திற்கு ஆதாரமாக இறையன்பைக் கொண்டிருந்த அதேவேளை, அந்த இறை அன்பை பிறரன்பில் வெளிப்படுத்தினர் என்றார்.
புனித வாழ்வை மேற்கொள்வதிலும், பிறரின் மீட்புக்காகவும் கடுமையாக உழைத்தவர் துறவி குரியாக்கோஸ் சாவ்ரா எனப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளோடு ஆழ்ந்த ஒன்றிப்பைக் கொண்டிருந்த துறவி யூஃப்ரேசியா, 'செபிக்கும் அன்னை' என அழைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
நற்செய்தி மதிப்பீடுகளின்படி வாழ்ந்த இந்தப் புதிய புனிதர்கள், இயேசு மீதும், திருநற்கருணை மீதும், திருஅவை மீதும் கொண்டிருந்த அன்பு, நமக்குப் பாடமாக இருக்கட்டும் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் - இறையன்பு, பிறரன்பு என்ற இருபெரும் கட்டளைகளை, புதிய புனிதர்கள் தங்கள் வாழ்வில் உயிர்பெறச் செய்தனர்

நவ.24,2014. கிறிஸ்துவை அரசர் என்று அறிக்கையிடுவதில் நம் மீட்பு அடங்குவதில்லை; மாறாக, அவர் கொணர்ந்த விண்ணரசின் விழுமியங்களை, குறிப்பாக, கிறிஸ்து கொணர்ந்த பிறரன்பை செயலாற்றுவதில் நம் மீட்பு அடங்கியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு வழங்கிய மறையுரையில் கூறினார்.
நவம்பர் 23, இஞ்ஞாயிறு கொண்டாடப்பட்ட கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, 4 இத்தாலியர்களையும், 2 இந்தியர்களையும் புனிதர்களாக உயர்த்தும் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நிறைவேற்றினார்.
புதிய புனிதர்கள் அனைவரும் தங்களுக்கே உரிய படைப்பாற்றல் திறனோடு, இறையன்பு, பிறரன்பு என்ற இருபெரும் கட்டளைகளை, தங்கள் வாழ்வில் உயிர்பெறச் செய்தனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
இவ்வுலகக் கண்ணோட்டத்தில் மிகச் சிறியவர்களாகக் கருதப்படும் மக்களுக்கு, இப்புதியப் புனிதர்கள் சிறந்த பணியாற்றினர் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் அனைவரும், "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்" (மத்தேயு 25:34) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு உரிமையாளர்களாகி, விண்ணகம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
தன் ஆடுகள் மீது முழுமையான அன்புகொண்ட நல்லாயன் என்பதில்தான் கிறிஸ்துவின் அரசத் தன்மை வெளியாகிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காயப்பட்ட மனிதர்களை, கவனமுடன் பராமரிக்கும் பணியின் வழியாக, நாம் இந்த நல்லாயனின் வலதுபக்கம் நிற்கும் மந்தைக்குள் இடம்பெறமுடியும் என்று எடுத்துரைத்தார்.
திருப்பலியின் இறுதியில், நான்கு இத்தாலியப் புனிதர்களையும், இந்தியாவைச் சேர்ந்த இரு புனிதர்களையும் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, மறைபரப்புப்பணியில், இந்திய நாடு காட்டிவரும் ஆர்வத்தைப் பாராட்டியதோடு, அந்நாட்டில் ஒப்புரவும், மதங்களிடையே நல்லுணர்வும் வளர தன் செபங்களையும், ஆசீரையும் வழங்கினார்.
இத்தாலியைச் சேர்ந்த நால்வரையும், இந்தியாவின் அருள் பணியாளர், முத்திப்பேறு பெற்ற Kuriakose Elias Chavara அவர்களையும், அருள் சகோதரி, முத்திப்பேறு பெற்ற Euphrasia Eluvathingal அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக உயர்த்தியத் திருப்பலியில், 20,000த்திற்கும் அதிகமான இந்தியர் கலந்துகொண்டனர் என்று ஆசியச் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருவழிபாட்டு முறை மற்றும் திருவருள்சாதன ஒழுங்குமுறை பேராயத்தின் புதியத் தலைவர் - கர்தினால் Robert Sarah

நவ.24,2014. திருவழிபாட்டு முறை மற்றும் திருவருள்சாதன ஒழுங்குமுறை ஆகியப் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராயத்தின் தலைவராக, கர்தினால் Robert Sarah அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று நியமித்தார்.
இத்திருப்பேராயத்தின் தலைவராக, கடந்த ஆறு ஆண்டுகள் பணியாற்றிய கர்தினால் Antonio Cañizares Llovera அவர்கள், இவ்வாண்டு செப்டம்பர் மாதம், இஸ்பெயின் நாட்டின் வலென்சியா உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றுச் சென்றார்.
இத்திருப்பேராயத்தின் புதியத் தலைவராக நியமனம் பெற்றுள்ள, 69 வயது நிறைந்த கர்தினால் Sarah அவர்கள், ஆப்ரிக்காவின் Guinea நாட்டைச் சேர்ந்தவர். 1979ம் ஆண்டு Conakry உயர் மறைமாவட்டத்தின் பேராயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட Sarah அவர்கள், 2010ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
நற்செய்திப் பரப்புப்பணி பேராயத்தின் செயலராக, பத்தாண்டுகள் பணியாற்றிய கர்தினால் Sarah அவர்கள், 2010ம் ஆண்டு முதல், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும் 'Cor Unum' அவையின் தலைவராகப் பணியாற்றிவந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. கர்நாடகாவில் மீண்டும் ஒரு கிறிஸ்தவக் கோவில் மீது தாக்குதல்

