Saturday 22 November 2014

செய்திகள் - 22.11.14

செய்திகள் - 22.11.14
------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் Fiorenzo Angelini அவர்களின் மறைவு குறித்து திருத்தந்தையின் அனுதாபங்கள்

2. திருத்தந்தை : பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவரும் இந்நாட்களில், இளையோர் மீது தனிக் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்

3. திருத்தந்தை : வரலாற்றை மாற்றியமக்கவல்லது கருணை

4. நவம்பர் 22, இச்சனிக்கிழமை முதல், சனவரி, 4ம் தேதி வரை புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் திறந்து வைக்கப்படுகிறது

5. மனித மதிப்பீடுகளை அழிவிலிருந்து காப்பாற்ற நற்செய்தி அறிவித்தல் தேவை

6. மியான்மார் திருஅவையின் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள்

7. அமெரிக்க அரசுத் தலைவர் Barack Obama அவர்கள் அறிவித்துள்ள பொது மன்னிப்பு முடிவுக்கு தலத்திருஅவை பாராட்டு

------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் Fiorenzo Angelini அவர்களின் மறைவு குறித்து திருத்தந்தையின் அனுதாபங்கள்

நவ.22,2014. நலப்பணியாளர்கள் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் முன்னாள் தலைவர், கர்தினால் Fiorenzo Angelini அவர்களின் மறைவு குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Autism என்ற மாற்றுத்திறன் கொண்டோரைக் குறித்து, திருப்பீடத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற நலப்பணியாளர்களை, இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளைப் பாதித்து, அதன்வழி பெற்றோரை கவலைக்குள்ளாக்கும் இந்த குறைபாட்டைக் குணப்படுத்தவும், இந்தக் குறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கவும், திருப்பீட நலப்பணியாளர்கள் எடுத்துவரும் முயற்சிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.
இந்த நலப்பணியாளர் மேய்ப்புப்பணி திருப்பீட அவையை உருவாக்கிய கர்தினால் Angelini அவர்களின் மறைவு குறித்து, ஆழ்ந்த வருத்தத்தையும் வெளியிட்டார் திருத்தந்தை.
1916ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், முதல் தேதி உரோம் நகரில் பிறந்த கர்தினால் Fiorenzo Angelini அவர்கள், இத்தாலிய மருத்துவர் கழகத்தை உருவாக்கியவர்.
நலப்பணியாளர்கள் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் முதல் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் Fiorenzo Angelini அவர்கள், இச்சனிக்கிழமை காலை, தன் 98வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவரும் இந்நாட்களில், இளையோர் மீது தனிக் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்

நவ.22,2014. இறைவனின் அழைப்புக்கு, புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் பதிலளிப்பது, நம் வழிமுறைகளைச் சார்ந்து அல்ல, மாறாக, பதிலளிப்பதற்கு இசையும் நம் விருப்பத்தைச் சார்ந்து அமைகிறது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
"நற்செய்தியின் மகிழ்வு, மறைபோதக மகிழ்வு" என்ற தலைப்பில், பொதுநிலையினருக்கான திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்து, உரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகின் சவால்களுக்கு பதிலுரைக்க வேண்டுமெனில், நாம் அமைப்பு முறைகளை சார்ந்திராமல், நம் தனி வரத்தின் அடிப்படை ஊற்றுக்குச் செல்லவேண்டும் என்று கூறினார்.
குடும்பங்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவரும் இந்நாட்களில், இளையோர் மீது தனிக் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் நம் அனைவருக்கும் வழங்கியுள்ள 'ஒன்றிப்பு' என்ற கொடையைக் குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்தார்.
நம் தனிவரத்தை உயிர் துடிப்புடன் பேணுதல், மற்றவர்களின் சுதந்திரத்தை மதித்தல், ஒன்றிப்புக்காக எப்போதும் உழைத்தல் என்ற மூன்று மையக் கருத்துக்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : வரலாற்றை மாற்றியமக்கவல்லது கருணை

நவ.22,2014. இரக்கமே தீர்ப்பை வெல்லும் என புனித யாகப்பர் தன் திருமுகத்தில் உரைப்பதுபோல் தனிமனிதர்களின் வரலாற்றையும் மக்கள் சமூகங்களின் வரலாற்றையும் மாற்றவல்லது இரக்கம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ சபைகளிடையேயான மறைபோதக ஒத்துழைப்பு குறித்து இத்தாலிய ஆயர் பேரவையின் தேசிய அலுவலகம் ஏற்பாடுச் செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைப்பணியாளர்களாக பணிபுரிய ஒவ்வொரு தலைமுறையும் அழைப்புப் பெற்றுள்ளது என்றார்.
பலகாலமாக மறைப்பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறப்புப் பணியாற்றியுள்ள இத்தாலியத் திருஅவையை வெகுவாகப் பராட்டுவதாக உரைத்த திருத்தந்தை, ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பாக, தென் அமெரிக்காவின் அமேசான் பகுதிகளில் இத்தாலிய மறைபோதகர்களின் கல்லறைகள் உள்ளன என்றார்.
ஏழை எளிய மக்களிடையே பணிபுரிய குருக்களை அனுப்பி, இத்தாலிய திருஅவை உதவி வருவது, அனைத்துலக திருஅவைக்கான ஒரு கொடை எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், “உண்மையிலேயே தேவையிலிருக்கும் ஒரு மனிதரை நாம் சந்திக்கும்போது, அவரில் இறைவனின் முகத்தை நாம் காண்கிறோமா?” என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று கேள்வியெழுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