நவ.24,2014. கர்நாடகா மாநிலத்தில் பெந்தகோஸ்தே கோவில் ஒன்று இந்து தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு எட்டுபேர் காயமடைந்துள்ளது குறித்து, தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவைத்தலைவர் சாஜன் ஜார்ஜ்.
கர்நாடகாவின் கங்கமப்பாளயா எனுமிடத்திலுள்ள கல்வாரி அப்போஸ்தலிக்க கோவிலினுள் புகுந்த இந்து தீவிரவாதிகள், கோவில் பொருட்களைச் சேதப்படுத்தியதுடன், அங்குச் செபித்துக்கொண்டிருந்தவர்களையும் தாக்கியதில், எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.
இரு கிறிஸ்தவர்களின் கால்களை உடைத்த இக்குழு, சேதமாக்கப்பட்டக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பக்கூடாது என்ற எச்சரிக்கையையும் விட்டுச் சென்றுள்ளது.
அருகிலேயே காவல் நிலையத்தில் இருந்த காவல் துறையினர், இத்தாக்குதலைத் தடுக்கத் தவறியதுடன், அக்கோவிலின் கிறிஸ்தவப் போதகர் டிசூசா அவர்களையும் வலுக்கட்டாயமாக விசாரணைக்கென காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

ஆதாரம் : Asia News   

7. சென்னை உட்பட மூன்று நகரங்களில் விரைவில் குழந்தைகள் உதவி மையம்

நவ.24,2014. கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக, சென்னை, கொல்கத்தா, குர்கான் ஆகிய நகரங்களில், 24 மணிநேர உதவி மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
சென்னை, கொல்கத்தா, குர்கான் ஆகிய நகரங்களில், 24 மணிநேரமும் செயல்படும், குழந்தைகள் உதவி மையம் விரைவில் அமைக்கப்படவுள்ள நிலையில், .இதனால், இந்த மையங்களைச் சுற்றியுள்ள, 500க்கும் அதிகமான நகரங்கள், மற்றும் சிறு நகரங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறுவர் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா கூறினார்.
கடத்தப்படும் குழந்தைகள், தெருவோரக் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் ஆகியோருக்காக, மும்பையை மையமாக வைத்து, 24 மணிநேர உதவி மையம், ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்பதுடன், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களும் இந்த மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு, உதவிகள் கோரி, அளவுக்கு அதிகமான அழைப்புகள் வருவதையொட்டி தற்போது இந்த புதிய மூன்று நகர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்

8. சமையல் தொடர்புடைய காசு மாசுக்கேட்டால் உயிரிழப்புக்கள்

நவ.24,2014. சமையல் தொடர்புடைய காற்று மாசுக்கேட்டால் மக்கள் உயிரிழப்பதையும் நோயுறுவதையும் தடுக்கும் நோக்கத்துடன், புதியத் திட்டங்களைத் தீட்டியுள்ளதாக ஐ.நா. நிறுவனம் அறிவிக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் வீட்டிற்குள் சமையல் தொடர்புடைய காற்று மாசுக்கேட்டால் உலகில் 43 இலட்சம் பேர் உயிரிழத்தல், 10 இலட்சம் பேர் நோயுறுதல் போன்றவை இடம்பெறும் சூழலில், மாசுக்கேடற்ற சமையல் குறித்த தீர்வுகளுக்கு அரசுகள் உதவவேண்டும் என விண்ணப்பித்துள்ளது ஐ.நா. நிறுவனம்.
பாதுகாப்பான சமையல் முறைகள் குறித்து 2020ம் ஆண்டிற்குள் 1 கோடி பேருக்கு உதவ உள்ளதாக ஐ.நா.வின் WFP எனும் உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்துள்ளது.
புகை அதிகம் வெளியிடும் சமையல் முறைகளால் வீட்டிலுள்ளோர் இதய நோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

ஆதாரம் : UN

9. அமைதி மற்றும் ஒப்புரவிற்கென மொசாம்பிக் அரசு நிதி ஒதுக்கீடு

நவ.24,2014. மொசாம்பிக் நாட்டின் RENAMO புரட்சியாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'அமைதி மற்றும் தேசிய ஒப்புரவு' பணிகளுக்கென நிதி ஒன்றை உருவாக்கியுள்ளது அந்நாட்டு அரசு.
ஏறத்தாழ ஒரு இலட்சம் முன்னாள் இராணுவ வீரர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்தவும், ஆயுதங்களைக் கைவிட்டுள்ள RENAMO புரட்சியாளர்களுக்கு மறுவாழ்வு வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முழு ஈடுபாட்டுடன் பங்குபெற்று, தற்போது அமைதித் தீர்மானங்களைச் செயல்படுத்துவதிலும் ஆர்வம் காட்டிவரும் புரட்சியாளர் பிரதிநிதிக் குழுவுக்கும் நிதியுதவிகள் வழங்கப்படும் என மொசாம்பிக் அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் : MISNA

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...