4. நவம்பர் 22, இச்சனிக்கிழமை முதல், சனவரி, 4ம் தேதி வரை புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் திறந்து வைக்கப்படுகிறது

நவ.22,2014. இந்தியாவின் கோவா நகரில், மக்கள் பார்வைக்கு, இச்சனிக்கிழமை முதல் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் திறந்து வைக்கப்படுவது, கிறிஸ்தவ விசுவாசத்தை அறிக்கையிடுவதற்காக நமக்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த வாய்ப்பு என்று, கோவா பேராயர், Filipe Neri Ferrão அவர்கள் கூறினார்.
மறைபோதகப் பணியின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடலை வணங்கி, அதன் முன் செபிக்கும் வாய்ப்பை விசுவாசிகள் பெறும்போது, அவர்களின் விசுவாசம் தூண்டப்பட்டு, ஆழப்படுத்தப்படும் என்று கூறினார், பேராயர் Ferrão.
1552ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3ம் தேதி, சீனாவின் Sancian தீவில் இறைவனடி சேர்ந்த புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல், 1554ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கோவாவில் உள்ள Bom Jesus பசிலிக்காவில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.
இப்புனிதரின் உடல், 1782ம் ஆண்டு, முதல் முதலாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதிலிருந்து, தற்போது, 17வது முறையாக இடம்பெறும் இந்நிகழ்வு, நவம்பர் 22, இச்சனிக்கிழமை முதல், சனவரி, 4ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மனித மதிப்பீடுகளை அழிவிலிருந்து காப்பாற்ற நற்செய்தி அறிவித்தல் தேவை

நவ.22,2014. ஆசியாவில் கம்யூனிசத்தால் மனித மதிப்பீடுகள் அழிவுக்குள்ளாகியிருப்பதாகவும், அவற்றைச் சீரமைக்க தீவிர நற்செய்தி அறிவிப்புத் தேவைப்படுகின்றது எனவும் உரைத்தார் ஹாங்காங் கர்தினால் ஜோசப் சென்.
கடவுளால் மட்டுமே மனிதனைக் காப்பாற்ற முடியும் என்பதால், கடவுளைக் குறித்து நாம் அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது என்ற ஹாங்காங்கின் முன்னாள் பேராயர் கர்தினால் சென் அவர்கள், நற்செய்தி அறிவிப்பின்வழி மனித மதிப்பீடுகளையும், உரிமைகளையும் நாம் வலியுறுத்திக் கூறவேண்டியிருக்கிறது என்றார்.
சீன அரசின் மதக்கொள்கைகளில் எவ்வித மாற்றத்தையும் தான் எதிர்பார்க்கவில்லை எனவும் உரைத்த கர்தினால் சென் அவர்கள், சமூகங்களில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஊக்குவித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முயற்சிகள் நல்ல பலனைத் தரும் என தான் உறுதியாக நம்புவதாகவும் கூறினார்.

ஆதாரம் CNA/EWTN

6. மியான்மார் திருஅவையின் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள்

நவ.22,2014. மியான்மாரில் கத்தோலிக்க மதம் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலை மாறி, தற்போது ஏனைய நாடுகளுக்கும் மறைபோதகர்களை அனுப்பும் அளவுக்கு தலத்திருஅவை வளர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கத்தோலிக்கம் வந்ததன் 500ம் ஆண்டை இந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பித்துவரும் மியான்மார் தலத்திருஅவை2011ம் ஆண்டில் உருவான அரசு சட்ட தளர்வுகளுக்குப்பின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுவருவதாக அறிவித்தார், அந்நாட்டு பேராயர் சார்ல்ஸ் மவுங் போ.
தற்போது மியான்மாரில் ஏறத்தாழ 300 மாணவர்கள் அருள்பணியாளர் நிலைக்கு தங்களைத் தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார் பேராயர் போ.
மியான்மார் நாட்டை கட்டி எழுப்புவதிலும், அமைதி நடவடிக்கைகளிலும், தேசிய ஒப்புரவுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்துவதுடன், குரலற்றோரின் குரலாக செயல்படவேண்டிய தேவையும் மியான்மார் தலத்திருஅவைக்கு உள்ளது என்று மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவையின் உயர் செயலர் அருள்பணி Maurice Nyunt அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Catholic Online

7. அமெரிக்க அரசுத் தலைவர் Barack Obama அவர்கள் அறிவித்துள்ள பொது மன்னிப்பு முடிவுக்கு தலத்திருஅவை பாராட்டு

நவ.22,2014. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் அனுமதியின்றி குடியேறியுள்ள 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள அரசுத் தலைவர் Barack Obama அவர்களின் செயலை, அந்நாட்டுத் தலத்திருஅவை பாராட்டியுள்ளது.
ஏறத்தாழ 50 இலட்சம் மக்கள் பயனடைய வழிவகுக்கும் இத்திட்டத்தை வரவேற்கும் அதேவேளை, இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டியதும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார், குடியேற்றதாரர்களுக்கு உதவிவரும் அமெரிக்க கத்தோலிக்க சட்ட அமைப்பின் அதிகாரி, Michelle Sardone.
நியாயமான காரணங்களுடன், அதேவேளை, அனுமதியின்றி அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் குடிபுகுந்துள்ள இன்னும் பலரும் இந்த பொது மன்னிப்பின் கீழ் இணைக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும், Sardone அவர்கள் முன்வைத்துள்ளார்.
நாட்டின் நலனையும், குடியேற்றதாரர் நலனையும் மனதிற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு என்ற இம்முடிவை வரவேற்பதாக அமெரிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

ஆதாரம் : CNS

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...